திருடன் மணியன்பிள்ளை

திருடன் மணியன்பிள்ளை

ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘தஸ்கரன் மணியன்பிள்ளயுடெ ஆத்மகத’ என்னும் நூலானது மணியன்பிள்ளையின் தன்வரலாற்று நூலாகும். இந்நூலைத் ‘திருடன் மணியன்பிள்ளை’ என்னும் பெயரில் குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலின் முதற்பகுதியில் மணியன்பிள்ளை தன்னுடைய இந்தச் சுயசரிதை எழுதுவதற்கான காரணங்களையும், இந்நூலைப் படிப்போருக்கான சில அறிவுரைகளையும் உட்படுத்திய கட்டுரை அமைந்துள்ளது.

1950இல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரம் என்னும் இடத்தில் மிகவும் பிரபலமான ‘கொடுந்தற’ குடும்பத்தின் ஓர் அங்கமாகப் பிறந்த மணியன்பிள்ளை, காலப்போக்கில் குற்றவாசனை உள்ள ஒரு மனிதனாக மாறுகிறார். முதன்முதலாகத் தன்னுடைய உறவுப்பெண் ஒருத்தியின் தூண்டுதலால் திருட்டுத் தொழிலில் இறங்கும் மணியன்பிள்ளை பின்பு தன்னுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் காலப்போக்கில் தன்னுடைய ஆடம்பரத் தேவைகளுக்காகவும் அத்தொழிலைத் தொடர்கிறார்.

கையில் தேவைக்கு அதிகமாகப் பணம் வரும்போது மனிதன் தன்னுடைய சுயத்தை இழந்து எந்தத் தவற்றையும் செய்வதற்கு அவனது மனம் உடன்படுகிறது என்பதை வாழ்க்கையில் பல கட்டங்களிலும் இவருடைய அனுபவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஒருமுறை ‘திருடன்’ என்று அறியப்பட்ட ஒரு மனிதனை, இந்தச் சமூகமானது அவன் நல்லவனாக மாறித் திருந்தி வாழ்ந்தாலும், அல்லது வாழ முயன்றாலும் ஏற்றுகொள்வதில்லை.

செய்த குற்றத்திற்காக முதலில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் மணியன்பிள்ளை பின்பு அவர்மீது அவர் செய்யாத குற்றங்கள் பல சுமத்தப்பட்டு வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களையும் சிறையிலேயே கழிக்கிறார். இவருடைய திருட்டுகள் பெரும்பாலும் சாகசம் நிறைந்தவையாகவே உள்ளன; சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத, மனிதத் தன்மையற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள்ளும், சமூகத்தில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஏழைகள், நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உதவும் மனமும் அடங்கியிருக்கிறது.

போலீசில் பிடிபட்டவுடனேயே தான் செய்த திருட்டுகளை ஒப்புக்கொள்கிற இவர் நீதிமன்றத்தில் தனக்காக எந்த வழக்கறிஞர்களையும் நியமித்துக் கொள்ளாமல் தானாகவே வாதாடி நீதிபதிகளையும், காவல்துறையினரையும் பயப்படுத்துகின்ற அளவிற்குத் திறமை பெற்றிருந்தார். திருட்டுத் தொழில் மூலம் கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை இவர் விலைமகளிருக்காகவே செலவு செய்தார். ‘தான் செய்வது தவறு’ என்னும் குற்றவுணர்ச்சி இவரிடம் எப்போதும் இருந்தது.

திருட்டுத் தொழில் மூலம் சம்பாதித்த பணத்தையெல்லாம் மது, மாது ஆகியவற்றில் செலவிட்டுத் தீர்த்த பின்பும் இறுதிவரை தன்னோடு, அனைத்துக் கஷ்டங்களையும் தாங்கி நின்ற தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு திருந்தி வாழ்வதற்காக மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடையைத் தொடங்குகிறார். பிறகு சலீம் பாட்சா என்ற பெயரில் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டுத் தன்னால் ஆன உதவிகளை எல்லாம் மக்களுக்குச் செய்து கொடுத்து மக்கள் செல்வாக்கைப் பெறுகிறார். அதன் விளைவாக மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். அப்போதைய கர்நாடக மாநில முதலமைச்சரான குண்டுராவுடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவிற்கு மைசூரில் இவரது வளர்ச்சி அமைகிறது.

1983இல் இவர் மைசூரில் இருப்பதைக் கேள்விப்பட்ட கேரளக் காவல்துறை இவரை மைசூரில் வைத்துக் கைது செய்கிறது. சம்பாதித்த அனைத்துச் செல்வங்களையும் இழந்து வெறுங்கையுடன் கேரளத்திற்குத் திரும்புகிறார். பின்பு தமிழ்நாட்டில் துவரங்குறிச்சியில் மர வியாபாரம் செய்து இலட்சாதிபதியாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் 1988இல் மீண்டும் கைது செய்யப்பட்டு 1995 வரை சிறைச்சாலையில் இருந்தார்.

சிறைச்சாலையானது, மனிதர்கள் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து திருந்துவதற்கு வழி செய்வதாக அமைய வேண்டும். தவறு செய்தவர்கள் கிடைக்கவில்லையென்றால் கிடைத்தவர்கள் மீது அனைத்து வழக்குகளும் சுமத்தப்படுகின்றன. காவல்துறையின் இருவேறு முகங்கள் இங்கு வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளன.

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அமைய வேண்டிய நீதிமன்றமும், காவல்துறையும் பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும் எந்தத் தவற்றையும் செய்யத் தயங்குவதில்லை. ‘தான் இனி மேல் திருடுவதில்லை’ என்று தீர்மானித்து நேர்மையாக வாழ்ந்து வருகின்றபோதும் பல திருட்டு வழக்குகள் இவர் மீது காவல்துறையால் சுமத்தப்படுகின்றன என்பது சமூகத்தின் ஒரு சாபக்கேடாகும். ‘அறிவுசார்ந்த முன்னேற்றம் என்பது கருணை மனோபாவத்துடன் மற்றவர்களின் நன்மை, தீமைகளை நேர்மையுடன் அணுகுவதாகும்’ என்ற ஆசிரியரின் இக்கருத்து எல்லோராலும் சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp