யு. ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

யு. ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

யு.ஆர். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா அளவுக்கு மேலைநாடுகளில் புகழ்பெற்ற இந்திய நாவல்கள் முறைவு. காரணம் ஏ.கெ. ராமானுஜனின் சிறப்பான மொழியாக்கம். முதல் மொழியாக்கப்பதிப்பு அமெரிக்காவிலேயே வெளியானமை. பட்டாபி ராம ரெட்டி இயக்க, திரைக்கதையை அனந்தமூர்த்தியும் கிரிஷ் கர்னாடும் அமைக்க, எடுக்கபப்ட்ட நாவலின் புகழ்பெற்ற திரைவடிவம்.

ஆனால் உண்மையில் அதுமட்டுமே காரணமா? அல்ல. இந்நாவலின் மையமான நோக்கு முற்றிலும் மேலைநாடு சார்ந்தது. மேலைநாட்டினருக்கு எளிதில் புரிந்துகொள்ளத்தக்கது. ஆர்.கெ.நாராயணன், சல்மான் ருஷ்தி ,அருந்ததி ராய், விக்ரம் சேத் போன்ற இந்திய-ஆங்கில எழுத்தாளர்கள் இந்தியா பற்றி எழுதும்போது வெளிப்படும் மேலைநாட்டு பார்வைக்கோணம் இந்த அசல் கன்னட நாவலிலும் உள்ளது. ஆனால் இந்திய-ஆங்கில நாவகள் அனைத்துமே பொதுவாக மேலை நாட்டு பொது வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கத்துடன் அவர்களுக்காக சமைக்கப்பட்ட மேலோட்டமான ஆக்கங்கள். அவற்றின் இலக்கிய மதிப்பு என் நோக்கில் மிகமிகக் குறைவு. அமிதவ் கோஷ் விதிவிலக்கு.

ஆனால் சம்ஸ்காரா இந்தியப் பண்பாட்டின் அடிப்படையான நெருக்கடிகளைப்பற்றிய உண்மையான அவதானிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய வாழ்க்கையின் நுட்பங்களை உள்ளிருந்தே நோக்கும் ஒருவருக்குரிய இயல்பான துல்லியத்துடன் காட்டுகிறது.இது தன் சமகால கன்னடப் பண்பாட்டை நோக்கியே பேசவும் முயல்கிறது. அவ்வகையில் இது முற்றிலும் இந்திய நாவல்தான். இந்திய-ஆங்கில நாவல்களைப்போல போலியான ஒன்று அல்ல.

பண்பாட்டு சிக்கல்களை ஆராயும் அனந்தமூர்த்தியின் வாழ்க்கைத் தத்துவம் மேலைநாட்டு இருத்தலியல் சார்ந்தது. ஆகவே நாவல் மூலம் அவர் முன்வைக்கும் தீர்வு அல்லது கண்டடையும் முடிவு முற்றிலும் மேலைநாடு சார்ந்ததாக உள்ளது. இது அவருடைய ஆளுமை சார்ந்ததும் கூட. அவரது பிற நாவல்களான ‘அவஸ்தே’ ‘பாரதிபுரம்’ ஆகியவற்றிலும் இதைக் காணலாம்.அனந்தமூர்த்தி கன்னடத்தில் நவ்யா [நவீனத்துவ] இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர். நவீனத்துவத்தின் தத்துவக்குரல்தான் இருத்தலியம் என்று சொல்லப்படுகிறது.

அறுபதுகளில் இந்தியா முழுக்க மேற்கத்திய நவீனத்துவம் அறிமுகமாயிற்று. இந்தியச் சூழலில் அது மிகுந்த தனித்தன்மைகள் கொண்ட இந்திய நவீனத்துவமாக மாறி வளர்ந்தது. காலனி ஆட்சிக்கு எதிரான ஓர் இயக்கமாகவே இந்திய மறுமலர்ச்சி உருவாயிற்று என்பது வரலாறு. இந்திய மறுமலர்ச்சி இந்திய மரபை மறுகண்டுபிடிப்பு செய்வதில் இருந்து தொடங்கியது. இந்தியாவின் பண்டைப் பாரம்பரியத்தின் சிறப்பான பகுதிகள் மீண்டும் கவனப்படுத்தப்பட்டன. குறைபாடுகள் களையப்படவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. முரண்பாடுகளை அகற்றவும், சமரசப்படுத்தவும், பலசமயம் மழுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போக்கின் அடுத்தபடியாக இந்தியமரபின் சிறப்பான பகுதிகளை மிதமிஞ்சி அழுத்திக்கூறும் போக்கு பிறந்தது. காலனியாதிக்கத்தின் அழுத்ததிற்கு எதிரான எதிர்வினை இது. சுய கண்டடைதலின் அல்லது சுய உருவாக்கத்தின் காலகட்டம் இது.

