நம்முடைய கிராமப்புறத் தேவதைகளெல்லாம் கையிலே காவலுக்குரிய ஆயுதங்களையே ஏந்தியிருக்கின்றனவே, ஏன்? பயிரைக் காத்தல். கண்மாயிலிருந்து பாய்கின்ற நீரைக் காத்தல், விளைந்த பயிரைப் பகைவரிடமிருந்து காத்தல். அறுவடை செய்த தானியங்களைக் காத்தல், உழவுக்கு வேண்டிய கால்நடைகளைப் பகைவரிடமிருந்து காத்தல், ஊர் எல்லையில் நின்று எதிரிகளிடமிருந்து ஊரைக் காத்தல் இந்தக் காப்பு நடவடிக்கைகள்தாம் நேற்றுவரை கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படை எனவே, இந்த மக்களின் தெய்வங்களெல்லாம் இந்த மக்களைப் போலவே ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்தி, காவலுக்குரிய வயல்களின் ஓரத்திலும் கண்மாய்க் கரையிலும் ஊர் மந்தையிலும் ஊர் எல்லையிலும் அயராது கண் விழித்து நிற்கின்றன. இவை உட்காருவதும் கண் மூடுவதும் கிடையாது. இந்த மக்களைப் போலவே இத்தெய்வங்களும் முறுக்கிய மீசையும் வரிந்து கட்டிய வேட்டியுமாகச் சட்டையில்லாமல் (சில நேரங்களில் தலைப்பாகையுடன்) கள்ளும் கறியும் உண்பவையாக வாழ்கின்றன.
Be the first to rate this book.