விடம்பனம்: புதிய பாணியில் பழமை பேசும் பிரதி

விடம்பனம்: புதிய பாணியில் பழமை பேசும் பிரதி

ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் வகைமைகளைக் கட்டுடைத்து உருவாக்கப்படும் படைப்புகள் அப்படைப்பாளிக்கு எவ்வித உற்சாகத்தைத் தருமோ அதே உற்சாகத்தை அல்லது அதே உற்சாகத்தின் வேறொரு பரிமாணத்தை வாசகனுக்கும் கடத்துகையில் அப்பிரதி வாசகனால் கொண்டாடப்படுகிறது. இவை வாசகனுக்கு புதுவிதமான வாசிப்பனுபவத்தைத் தரவல்லது. நம் சமூகத்தில் காணக்கிடைக்கும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைப் போலவே இலக்கியத்திலும் இந்தப் பிரதி இத்தகைய வாசகனுக்கானது என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்நாவலை வாசித்து முடிக்கையில் இது எத்தகைய வாசகனுக்கானது எனும் கேள்வி பிரதானமாக எழுகிறது. இக்கட்டுரையின் முடிவில் இந்தக்கேள்வி எழுந்ததற்கான காரணத்தை சொல்லிவிடக்கூடுமெனவும் அதற்கான பதிலைக் கண்டடைந்துவிட முடியுமெனவும் நம்புகிறேன்.

பொதுவாக ஒரு படைப்பை வாசிக்கத் தொடங்குகையில் அப்பிரதி குறித்த சிறு குறிப்பினைக் கூட அறிந்திருக்கக்கூடாது என்று எண்ணுவதுண்டு. ஏனெனில் ஏதாவது ஒரு வரி வாசிப்பினைத் தொந்தரவு செய்தபடியும் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருகைக்காக மனம் காத்திருக்கும் படியும் செய்துவிடும். முதல் நாற்பது பக்கங்கள் வாசித்தாகிவிட்டது. நாவலின் போக்கு இது வரை வாசித்தறிந்திராத ஒன்றாக இருந்ததால் கால அவகாசம் கருதி வாசிப்பதை நிறுத்திவிட்டு முகநூலில் இந்நாவல் குறித்து எழுதப்பட்டவற்றையும் சுகுமாரனின் முன்னுரையையும் வாசித்துவிட்டு நூல் வெளியீட்டுவிழாவின் காணொளிகளையும் பார்த்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்கினேன்.

கவிஞர் சுகுமாரன் முன்னுரையிலும் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி முகநூலிலும் இப்பிரதியை தமிழின் முதல் பிக்காரெஸ்க் நாவல் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதிலிருந்தே இந்நாவல் குறித்து பேசத் தொடங்குவது எளிதாக இருக்கும்.

‘கோளாறான சமூகத்தில் ஒரு பாத்திரம், தான் மேற்கொள்ளும் சாகசங்களை அங்கதமாகவும் பகடியாகவும் வெளிப்படுத்தும் புனைவு வடிவமே பிக்காரெஸ்க் நாவல். – சுகுமாரன், முன்னுரையிலிருந்து’.

இவ்வரையறை மட்டுமல்லாமல் பிக்காரெஸ்க் நாவலுக்கான தன்மையை சில விதிமுறைகளுக்குள் உட்படுத்துகிறார்கள்.

A picaresque narrative is usually written in first person as an autobiographical account.

தன்னிலையில், ஒரு சுயவரலாற்றைப் போல எழுத வேண்டுமென்பது இதன் முதல் விதி. ‘விடம்பனம்’ நாவல் முழுவதும் தன்னிலையில் எழுதப்படவில்லையெனினும் அநேக பகுதிகளில் இத்தகையை வெளிப்பாட்டைக் காணயியலும். தன்னிலையில் எழுதப்படவில்லையே தவிர நாவல் முழுவதும் ஒரு சுயவரலாற்றைப் போல அல்லது ஆட்டோஃபிக்ஷன் போலவே தோற்றம் தருகிறது. எழுத்தாளர் தன் பால்யகாலம் முதல் இன்றைய தேதி வரை தான் சந்தித்தவைகளையும் சிந்தித்தவைகளையும் பற்றிய தொகுப்பாக இருப்பதான தொனியை இந்நாவலை வாசிக்கையில் உணர முடிகிறது.

The main character is often of low character or social class. He or she gets by with wit and rarely deigns to hold a job.

‘விடம்பனம்’ நாவலில் ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தை பிரதானமான பாத்திரமாக குறிப்பிட இயலாது. நாவலில் இடம்பெறும் பாத்திரங்களில் பலவும் ‘கோளாறான சமூகத்தை’ பின்னணியாகக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

There is no plot. The story is told in a series of loosely connected adventures or episodes

முழுமையான கதை என்று இந்நாவலில் ஏதும் இல்லை. பல்வேறு சிறு பகுதிகளை ஒட்டு மொத்தமாக வாசக மனம் தொகுத்துப் பார்க்கையில் நாவலின் மைய இழையை ஒருவேளை கண்டுகொள்ள முடியும். நாவலுக்கு ஒரே ஒரு மையம் கிடையாதென்பது குறிப்பிடத்தக்கது.

The picaro’s story is told with a plainness of language or realism.

இந்நாவலின் ஒட்டுமொத்த பக்கங்களும் யதார்த்தத்தால் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. யாதார்த்தத்திலிருந்து சிறிதும் விலகவில்லை.

Satire might sometimes be a prominent element.

சமூக அமைப்பையும், அரசியல் போக்குகளையும், அரசியல் பேசும் மாந்தர்களையும், சுயத்தையும், ஏன் ‘விடம்பனம்’ நாவலையுமே கூட பகடி செய்கிறது. அங்கதமும் பகடியுமான மொழியினைத் தான் நாவல் முழுக்கவும் கையாண்டிருக்கிறார்.

The behavior of a picaresque hero or heroine stops just short of criminality. Carefree or immoral rascality positions the picaresque hero as a sympathetic outsider, untouched by the false rules of society.

நாவலின் கதாப்பாத்திரங்கள் எதையும் பொருட்படுத்தாமல் வலம்வருபவர்களாக இருப்பார்கள் என்பது இதன் கடைசி விதி. இதற்கு உதாரணமாக இந்நாவலில் பெயர்களின்றி வலம் வரும் ‘அவளையும் இவளையும்’ குறிப்பிடலாம். எதையும் சகஜமாகக் கையாண்டு எளிதாக கடந்து போகும் மனம் இவர்களுடையது. மரத்தின் கிளைகளில் அவளும் கிருஷ்ணப்பருந்தும் அமர்ந்து கொண்டு போட்டியிடும் இடங்களெல்லாம் நாவலில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. தலைகீழாக மரமேறுவதும் பருந்திற்கு நிகராக பறப்பதும் இதுவரை நாம் பார்த்திராத காட்சியாக கண்முன்னே விரிகின்றது.

‘நெட்டைரகத் தென்னை மரத்தை நோக்கி நடந்தாள். சரசரவெனத் தலைகீழாய் மரத்தில் ஏறி, பாதி வெட்டிய பச்சை மட்டையின் நுனிக்கு நகர்ந்து இரண்டு கைகளாலும் பாவாடையை மேலே தூக்கி கிருஷ்ணப்பருந்தின் இறக்கைகளைப் போல விரித்துப் பிடித்தாள். இரண்டு கால் கட்டை விரல்களையும் ஒன்றாகச் சேர்த்து பச்சை மட்டையில் அழுத்திக் குதிகாலை உயர்த்தினாள். மட்டை தாழ்ந்தது. சறுக்கிக்கொண்டே வந்தவள் பருந்தைப்போலப் பறக்கத் துவங்கினாள் மேலிருந்து கீழாக. அடர்ந்து வளர்ந்திருந்த குத்துக் கற்றாழையின் நடு முள்தான் அவளுடைய வயிற்றுக்குக் குறி. கிருஷ்ணப்பருந்து ஆவேசமாய்ப் பறந்தது.’ [பக்.287] 

O

ஏற்கனவே குறிப்பிட்டது போல கதை என்று ஏதும் குறிப்பிட முடியாததாலும் கதை சொல்லும் யுக்தியினால் நாவலின் போக்கை பின்தொடர்வதில் கூர்ந்த வாசிப்பை ‘விடம்பனம்’ கோருவதாலும் நான்கு தலைப்புகளின் கீழ் குறிப்பெழுதத் தொடங்கினேன்.

