தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை

வினவு
Share on

தமிழ் நிலத்தின் வரலாறாக ராஜராஜனின் படையெடுப்புகள் குறித்த பிரஸ்தாபிப்புகளும், “முன் தோன்றி மூத்த குடி” என்பன போன்ற வெட்டிப் பெருமிதங்களுமே ஓரளவுக்கு ‘விவரம்’ அறிந்த தமிழர்களின் பொதுபுத்திப் பதிவுகளின் சாரமாக இருக்கும். தஞ்சைப் பெரிய கோவிலை அண்ணாந்து பார்த்து ”முப்பாட்டன்மார்களின்” அறிவியல் தொழில் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முயலும் வலதுசாரி இனவாத பெருமிதங்கள் “திருநள்ளாறு கோவிலைப் பார்த்து விண்கலங்களே தடுமாறுவதாக” வரும் வலதுசாரி மதவாத பிரச்சாரங்களுக்கு வெகு இயல்பாக பலியாவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தச் சூழலில் முனைவர் சி. இளங்கோ எழுதி அலைகள் வெளியீட்டகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ள “தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை…” எனும் நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் மதிப்புரையில் மயிலை பாலு எழுதியிருக்கும் இந்த வரிகளே இந்நூலின் முக்கியத்துவத்தை மிக எடுப்பாக உணர்த்துகின்றது.

“மண்ணுக்குக் கீழே மற்றொன்றும் இருக்கிறது”

பல்லாயிரம் வருடங்களாக இத்தமிழ் நிலம் எவற்றையெல்லாம் தனக்குள் பொதிந்து வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தேடுவதற்கு இந்நூல் ஒரு அறிமுகக் கையேடாக உள்ளது. தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள், பானைகள், குகை ஓவியங்கள், கற்கருவிகள், உலோகக்கருவிகள், நாணயங்கள் போன்றவற்றைக் கொண்டு அந்தக் கால மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் குறித்த ஒரு சுருக்கமான சித்திரத்தை முன்வைக்க நூலாசிரியர் முயன்றுள்ளார்.

”ஏடறிந்த வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்கிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு அந்தக் காலகட்டங்களில் எம்மாதிரியான தொழிற்பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்திருக்க கூடும் என்பதை அலசிச் செல்கிறது இந்நூல். குயவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், சிற்பிகள், உழவர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தை அச்சமூகத்தில் புழங்கிய பொருட்களைக் கொண்டு முகநூல் சகாப்தத்தின் மாந்தர்களுக்கு சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல்.

கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை வேண்டா விருப்புடன் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த சுமார் 7000 பொருட்களில் எங்குமே மதத்தின் சாயல் இல்லை என்பது நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. இன்றைக்கும் பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் தலையால் தண்ணீர் குடித்தும் தமிழகத்தில் தங்களது கலவர அரசியலை வெற்றிகரமாக விதைப்பதற்கு தடையாக இருக்கும் காரணிகளில் தமிழகத்தின் ”சமூக மரபணுவின்” பாத்திரத்தை மேலும் நெருக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் உணர்த்துகின்றது.

அதே போல் மத்தியில் அதிகாரத்திற்கு வரும் காங்கிரசோ பாரதிய ஜனதாவோ தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகளின் மேல் கணத்த கம்பளியைப் போர்த்தி மூட முயற்சிக்கும் காரணத்தையும் நம்மால் யூகிக்க முடிகிறது. கீழடி ஆய்வின் முக்கியத்துவம் என்ன, கீழடியில் புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை மூடி மறைப்பதற்கு மத்திய அரசு ஏன் முயல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காக தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள தொல்லியல் ஆய்வுகளையும் அவைகளும் இவ்வாறே புறக்கணிக்கப்பட்ட வரலாற்றையும் தொகுப்பாக முன்வைக்கிறது நூல்.

ஒருபக்கம், இல்லாத சரஸ்வதி நதியைத் தேட நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டுகிறார் வளர்ச்சி நாயகன் மோடி , ஆடம்ஸ் மணல் திட்டை “இராமர் பாலம்” என்று நிரூபிக்க கடலுக்கு அடியில் துளை போட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, அயோத்தி பாபர் மசூதியின் இடிபாடுகளுக்குள் கற்பனைக் கதாபாத்திரம் இராமனின் பிறப்பைத் தேட தொல்லியல் அறிஞர்களை களமிறக்கியது பாரதிய ஜனதா அரசு – இப்படி பிற்போக்குத்தனங்களை நிரூபிக்க ஊருக்கு முந்தி நிற்கும் அதிகார வர்க்கமும், இந்துத்துவ கும்பலும் உண்மையான மக்களின் வரலாற்றை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதற்கு கீழடியே சாட்சி.

ஏழாயிரத்துக்கும் மேல் கிடைத்துள்ள சான்றுகளில் வெறும் இரண்டே இரண்டு பொருட்களை மாத்திரம் கரிமச் சோதனைக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. அகழாய்வுக்கென தெரிவு செய்யப்பட்ட 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 செண்ட் நிலத்தில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்குள் அந்த ஆய்வை மேற்கொண்ட நேர்மையான அதிகாரியை மாற்றியது, அகழாய்வில் கிடைத்த பொருட்களை கடத்த முயற்சி என வரிசையாக தமிழ் மக்களின் வரலாற்றை குழிதோண்டிப் புதைக்க மத்திய பாரதிய ஜனதா ஏவிவிட்டுள்ள சதிகளைக் குறித்து இந்நூல் எச்சரிக்கை செய்கிறது.

இந்துத்துவ பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்த்து முறியடிப்பதற்கு நம் தமிழ்ச் சமூகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியம் குறித்த அறிமுகம் மட்டுமல்ல – நம் சமூகத்தின் நரம்புகளுக்குள் எவ்வாறு பார்ப்பனிய நஞ்சு ஏற்றப்பட்டது என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் செய்ய வேண்டிய நீண்ட வாசிப்புக்கு இந்நூல் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். அவசியம் வாங்கிப் படிப்பதோடு நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

மேலும் ஆர்வம் கொண்டவர்கள் இதே நூலின் 106ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள துணைநூல்களைத் தேடி வாங்கிப் படிக்கலாம்.

(நன்றி: வினவு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp