நம் நாட்டின் மகாகவியாக விளங்கும் பாரதியையும், ஆங்கில மகாகவியான ஷெல்லியையும் ஒப்பிட்டுக் காட்டும் ஒப்பிலக்கிய நூல் இது. பாரதி, ஷெல்லி இருவருமே புரட்சிக் கருத்துக்களைச் சுமந்தவர்கள். சமூக நீதிக்காகப் போராடியவர்கள். ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்ட பாரதி, ஆரம்ப காலத்தில் தன்னை ஷெல்லிதாசன் என்றே அழைத்துக் கொண்டார்.
பாரதி முப்பத்தொன்பது வயது முடிவதற்குள்ளும், ஷெல்லி முப்பது முடிவதற்குள்ளும் இயற்கை எய்தினர். எனினும் அந்தக் குறுகிய காலத்தில், காலத்தால் அழியாத பல படைப்புக்களையும் வழங்கிச் சென்றவர்கள். இவ்வாறு பாரதிக்கும், ஷெல்லிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
ஷெல்லியின் புரட்சிப் படைப்புகள் பலவும் அவரது மரணத்திற்குப் பின்னரே அச்சிடும் வாய்ப்பைப் பெற்றன. ஷெல்லியைப்போல் பாரதியின் புகழும் அவரது மரணத்திற்குப் பின்னர்தான் ஓங்கத் தொடங்கியது. ஷெல்லி பாரதி இருவரும் மனித குலத்தின் சகலவிதமான விடுதலைகளுக்காகவும் பாடி, மனித குலத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லக் கனவு கண்டு, அந்த லட்சிய வேட்கையோடு இலக்கியப் படைப்புகளை எழுதிச் சென்ற காரணத்தால், இருவருமே உலகதின் சிறந்த சிந்தனையாளர்களின் வரிசையில் இடம் பெறுகிறார்கள்.
அதன் மூலம் அழியாப்புகழுடன் வாழ்கிறார்கள். இந்த இருவரையும் ஒப்பிட்டு எழுத்தாளரும், கவிஞரும், விமர்சகருமான தொ.மு.சி.ரகுநாதன் 'பாரதியும் ஷெல்லியும்' எனும் இந்நூலைப் படைத்துள்ளார்.
Be the first to rate this book.