இந்தியா சுதந்திரம் பெற்று சில வருடங்களுக்கு இந்த வேகம் நீடித்தது. பிறகு பழைய-புதிய பொற்காலங்கள் குறித்த கனவுகள் கலைய ஆரம்பித்தன. யதார்த்தப் பார்வை முளைவிடத் தொடங்கியது. இந்த ‘பின்-சுதந்திர’ விரக்தியின் வெளிப்பாடாகவே இந்திய நவீனத்துவம் இங்கு உருவெடுத்தது. நம்பிக்கைகளுக்கு மாறாக விமரிசனப் பாங்கு கொண்ட பகுத்தறிவு வாதத்தை அது முன்வைத்தது. மரபு குறித்த பெருமிதங்களுக்குப் பதிலாக மரபுகளை முற்றாக உதாசீனம் செய்யும் எதிர்ப்பு நிலை உருவாகியது.

தனிமனிதவாதமும் தனித்துவம் சார்ந்த தரிசனங்களும் அடிப்படைகளாக அமைந்தன. இத்தகைய இந்திய நவீனத்துவ அணுகுமுறையின் மிகச்சிறந்த உதாரணம் என்று யு.ஆர். அனந்தமூர்த்தியின் படைப்புலகைக் குறிப்பிடலாம். இந்திய நவீனத்துவம் உருவாக்கிய மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளில் ஒன்று என்று பரவலாக ஒத்தக்கொள்ளப்படும் நாவல் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா.

நவீனத்துவத்தின் எல்லா பலங்களும் இதற்குண்டு. அடிவயிற்றில் செருகப்பட்ட துருப்பிடித்த ஆணி போல விஷமும் கூர்மையும் உடையது இது. (நன்றி ஜெ.ஜெ. சில குறிப்புகள்). நவீனத்துவத்தின் எல்லா பலவீனங்களும் இதற்குண்டு. அமுதமும் விஷமும் சமன் செய்யப்பட்ட நிலை இதில் இல்லை. மூர்க்கமான எதிர்ப்பு மட்டுமாகவே நின்றுவிடுகிறது. ‘கலாச்சாரம்’ ‘சவ அடக்கம்’ ஆகிய இரண்டு அர்த்தங்கள் வரும் ஒருசொல்லை தன் நாவலுக்கு தலைப்பாக அனந்தமூர்த்தி சூட்டியிருப்பதே எல்லாவற்றையும் கூறிவிடுகிறது.

உடுப்பி ராகவாச்சார் அனந்தமூர்த்தி உடுப்பி அருகே மாத்வாச்சாரிய குருபரம்பரையில் வைதீக வைணவ மரபில் பிறந்து ஆங்கிலப் பட்டமேற்படிப்பு படித்து மேற்குநாடுகளில் பணியாற்றியவர். அவர் அமெரிக்காவில் இருக்கும்போது எழுதிய நாவல் இது. பல இந்தியமொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவல் தமிழில் இருமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலில் தி.சு. சதாசிவம் அவர்கள் மொழிபெயர்த்து காவ்யா வெளியீடாக வந்தது. பிறகு ஓரியன்ட் லாங்மேனின் பிழைமலிந்த மொழிபெயர்ப்பு வந்தது. தமிழிலும் பரவலாக கவனிக்கபப்ட்ட படைப்பு.

இன்று நவீனத்துவத்தின் வேகம் அனேகமாக இந்தியமொழிகளில் முழுக்க தணிந்துவிட்டது. இறுதிக்கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு மொழியிலும் மிகச்சில நவீனத்துவ படைப்புகளே அடுத்த கட்டத்திற்காக சட்டை உரித்து புதிதாகப் பிறவி கொள்ளும் தகைமையுடன் உள்ளன. மலையாளத்தில் இவ்வகையில் கசாகின் இதிகாசம் (ஒ.வி.விஜயன்) ஆள்கூட்டம் (ஆனந்த்) நீத்தார் திரியை (எம். சுகுமாரன்) ஆகிய மூன்று நாவல்களை மட்டுமே குறிப்பிடமுடியும். தமிழில் ஒரு புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் (சுந்தர ராமசாமி) பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர் (அசோகமித்திரன்) கிருஷ்ணப்பருந்து (ஆ. மாதவன்) என் பெயர் ராமசேஷன் காகித மலர்கள் [ஆதவன்] நாளை மற்றுமொருநாளே[ ஜி.நாகராஜன்] ஆகியவை.

நவீனத்துவ அலையின்போது மரபைத் துறப்பது ஒரு புனிதசடங்காக இருந்தது. பிராமணர்கள் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள். கிருதா வைத்துக் கொண்டார்கள். ‘தூக்கிவீசும்’ துடிப்புள்ள கதைகள் எழுதப்பட்டன. கலாச்சார அதிர்ச்சி கொடுப்பதே கலையின் முக்கியமான இயல்பு என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. இந்த திமிறல்களில் பெரும்பாலானவை ஆழமற்றவை. வெறும் சுய ஏமாற்றுக்கள். இவற்றுக்குப் பின்னனியில் உள்ள உண்மையான சிக்கலையும் தர்மசங்கடத்தையும் கூறிய படைப்புகள் குறைவு. அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அப்படி வெற்றியடைந்த படைப்புகளில் ஒன்று.

*

சம்ஸ்காராவின் கதாநாயகர் பிராணேசாச்சாரியார் மரபால் உதாரணப்படுத்தப்படும் உத்தம பிராமணர். புலனடக்கம், சாஸ்திர ஞானம், நியம நிஷ்டைகள் ஆகியவற்றுடன் ஊர் மரியாதைபெற்று வாழ்பவர். அவரது மனைவி வெகுநாள் முன்னரே நோயுற்று படுத்த படுக்கையாக இருக்கிறாள். ஆகவே புலனடக்கம் பயில நல்வாய்ப்பாகப் போயிற்று. அவளை தினமும் குளிப்பாட்டி பணிவிடை செய்து தானே சமைத்து உண்டு வைதீக கர்மங்களை ஆற்றி வாழ்கிறார்.

அவருடைய அதே பழைமை நிரம்பிய அக்ரஹாரத்தில்தான் நாரணப்பாவும் வாழ்கிறான். அவருக்கு நேர் எதிராக தன்னை மாற்றிக் கொள்கிறான். அவருடைய பிராமணியத்திற்குச் சவால் விடுகிறான். மாமிசம் உண்கிறான். விபச்சாரம் செய்கிறான். வெளிப்படையாகவே அவன் பிராணேசாச்சாரியாருக்கு சவால் விடுகிறான்.அவரது தவம் வெறும் ஆஷாடபூதித்தனம் என்கிறான். அவனை அக்ரஹார பிராமணர்கள் ஜாதிபிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனால் அது பிராணேசாச்சாரியார் வாழும் அக்ரஹாரத்திற்கு அவமானம் ஆகிவிடும். அதைவிட அவர்களுடைய புரோகிதத் தொழிலையும் பாதிக்கும். மேலும் அவனை தன் தவ வல்லமை மூலம் மாற்றிவிடலாம் என்று பிராணேசாச்சாரியார் நம்புகிறார். உண்மையில் அவனை மாற்றுவது தன் தவ வலிமைக்கு சான்றாக தனக்கே அமையும் என்று பகற்கனவு காண்கிறார் அவர். ஆனால் நாரணப்பா இறந்து போகிறான். அவனை அடக்கம் செய்வது யார் என்பதே நாவலில் பிரச்சினை. நாரணப்பா வெளிப்படையாகவே பிராமணியத்தை உதறியவன்.

ஆனால் பிராமணர் அவனுக்கு சாதிவிலக்கு செய்யவில்லை. அவன் பிராமணியத்தை விட்டாலும் பிராமணியம் அவனை விடவில்லை. எனவே வைதீக முறைப்படியே அவனை அடக்கம் செய்யமுடியும். ஆனால் அதைச் செய்பவர் அவனுடைய பாவங்களுக்குப் பொறுப்பாகி ஜாதிப்பிரஷ்டமாக நேரும். பிராணேசாச்சாரியார் அதைச்செய்ய தயார்தான், ஆனால் அவர் அவ்வூரின் தலைவர். அவர் செய்வதை ஊரார் ஒப்புக்கொள்ளவில்லை. மடத்திலிருந்து உத்தரவு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள்.
முடிவெடுக்க முடியாத நிலையில் அக்ரஹாரம் தத்தளிக்க அழுகும் பிணத்தில் இருந்து பிளேக் பரவி ஊரையே சூறையாடுகிறது.பிளேக் பரவியபின்னரும் கூட அக்ரஹாரம் நாரணப்பா விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. கடைசியில் நாரணப்பாவின் காதலி சந்திரி சிலர் உதவியுடன் அவன் சடலத்தை எரியூட்டுகிறாள். ஆனால் பிளேக் ஊரை கொள்ளையடித்துச் சூரையாடுகிறது. பயம் கொண்ட பிராமணர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். எலிகளைப்போல சாகிறார்கள்.

சந்தர்ப்பத் தவறினால் பிராணேசாச்சாரியர் வீட்டு திண்னையில் வந்து தங்கும் சந்திரியுடன் அவர் உறவு கொள்ள நேர்கிறது. அத்தனை நாள் அவர் கட்டிக்காத்த பிரம்மசரிய விரதம் கலைகிறது. ஆழமான குற்றவுணர்வடைந்து ஊரைவிட்டேப் போகும் பிராணேசாச்சாரியார் விவசாயிகளின் சந்தை ஒன்றை அடைகிறார். அர்த்தமில்லாமல் சுற்றிவருகிறார். அவருள் கொந்தளிக்கும் சிந்தனைகளுக்கு விடையாக அமைகிறது வெளியே கொந்தளிக்கும் உண்மையான வாழ்க்கை. படிப்படியாக அவர் தன் தெளிவை அடைகிறார். தன் ‘மகாவைதிக’ வேடத்தைக் கலைத்துவிட்டு சாதாரண மனிதனாக மக்களிடையே உலவி, மெல்ல தன் தரிசனத்தை அவர் அடைவதை மிக நுட்பமாக நாவல் சித்தரிக்கிறது. பிராணேசாச்சாரியார் திரும்பிவருகிறார்.

*

நவீனத்துவ நாவல்களுக்குரிய வடிவம் உடைய ஆக்கம் இது. கருத்துருவகத் [அலிகரி] தன்மை இதன் கவித்துவத்தை தீர்மானிக்கிறது. காம்யூவின் பிளேக் நாவலில் இருந்து தன் தூண்டுதலை இது பெற்றுக்கொண்டிருக்கக் கூடுமென படுகிறது. இறுக்கமான கருத்துருவகங்களால் ஆனது இதன் மொத்தச் சித்தரிப்பும்.

மிக வெளிப்படையாக இந்நாவலில் உள்ள கருத்துருவகங்கள் மூன்று. நாரணப்பாவின் பிணம். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம்.பிளேக். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம் இந்திய வைதீக மரபு கட்டிக்காத்துவரும் தூய்மை என்ற உருவகத்தைச் சுட்டிககட்டுகிறது. கருத்துக்களின் மாறாத தன்மை என்னும் தூய்மை. வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்படும் ஆசார அனுஷ்டானங்கள் என்னும் தூய்மை. அனைத்துக்கும் மேலாக இது உன்னதமானது,நான் உயர்ந்தவன் என்னும் தூய்மை. விரதங்கள் மூலம் ஓயாது தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டிய ஒன்று பிராணேசாச்சாரியார்ரின் மதமும் பண்பாடும்.

