‘சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. உன் நண்பனைத் தவிர’ என்று என்னை அழைத்தால், ‘என் நண்பன் இல்லாத இடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்' என்று கேட்பேன். ‘உன் நண்பன் அட்டிகஸ் நரகத்திலிருக்கிறான், வா என்றால், உடனே கிளம்பிவிடுவேன். நண்பன் இருக்கும் இடம் எப்படி நரகமாக இருக்க முடியும்?’ என்று ரோமாபுரி தத்துவஞானி சிசரோ கேட்கும்போது, நட்பு எவ்வளவு உயர்ந்ததாகத் தெரிகிறது!
‘கடவுள் அல்ல, மனிதன்தான் சாதியை உருவாக்கினான். கடவுள் அல்ல, மனிதன்தான் வெறுப்பைக் கண்டுபிடித்தான். கடவுளுக்குத் தெரிந்த மொழி கருணை மட்டுமே. மனிதனிடம் அந்த மொழியில்தான் பேசினார். நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது அதைத்தான். உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதும் அதைத்தான்’ என்று நாராயண குரு சொல்லும்போது, வெறுப்பை விதைப்பவர்களும் அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்!
‘தேன்போல் குழைந்துகொண்டிருந்த நான், குளவியாக மாறியது பாரதியால். ‘தமிழ்’ என்றால் இனிமை மட்டுமல்ல, வீரமும்தான் என்று நான் அறிந்தது பாரதியால். என் உணர்வாகவும் உயிராகவும் சொல்லாகவும் செயலாகவும் நிறைந்திருப்பவர் பாரதி. என் கவிதைகள் உங்களைச் சுடுகின்றன என்றால், அதற்குக் காரணம் பாரதியிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட கனல்’ என்று பாரதிதாசன் பேசும்போது பாரதியையும் பாரதிதாசனையும் நினைத்துப் பெருமிதம் பொங்குகிறது!
Be the first to rate this book.