எல்லாமொழிக்கும் இலக்கிய வரலாறு எழுதமுடியும். ஆனால் இலக்கண வரலாறு எழுதும் தகுதிப்பேறு ஒரு கைவிரலினும் குறைந்த மொழிகட்கேயுண்டு. வடமொழியும் தமிழும் இலக்கண வரலாறு எழுதத்தக்க அருட்செல்வமுடையவை. இவ்விரண்டனுள் வடமொழிக்கோ இலக்கண வரலாற்றில் வளர்ச்சியில்லை. வழக்கிலா மொழி வடமொழியாதலின், பழையன கழிதல் புதியன புகுதல் என்ற இலக்கணப்போக்கு வரவிற்கு இடனில்லை. அதன் வரலாறு பல நூற்றாண்டுகட்கு முன்பே நடுகல் போல நின்றுவிட்டது. சில இந்திய மொழிகட்கு இலக்கண வரலாறு கி.பி.பத்தாம்நூற்றாண்டுக்குப் பிந்தியதாகும். ஞால மொழியுள்ளும் இந்திய மொழியுள்ளும் தொன்மை புதுமை இடையறவு படர்த்தன்மை எல்லாம் தழுவிய இலக்கண வரலாறு தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.
தமிழிலக்கண வரலாறு எழுதுவோர் அகத்தியம் தொடங்கி எழுதுவது ஒரு மரபாக வந்திருக்கின்றது. இது எனக்கு உடன்பாடன்று தொல்காப்பியத்துக்கு முன்பு இலக்கண நூல்கள் பலவிருந்தன. இதில் ஐயமில்லை. ஆனால் அகத்தியம் என ஒரு நூல் இருந்தது. அதுவே முந்து நூல் எனப் பனம்பாரனாரால் சுட்டப்பட்டது என்ற வழிவழிக் கருத்துக்கு என்னானும் கரியில்லை. ஒப்பிலா மலடி என்றாங்கு, இல்லை என்று சொல்ல வேண்டிய ஒரு நூலுக்கு மகத்துவம் வாய்ந்த அகத்தியம் என்று பெயர் கூறித் தமிழிலக்கண வரலாற்றைப் புராண மயமாகத் தொடங்குவதைக் காட்டிலும், காலத்தை வென்று வாழும் தொன்மையான தொல்காப்பியத்தை முதலாவதாக வைத்து இவ்வரலாறு தொடங்கப்படுவதே அறிவுமுறை என்பது என் கருத்து.-
-மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் பிஎச்.டி.டி.லிட்டு..
Be the first to rate this book.