தொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம்

தொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம்

ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது கண்ணாடிக்கு முன் நின்று உருவத்தைப் பார்ப்பதுபோல என்று சொல்வார்கள். நீங்கள் பார்க்கும் பிம்பம்தான் மொழிபெயர்ப்பு. ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் தெரியக்கூடாது. எழுத்தாளர்தான் தெரிய வேண்டும். உங்கள் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது பிம்பம்தான் தெரியும்; கண்ணாடி தெரிவதில்லை. அப்படித்தான். இதனாலோ என்னவோ நாங்கள் கண்ணாடியைப் பார்க்காமல் விடுவதுபோல மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இனிமேல் பிம்பத்தைப் பார்ப்போம். ரசிப்போம். அத்துடன் தவறாமல் கண்ணாடியையும் பார்ப்போம். ஏனென்றால் கண்ணாடிதான் மொழிபெயர்ப்பாளர்.

– அ.முத்துலிங்கம்

O

மொழிபெயர்ப்பில் எழுத்தாளரைப் பிரதானப்படுத்தி தன்னை மறைத்துக்கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. இலக்கியத்தை மனதார நேசிக்காமல் வேலையாகக் கருதும் எவராலும் சிறப்பான மொழிபெயர்ப்பைத் தந்துவிட முடியாது. அது இலக்கியத்தின் மீதான காதலால் நிகழ்வது. ஒரு மொழிபெயர்ப்பாளர் தேர்ந்த வாசகராக இருக்க வேண்டிய அவசியமுமிருக்கின்றது. இல்லையேல் மூலப்பிரதியின் சிதைந்த வடிவமே வாசகர்களுக்கு கிட்டும். இலக்கியத்தின் மீதும் மொழிபெயர்ப்பதிலும் தீராக்காதல் கொண்ட ஜி.குப்புசாமியுடன் உரையாட சாத்தியமானதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேர்காணலுக்கு முன்பாக மொழிபெயர்ப்பு பற்றிய தனது பார்வையையும் ஓரான் பாமுக்கின் படைப்புலகம் குறித்தும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். அது இந்த நேர்காணலை விடவும் சுவாரசியமாக இருந்தது. ‘யாரும் சொன்னார்கள் என்று நான் மொழிபெயர்ப்பதில்லை. எந்த படைப்பை மொழிபெயர்க்க வேண்டும் என்பதை நானே தேர்வு செய்கிறேன்’ என்றார். வெகு சிரத்தையுடன் செயல்படுவதை அவரது படைப்புகளின் வாயிலாகவும் அவரது பேச்சிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆர்.சிவகுமார், வெ.ஸ்ரீராம், சி.மணி போன்றவர்களைத் தனது முன்னோடியாகக் கொண்டிருப்பதாகவும் சமகாலத்தில் அசதா, கார்த்திகைப்பாண்டியன் போன்றோர் சிறப்பாக மொழிபெயர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு மீதான ஆர்வம், மொழிபெயர்ப்பு முறை என ஏற்கனவே நாம் அறிந்த விஷயங்களைத் தவிர்க்க வேண்டுமென்பது முதன்மையான எண்ணமாக இருந்தது. ஓரான் பாமுக் எண்பதுகளில் எழுதி, கடந்த ஆண்டு (2015) ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியாகிய ‘வெண்ணிறக் கோட்டை’ நாவல் குறித்து மட்டுமே இந்த நேர்காணல். அயல் இலக்கியங்களை வாசிப்பதற்கு பிரத்யேகமான அணுகுமுறை அவசியமாகின்றது. களம் நமக்கு அந்நியமானது. அதன் கலாச்சாரம், அரசியல், சமூக அமைப்பு போன்றவற்றை அறிந்திராமல் வெறுமனே வாசிப்பதென்பது முழுமையானதாகாது. நாவல் பேசும் விஷயங்களை எழுத்தாளரிடம் அல்லாமல் மொழிபெயர்ப்பாளரிடம் வினவுவது முறையாகாது என்பதால் அது போன்ற கேள்விகளைத் தவிர்க்கலாம் என்றெண்ணியிருந்தேன். ஜி.குப்புசாமியிடம் இதைக் குறிப்பிடுகையில், ‘அதெல்லாம் இல்ல, தாராளமா கேக்கலாம்’ என்றார். இருந்தாலும் நாவலுக்குள் நுழைந்து தீவிரமான அலசலை இம்முறை சாத்தியப்படுத்த இயலவில்லை. எதிர்காலத்தில் பாமுக்கின் படைப்புலகம் குறித்து ஜி.குப்புசாமியுடன் விரிவாக உரையாட வாய்க்கவேண்டும்.

‘அவன் இதுபோல பாவித்துக் கொள்வதற்கு அவனுக்கே தன்னைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதும், தன்னைத்தானே எட்ட இருந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் தான் காரணம் என்று நினைத்தேன்.’ [‘வெண்ணிறக் கோட்டை’ நாவலிலிருந்து, பக். 93]

O

கேள்வி: பக்கங்களின் அளவுகளில் ‘வெண்ணிறக் கோட்டை’ நாவல் சிறியதாக இருந்தாலும் சிறு சிறு வரிகளில் விரியும் நுட்பமான விஷயங்கள் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. ஓரான் பாமுக் குறித்து உங்களோடு பேசுகையில் அவரது படைப்புகளை ‘நெல்மணியில் பைபிள் எழுதுவது போல’ என்று குறிப்பிட்டீர்கள். இந்நாவலும் குறைந்த பக்கங்களில் எழுதப்பட்ட மிக ஆழமான நாவல். வாசகனாக ‘வெண்ணிறக் கோட்டை’ குறித்து தங்களது பார்வை?

பதில்: ஆங்கிலத்தில் வெளிவந்த பாமுக்கின் முதல் நாவல் ‘WHITE CASTLE’. ஆனால் நான் முதலில் வாசித்தது ‘MY NAME IS RED’ஐத்தான். 2002ல். அதன் பிறகுதான் ‘WHITE CASTLE’ஐ வாசித்தேன். பாமுக்கின் நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ‘வெண்ணிறக் கோட்டை‘. அதற்கு பல காரணங்கள். பாமுக்கை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு புரியும், ஒருமை என்பது எதிலும் இருப்பதல்லவென்று. மையப்புள்ளி என்று எதுவும் கிடையாது. மையம் என்று சொல்லும்போதே அதில் அதிகாரக் குவியமும் சேர்ந்துவிடுகிறது. ஒருவனின் தனிப்பட்ட ஆளுமையும் அதுபோலத்தான். அடையாள இழப்பு என்பதுதான் மானுடத்தின் ஆகப்பெருந்துயரம். தன்னை எங்கெங்கோ தேடிக்கொண்டும், கனவுகளைத் துரத்திக்கொண்டு இருப்பவனுக்கு தனக்கென்று ஒரு முகமென்பதே இருக்கவில்லை என்று உணரும் தருணம் ஒரு காவியத்துயரமாக ‘வெண்ணிறக்கோட்டை’யில் வெளிப்படுகிறது. ‘மற்றமை‘ (The Other) என்பதை இந்தளவுக்கு கவித்துவமாக, நுட்பமாக பாமுக் வேறெந்த நாவலிலும் சொல்லவில்லை. எண்ணற்ற படிநிலைகள், வெவ்வேறு தளங்களை உள்ளடக்கியிருக்கும் நாவல் இது.

O

கேள்வி: ‘வெண்ணிறக் கோட்டை’ நாவலில் உங்கள் அபிமான கதாப்பாத்திரம் யார்? அபத்தமான கேள்விதான். பொறுத்துக்கொள்ளுங்கள். நாவலை அலசிவிட வேண்டும் என்ற நப்பாசை.

பதில்: ‘வெண்ணிறக் கோட்டை‘ நாவலை நீங்களும் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. வழக்கமான பொருளில் பாத்திரங்கள் என்று ஏதேனும் ‘வெண்ணிறக் கோட்டை’யில் இருக்கின்றனவா? யார் உண்மையான பாத்திரம்? யார் நிழல்? யார், யாராக இருப்பது? பாமுக்தான் என் அபிமான பாத்திரம்!

O

கேள்வி: இந்நாவல் குறித்து சிறிய குறிப்பொன்றை முகநூலில் எழுதியிருந்தேன்: ‘அவனும் இவனும் உருவத்தால் ஒத்திருப்பதும், உருவ ஒற்றுமையைக் கண்டு ஒருவன் திடுக்கிடுவதும் மற்றொருவன் சாந்தம் கொள்வதும், பின்பு இருவரும் கண்ணாடியில் தன்னுருவத்தைக் கண்டு அதிர்ச்சியாவதும், அவன் இவனாகவும் இவன் அவனாகவும் உரையாடுவதும், ஒருவரால் ஒருவர் இன்ஃப்லூயன்ஸ் ஆவதும், சுல்தானின் கீழ் ஒருவன் சிலகாலம் மற்றொருவன் வேறு சிலகாலம் என வேலை பார்ப்பதும், இருவரும் வேறுவேறு அல்லவோ என்றும் – இப்படி யார் எந்தக் கதாப்பாத்திரம் எனும் மாயப்போக்கு நாவலின் இறுதிவரை தொடர்கிறது.’ கேள்வியை நான் வேறு மாதிரி கேட்டிருக்க வேண்டும்.

‘வெண்ணிறக் கோட்டை’ நாவலை மொழிபெயர்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் சுவாரசியமான சம்பவங்கள்?

பதில்: காலச்சுவடு கண்ணன் பாமுக்கின் நான்கு நூல்களுக்கு மொழிபெயர்ப்பு உரிமையை மொத்தமாக வாங்கியிருந்தார். ஒவ்வொரு நூலையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்தாக வேண்டும். ‘பனி‘யை மொழிபெயர்க்க கூடுதலாக ஒருவருடமாகி விட்டது. அடுத்து வந்த ‘இஸ்தான்புல்‘ மொழிபெயர்ப்பில் அக்கூடுதல் நேரத்தை சரிக்கட்ட இயலவில்லை. எனவே இஸ்தான்புல்லை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணனிடம் ‘வெண்ணிறக் கோட்டை’யை வேறு யாரையாவது வைத்து மொழிபெயர்த்துவிட கேட்டுக்கொண்டேன். வேறொருவர் செய்யத்தொடங்கினார். பல காரணங்களால் அது கைவிடப்பட்டது. மீண்டும் விண்ணப்பித்து காலக்கெடுவை நீட்டித்துக் கொண்டு நானே செய்து முடித்தேன். பதிப்பாளருக்கு நான் தருகின்ற தலைவலி கொஞ்சநஞ்சமல்ல!

O

கேள்வி: மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளருக்கான நடை/மொழி என்று ஏதும் இல்லை. அது எழுத்தாளருக்கானது. பாமுக்கின் படைப்புகளிலும், ஜான் பான்விலின் ‘கடல்’ நாவலிலும், சமீபத்தில் கல்குதிரையில் வெளியான ஹாருகி முரகாமியின் ‘விநோத நூலகம்’ குறுநாவலிலும் (இவை மட்டும் தான் தங்கள் மொழிபெயர்ப்பில் நான் வாசித்திருக்கிறேன்) உங்களது அடையாளத்தைக் காண முடிவதில்லை. மூலத்தின் தொனி, சாயலைத் தமிழில் சாத்தியப்படுத்த பிரயத்தனப்படுகிறீர்கள் என்பது தெரிகிறது. அதற்கான உங்களது தயாரிப்பு அல்லது கொள்கை என்ன?

பதில்: நான் வேறொரு நேர்காணலிலும் இதைச் சொல்லியிருக்கிறேன்: மொழிபெயர்ப்பாளன் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்டைப் போல. வெறும் வார்த்தைகளை மொழிபெயர்ப்பதல்ல அவன் பணி. ஒரு படைப்பாளி தனது பிரதியில் எத்தனையோ நுட்பங்களை பொதித்து வைக்கிறான். அவனது ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் எத்தனையோ அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றன. அவன் இடுகின்ற ஒவ்வொரு நிறுத்தற்குறிக்கும் ஒரு பொருள் இருக்கிறது. அவனுடைய குரலை மொழிபெயர்ப்பில் கொண்டுவருவதற்கு மூலப்பிரதியின் உணர்விழைகள் மொத்ததத்தையும் அறுந்துவிடாமல் இடமாற்றம் செய்யவேண்டியிருக்கிறது. எனது மொழிபெயர்ப்புகளில் மிக நீளமான வாக்கியங்கள் இடம்பெறுவதாக அவ்வப்போது புகார் குரல் வந்துகொண்டிருக்கிறது. எனது வாக்கிய அமைப்புகளை தீர்மானிப்பது மூலஆசிரியன். ஆங்கில இலக்கண முறைப்படி கூட்டு வாங்கியங்களை எவ்வளவு தூரத்திற்கும் வளர்த்துச் செல்லலாம். தமிழில் அது சாத்தியமில்லை என்பதால் தொடர்வாக்கியங்களாக அவற்றை அமைக்க முயல்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் இதனைக் கட்டாய விதியாக பின்பற்றவும் முடியாது. பிரதியை மேம்படுத்துவதற்காக மொழிபெயர்ப்பாளன் சிற்சில சலுகைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றே நம்புகிறேன். ஆனால் மிகுந்த பொறுப்புணர்வோடும், நேர்மையோடும் கையாள வேண்டிய விஷயமிது. மூலஆசிரியன் சொல்லாத சொல்லை சொல்லக்கூடாது என்பதுடன் அவனை முந்திச்சென்று விட வேண்டுமென்ற அபத்த ஆசையையும் மொழிபெயர்பபாளன் வைத்திருக்கக் கூடாது.

எனக்கென்று இருக்கும் சொந்த நடையை மொழிபெயர்ப்பில் கொண்டுவந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆனாலும் அருந்ததி ராய், ஜூலியன் பார்ன்ஸ் ஆகிய இருவரது ஆங்கில நடையையும் அச்சுஅசலாக எனது தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவரமுடிவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

O

கேள்வி: ‘வெண்ணிறக் கோட்டை’ நாவல் நடக்கும் காலம் பதினேழாம் நூற்றாண்டு. வரலாற்றுப்புனைவில் தீவிரமாக அரசியலும் பேசுகிறார். அது சமகால அரசியலுக்கும் பொருந்துவதாக உள்ளது. ‘வெண்ணிறக் கோட்டை’ நாவல் மட்டுமல்லால் அவரது பிற நாவல்களிலும் அவரது அரசியல் நிலைப்பாட்டைக் காண முடிகிறது. கிறிஸ்தவம் இஸ்லாம் குறித்த அவரது பார்வைகளையும் படைப்புகளில் வெளிப்படுத்துகிறார். பாமுக்கின் படைப்புகள் கொளுத்தப்பட்ட சம்பவங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஆக துருக்கிய அரசியலையும் பாமுக்கின் அரசியல் நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ளாமல் இவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பு சாத்தியமாகியிருக்காது. அதற்கான தங்களது உழைப்பு எவ்வகையில் இருந்தது?

பதில்: பாமுக்கின் நூல்கள் எந்த இஸ்லாமிய நாட்டிலும் தடைசெய்யப்படவில்லை. அவரது சொந்த நாட்டில் சிக்கல்கள் எழுந்ததற்குக்கூட ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்த அரசியல் விஷயங்கள்தான் காரணமாக இருந்தன. முதலாம் உலகப்போரையொட்டி ஆர்மீனியர்களும், அதன் பிறகு குர்தியர்களும் பெருமளவு கொல்லப்பட்டதை அவர் வெளிப்படையாகப் பேசியதால் தேசத்துரோக வழக்கு அவர் மீது சுமத்தப்பட்டது. அவரை யாரும் மதநிந்தனையாளர் என்று சொன்னதில்லை. “உலகமே ஒரு முஸ்லிம் எழுத்தாளரைக் கொண்டாடுகிறது என்றால் அவர் மதநிந்தனையாளராகத்தான் இருக்கவேண்டும்“ என்று அவருடைய ஒரு புத்தகத்தைக் கூட படிக்காத சில புத்திசாலிகள் உளறுவதைக் கேட்டிருக்கிறேன்.

பாமுக்கை மொழிபெயர்க்கத் தொடங்குவதற்கு முன்பாகவே ஆட்டமன் சாம்ராஜ்ய வளர்ச்சி, வீழ்ச்சி, அட்டாதுர்க்கின் சீர்திருத்தங்கள் பற்றிய பல நூல்களை கண்ணன் எனக்கு அனுப்பியிருந்தார். இந்திய வரலாற்றோடு துருக்கிக்கு இருந்த தொடர்பு நாமறிந்ததுதானே. வில்லியம் டால்ரிம்பிள் என் அபிமான எழுத்தாளர். அவருடைய முகலாய வரலாற்று நூல்களால்தான் துருக்கியின் மீதான எனது ஆர்வம் அதிகரித்தது என்பேன்.

O

கேள்வி: இயல்பாகவே அயல் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதிலுள்ள சிக்கல்கள் குறித்து பல்வேறு உரையாடல்கள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன. அயல் கலாச்சாரத்தின் முக்கிய சாராம்சத்தை பிரதிபலிக்கும் வரிகளை, இங்கே நாம் சாதாரணமாக கடந்து போகவும் சாத்தியம் உண்டு. பாமுக் தனது படைப்புகளில் இஸ்தான்புல் கலாச்சாரத்தை வெகு தீவிரமாக அணுகுகிறார். மொழிபெயர்க்கையில் அக்கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தனவா? அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி அதை நிவர்த்தி செய்தீர்கள்?

பதில்: ‘இஸ்தான்புல்‘ நூலில் ‘ஹுசுன்‘ என்ற ஒரு சொல்லை பாமுக் பயன்படுத்துகிறார். ‘ஹுசுன்‘ என்பது வாழ்ந்துகெட்ட ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் இன்றைய இஸ்தான்புல் வாசிகளின் துயரம். அதனைத் துயரம், சோகம், விரக்தி, கசப்பு, மனச்சுமை என்று எந்தச்சொல்லாலும் வர்ணித்துவிட முடியாது. ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிபெயர்ப்புகளிலும் அந்த ‘ஹுசுன்‘ என்ற துருக்கியச் சொல்லை மாற்றாமல் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறார். இஸ்தான்புல்லின் ஹுசுனை விவரிக்க ஒரு தனி அத்தியாயமே உண்டு. அயல் கலாச்சாரங்களின் தனித்துவத்தை மொழிபெயர்ப்பில் நூறு சதவீதம் கொண்டுவரவே முடியாது. மூலப்படைப்பின் ஆன்மாவை உணர்ந்து கொள்ள அந்நிலத்தின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் மொழிபெயர்ப்பாளன் உள்வாங்கியிருக்க வேண்டும். அது பெரும் உழைப்பைக் கோருவதுதான். ஆனால் மொழிபெயர்ப்பை ஒரு வேலையாகக் கருதாமல் உள்ளார்ந்த நேசிப்புடன் அணுகும் எந்த ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கும் அது ஒரு சுமையல்ல. ஆனால் அவனுக்கு இதில் முழுதிருப்தி ஒருபோதும் வருவதேயில்லை. அதுதான் அவனது மிகப்பெருந்துயரம். சிலநேரங்களில் வானவில்லைத் தொடுவதற்கு ஓடும் ஓட்டம். சிலநேரங்களில் தொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம்.

O

கேள்வி: அயல் இலக்கியங்கள் நம்மிடையே சரியாக அணுகப்படுகிறதா?

பதில்: அயல் இலக்கியங்கள் என்பதை மொழிபெயர்ப்புகள் என்று எடுத்துக்கொள்கிறேன். பதில் – இல்லை. இன்னமும் மொழிபெயர்ப்பு என்பது ‘தமிழிலேயே எழுதப்பட்டதைப் போல’வும், ‘பெயர்களை மட்டும் நம்மூர் பெயர்களாக மாற்றிவிட்டால் இது தமிழ் படைப்பேதான்’ என்றும், ‘வாசிக்க எளிமையாக, சரளமான நடையில் உள்ளது’ என்றும் கருதப்படுபவைதான் நல்ல மொழிபெயர்ப்பு என்று பெரும்பாலான வாசகர்களால் மதிப்பிடப்படுகிறது.