குடிகாரனின் குரல்

அம்மாஞ்சி

மருதம் வாசகர் வட்டம்

இதல்லாது பயணிக்கும் நாவலின் முக்கியப்போக்கு. (இதை முக்கியம் என்று குறிப்பிடுவதற்கு காரணம் நாவலின் பிரதானப் பக்கங்களைத் தன்னகத்தே இப்பகுதி கொண்டிருப்பதால்.)

சமூகத்தின் நிலை, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், பார்ப்பீனியம், போராட்டங்கள், கடவுள், சினிமா, மாற்று அரசியல், பேய்கள் போன்றவை குடிகாரனின் குரலில் வெளிப்படுகின்றன. முதல் நூறு பக்கங்களுக்குள் மட்டுமே ‘குடிகாரனின் குரல்’ ஒலிக்கின்றது. அங்கதமும் பகடியும் ஏளனமா பார்வையையும் தான் நாவல் முழுவதும் கையாண்டிருக்கிறார் என்றாலும் ‘குடிகாரனின் குரல்’ மற்றும் ‘அம்மாஞ்சி’ பகுகளிலேயே உச்சபட்சமாக வெளிப்படுகிறது.

‘அம்மாஞ்சி’ பகுதியானது அம்மாஞ்சியின் பால்யகாலம் விடலைப்பருவம் தற்காலம் என முன்னாலும் பின்னாலும் மாறி மாறி பயணமாகிறது. கரி ஓவியம், யானை, காசி, கொல்கத்தா, புளியமரம், மகாபலிபுரம், கிரிக்கெட், நாடகம், சினிமா, இசை, புகைப்படம், கலை, இலக்கியம் என இப்பகுதி பேசுகிறது. பிற பகுதிகளில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள் ‘அம்மாஞ்சி’யின் பகுதிகளிலும் வந்து போவதால் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் புள்ளிகளை இணைத்து உருவம் கொடுக்க முயற்சித்துப்பார்க்கலாம்.

தமிழுக்கு மிகவும் புதிய பாணி. கோர்வையாக சம்பவங்கள் ஏதும் கிடையாது. சில அத்தியாயங்களுக்குள்ளேயே கூட கோர்வையில்லாமல் சிதறிக்கிடக்கின்றன. பகடியான மொழி. ஒரு குறிப்பிட்ட மையத்தை நோக்கி நாவல் பயணிக்காததாலும் பல்வேறு சின்ன சின்ன கதைகளாகவும் சம்பவங்களாகவும் விரவிக்கிடப்பதாலும் இது தான் இந்நாவலின் சாராம்சம் என்று குறிப்பிடுவது சுலபமல்ல. மாறாக அவ்வாறு முயற்சிப்பது அபத்தமாக முடியவும் வாய்ப்புண்டு. ஒட்டுமொத்தமாக நாவலை வாசித்து முடித்தபின்பு சிந்தித்துப் பார்க்கையில் பல சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் ஆழமாக பதிந்திருப்பதை உணர முடிகிறது. தலைகீழாக தென்னை மரம் ஏறுதல், அவள் அவள் எனக்குறிப்பிட்டு பேசப்படும் அத்தியாயங்களின் புதிர்த்தன்மை தரும் குதூகலம், அவளைப் பற்றிய வர்ணனைகள், குளம், மரம், செடி, பறவை, அணில், மூஞ்சூறு என பல்வேறு உயிரினங்கள், முக்கியமாக கிருஷ்ணப்பருந்து, கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள்ளாக சொலவடைகளால் உரையாடிக்கொள்வது என இவற்றையெல்லாம் வாசிப்பதும் பின்பு அசைபோடுவதும் குதூகலமான அனுபவங்கள்.

