தொழுகைக்காக துயில் கலைத்தெழும் இன்பம்

தொழுகைக்காக துயில் கலைத்தெழும் இன்பம்

(நூலிலிருந்து ஒரு பகுதி)

நான் சிறுவனாக இருந்தபோது, -அப்போதைய எனது புரிதலின் படி- ஸுப்ஹுத் தொழுகைக்காக ‘நள்ளிரவில்’ தூக்கம் கலைத்து எழ வேண்டியிருந்த அக்காலத்தில், என்னுள் நானே இப்படி கேட்டுக் கொண்டதுண்டு:

"இந்த நடுநிசி நேரத்தில் எதற்காக?!"

"தினமும் ஐந்து தடவை தொழ வேண்டும் என நம்மிடம் எதிர்பார்க்கும் அல்லாஹ், இந்தக் கடினமான வேளையிலும் அதனை ஆக்கி வைத்திருப்பது ஏன்?! தூக்கத்தின் மிக இன்பமான பொழுதில் தொழுவதற்காக எழ வேண்டும் என அவன் ஏன் கேட்கிறான்?! இதே தொழுகையை காலை ஏழு மணிக்கு அல்லது எட்டு மணிக்கு அல்லது பத்து மணிக்கு கூட நாம் நிறைவேற்றினால் என்ன தவறு?! தொழுகை எந்த நேரத்தில் வந்தாலும் அது தொழுகைதானே! நேரகாலத்தோடு தொழும் தொழுகையின் ஓதல்களைத்தானே தாமதித்துத் தொழும் தொழுகையிலும் ஓதப் போகிறோம்?!"

"தொழுகை என்பது அல்லாஹ்வுடனான நமது ‘தொடர்பாடலை’ பாதுகாக்கவும், நம்மை விட்டு ஷெய்த்தானை விரட்டியடிக்கவுமே வருகிறது என்றால், நாம் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது ஷெய்த்தானால் நமக்கு என்ன செய்து விட முடியும்?!"

" ‘தொடர்பாடல்’ பற்றியோ ‘தொடர்பற்றிருத்தல்’ பற்றியோ நன்மைக்கு அல்லது தீமைக்குத் திட்டமிடுதல் பற்றியோ சிந்திப்பதற்கு எவ்வித சக்தியும் அற்று நாம் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ்வுடனான தொடர்பாடலை இழந்து விடுவது குறித்து அல்லது ஷெய்த்தானின் மாய வலையில் சிக்கிக் கொள்வது குறித்து ஏன் அஞ்ச வேண்டும்?!"

இந்தக் கேள்விகளெல்லாம் சிறுவர்களிடம் மட்டுமன்றி பெரியவர்களின் சிந்தனையிலும் கூட எழ முடியும். ஆனால் தொழுகை என்பது அல்லாஹ்வுடன் சுழற்சி அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் மட்டுமன்றி, அது வாழ்வுக்கான நிகழ்ச்சித் திட்டமொன்றும் கூட என்பதை பெரியவர்கள் இறுதியில் புரிந்து கொள்கிறார்கள்.

அதிகாலைக் கருக்கலில் கண் விழித்து, அதன் மெல்லிய ஒளியிழைகள் பிரியும் முன்பே மஸ்ஜிதுக்குச் சென்று, பின்பு கதிரவனின் உதயத்தோடு தனது அன்றாடப் பணியை -அது எத்தகைய பணியாக இருப்பினும்- ஆரம்பிக்கின்ற மனிதன்தான் அதிகாலையின் பெறுமதியை அறிவான். அதிகாலைத் தென்றலின் சுவாசம், அந்த நேரத்து நிசப்தம் தருகின்ற இன்பம், அந்தப் பொழுதில் அல்லாஹ்வுடன் கிட்டும் நெருக்கம் என்பவற்றின் பெறுமதி அவனுக்கே தெரியும். இவையெல்லாம் தொழுகையின் போது மட்டும் கிடைப்பவையல்ல; தொழுகைக்கு முன்னரும், இடையிலும், தொழுத பின்னரும் கூட கிடைப்பவை.

ஆழ்துயிலின் பிறகு வாழ்வு மீண்டும் ஒருமுறை விழித்தெழுவதை அவன் காண்கிறான். இரவின் இருளிலிருந்து பகல் பொழுது இழை பிரிகிறது; இரவின் கர்ப்பப் பையிலிருந்து அதிகாலையின் இழைச் சிசுக்கள் அவனது கண்களுக்கு முன்னே பிரசவமாகின்றன; வானமும் பூமியும் புற்களும் பூக்களும் தங்கள் போர்வையை விலக்கிப் புதிய வாழ்வுக்குத் தயாராகின்றன.

மொத்தத்தில் அவன் ஆதிப் படைப்பின் அற்புதமான தெய்வீக நுண் காட்சியின் முன் நிற்கிறான்; அந்தப் படைப்பு எப்படி ஆரம்பித்தது... இரவுக்குள் பகல் நுழையும் அதிசயம் எப்படி நிகழ்ந்தது... என்பதைப் பார்க்கிறான்; பிரபஞ்சத்தின் நாடி நரம்புகளில் பரவிச் செல்லும் உயிர்மையின் முதல் துடிப்பை ஸ்பரிசிக்கிறான்.
தனித்துவமான அந்தப் பொழுதைக் காண்பவனது அறிவும் சிந்தனையும் புலன்களும் தகதகத்துக் கொண்டே கண் விழிக்கின்றன; புத்தாக்கத்துக்காக உத்வேகம் கொண்டெழுகின்றன.

அந்தப் பொழுது அவனுக்குப் பலத்தையும் வளத்தையும் உற்சாகத்தையும் உற்பத்தியையும் புத்தாக்கத் திறனையும் பரிசாகத் தருகிறது.

மொத்தத்தில்- கறைபடாத புதியதொரு வாழ்வு வழங்கப்பட்டவனாய் அவன் மாறுகிறான்.

பேரண்டத்தின் ரகசியங்களைப் பார்க்கவும், படைப்பின் அற்புதங்களைக் கண்டடையவும் அந்த அதிகாலை உங்களுக்கு ஒரு புதிய பார்வையைத் தருகிறது. அந்த நாளின் வேறெந்தப் பொழுதிலும் உங்களால் அவற்றைக் கண்டு கொள்ள முடியாது.

அந்த நேரத்தின் இரண்டு அல்லது மூன்று மணித்தியால உழைப்பின் வினளவு ஏனைய பொழுதுகளில் மேற்கொள்ளப்படும் பல மணி உழைப்புக்குச் சமமானது என்பதை அந்த அதிகாலையில் எழுந்து உழைத்த அனுபவம் உள்ளவரே அறிவார்.

தனித்துவமான அந்த நாழிகையை வென்றெடுப்பதற்குத் தடையாக நிற்பது உங்கள் தூக்கத்தின் ஷெய்த்தான் மட்டுமே. முதலாம் நாளிலும் இரண்டாம் நாளிலும், அடுத்து வரும் சில நாட்களிலும் அவனை எதிர்த்து மிகைப்பதில் நீங்கள் சித்தியடைந்து விட்டால், நேரகாலத்தோடு துயிலெழுவது பழக்கமாகி விடும். அதன் பிறகு உங்களது கிரமமான நேரச் செயற்பாடாகவும் அது மாறிவிடும். ஒரு நோன்பாளி றமழான் மாதத்தின் கடினமான ஆரம்ப நாட்களில் முயன்று தன்னை நோன்புக்குப் பழக்கப்படுத்திக் கொள்வது போன்றதே இதுவும். இவ்வாறு செய்து விட்டால் பிறகு அது உங்களது உடல் கட்டமைப்பில் ஆழப் பதிந்த பழக்கமாகி விடும்; உங்கள் அன்றாட நிகழ்ச்சி நிரலில் கைவிட முடியாத இன்பப் பாகமாகவும் ஆகிவிடும்.

இதோ படுக்கையில் கிடந்தவாறே கண் விழிக்கிறீர்கள். ஆனால் ஷெய்த்தான் உங்கள் தலையைப் பிடித்து தலையணைக்கு இழுக்கிறான். ‘கண்ணை மூடித் தூங்கு; இந்த அதிகாலைப் பொழுதின் இனிய உறக்கத்தைத் தொலைத்து விடாதே; தளர்வுக்கும் சோம்பலுக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் உரிய மிக இனிமையான பொழுது இது. அமைதியாகத் தூங்கு... என்ன அவசரம்?!” என்கிறான் அவன்.

இதுதான் ஷெய்த்தான் நமக்கு திரும்பத் திரும்ப அலுக்காமல் சொல்லும் கதை. அவனது மயக்கும் வார்த்தைகளையும் ஊசலாட்டங்களையும் எப்படி எதிர்க்கப் போகிறீர்கள்? அதனைத்தான் இறைத்தூதர் (ஸல்) விளக்குகிறார்கள். ஷெய்த்தானின் பசப்பு வார்த்தைகளை மிகைப்பதில் உங்களுக்கு உதவ அன்னார் இப்படி முயல்கிறார்கள்:

“உங்களில் ஒருவர் தூங்கியதும் ஷெய்த்தான் அவரது பிடரியில் மூன்று முடிச்சுகளை இட்டு, ‘தூங்குவதற்கு உனக்கு ஒரு நீண்ட இரவு உள்ளது...’ எனக் கூறி முத்திரையிடுவான். எனினும் அவர் கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்ததும் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது; ‘வுழூ’ செய்ததும் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது; தொழுது விட்டால் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. பின்னர் காலையில் நல்ல மனதுடன் உற்சாகமாய் இயங்கத் தொடங்குவார். அவ்வாறு எழவில்லையெனில், பாரமான மனதுடன் சோம்பேறியாக காலைப் பொழுதை எதிர் கொள்வார்”

ஸுப்ஹுத் தொழுகைக்கு நேரகாலத்தோடு எழுவதற்காக முன்னிரவிலேயே தூங்கி விடுவோரது முகங்களை எப்போதாவது கூர்ந்து கவனிக்க முயன்றிருக்கிறீர்களா? அந்த முகங்களை பின்னிரவு வரை கண் விழித்து விட்டு ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் கடந்த பிறகு தூக்கத்திலிருந்து எழுவோரது முகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்திருந்தால், ‘மனிதன்’ என்ற அதிசயக் கருவியின் சில ரகசியங்களைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அதனை வடிவமைத்தவன் ஆரம்பம் முதலே அதற்கென்று அதிசயமான பெளதீக விதியொன்றை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். அந்த விதி இதுதான்: அந்த ‘இயந்திரம்’ இரவில் ஓய்வுக்குச் சென்ற பிறகு அதனை ‘மீளியக்கம்’ பெறச் செய்ய மிகச் சிறந்த நேரம் சூரியோதயத்திற்கு முன்னரே அன்றி பின்னரல்ல.

ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அதன் வடிவமைப்பு அதனை உருவாக்கியவனிடம் இருந்து இப்படித்தான் வந்திருக்கிறது... நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் சரி; முடியாவிட்டாலும் சரி! இந்த மனித இயந்திரத்தின் -கண்டறியப்பட்ட மற்றும் கண்டறியப்படாத- அனைத்து ரகசியங்களையும் அதன் சிருஷ்டிகர்த்தாவை விட அதிகமாக யார்தான் அறிவார்?!

“படைத்தவன் அறிய மாட்டானா? அவனோ நுணுக்கமானவன்; தேர்ச்சி மிக்கவன்” (அல் முல்க்: 14)

இயற்கை, தன்னையும் நம்மையும் படைத்தவன் திட்டமிட்டு வைத்ததற்கு இயைபாக தன் படுக்கையிலிருந்து எழுந்து விடுகிறது. அதிகாலையின் முதல் கீற்றுடன் உங்களைச் சூழ உள்ள வாழ்வின் அனைத்துப் புதுமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்ட அது எழுகிறதே தவிர நீங்கள் தூங்க வேண்டும் என்பதற்காக அல்ல. நீங்கள் எழ வேண்டும்; உழைக்க வேண்டும்; உற்பத்தி செய்ய வேண்டும்; பூமியை வளப்படுத்த வேண்டும். எனவே இந்த தெய்வீக அருட்கொடையின் பெறுமதியை வீணாக்கி விடாதீர்கள்; புதிய நாளை ஆரம்பிப்பதற்காக உங்களுக்கும் அனைத்துப் படைப்புகளுக்கும் அவன் வசப்படுத்தித் தந்திருக்கும் இந்த ஆற்றலைப் பாழ்படுத்தி விடாதீர்கள்.
சூரிய அஸ்தமனத்துடன் இமைகளை மூடிக்கொள்ளும் பூக்கள் வைகறை ஒளியின் முதல் கீற்றுடன் மீண்டும் மலர்வதை நீங்கள் கவனிக்கவில்லையா?! பறவைகள் பள்ளியெழுச்சி பாடிக் கொண்டே வானத்தில் வட்டமிட்டு இரை தேடிப் பறக்கவில்லையா?!

ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் இந்தப் பூமிப் பந்தில் அல்லாஹ் படைத்து விட்ட அனைத்து ஜீவராசிகளும் வைகறையின் முதற் கிரணங்களிலேயே துயிலெழுந்து வாழ்க்கை வட்டத்தைத் தொடங்கவில்லையா?!

வாழ்வைப் புரிந்து கொள்ளுங்கள்; அதன் கனிகளை பறித்துக் கொள்ளுங்கள்.

தவற விட்டீர்களானால், அந்த ரயில் என்றுமே திரும்பப் போவதில்லை.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp