மாற்று சினிமா', செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருண்.மோ, கடந்த பதினெட்டு ஆண்டுகளாக 'தமிழ்ஸ்டுடியோ' என்ற சுயாதீன திரைப்பட இயக்கத்தின் வழியாக, சினிமாவைக் கல்வியியல் ரீதியாக மக்களிடம் கொண்டுசேர்த்து வருகிறார். 'படச்சுருள்' மாத இதழ், 'பேசாமொழி' மற்றும் 'கருஞ்சிறுத்தை' போன்ற பதிப்பகங்களின் மூலம், தமிழில் 100-க்கும் மேற்பட்ட சினிமா மற்றும் சமூகம் சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளார். சினிமாவுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட 'ப்யூர் சினிமா' புத்தக அங்காடி, இந்தியாவின் இரண்டாவது, மற்றும் தமிழ்நாட்டின் முதல் சினிமா புத்தக நிலையமாகத் திகழ்ந்து வருகிறது. மேலும், கிராமப்புற இளைஞர்களுக்கும் சினிமா கல்வியைப் பரப்பும் நோக்கில் 'படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்' மற்றும் 'உதவி இயக்குநர் பயிற்சி மையம்' ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளார்.
IFFC என்ற சுயாதீன திரைப்பட விழாவைச் சென்னையில் ஏற்பாடு செய்து, இந்தியா முழுவதுமுள்ள சுயாதீன இயக்குனர்களை ஒன்றிணைத்து, அவர்களின் படைப்புக்களை பார்வையாளர்களுடன் பகிரும் மேடையையும் உருவாக்கியவர் அருண்.மோ. சினிமா குறித்த அவரின் 'நாடு கடந்த கலை', 'பேசும் சித்திரங்கள்', 'சினிமா எனும் கலை' ஆகிய நூல்கள், திரைக்கலையை ஒரு கலை வடிவமாக மட்டுமல்லாமல், சமூக உணர்வுடன் கூடிய சிந்தனை மொழியாக அணுகும் அவரின் ஆழமான பார்வையின் பிரதிபலிப்புகளாகும். அவரது இயக்கத்தில் வெளியான, 'The Story of a Casteist' மற்றும் 'TOILET' போன்ற குறும்படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்று வருகின்றன.
மகன் மகிழ்மாறனின் பிறந்தநாள் ஒவ்வொன்றிலும் சிறுவர்களுக்கென ஒரு சித்திரக் கதைப் புத்தகத்தை வெளியிடும் அருண். மோவின் இனிய மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு மகிழ் பதிப்பகத்தின் வாயிலாக, 'பீம்ஜி சிங்கம்', வெளியாகிறது.
'பீம்ஜி சிங்கம்' வரலாற்றில் மறக்கமுடியாத சமூகப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை சிறுவர் மனங்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தும் படைப்பாகும். குழந்தைகளின் இதயத்தில் சமத்துவத்தின் விதையை விதைக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த புத்தகமாக 'பீம்ஜி சிங்கம்' திகழும்.
Be the first to rate this book.