இந்த நூலில் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவரும் இடஒதுக்கீடு இயக்கத்தின் மூலவர்களில் ஒருவருமான எஸ். முத்தையா முதலியாரின் திராவிடஸ்தான் என்கிற சிறு நூலும், 1956 இல் அறிஞர் அண்ணாவுக்கும் காந்தியவாதியும் பூதான இயக்கத்தின் தலைவருமான வினோபா பாவேவுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடலும் இடம்பெற்றிருக்கின்றன. இவ்விரு நூல்களும் திராவிட நாடு என்று அவர்கள் கண்ட கனவை அழகாகச் சித்தரிக்கின்றன. பிற்காலத்தில் அக்கோரிக்கைக் கைவிடப்பட்டாலும், அனைத்திந்தியவாதிகளுக்கும் திராவிடநாட்டு கோரிக்கையாளர்களுக்கும் இடையிலான விவாதங்கள் 1940-50களில் தமிழ்நாட்டில் நிலவிய முக்கிய அரசியல் முரண்பாட்டு இருந்தன. இந்த உரையாடலும் குறுநூலும் அரசியல் இலக்கியங்கள் என்று போற்றத்தக்க அளவுக்கு மிகச்சிறப்பான வாசிப்பு அனுபவத்தையும் தரவல்லவை.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
எஸ். முத்தையா முதலியார் (1883-1953) முக்கியமான நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவர். இவர் சென்னை மாகாண அரசில் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சராகவும் இருந்தவர். கம்யூனல் ஜி.ஓ எனப்படும் இட ஒதுக்கீடுக்கான முதல் அரசாணையை உருவாக்கியவர்.
Be the first to rate this book.