நாரணப்பா உயிரோட்டிருந்தவரை அவரால் வைதீகமதத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. அது தன் முடிவற்ற வளைந்துகொடுத்தல்கள் மூலம் நாரணப்பாவையும் உள்ளேயே வைத்திருந்தது. ஆனால் பிணம் ஒரு பெரும் வினா. அதற்கு வைதீகத்திடம் விடையில்லை. அது திகைத்து நின்றுவிடுகிறது. பிணத்திலிருந்து பிளேக் கிளம்புகிறது. பதிலளிக்கப்படாத வினா போல நோய் பெருகி வைதீகத்தையே உண்டுவிடத்துடிக்கிறது. வழிபடக்கூடிய கருடன் தூக்கிவந்து போடும் எலி வழியாக அது பரவுகிறது என்ற நாவலின் குறிப்பு மிகமுக்கியமானது.

நவீனத்துவ நாவல்கள் தங்களளவில் தத்துவ ஆய்வாகவும் நிற்கக் கூடியவை, உதாரணம் காம்யூவின் அன்னியன். ஆகவேதான் அவை குறிப்புருவகம் என்ற வடிவை அடைகின்றன. ஆகவே அவற்றின் கதாபாத்திரங்களையும் கூட விரிவான பொருளில் குறியீடுகளாகவே கொள்ளவேண்டும். அவ்வகையில் பிராணேசாச்சாரியர் நாரணப்பா இருவருமே முக்கியமான இருகுறியீடுகள். ஒன்று பழைமை, மரபு. இன்னொன்று புதுமை, எதிர்ப்பு. நாரணப்பாவின் தீவிரம் முழுக்க பிராணேசாச்சாரியாருக்கு எதிராக அவன் திரட்டிக் கொண்டது என்பது நாவலில் தெளிவாக உள்ளது. அதே சமயம் பிராணேசாச்சாரியாரின் தீவிரமும் ஒரு வகையில், மிக மிக உள்ளார்ந்த முறையில், எதிர்மறையானதுதான். அவர் மனதில் நாரணப்பா இல்லாத தருணமே இல்லை. அவர் காவியம் பயில்கையில் நாரணப்பா நாடகம் ஆடுகிறான். அவருடைய மறுபாதிதான் அவன்.

கிடைத்த முதல் தருணத்திலேயே பிராணேச்சாரியார் சந்திரியுடன் உடலுறவு கொள்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் நாரணப்பா வடிவில் அவளை அதற்கு முன்பே மீண்டும் மீண்டும் அனுபவித்திருந்தார் என்பதே. தன்னுள் உறைந்துள்ள நாரணப்பாவை அடையாளம் காண்பதே பிராணேசாச்சாரியரை உலுக்குகிறது. அவரை தான் உண்மையில் யார் என்று தேடி அலைய வைக்கிறது. நாரணப்பாவும் பிராணேச்சாரியாரும் இயல்பாக இணையும் ஒரு புள்ளியையே இறுதியில் பிராணேசாச்சாரியார் கண்டடைந்தார் என்று கூறலாம்.

நாவல் முடியும் இந்தப்புள்ளியிலிருந்து ஒரு புதிய வினா எழுகிறது. தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை நாரணப்பா அடையாளம் கண்டு கொண்டானா? கண்டிப்பாக. அவனுடைய செயல்களில் உள்ளது தன்னை வதைத்துக்கொள்ளும் முனைப்பு. அது தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை வதைப்பதன் மூலம் அவன் அடைவது. (ஒருவகையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு போன்றது இது). பிராணேசாச்சாரியரின் பிரச்சினையைவிட நாரணப்பாவின் பிரச்சினையே இந்நாவலைப் பொறுத்தவரை முக்கியமானது. ஏனெனில் அவன் தன் சமநிலைப்புள்ளியை கண்டு கொள்ளவில்லை. செத்து அழுகி, தன் சவாலை முழு உச்சத்திற்கு கொண்டு போவதுடன் அவன் வாழ்வு முடிந்துவிடுகிறது.

நாரணப்பாவின் பிரச்சினையே இந்திய நவீனத்துவத்தின் பிரச்சினை. அதன் முடிவு இந்திய நவீனத்துவத்தின் முடிவு. ஒரு அடிவயிற்று ஆவேசமாக, ஒரு கேள்வியாக தன்னை உருமாற்றி பண்பாட்டின் முற்றத்தில் வீசிவிடுவதே நவீனத்துவம் அதன் உச்சநிலையில்கூட செய்யக்கூடுவதாக உள்ளது. விடை அதன் வட்டத்துக்கு வெளியே எங்கோ உள்ளது. விடை தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராய்வதோ நுண்மைகளில் ஊடுருவுவதோ சாரத்தில் உறையும் முரண்இயக்கத்தை தொட்டு எழுப்புவதோ அதனால் முடிவதில்லை. நவீனத்துவ நாவல்கள் எல்லாமே ஒருதலைப்பட்சமானவை. அவற்றில் உணர்ச்சிவெளிப்பாட்டில் சமநிலை இருக்கும். ஆனால் தரிசனத்தில் சமநிலை உருவாவதேயில்லை. நவீனத்துவத்திற்கு பின்பு உருவான இன்றைய புத்திலக்கியத்தின் சவால் நவீனத்துவத்தின் மொழிநேர்த்தியை அடைந்தபடி விடைகளைத்தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராயும் முழுமைநோக்கில்தான் உள்ளது.

இந்நாவலில் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இதில் உள்ள பிளேக் காம்யூவின் உலகப்புகழ்பெற்ற ‘கொள்ளை நோய்’ பிளேக்குக்கு எதிர்வினையாகும். காம்யூவின் கொள்ளை நோய் மனிதர்களை செயலிழக்க வைப்பது, நிலைபிறழ வைப்பது, மனிதர்களை மீறியது. சம்ஸ்காராவில் உள்ள இந்தக் கொள்ளைநோய் மனித வினைகளின் விளைவு. அது மானுடனின் அடிப்படை இருப்பையே உலுக்குகிறது. இது மனித அறம் மரணத்திற்கு முன் எப்படி பொருள்படுகிறது என்று வினவுவதுடன் நின்றுவிடுகிறது. சமகால மலையாள நாவலான ஓ.வி. விஜயனின் ‘கசாகின் இதிகாசத்’திலும் கொள்ளைநோய் (அம்மை) ஒரு முக்கியமான நிகழ்வாக வருகிறது. மேற்கத்திய நவீனத்துவத்திற்கும் இந்திய நவீனத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இம்மூன்று கொள்ளை நோய்களையும் ஒப்பிடுவதன் மூலமே ஒருவர் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

*

சம்ஸ்காரா எதிர்கொண்ட சிக்கலை பேசும் பிற இந்திய நாவல்கள் இரண்டு சட்டென்று நினைவுக்கு வருகின்றன. ஒன்று ரவீந்திர நாத் தாகூரின் ‘கோரா’ இன்னொன்று எஸ்.எல்.பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷா’. கோரா நாவலின் நாயகன் கோரா பிரம்ம சமாஜம் ஓங்கி வங்க பண்பாட்டை ஆட்கொள்ள முயன்ற காலகட்டத்தில் வாழ்கிறான். சமூக சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் அடிப்படையில் மேலைநாட்டு மனநிலை கொண்டது. பிரம்ம சமாஜிகள் மேலைநாட்டு வாழ்க்கைமுறை, ஆங்கிலக் கல்வி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். கிறித்தவ தேவாலய வழிபாட்டு முறையை இந்துமதத்தில் புகுத்துகிறார்கள். ஐரோப்பிய பாணியில் இந்துமதத்தை மாற்றுவதே அவர்களின் சீர்திருத்தம் என்பது.

இது இந்திய தேசிய அடையாளத்தையும் இந்து மதத்தின் அடிபப்டைகளையும் அழித்துவிடும் என்று எண்ணும் கோரா போன்ற இளைஞர்கள் இந்துமதத்தை அப்படியே மாறாமல் கடைப்பிடிக்க முயல்கிறார்கள். பிரம்ம சமாஜத்தின் பின்னால் உள்ள ஐரோப்பிய மோகத்தை எதிர்கொள்ள அதுவே சிறந்த வழி என்று எண்ணுகிறார்கள். தீண்டாமை உட்பட ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் கோரா இப்போது இவ்வாசாரங்களில் எவை உகந்தவை எவை தேவையற்றவை என்று சிந்திக்க நேரமில்லை, முதலில் நாம் மரபை மீட்டு எடுப்போம் என்று வாதிடுகிறான்.

