கனிந்தும் கனியாமல் வெம்பிப் பயனற்றதாகவோ, இதுவரை கண்டிராத இனிமையோடோ, காய்க்க மனமிற்றி நிற்கும் தனி மரமாகவோ இந்த வாழ்க்கை நம் மீது அதிகாரத்தையும் அன்பையும் ஒரு சேரச் செலுத்துகிறது.கட்டமைக்கப்பட்ட பொறுப்புகளும், சுமையும் ஏதேனும் ஒன்றிற்காக அலைந்து திரிந்து, சேகரித்து, பகிர்ந்து சில நாட்கள் நமக்காகவும், பல காலங்கள் யாருக்கென்றே தெரியாமலும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த அக மற்றும் புறச் சூழலை ஓரளவு கையாளத் தெரிந்தவர்கள் எழுத்தாளர்கள் தான். அவர்கள் இங்கிருந்து கொண்டே இன்னொரு வாழ்வெளியைப் படைத்துக் கொள்கிறார்கள். சமரசமற்ற கருத்துகளை ஒரு பூனைக்குட்டியாக்கி அதற்கு உயிரளித்து, கொஞ்சவும். சண்டையிடவும் பழக்குகிறார்கள். பிறகு அந்தப் பூனைக்குட்டி கதவுகளைத் தாண்டி, சுவர்களைத் தாண்டி, வீடுகளைத் தாண்டி முகமறியாதவர்களின் அடுப்படி வரை வந்து உரசியபடி முத்தமிட்டு அந்த நாளை அழகாக்கி விடுகிறது. இங்கு கௌதம் தனது அப்பாவின் வாசம் தொகுப்பு வழியாக கருணையும், பிடிவாதமும் கூடிய ஒரு செல்லப் பூனையை நம்மோடு பழக வைத்திருக்கிறார். அதன் அழகியலும், சக மனித அன்பும், மண் மொழியும் நம்மை வசீகரிக்கின்றன. இந்த சிறுகதைத் தொகுப்பை வேரல் பதிப்பகம் வழியாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அன்பும் வாழ்த்துகளும் கௌதம்.
- பதிப்பாசிரியர்
Be the first to rate this book.