இந்நாவலை எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் வாசித்துச் செல்லலாம். கொண்டாட்டமான மனநிலையுடைய பெண்கள். ‘கண்ணைக்கசக்கி முந்தாந்தனையைப் பிழிந்துபிழிந்து அழும் சவுக்கரைத்தான் அவளுக்குப் பிடிக்காதே தவிர, புதிய பறவையில் அறிமுகக்காட்சியிலிருந்து கடைசி வரை தொடை தட்டிப் பாடி ஆடும் சவுக்காரை அவள் மனம் விரும்பவே செய்தது.’ யார்யாருடன் பேசுகிறார்கள் உறவாடுகிறார்கள் போன்ற தெளிவின்மையின் காரணமாகவும் சம்பவங்களை வர்ணனைகள் மூலம் விவரித்துச் செல்லாமல் சிறு குறிப்புகளின் மூலமாக நகர்த்திக் செல்வதாலும் உணர்வு ரீதியான பாதிப்பை ‘விடம்பனம்’ தருவதில்லை. தூக்கு மாட்டி இறந்து போகும் சம்பவமும் கூட ‘அவளின்’ பெருமை பேசுவதாகவே இருக்கின்றது. காமமும் கொண்டாட்டமாக வெளிப்படுகிறது. எவ்வித உணர்ச்சிக்குட்படுத்தாமல் ‘விடம்பனம்’ பயணிப்பது பலமா பலவீனமா என்பதெல்லாம் வாசகனைப் பொறுத்தது.

புத்தகத்தின் தரத்தையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். முதன்முறை கையிலெடுத்துப் பார்க்கையில் கிட்டிய அனுபவம் அலாதியானது.

நம் தமிழ் சமூகத்தில் முற்போக்கான சிந்தனைகள் இலக்கியத்தில் தான் நிகழ்கிறது என மூத்த படைப்பாளிகள் பலரும் குறிப்பிடுவதை அறிந்திருக்கிறோம். பின் தங்கிய நிலையிலிருப்பது தமிழ் சினிமா என்பதையும் நாம் அறிவோம். சுவரொட்டியின் ஆறு கேள்விகளில் ஆரம்பித்து நாவலில் ஆங்காங்கே ஏற்கனவே தமிழ் சினிமாவிலேயே கூட பேசிப்பேசி சலித்துப்போன சம்பவங்களைக் கையாளுகிறது. கதாப்பாத்திரங்கள் சிந்திப்பதும் கூட அந்த அளவிலேயே நிற்கின்றது. நாவலில் சிறப்பாக வந்திருக்கும் ‘அவள்’ கதாப்பாத்திரமும் கூட இறுதியில் பொங்கல் கரும்பு ஆலைக் கரும்பு என பழமை பேசுகிறது. இந்நாவலின் மிகப்பெரும் குறையாக நான் கருதுவது தேய்வழக்கான சம்பவங்களைப் பேசுவதும் தேய்வழக்கான எண்ணங்களின் வெளிப்பாடும் தான். இதுவரை இது போன்ற விஷயங்களைக் கேள்விப்பட்டிராத இளம் வாசகனுக்கு இவ்விஷயங்கள் திறப்பைத் தரவல்லது என்றால் கதை சொல்லல் யுக்தி அவனை அருகே அண்டவிடாது. நவீன பாணியில் பழைய சம்பவங்களைப் பேசுவதாலும் தேய்வழக்கான எண்ணங்களைப் பிரதிபலிப்பதாலும் இப்பிரதி எத்தகைய வாசகனுக்கானது எனும் கேள்வி எழுகிறது.

விவரணைகள் அல்லாமல் சிறு குறிப்புகளாக வரலாற்று சம்பவங்கள் வெளிப்படுகின்றன. அங்கதமான மொழியில். சிறிய மிகச்சிறிய குறிப்புகளுக்காக வரலாற்றை அறிந்து பின் மீண்டும் புதினத்திற்குள் நுழைவார்களா என்பதும் சந்தேகமே. ஆக இப்பகுதிகளெல்லாம் எவ்வித சிறு தாக்கத்தையும் தரவில்லை என்பதை எனது வாசிப்பனுபவத்தில் இருந்து குறிப்பிடுறேன்.

