எல்லாம் கடவுள் செய்ய வல்லவர். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை. அதுபோலவே முனிவர்களும் கடவுள் தன்மை வாய்ந்தவர்கள். அவர்களாலும் ஆகாத செயல் எதுவுமில்லை. அவர்கள் 'அணுவை மலையாகவும் மலையை அணுவாகவும் மாற்றவல்ல ஆற்றலுள்ளவர்கள்' என்னுங் கருத்துக்கொண்ட நண்பர்களுக்கு யான் ஏதும் அறிய வல்லே னல்லேன். அவ்வாறன்றி முனிவர்கள் மானிட வகுப்பைச் சேர்ந்தவர்களே. அவர்கள் சிறந்த அறிவு வாய்ந்தவர்கள் என்று மட்டும் கொள்ளத் தகுந்தவர்களுக்கு யான் கூறப்புகுந்த இவ்வாராய்ச்சி பொருந்துவதாகும். மாந்தரைக் கடவுளாகவே எண்ணிவிட்டால் அவர்கள் எல்லாம் செய்ய வல்லவர்கள் தான் என்றே கருத வேண்டும். அவர்களைச் சிறந்த அறிவுடையார்களாக எண்ணினாற்றான் ஆராய்ச்சி என்பது பொருந்தும்.
புராணக் கதைகளெல்லாம் ஒரு காலத்து ஒருண்மையைப் புலப்படுத்த உண்டானவை.
அவற்றில் உண்மை சிறிதும் பொய்மை பெரிதும் கலந்திருக்கும். அவ்வுண்மையும் வெளிப்படையாகப் புலப்படாதவாறு பெரும்பாலும் உருவங்களாக அமைக்கப்படும். உருவங்கள் சில இடங்களில் தெளிவாகப் புலப்பட பலவிடங்களில் அவை அவ்வாறு புலப்படாது மறைந்து கிடக்கும். அவ்வகையில் அகத்தியனாரைப் பற்றிய உண்மைக் கூற்றுகளையும் பொய்மை மலிந்த புராணக் கதைகளையும் ஈண்டு ஆராய்வோம். இதன் பொருட்டே இன்று 'அகத்தியர்' என்பதை யான் எடுத்துக் கொண்டது.
Be the first to rate this book.