O

கேள்வி: புரிகிறது! ‘வெண்ணிறக் கோட்டை’ நாவலின் அட்டைப்படம் அற்புதம்! கிங் ஆஃப் ஸ்பேட் – உருவங்கள் சிதைந்தும், சரிபாதியாக பிரிக்கப்பட்டும், முகத்திற்கு அருகில் மற்றொரு உருவம் நிழலாகவும் – நாவலின் களம், காலம், பாத்திரத்தின் இயல்பு என ஒட்டுமொத்த சாராம்சத்தையும் ஒற்றைப்படத்தில் பிரபலித்திருப்பது சிறப்பு. பிறமொழிகளில் வெளியான அட்டைப்படத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழில் வெளியானதே மிகச்சிறப்பானதாகத் தோன்றுகிறது. அது குறித்து?

பதில்: இதற்கான பாராட்டுகள் அனைத்தும் ஓவியர் சீனிவாசன் நடராஜனைத்தான் சேரும். வெண்ணிறக்கோட்டையின் முழு கதையையும் விளக்கமாக என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகுதான் அட்டைப்பட வடிவமைப்பைத் தொடங்கினார். நான் எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. சொன்னாலும் காது கொடுத்து கேட்கிற ஆசாமியா அவர்? அவர் எப்பேற்பட்ட அலாதியான கலைஞன் என்பதை அவர் வடிவமைத்த மற்ற நூல்களின் அட்டைப்படங்களைப் பார்த்தால் தெரியும். ஏதோவொரு புகைப்படத்தை வைத்து ஒப்பேற்றிவிடுபவரல்ல. அவரது எல்லா அட்டைப்படங்களுமே பற்பல அடுக்குகளைக்கொண்டிருப்பவை. அவற்றைத் தனியாகவே கண்காட்சியாக வைக்கலாம்.

O

கேள்வி: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பாமுக் நாவல்களின் அட்டைப்படங்கள் மூலப்பிரதியை ஒத்ததாக இருக்கின்றன. அதற்கேதேனும் விஷேஷ காரணங்கள்?

பதில்: சந்தோஷும், றஷ்மி அகமதுவும் மிகப்பிரமாதமான கலைஞர்கள். அந்நாவல்களை அவர்கள் எந்தளவுக்கு உள்வாங்கிக்கொண்டு அட்டைப்படத்தை வடிவமைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். பான்வில்லின் ‘கடல்’ நாவலுக்கு சந்தோஷ் வடிவமைத்த அட்டைதான் அந்நாவலில் மற்ற எல்லா மொழிப்பதிப்புகளிலும் பார்க்கச் சிறந்ததாக இருப்பதாக அயர்லாந்து இலக்கிய பரிமாற்ற மையத்தின் இயக்குநர் ஷினேத் மெக்கவோதா கூறினார். ‘இஸ்தான்புல்’லுக்காக றஷ்மி 16 அட்டைப் படங்களைத் தயாரித்துக்கொடுத்தார்.

O

கேள்வி: மொழிபெயர்ப்பு ஒரு கலை என்று குறிப்பிட்டால் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஆங்கிலமும் தமிழும் தெரியும், சில புத்தகங்களை வாசித்திருக்கவும் செய்கிறேன் என்பதற்காக மொழிபெயர்த்துவிட முடியுமா?

பதில்: இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும்போதே இதற்கான பதிலையும் உள்ளடக்கியிருக்கிறீர்கள். ‘முதியவர் மற்றும் கடல்‘ என்று மொழிபெயர்ப்பதைப் போலத்தான் இருக்கும்.

O

கேள்வி: ஹா ஹா. ஓரான் பாமுக்கை நீங்கள் ஆதர்சனமாக கொண்டிருக்கிறீர்கள் என அறிவோம். எனது கணிப்புபடி ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் அவரது அனைத்து படைப்புகளையும் வாசித்திருப்பீர்கள். ஓரான் பாமுக்கின் ஒரே ஒரு நாவலைத்தான் மொழிபெயர்க்க அனுமதி தருகிறார்களெனில் உங்களது தேர்வு எதுவாக இருக்கும்? ஏன்?

பதில்: ’இஸ்தான்புல்’. பாமுக்கின் படைப்புலகுக்குள் நுழைய விரும்புகிறவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் நூல் ‘இஸ்தான்புல்’லாகத்தான் இருக்கும். துருக்கியின் ஆட்டமன் காலச் சரித்திரம், அதன் வீழ்ச்சி, இஸ்தான்புல்லின் மகத்தான கலை அடையாளங்கள், அவற்றின் சிதிலங்கள், அவற்றோடு இணையாக பிணைந்திருக்கும் இஸ்தான்புல்வாசிகளின் வாழ்வு. இதனோடு 21ம் நூற்றாண்டின் மகத்தான நாவலாசிரியராக பரிணமிக்கப்போகும் ஒரு கலைஞனின் ஆரம்ப கால மாற்றங்கள். சமகால மகத்தான நூல்களில் ஒன்று ‘இஸ்தான்புல்’.

O

கேள்வி: வேடிக்கையான ஒரு கேள்வி. நமக்கு பிடித்தமான ஏதோ ஒன்றில் நமது ஆளுமை வெளிப்படும் என்று நம்புகிறேன். சிங்கம் குறித்தான தங்களின் ஆர்வம்?

பதில்: முகநூலில் சிங்கம் படங்களாகவே பகிர்ந்துகொண்டிருப்பதால் கேட்கிறீர்கள். உண்மைதான். நினைவு தெரிந்த நாள் முதலாக ஆண் சிங்கம் என் ஆதர்ச ஜீவன். அதன் பிடரியும், கம்பீரமும், கர்ஜனையும் நான் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் தட்டியெழுப்பிவிடும். சிங்கத்தின் உருவம் எனக்கோர் ஊக்க மருந்து.

O

கேள்வி: நீங்கள் நாளை ஓரான் பாமுக்கை நேரில் சந்திக்க நேர்ந்தால்? என அ.முத்துலிங்கம் ஒரு முறை உங்களிடம் கேட்டிருந்தார். ‘முதல் சந்திப்பில் என்னால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியாது என நினைக்கிறேன். அவரது ஒவ்வொரு நாவலிலும் இடம்பெறும் எனக்குப் பிடித்தமான வரிகள் மனத்தில் ஓடுமேயொழிய வாயில் வராது, ஒருவேளை இரண்டாம்முறை சந்தித்தால். அவரிடம் இரண்டாயிரம் சந்தேகங்கள் கேட்பேன். Snow நாவலில் வரும் நெஸிப்பைப் போல’ என்று கூறியிருந்தீர்கள். அவரைச் சந்தித்தீர்களா? அல்லது அவரோடு மின்னஞ்சல், அலைபேசி வாயிலாக உரையாடிய மறக்கமுடியாத விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?

பதில்: இதுவரை சந்திக்கவோ, தொடர்புகொள்ளவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் சந்திப்பேன் என்று பட்சி சொல்கிறது!

O

கேள்வி: விரைவிலேயே சந்திப்பு நிகழ இலக்கியக்கடவுளைப் பிரார்த்திக்கிறேன்! உங்களது அடுத்த படைப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்காக இந்தக் கேள்வி. தற்போது நீங்கள் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் படைப்பு என்ன? எப்போது வெளிவரும்?

பதில்: நார்வீஜிய நாவலாசிரியர் டாக் ஸூல்ஸ்டாட் எழுதிய ‘SHYNESS AND DIGNITY’ என்ற நாவலை மொழிபெயர்த்துவருகிறேன். விரைவில் வெளிவரும்.

(வாசகசாலை இணையதளத்தில் வெளியான நேர்காணல் இது)

(நன்றி: சாபக்காடு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp