நவீன காலகட்டத்தில் நாவலே காவியத்துக்கான (Epic) வடிவமாக நிலைபெற்றுவிட்ட சூழலில், நெடுங்கவிதை அதைத் தன்னளவில் மறுவரையறை செய்ய முயற்சிக்கிறது. தமிழில் பிரமிளின் 'தெற்குவாசல்', கலாப்ரியாவின் 'எட்டயபுரம்', விக்ரமாதித்யனின் 'நவபாஷாணம்' போன்ற நெடுங்கவிதைகள் வெவ்வேறு விதங்களில் அந்த முயற்சியில் வெற்றி கண்டிருக்கின்றன.
ஷங்கர்ராமசுப்ரமணியனின் 'இகவடை, பரவடை' கவிதையையும் அவ்வரிசையில் பொருத்தலாம். சமூக வலைத்தளங்களின் அபரிதமான வளர்ச்சியையொட்டி கவிதைக்கான காலமும் கவனமும் குறைகிற போக்கு தென்படுகிறது. அந்தக் கோணத்திலும் ஷங்கருடைய நெடுங்கவிதை முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்தவனாகவும், ஆனால் காப்பாற்றிக் கொள்வதற்கான வழி தெரியாதவனாகவுமே ஷங்கர் மனிதனைக் கற்பனை செய்கிறார். பிறந்த நதிக்கரை, அம்மாவிடம் அருந்திய முதல் அமுது, நெல்லையப்பர் குடியிருக்கும் ஆலயம், புலம்பெயர்ந்த ஊர், விரும்பிய பெண்கள், வாசித்த நூல்கள் எல்லாமே கவிதைசொல்லியை விட்டு தூரம் போய்க் கொண்டேயிருக்கின்றன.
இன்னொருபுறம், மதமும் வரலாறும் அதிகாரமும் அவனை துரத்தியபடியுள்ளன. ஒரு மழையிரவில் நடுக்கத்துடன் ஊளையிடும் அனாதை நாய்க்குட்டி போல அவன் தவிக்கிறான். வெவ்வேறு தமிழ் எழுத்தாளர்கள் உலவும் ஷங்கரின் இந்த உலகத்தில் நகுலனின் பெயர் இல்லாமல் இருப்பது பெரிய வியப்பு. இன்னொரு வகையில் அது பொருத்தமானதும் கூட. இந்நெடுங்கவிதையே நகுலனுக்கான பாடல்தான் என்று நம்மால் சொல்ல முடிகிறது.
-விஷால் ராஜா
Be the first to rate this book.