அன்னையின் குரல் என்ற சரத்சந்திரரின் இந்த நாவல் 1928ஆம் ஆண்டில் வங்கவாணி என்ற பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்த போது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் கண்டனத்திற்கு இலக்காகியது. வங்கத்தில் நல்ல செல்வாக்குப் பெற்ற ஆஷுதோஷ் முகர்ஜியின் புதல்வர்களான சியாமபிரசாத் முகர்ஜி, ரமாகாந்த முகர்ஜி ஆகியவர்களால் அந்தப் பத்திரிகை நடத்தப்பட்டதால் அரசாங்கம் வங்கவாணி மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது.
இவ்வாறு வங்க அரசை அக்காலத்தில் வெகுவாகக் கலங்க வைத்த சரத்சந்திரரின் ஒரு சிறந்த படைப்பு இது. இதனைத் தொடர்ந்து இந்நாவலின் கதாபாத்திரங்களான பாரதி.அபூர்வன் ஆகியவர்களைக் கொண்டு மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதாக வைத்து இதன் இரண்டாம் பாகத்தை எழுதப் போவதாக தேசபந்து சித்தரஞ்சன் தாஸிடம் சரத்பாபு கூறியிருந்தாராம். ஆனால் எக்காரணம் பற்றியோ அது எழுதப்படவில்லை.
1941-ஆம் ஆண்டில் நடந்த தனியார் சத்தியாக்கிரகத்தின்போது இந்த நூலை நான் சென்னைச் சிறைச்சாலையில் மொழி பெயர்த்தேன். அது ஹிந்துஸ்தான் பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்தது, பிறகு அதனை என் சகோதரன் அ.கி.கோபாலன் 'பாரதி" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். அதை மீண்டும் ஒரு முறை மொழி பெயர்க்க விரும்பினேன், ஆனால் என் நண்பர் வெங்கடேசன் மொழிபெயர்க்க ஆசைப்பட்டார். தற்பொழுது வள்ளுவர் பண்ணை திரு. பழநியப்பன் முயற்சியால் உங்கள் கையில் உள்ள 'அன்னையின் குரல்", ஏனைய சரத் சந்திரர் நூல்களுக்கு அளித்த ஆதரவை தமிழ் மக்கள் இந்நூலுக்கும் அளிப்பார்கள் என நம்புகிறேன்.
- கனகதாரா அ. கி. ஜயராமன்
Be the first to rate this book.