எவரும் கேள்வி கேட்டிட தடுத்து நிறுத்திட முடியாத நிலையிலே ஒருவனை, 'மன்னன்' என்று நாம் அமர்த்திவிட்டால், அவன் கொடுமை செய்ய ஏன் கூச்சப்படப் போகிறான்? யாரிடம் அவனுக்கு அச்சம் ஏற்படப்போகிறது? அவன் ஆணை கேட்டிடப் படை இருக்கிறது; பஞ்சைகள் பராரிகள் எதிர்த்திட முடியுமா!! எனவே கொடுமைகள் இருப்பதற்குக் காரணம், கெட்டவன் ஒருவன் மன்னனானான் என்பது அல்ல; முடியாட்சி முறையே, இக்கேட்டினை முளைவிடச் செய்கிறது. எனவே முடியாட்சி முறை கூடாது கட்டுப்பட்ட கட்டுப்படுத்தக் கூடிய நாமாக அமைத்த, நாமாகக் கலைத்துவிடத்தக்க நம்மைப் புறக்கணிக்க முடியாத ஒரு அரசு முறை, ஒரு அமைப்பு வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது. அதன் விளைவே குடியாட்சி முறை என்பதாகும்.
மமதை, மந்தமதி எனும் கேடுடைக்குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்துவிட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்!
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.