இலக்கிய விமர்சகர்கள் கவனத்திற்கு
அலாவுதீனின் பூதத்தின்
குறுந்தாடி போல்
இருபுறமும் தொங்கும்
பழைய கதைப் புத்தக நிற
ஜோல்னா பை
கடந்த மாதம் காணாமல் போய் விட்டது
இறுதியாய் கலந்து கொண்ட
இலக்கியக் கூட்டத்தின்
சொற்பக் கூட்டத்திலிருந்த
யாரோவொருவர்
சுட்டுச் சென்றிருக்க வேண்டும்
புலிவரிகளோடும்
முழங்கால் வரை நீண்ட
பழுப்பு நிற
முரட்டு ஜிப்பாவிற்கு இணையாக
பாத விரிப்பை
பாதியாக்கித் தைத்தது போன்ற
திடமான பையது
ஒரு பெண் தோழி வாங்கி
பிரியத்துடன் பரிசளித்ததென்பது
உபரித் தகவல்
சில வருடங்களாக
தோழமையுடன்
தோளில் கிடந்தது
காணாமல் போனது முதல்
கையொடிந்தது போலுள்ளது
இனாமாக வந்த
இரண்டு கவிதைத் தொகுப்புகளும்
சட்டென விரியாத
பட்டன் குடையொன்றும்
கூட்டத்தில் போர்த்திய
ஈரிழைத் துண்டொன்றும்
இருந்ததாக ஞாபகம்
உள்ளொன்று வைத்து
புறமொன்று கூறல் சரியில்லை
பஞ்சுத் துணியில் பொதிந்து
குடுவைக்குள் அடைத்திருந்த
படிப்புக் கண்ணாடியும்
சரிபாதித் தண்ணீர் கலந்த
அரை பாட்டில் சரக்கும்
தொலைந்த துக்கம் தான்
தூக்கம் கெடுக்கிறது..
Be the first to rate this book.