நாவலின் இறுதி பகுதிகளில் பெருமாள் முருகனின் சர்ச்சை விரிவாக விவாதிக்கப்படுகிறது. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து இப்பிரதியை வாசிக்க நேரும் வாசகன் இதை எப்படி உள்வாங்கிக்கொள்ள முடியும் எனும் கேள்வியும் எழுகிறது. அதில் பங்கு பெரும் கதாப்பாத்திரங்கள் அனைவரையும் நான் அறிவதாலேயும் அந்த சர்ச்சை குறித்த அனுபவம் எனக்கு உண்டென்பதாலேயும் தான் இதை என்னால் எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. இதற்கு முந்தைய பகுதிகளில் சில அதில் இடம் பெற்ற கதாப்பாத்திரங்களுக்கும் அல்லது அச்சம்பவங்களை அறிந்தவர்களுக்கும் மட்டும் வாசிப்பின்பம் கிட்டியிருக்குமே தவிர மற்றவர்களெல்லாம் வெறும் சம்பவங்களாக வார்த்தைகளாக அதைக் கடந்து செல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இந்நாவல் எப்படிப்பட்டது இதை எப்படி அணுக வேண்டும் போன்ற குறிப்புகள் நாவலிலே குறிப்பிடப்படுகின்றன. நேரடியாகக் குறிப்பிடப்பவில்லையெனினும் நான் அப்படியே புரிந்து கொள்கிறேன்.

‘இது நேர்கோட்டுக்குக் கீழ, இப்படி நான் எப்போ எதைப் பார்த்தேன். நான் எப்போ படிச்சேன், வாழ்ந்தேன், இதெல்லாத்தையும் மேலயும் கீழயும் அடுக்குனா அதுதான் நான். என் வரலாறு. என்னோட புகழ்ச்சி. அந்தப் புகழ்ச்சிதான் நான். அதுக்கு நான் வேணும். எனக்கு அது வேணும். இப்படித்தான் என் வரலாற எழுதணும்ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்.’

‘அருமையா இருக்கே தமிழ். இது நான் லீனியர பத்தி பேசறதா எனக்குத் தோணுது. இருந்தாலும் ஒரு வரலாற்ற நீங்க பாக்குற விதம் அருமையா இருக்கு. இது ஜோல்ட் அண்ட் ஜால்ட் அல்லது ஜிக் ஜாக் அப்படின்னும் வச்சிக்கலாம். இல்லன்னா தமிழ் எழுத்துல அஃகன்னா இருக்கே அஃகன்னா அப்படியும் புரிஞ்சிக்கலாமோ. நல்ல வேள தமிழ் – எங்க நீங்க அப்பா, அம்மா தாத்தா, பாட்டி வரலாறுன்னு சொல்லுவீங்களோன்னு பயந்தேன்’

‘நம்முடைய வாழ்வியல் சுதந்திரமானது. நம்முடைய வாழ்வியல் நமக்கே புதிதானது. நம்முடைய வாழ்வியலே புதிய வரலாறு.’ [பக்.299, 300]

ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றை காலத்தால் பின்னால் சென்று பேசுவதில் என்ன இருக்கிறது. அதிலும் புதிதான சிந்தனைகள் எதையும் பேச முயலவில்லை எனும் பட்சத்தில். இப்பகுதிகளை வாசிக்கையில் கி.ரா தனது ‘கோபல்ல கிராமம்’ நாவலில் கையாண்டிருக்கும் சில சம்பவங்கள் நினைவிற்கு வந்தன. புதிதாக ஒன்றிற்கு மக்கள் அறிமுகமாகையில் அதை எவ்வாறு அவர்கள் எதிர்கொண்டார்கள் என்பது ‘கோபல்ல கிராமம்’ நாவலில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். சமகாலத்தையோ அல்லது இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னால் சென்று எதிர்காலத்தில் இருந்து பேசுவதோதான் இந்தப்பாணிக்கு பொருத்தமாக இருக்குமென்பது எனது எண்ணம். வேறொரு நாவலுடன் ஒப்பிட்டு பேசியதற்கும் இப்படி இருந்திருக்கலாம் எனும் அறிவுரைக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இந்நாவல் குறித்து தனது கருத்துகளாக பின்வரும் வரிகள் நாவலில் இடம்பெறுகின்றன.

மிகவும் பூடகமான விஷயங்கள், பெரும் சூழ்ச்சித்திறனோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் பொதிக்கப்பட்டுள்ளன. உட்பிரதியைக் கண்டெடுத்து வாசித்தல் என்பது உயர்நிலை வாசிப்பின் அடையாளம். ஆனால் இது புதிரவிழ்த்தல். ஒருவரும் நாவலை சரியாகப் புரிந்துகொள்ளப் போவதில்லை. தப்புத்தப்பான எதிர்வினைகள் மட்டுமே வரும். (அதாவது எதிர்வினைகள் வரும் பட்சத்தில்.) [பக்.95] 

மேலும் சிலவும் உண்டு. நாவலின் 95வது பக்கத்தில் வாசித்துக்கொள்ளலாம். இவ்வரிகளை சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகக் காண்கிறேன். அல்லது என்னைப் பொறுத்தவரையில் உவப்பானதாக இல்லை. கொஞ்சம் உன்னிப்பான வாசிப்பில் நாவலின் போக்கினை உள்வாங்கிக்கொள்ள முடியும். சரியாக உள்வாங்கிக்கொண்டானா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்நாவல் பேசும் விஷயங்கள் இதுவரை நாம் அறிந்திராத ஒன்றல்ல. தனித்தனி அத்தியாயங்களாக எடுத்துப் பார்த்தால் அக்குறிப்பிட்ட பகுதியை உள்வாங்கிக்கொள்வதிலொன்றும் சிரமமிருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் யாராலும் சரியாகப் புரிந்துகொள்ளப் போவதில்லை என்பதை பின்னட்டையிலே குறிப்பிட்டிருந்தால் இதை கையிலெடுக்க வாசகன் சற்று யோசித்திருப்பான் அல்லவா? புரியாமல் உள்வாங்கிக்கொள்ள முடியாமல் போனாலும் கூட வாசகனைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய கூற்றை முன்வைப்பது சரி தானா? இக்கூற்று நாவலிலேயே இடம்பெறுவதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்றபடி ஒன்றுமில்லை.

மிகுந்த மனச்சோர்வினைத் தந்த நாவலின் இறுதியில் இடம்பெறும் வரிகளை நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். ‘இந்த நாவலை நாம வெளியிடப் போறமா?’ எனத் தொடங்கும் ஒன்றரை பக்க உரையாடல். அதில் ஒரு வரி: ‘உழைப்பே இல்லாம நாம செஞ்ச இந்தக் காரியத்துக்கு இத வெளியிடணுமான்னு எனக்குத் தோணுது. அப்புறம் இத நம்பளே கிழிச்சிப் போட்றதுதான் நல்லது’.

சுயபகடி செய்து கொள்வது ஆரோக்கியமானது தான். ஆனாலும் தனது படைப்பின் மீது படைப்பாளனே இது போன்ற அபத்தமான வரிகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படைப்பின் மீதும் படைப்பாளியின் மீதும் பெரும் ஈடுப்பாட்டுடன் நாவலை அணுகும் வாசகனை அவமதிப்பது போலல்லவா? இவ்வரிகளை நாவலின் இறுதியில் அல்லாமல் முதலிலேயாவது குறிப்பிட்டிருக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் துயர கீதங்களையே வெவ்வேறு விதங்களில் பாடிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சிலர் சமூகம் மறுக்கும் விஷயங்களைப் பேசுவதும் அதன் மூலம் அதிர்ச்சி மதிப்பீட்டினைத் தருவதும் தான் புது முயற்சி என இயங்கிக்கொண்டிருக்கின்றனர். புது விதமான முயற்சிகள் மிகவும் வரவேற்கத்தக்கது. அது வடிவம் சார்ந்ததோடு மட்டும் நின்றுவிடாமல் படைப்பில் கையாளப்படும் விஷயங்களிலும் புதுமைகளை நிகழ்த்த வேண்டுமென்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்.

O

(24/09/2016 அன்று பரிசல் புத்தக நிலையத்தில் ‘விடம்பனம்’ நாவல் குறித்து நடைபெற்ற நிகழ்வில் வாசித்த கட்டுரை.)

(நன்றி: சாபக்காடு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp