தற்கால இஸ்லாமியச் சிந்தனை

தற்கால இஸ்லாமியச் சிந்தனை

'தற்கால இஸ்லாமியச் சிந்தனை' - சமகால இஸ்லாமியச் சிந்தனைப் போக்கை புரிந்துகொள்வதற்கான கையேடு

இஸ்லாமியச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புரட்சிகர சிந்தனையாளர்கள் குறித்த தெளிவான, ஆழமான அறிமுகத்தை இதுவரை எந்தவொரு தமிழ் நூலும் தந்ததில்லை. பெரும்பாலான நூல்கள் அந்தச் சிந்தனையாளர்களின் சரித்திரத்தையும் குணநலன்களையுமே எடுத்துரைத்தன.

இந்தச் சூழலில், முக்கியத்துவமிக்க இஸ்லாமிய அறிஞர்களின் சிந்தனைகளை அறிமுகப்படுத்துவதற்கும், பகுப்பாய்வு செய்வதற்குமான அவசியம் ஏற்பட்டது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு 'தற்கால இஸ்லாமியச் சிந்தனை' புத்தகம் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்கிறது.

மெய்யியல் துறையில் முதுநிலை விரிவுரையாளரான, டாக்டர். எம்.எஸ்.எம். அனஸ் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் வரலாறு, மெய்யியல், நாட்டாரியல் தொடர்பாக பல்வேறு நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரபு இசை: கஸீதா முதல் கஸல் வரை, ஈரானிய சினிமா: சமயவாதங்களும் திரைப்படங்களும், முஸ்லிம் நாட்டாரியல் போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.

'தற்கால இஸ்லாமியச் சிந்தனை' இஸ்லாமியச் சிந்தனைப் போக்கை புரிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த புத்தகம். சமகால இஸ்லாத்தில் பெரும் தாக்கம் செலுத்திவரும் புத்துயிர்ப்புவாத, நவீனச் சிந்தனையாளர்களின் கருத்துகளை மறுஆய்வு செய்வதன் ஊடாக தற்கால இஸ்லாமியச் சிந்தனைப் போக்கை மிக நுட்பமாக புரிந்துகொள்ள இந்நூல் வழிவகுக்கிறது. இன்று உலகம் முழுவதும் விவாதப் பொருளாய் இருக்கின்ற வஹ்ஹாபிசம், அரசியல் இஸ்லாம் போன்றவற்றை விளங்கிக்கொள்ளவும் இப்புத்தகம் உதவுகிறது.

இந்நூலின் அட்டைப் படமும் வடிவமைப்பும்கூட புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. இந்நூல் 400 பக்கங்களைக் கொண்டது. இரு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் இப்னு தைமிய்யாவில் தொடங்கி அலீ ஷரிஅத்தி வரையிலும் பன்னிரண்டு சிந்தனையாளர்களை அலசுகிறது. அடுத்த பகுதியில் இலங்கை இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் பற்றி ஆய்வு செய்கிறது. மொத்தம் 16 முதன்மையான செல்நெறிகள் குறித்து விரிவான ஆய்வை இப்புத்தகம் செய்கிறது.

ஒவ்வொரு அறிஞர்களின் சிந்தனையும் தனித்துவமிக்கது. அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைகளுக்கும் அவர்களது புரிதலுக்கும் தக்கவாறு இஸ்லாத்தை முன்வைத்தனர். நூலாசிரியர், ஒவ்வொருவருக்கும் மத்தியில் இருக்கும் வேறுபாட்டை இப்புத்தகத்தில் உருவகப்படுத்தி இருக்கிறார். பொருளடக்கத்தைப் படிக்கும்போதே அது தெரியும். முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபிற்கு 'ஓரிறைவாதமும் அரசியல் சமயமும்' என்றும் மௌதூதி பற்றிய அத்தியாத்திற்கு 'இஸ்லாம்: உலக அரசு' என்றும் ஹசன் அல் பன்னாவிற்கு 'அரசியல் இஸ்லாமும் புத்துயிர்ப்பும்' என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர் கையாண்டுள்ள மொழிநடை கல்விசார் அணுகுமுறையில் அமைந்துள்ளமையே இந்நூலின் தனிச் சிறப்பு. பொதுவாக மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களிலேயே இதுபோன்ற மொழிநடை இருக்கும். தமிழ் சூழலில் முஸ்லிம் எழுத்தாளர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் தொடர்பாக எழுதியிருப்பதில் ஒரு தீவிர சார்புநிலை இருக்கும். அதற்கு மாற்றமாக 'தற்கால இஸ்லாமியச் சிந்தனை' நூலில் முதன்மையான செல்நெறிகளை அறிமுகம் செய்வதோடு, அவர்களைக் குறித்த விமர்சனமும் செய்யப்பட்டுள்ளது.

பகுப்பாய்வு மற்றும் விமர்சன நோக்கோடு எல்லா இஸ்லாமிய அறிஞர்களின் அணுகுமுறையையும் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் மத்ஹப் புத்தகங்களை வேத வரிகளுக்கு இணையாக மரபுவாதிகள் தரம் உயர்த்தியதன் மூலம் இஸ்லாமிய சமூகம் பின்னோக்கிச் சென்றது. மரபுவாதிகளின் பிடிவாதத்தால் பெரும் வீழ்ச்சிக்கு அது வழிகோலிற்று. இஸ்லாமியச் சிந்தனையில் அது ஒரு தேக்க நிலையை உண்டாக்கியது.

கடந்த காலத்தில் ஷாஃபீ, அபூ ஹனீஃபா முதலானோரின் கருத்துகளை எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல், கால மாற்றத்தையும் பொருட்படுத்தாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதால்தான் முஸ்லிம் சமூகத்தில் சிந்தனைச் சிக்கல் ஏற்பட்டது. அதே அணுகுமுறையை நவீனத்துவவாதிகளுக்கும் புத்தியிர்ப்புவாதிகளுக்கும் செய்தாலும் அது நம்மை பின்னுக்குத் தள்ளவே செய்யும். ஆகவே ஆய்வு மற்றும் விமர்ச ரீதியிலான பார்வை அவசியமாகும்.

நவீனகாலச் சூழலில் இஸ்லாத்தை முன்வைக்க முனைபவர்கள் அனைவரும் அவசியம் இந்நூலை வாசிக்கவேண்டும். மௌதூதி, அல்லாமா இக்பால், ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி போன்ற பேரறிஞர்கள் தோன்றிய இந்தியாவில், முதல்தர இஸ்லாமிய அறிஞர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இன்று யாருமில்லை. மதரஸா பாடத்திட்டத்தில் குறைகள் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

இஸ்லாமிய கல்வியில் நிபுணத்துவம் பெற முயல்வோர் அனைவரின் கரங்களிலும் தவழவேண்டிய புத்தகம் 'தற்கால இஸ்லாமியச் சிந்தனை'. மதரஸா பாடப் புத்தகத்தில் இணைக்கவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த நூல் இது.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp