எனக்குத் திருமணம் நடந்தது. திவ்வியமான நாளாம். மங்களமான முகூர்த்தமாம். மங்களத்தின் லட்சணம் மறுமாதமே தெரிந்துவிட்டது. கழனியைச் சுற்றிப் பார்த்து விட்டு வரச் சென்ற கணபதி சாஸ்திரிகள் என் கணவர் கால் வழுக்கிக் கீழே விழுந்து சில நாட்கள் படுக்கையில் இருந்துவிட்டு பரலோகப் பிராப்தியானார். நான் விதவையானேன். சகுனத் தடையானேன். சமுதாயத்தின் சனியனானேன். பெற்றோரின் கண்களில் நீர் வழியும்படியான நிலை பெற்றேன். தீ மிதித்தவள் போல், தங்கை சாந்தா திகில் அடையக் கூடிய உருவைப் பெற்றேன். என் இளமையும் எழிலும் போகவில்லை. என் கண்ணொளி போகவில்லை. நான் அபலையானேன். ஆனால், அழகியாகத்தான் இருந்தேன். தாலி இழந்தேன். ஆனால் சாய்ந்த தளிர் போலிருந்தேனேயன்றி சருகாக இல்லை, குங்குமமிழந்தேன். ஆனால் பொட்டிடாத என் நெற்றியும் பொலிவுடன்தான் இருந்தது. பார்சிக்காரிகள் பொட்டிடுவதில்லை. நம்ம காந்தாவின் முகம் அவாளுடையதைப் போலவே இருக்கிறதென்று அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடை உள்ள மலர் என்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா?
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.