ஆனால் கோராவுக்கு அவன் ஒரு வெள்ளைய ‘மிலேச்ச’க் குழந்தை, தத்து எடுக்கப்பட்டவன் என்று தெரியவருகிறது. ஆழமான மன அதிர்ச்சிக்கு உள்ளாகும் கோரா ஆன்மீகமான ஒரு கொந்தளிப்பை அடைகிறான். நாவலின் இறுதியில் மத இன வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொதுமானுட தரிசனத்தை அவன் அடைகிறான்
வம்சவிருக்ஷாவின் கதாநாயகர் வைதீகரான சிரௌத்ரி. அவரது மருமகள் ஒரு குழந்தையுடன் விதவையாகிறாள். மரபின் ஆழமான பிடிப்பு கொண்ட அவர் அவளை ஒரு இந்துவிதவைக்குரிய கட்டுப்பாடுகளுடன் வைக்கிறார். அவள் அவரை மீறி கல்வி கற்கச்செல்கிறார். அங்குள்ள பேராசிரியருடன் காதல் கொள்கிறாள். அவரை மணம் செய்கிறாள். அது சிரௌத்ரிக்கு பேரிடியாக அமைகிறது. இந்து விதவையின் மறுமணமென்பது அவர் நோக்கில் பெரும் பாவம். தன் பேரனை தன்னிடமே வைத்துக் கொள்கிறார். மருமகள் இறந்ததகவே அவர் சடங்குகள் செய்து கொள்கிறார்.

மருமகள் நோயுற்று மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தன் மகனைப்பார்க்க அவள் விழைகிறாள். ஆனால் அதற்கு சிரௌத்ரி ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் மனம் பொறாமல் ஏதேனும் வழி இருக்குமா என தன் அப்பா எழுதிவைத்த பழைய குறிப்புகளை ஆராய்கிறார். ஒரு உண்மை தெரியவருகிறது. அவரது பெற்றொருக்கு குழந்தை இல்லை. வைதீக கர்மங்களுக்கு மகன் தேவை என்பதனால் வைதீக மரபு அனுமதித்த முறைப்படி அவர் தந்தை ஒரு வைதிகனை தன் வீட்டில் தங்கவைத்து தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளச்செய்கிறார். அப்படிப்பிறந்தவர்தான் சிரௌத்ரி.

அதிர்ச்சியும் மனக்குழப்பமும் அடையும் சிரௌத்ரி மெல்ல ஆன்மீகமான விழிப்பை அடைகிறார். கங்கைக்கு எப்படி மண்ணில் விதிகள் இல்லையோ அதுபோலவே தாய்மையும் என்ற புரிதல் அது. தாய்மையை அளவிட மண்ணில் சாஸ்திரங்கள் இல்லை. பேரனுடன் அவர் மருமகளைப் பார்க்க வருகிறார்.

கோரா, சிரௌத்ரி இருவரும் பிராணேசாச்சாரியார் போலவே மரபின் பிரதிநிதிகள் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் ஏறத்தாழ பிராணேசாச்சாரியார் அடையும் தர்ம சங்கடத்திற்கு நிகரானவை. அவற்றிலிருந்து இக்கதாபாத்திரங்கள் எப்படி மீண்டன என்பதே முக்கியமானது. கோரா மதத்தையும் மரபையும் கடந்து மானுடமான ஒரு தளத்தை அடைகிறான். சிரௌத்ரி மதத்துக்கும் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட ஆதிப் பழங்குடிசார் மெய்மை ஒன்றை அடைகிறார். பிராணேசாச்சாரியார் அடைவது மேலைநாட்டு தத்துவ இயலாளர் கண்டடைந்த இருத்தலிய தரிசனத்தை. பண்பாட்டையும் மரபையும் சுய அடையாளங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறும் மனிதனாக காலத்தின் முன் நிற்பதை.

சம்ஸ்காராவின் முக்கியமான பலவீனமும் பலமும் அது நவீனத்துவ பிரதி என்பதே. செறிவான கதைப்போக்கு, கூரிய நடை, அறிவார்ந்த கூறுமுறை, மிதமான உணர்ச்சிவெளிப்பாடு கொண்ட நாவல். ஆனால் அதன் உச்சம் காலாதீதமான ஓர் உண்மையை தீண்டவில்லை, இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குரிய ஒரு தத்துவநிலைப்பாட்டையே சென்றடைகிறது.

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp