தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவப் பேரரசர்கள் காலத்திலும் பின் எழுந்த சோழப் பேரரசுக் காலத்திலும் முற்காலப்பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். களப்பிரரை ஒழித்து, பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 560 – 590) என்பவனால் தொடங்கப்பெற்றது முற்காலப் பாண்டியர் ஆட்சி. இவர்களுள் எட்டாவது நூற்றாண்டில் தன் தந்தையாகிய கோச்சடையான் விரித்து எடுத்த ஆட்சிப் பரப்பைக் குன்றாமல் செழிப்புற ஆட்சி செய்த பராங்குசன் மாறவர்மனைப் பற்றியும் அவன் நிகழ்த்திய போர்களைப் பற்றியுமாகச் சுவைபட விரிகிறது இந் நாவல்.
இவனது ஆட்சிக் காலத்தில் பல்லவம், கங்கம், ராஷ்டகூடம், சாளுக்கியம் என ஒன்றுடன் ஒன்று இணைந்தும் மாறுபட்டும் விளங்குவதை இந்த நாவல் காட்டுகிறது. இவன் பல்லவர்களுடன் போர் புரிந்த போது, வெற்றி தோல்வி என்பது மாறி மாறி நிகழ்ந்ததையும், சாளுக்கியர்களுடன் நிகழ்த்திய போரையும் விவரிக்கும் இந்நாவல், அன்பு, காதல், பக்தி, நகைச்சுவை, வரலாறு என அனைத்தும் கலந்து சுவை சேர்க்கிறது. வைணவ சமயத்தைச் சார்ந்தவனாக இருந்த போதிலும், சைவக் கோயில்களுக்கும் இவன் பல தொண்டுகளைச் செய்துள்ளான். திருமங்கை ஆழ்வார் இவனது காலத்தவர்.
இவர் இவனைப் பற்றிப் பாடியுள்ளார். வேள்விக்குடி செப்பேட்டிலும், கொடுமுடி கல்வெட்டிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரசர்கள் வாழ்வில் போர் என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என்றாலும், அதில் நெறி தவறாது, பக்தியில் சிறந்து விளங்கி, அனைவருக்கும் அன்பையும் மரியாதையும் அளிக்கும் உயர்ந்த ஒரு மனிதனாக, அவனி வல்லபன் திகழ்கிறான். சூழ்ச்சி , வஞ்சம், பகை இவற்றை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறான். தந்தையான ரணதீரனின் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, பல்வேறு போர்களைச் சிறப்புடன் நடத்தி, கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பேசப்படும் இவனைப் பற்றிய இந்நாவலை எழுதியுள்ளவர், வரலாற்று நாவலாசிரியர் கானப்ரியன்.
திருச்சி மாவட்ட லால்குடியில் 1960இல் பிறந்தவர் ஸ்ரீதரன் எனும் கானப்ரியன். மத்திய அரசு நிறுவனமான தொலைக்காட்சி நிலையத்தில் தொழில் நுட்ப உதவியாளராக சென்னை, மதுரை, புதுச்சேரி போன்ற இடங்களில் 37 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். மொழியின் மேல் இருந்த ஆர்வத்தினாலும் இயல்பான படைப்புத் திறனாலும் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுதிய கவிதைகளை ஒன்பது தொகுதிகளாக பல்வேறு பதிப்பகங்களில் வெளியிட்டுள்ளார்.
மெல்லிசைப் பாடகரான இவர் இலக்கிய உலகத்துள் கால் பதிக்கும் போது, இசையின் மேல் இருக்கும் தணியாத காதலால், தன் புனைப்பெயரை கானப்ரியன் என்று சூட்டிக் கொண்டார். பணி நிறைவு பெற்ற பின்னர் வரலாற்றுப் புனைவுகள் எழுத நினைத்து 2022 முதல் இதுவரை சோழச் சுடர் குலோத்துங்கன், வைகைப் புதல்வன், பல்லவராயன், காடவச் சிங்கம், கன்னர தேவன் என ஆறு சரித்திர நாவல்களையும் எழுதியுள்ளார்.
இவரது உரைநடையின் பாணியும், வீச்சும் அலாதியானவை. வெகு அரிதான சிலரிடம் கிடைப்பவை. இதற்கான காரணம் இவருடைய பிரத்யேகமான சொல் தேர்வுகளும், பிரமிப்பான உவமைகளும், உரைநடையில் இவர் தன் குருவாக திரு.லா.ச.ராமாமிர்தம் அவர்களை மனதில் வரித்தவர்.
Be the first to rate this book.