கெவுளிக்குஞ்சுகள் கவிதை எழுத சப்தமிடுகின்றன. தாமரைத்தண்டின் நூலெடுத்து மஞ்சள் தடவி காப்பு கட்டி மூலிகை எடுக்கும் கரிசனத்தோடு எழுத உட்கார்ந்தால் ஆலமரமூட்டு குகையிலிருந்து எழும்பி ஆலம்பழங்களை வாரி வாரி எறிந்து விட்டு எதையோ பரிபாஷை சொல்லாடல்களாய் பேசுகிறது. பல நேரங்களில் பேனாவிலிருந்து இரத்தம் கொப்பளித்து நசிமசி நசிமசியென உரு ஜெபிக்கிறது. மண்டைக்குள்ளிருக்கும் வெந்தயம் தடவிய சோத்துக்கத்தாழைகள் லேகியமாய் மூக்கின் வழி நுழைந்து கமுகம் கள்ளுண்ட மயக்கத்திலாழ்த்தி விடுகிறது. நடு இராத்திரிகளில் உறங்கும் என்னை எழுப்பி கருங்கழுதை மையெடுத்து உள்ளங்கையில் தடவி கொண்டு உயிரோடு அலையும் உலகிற்கு கூட்டிக்கொண்டு போய் சதுரக்கள்ளி பாலெடுத்து சோறாக்கி தருகிறார்கள் தாத்தாக்கள். என் ஒவ்வொரு தூமை பிடித்த கவிதைகளையும் பிழிந்து வெள்ளாவி துணியாக்கி விரித்து உங்கள் முன் காயப்போடுகிறேன்.
Be the first to rate this book.