சூப்பர் 30 ஆனந்த் குமார்

சூப்பர் 30 ஆனந்த் குமார்

ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ஐஐடி – ஜேஇஇ (IIT – JEE) என்ற தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்? இதற்கான நமது பதில் மிகக் குறைவு என்பதே சரியாக இருக்கும். ஆனால் பீகார் என்ற கல்வியறிவில் தமிழ்நாட்டைவிட பின்தங்கிய மாநிலத்தில் இலவசமாக நடத்தப்படும் சூப்பர் 30 என்னும் பயிற்சி மையத்திலிருந்து பயிற்சி பெறும் 30 மாணவர்களில் ஆண்டுக்கு 28 முதல் 30 பேருமே தேர்ச்சி அடைகிறார்கள் என்பது என்பது எவ்வளவு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த சூப்பர் 30 பயிற்சி மையத்தை 2002-2003 ஆம் ஆண்டுகளில் தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக நடத்தி வரும் ஆனந்த் குமார் என்பவரின் வாழ்க்கைக் கதையே, வெற்றிக் கதையே ஏழு தலைப்புகளில் இந்நூலாக விரிகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு ஏழை குமாஸ்தாவின் மகனாக 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆனந்த குமார். தந்தை ராஜேந்திர பிரசாத், தாய் ஜெயந்தி தேவி. இளமையிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்டு சிறப்புறச் செயல்பட்டவர். கல்வியின் அருமையை உணர்ந்திருந்த ஆனந்த குமாரின் தந்தை, நான்காவது வகுப்புவரை ஆனந்த குமாரை புகழ்பெற்ற தனியார் பள்ளியில் சேர்த்திருந்தார். பின் பணப்பற்றாக்குறையால் ஆனந்த குமார் வேறு பள்ளியில் சேரக்கிறார். பணத்தின் அவசியத்தை ஆனந்த குமார் உணர்ந்த தருணம் இது. அது போல வறுமையால் பல வாய்ப்புகள் பறி போவதையும் அறிந்தது ஆனந்த குமாரின் இளைய மனம்.

ஆனந்த் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் வேறெந்த ஊசலாட்டமுமின்றி தனக்குப் பிடித்த கணிதப்பிரிவில் பாட்னா பி.என். காலேஜில் சேர்ந்து பயில்கிறார். கல்வியில் அவருக்கு இருந்த ஆர்வம், கடினமான கணக்குகளைத் தீர்ப்பதில் இருந்த துடிதுடிப்பு, தோண்டித் துருவி கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதில் இருந்த முனைப்பு இவையனைத்தும் அவரது ஆசிரியர்களைப் பெரிதும் கவர்ந்தன. ஏறக்குறைய அத்தனை ஆசிரியர்களும் ஆனந்தை அடையாளம் கண்டு கொண்டனர். கணக்குப் பாடத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், அவற்றைத் தீர்ப்பதில் இருந்த முனைப்பு, எண்களை ஆனந்த் கையாண்ட விதம் ஆகியவை அவரைத் தனித்திறன் மிக்கவராக அடையாளம் காட்டின. கணிதத்தை முக்கிய அம்சமாகக் கொண்ட பத்திரிக்கைகள், சிறப்பு வெளியீடுகள், ஆராய்ச்சி கட்டுரைகள் ஆகியவற்றைத் தேடிப்பிடித்து அதில் ஏற்படும் சந்தேகங்களை தனது பேராசியர்களிடம் கேட்கும் பழக்கத்தை ஆனந்த் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட பழக்கம் அவர் வயதுடைய மாணவர்களில் வேறு யாருக்குமே இருக்கவில்லை.

1991 ஆம் ஆண்டுகள். கல்லூரி முடித்து பழைய மிதிவண்டியில் வீடு திரும்பும் போது யோசித்துக் கொண்டே வருகிறார். அப்போது தனது கணித திறன் குறித்து அவருக்கு நம்பிக்கை பிறக்கிறது. தனக்கு கணிதம் எளிதாக வசப்பட்டிருப்பதும், தன்னால் எந்தக் கணக்கையும் மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கும் திறன் வசப்பட்டிருப்பதையும் உணர்கிறார். இத்திறனைப் பயன்படுத்தி தான் வசிக்கும் கல்வியில் பின்தங்கிய பகுதியில் மாணவர்களுக்கு சிறு தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொண்டு கணிதம் சொல்லிக் கொடுக்கலாம் என்று ஆனந்த் முடிவு செய்கிறார். இந்த யோசனைக்கு ஆனந்தின் அப்பாவும் ஒப்புக்கொள்ள 1992 ஆம் ஆண்டு ஒரு சிறிய இடத்தில் இரண்டு மாணவர்களைக் கொண்டு “கணக்குக் கிளப்பை” துவங்குகிறார். ஆனந்தின் கணிதப் பயிற்சி மையம் பற்றிய விஷயம் விரைவிலேயே பரவ ஆரம்பித்தது. சில நாட்களுக்குள்ளேயே அந்த இடத்திற்குக் கணிதத்தில் ஆர்வம், சந்தேகம் உள்ள மாணவர்களும் வர ஆரம்பித்தனர். அந்த இடமே கணிதம் பற்றிய. உரையாடல்கள், வாதங்கள் போன்றவை இயல்பாக நடக்கும் மையமாக மாறியது. ஆனந்த் குமாரை பெரிதும் கவர்ந்தவர் கணித மேதை ராமானுஜம். மனதில் அவரையே தன் முன்னோடியாக, கதாநாயகனாக வரித்துக் கொண்ட ஆனந்த் , அவரைப் பற்றி எந்த சிறு விஷயம் என்றாலும், முதல் வேலையாகத் தெரிந்து கொள்வதை மிக முக்கிய வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஆனந்த தனது கணிதப் பயிற்சி மையத்திற்கு “ராமானுஜம் கணித பயிற்சிப் பள்ளி” என்று பெயர் சூட்டுகிறார்.

1993 வாக்கில் ஆனந்தின் பயிற்சி முறை பற்றி கேள்விப்பட்டு 40 மாணவர்கள் சேர முன் வருகின்றனர். 15×20 அடி அளவிலான ஒரு அறையே வகுப்பறை. அதில் சில பெஞ்சுகளும் சில டெஸ்குகளும் இருக்கும். ஒரு கரும்பலகை மற்றும் ஒரு சாக்பீஸ் பெட்டி இருக்கும்.பெரும்பாலான வகுப்புகள் ஆனந்தாலேயே எடுக்கப்படும். கட்டணம் மற்ற பயிற்சி மையத் தைவிட மிகக் குறைவு. ஏழை மாணவர்கள் எவராலும் கட்டணம் தர முடியவில்லை என்றாலும் யாரும் கட்டாயப்படுத்திகேட்பதில்லை. இவ்வாறு பயிற்சியும் கல்லூரிப் படிப்பும் நடந்து வந்தது. படிப்பும் முடிந்து மேற்படிப்புக்காக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு விளையாட்டாக விண்ணப்பிக்கிறார் ஆனந்த். பின் விண்ணப்பித்ததையே மறந்து விடுகிறார். ஆனால் ஒரு மாதம் கழித்து ஒரு கடிதம் கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர அனுமதியுடன் ஆனந்திற்கு வருகிறது. ஆனந்த் தன் குடும்ப சூழல் காரணமாக அதில் சேர தயக்கம் காட்ட, ஆனந்தின் தந்தை மிகுந்த ஊக்கம் தருகிறார். இந்நிலையில் ஒரு அசம்பாவித சம்பவம் ஆனந்தின் வாழ்வில் நடக்கிறது. ஆம், ஆனந்தின் தந்தை இறந்து போகிறார். இடிந்து போகிறார் ஆனந்த். தந்தையின் மரணத்தினால் உடைந்து போன ஆனந்த், அதிலிருந்து மீண்டு லண்டன் கேம்பிரிட்ஜில் தான் மேற்படிப்பு படிக்க விரும்பிய தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற விரும்புகிறார். ஆனால் பொருளாதார நிலை ஆனந்தின் கனவைத் தகர்க்கிறது. பீகார் அரசு, தனியார் அமைப்பு என எல்லா தரப்பிலிருந்தும் உதவி பெற முடியாத சூழல். “உதவி என்று தேவைப்படும் போது, யாரும் உதவிக்கு வருவதில்லை. சேவை செய்யும் இல்லங்கள், அரசு சாரா அமைப்புகள், என்ற எதுவாக இருந்தாலும் உண்மையாக எந்த உதவியும் செய்வதேயில்லை. யாருக்கு உதவினால் விளம்பரம் கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உதவுகிறார்கள்” என்று கசப்புடன் நினைத்து மனம் நொந்தார் ஆனந்த்.

சாதாரணமாக அரசு ஊழியர் இறந்தால் அதற்கான ஒரு ஈட்டுத் தொகை குடும்பத்தினருக்கு வழங்கப்படும். ஆனால் ஆனந்தின் தந்தை இருக்கும் போதே அவர்கள் இருக்கும் வீட்டைக் கட்டுவதற்கு 18,000/- ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார். அதை, அவரது குடும்பத்தினர்தான் திரும்ப கட்ட வேண்டும். அதைக் குறிப்பிட்ட கணத்தில்தான் ஆனந்த் தனது கேம்பிரிட்ஜ் கனவை நிரந்தரமாக புதைக்கத் தீர்மானம் செய்தார். தனது குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும் என முடிவு செய்தார்.

ராமானுஜன் கணிதப் பள்ளி தற்காலிகமாக மூடப்படுகிறது. ஏறக்குறைய எந்த வருமானம் இல்லாத நிலையிலும், ஆனந்த் மற்றும் அவரது சகோதர் பிரணவ் ஆகியோரின் பணி அன்றாட வாழ்க்கைப்பாடுகளுக்காக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது சம்பாதிக்க வேண்டும். இல்லையெனில் இரண்டு வேளை உணவுக்கும் பிரச்சனை ஏற்படக்கூடிய சூழல். ஆனந்தின் அம்மா வெளி உலகம் அறியாதவர். ஆனால் அவருக்கு சுவையான அப்பளம் செய்யத்தெரியும். அப்பள வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர். இதனிடையே ஆனந்தின் தந்தையின் வேலை கருணை அடிப்படையில் ஆனந்திற்கு கிடைக்க வாய்ப்பிருந்தும், ஆனந்த் தனது கணித லட்சியத்திற்கு இந்த வேலை தடையாக இருக்கும் எனக் கருதி வேலையை மறுத்து விடுகிறார்.

ஆனந்தின் அம்மா அப்பளம் தயாரித்துத் தர ஆனந்த் அதை பாதுகாப்பாக தனது சைக்கிளில் எடுத்துச் சென்று,ஒவ்வொரு கடையாக விநியோகம் செய்கிறார். ஆரம்பத்தில் இந்த வேலை கடினமாகத் தெரிந்தாலும் போகப் போக இந்த வேலையை ரசித்துச் செய்கிறார். நாட்கள் நகர்கிறது. குடும்பச் செலவுகளையும், பிற செலவுகளையும் இந்த அப்பளம் விற்ற பணம் ஈடுகட்டுகிறது. இருந்தாலும் எல்லா நாட்களிலும் இந்த வருமானம் நிரந்தரமில்லாமல் பட்டினி கிடக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனிடையே ஆனந்திற்கு தனது எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த கவலை அதிகமாகிறது. இத்துடன் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்பட பல மாதங்களாக மூடியிருக்கும் ராமானுஜன் கனிதப்பள்ளியை திறக்கலாம் என ஆனந்த் முடிவு செய்ய அதற்கு குடும்ப ஒத்துழைப்பும் கிடைக்கிறது. 1995 ஆம் ஆண்டு, ராமானுஜன் கணிதப்பள்ளியை மறுபடியும் அப்பளத் தொழிலில் கிடைத்த சிறு பணத்தைக் கொண்டு மீண்டும் தொடங்கினார் ஆனந்த குமார். ஆரம்பத்தில் இதற்கு வரவேற்பு இல்லையென்றாலும், ஆறு மாணவர்கள் சேர்ந்தனர். ஆனந்த் புத்துயிர் பெற்றது போல உணர்ந்தார்.. ஆனந்தின் திறமை, அணுகுமுறை வெகுவிரைவில் பரவ ஆரம்பித்தது. மாணவர்களின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்தது. ராமானுஜன் கணிதப் பயிற்சிப் பள்ளியில் படித்த மாணவர்கள் சிலர் ஐஐடி_ ஜேஇஇ தேர்வு எழுத விரும்புகிறார்கள். பாடனாவில் இதற்கான சில மையங்கள் இருந்தாலும் பயிற்சி கட்டணம் மிக அதிகமாக உள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் அதாவது மற்ற பயிற்சி மையங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே கட்டணமாக நிர்ணயித்தார். அதையும் பல தவணைகளாக எப்போது வேண்டுமானாலும் தரலாம் என எளிமைப்படுத்தினார்.

ஆனந்த் காலையில் அப்பளத்தோடு சைக்கிளில் செல்லும்போதுதான் அன்றைய வகுப்பறை உத்திகள் தீர்மானிக்கப்படும் மற்றும் வழியெங்கும் அவர் பார்க்கும்,எதிர்கொள்ளும் விஷயங்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பாடத்தோடு இணைப்பது எப்படி என்பதையும் முடிவு செய்து கொள்வார். இந்தக் காலகட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கும் கணகதப் புதிர்களை உருவாக்கித் தரும் பணியைச் செய்கிறார். அது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தருகிறது. இதனிடையே தீவிரமான உழைப்பு, புதிய உத்திகள் காரணமாக பயிற்சி பள்ளியில் 1996 ஆம் ஆண்டுகளில் 36 மாணவர்கள் சேர்கின்றனர் மேலும் 1997 ஆம் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியது. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 400 ஐத் தாண்ட வகுப்பறை வசதிகள் குறைகின்றன. இந்நிலைகளிலும் புதிய புதிய கணிதப் புத்தகங்களைப் படித்து தன்னை வளர்த்துக் கொள்ளத் தவறவில்லை. 2000வது ஆண்டுகளில் அந்தப் பயிற்சி பள்ளியில் 500 மாணவர்கள் இருந்தனர். அதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் பாட்னாவிலேயே மிகச்சிறந்த பயிற்சி மையமாக உருவாகி இருந்தது. அங்கிருந்து பல மாணவர்கள் ஐஐடி ஜேஇஇ தேர்வு மற்றும் இருக்கும் பிற போட்டித்தேர்வுகளிலும் கணிசமான அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பல பயிற்சி நிறுவனங்கள் பல வகையில் ஆனந்தின் பயிற்சி பள்ளிக்கு தொல்லை தருகின்றனர். ஆனந்தின் பயிற்சி நடக்கும் இடம் தொடர்பான பிரச்சினை ஏற்படுகிறது. இதில் ஆனந்த் பயிற்சி நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடும், வெடிகுண்டு வீச்சும் நடக்கிறது. இதனால் மனம் வருந்திய ஆனந்த் தனது பயிற்சி பள்ளியை ஊரை விட்டு வெளியே மாற்றுகிறார். ஊரிலிருந்து வெளியே இருப்பதினால் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்த்தார் ஆனந்த். ஆனால் தரமான பயிற்சியின் காரணமாக எந்த குறைவும் ஏற்படவில்லை. 2000 ஆவது ஆண்டு இறுதிக்குள் ராமானுஜன் பள்ளி புதிய இடத்தில் நிலைத்து நின்றது.

2002 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆனந்தின் பயிற்சிப் பள்ளிக்கு அபிஷேக்ராஜ் என்னும் ஏழை மாணவன் வருகிறான். அப்போது பயிற்சி பள்ளியின் ஆண்டுக் கட்டணம் ரூ. 1000 மட்டுமே. இதைக்கூட தன்னால் உடனே கட்ட இயலாதென்றும், வருடத்தின் கடைசியிலேயே கட்ட இயலுமென்றும் தெரிவிக்கிறான். இவனது வறுமை நிலையைக் கண்டு மனம் வருந்தும் ஆனந்தகுமார், அபிஷேக் போன்ற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து தனது அம்மா மற்றும் சகோதரனிடம் இது பற்றி ஆலோசனை செய்கிறார். அவர்களின் சம்மதத்துடன் உருவான திட்டம்தான் “ சூப்பர் 30 “ என்னும் ஏழை மாணவர்களுக்கான பயிற்சி திட்டம். இத்திட்டத்தின்படி ஒவ்வோராண்டும் இலவச உணவு, இருப்பிடத்துடன் கூடிய கட்டணமில்லா பயிற்சியை வழங்க முடிவு செய்யப்படுகிறது. இதற்கான நிதியை யாரிடமிருந்தும் பெறுவதில்லை எனவும், ராமானுஜன் பயிற்சி பள்ளியிலிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டே இந்த இலவச உண்டு, உறைவிட பயிற்சி பள்ளியை நடத்துவதென முடிவு செய்கின்றனர். இதற்கான தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு, உணவு தயாரிக்கும் பணியை ஆனந்தின் அம்மாவிடமே ஒப்படைக்கின்றனர். இதற்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும் என்றும் அறிவிக்கின்றனர். நுழைவுத்தேர்வு இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா பத்து கேள்வி வீதம் 30 பத்தாவது வகுப்பு பாடத்தின் தரத்திலானது. பல ஆயிரம் பீகார் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர். இதிலிருந்து முப்பது பேரை கடுமையான மன உறுதியுடன் தேர்வு செய்து பயிற்சியைத் தொடங்குகின்றனர்.

முதலாமாண்டே( 2002 – 2003 )இந்த இலவச சூப்பர் 30 பிரிவில் பயிற்சி பெற்ற ஏழை எளிய மாணவர்களில் 18 பேர் வெல்ல, ஆனந்த குமாரின் பெயர் ஏற்கனவே இருந்ததை விட பல மடங்கு பிரபலம் அடைகின்றது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. இந்நிலையில் மற்ற பயிற்சி மையங்கள் சூப்பர் 30 பயிற்சி மையத்தின் வெற்றி கண்டு பதறுகின்றனர். ரவுடிகளைக் கொண்டு ஆனந்தை மிரட்டுகின்றனர். உச்சகட்டமாக ஆனந்தின் மீது கொலை வெறி தாக்குதல் நடக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஆனந்தின் மீது கத்தி படாமல், அவரது பயிற்சி மையத்தின் அலுவலரான முன்னா என்பவர் மேல் கத்தி பட்டு, மிகுந்த ரத்த இழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்து உயிர்பிழைத்து வருகிறார். இதனால் பீகார் அரசு இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை ஆனந்தின் பாதுகாப்புக்கு நியமித்தனர். அப்பாதுகாப்பு இன்று வரை தொடர்கின்றது.

இவ்வாறு முதலாண்டிலேயே(2003 ) சூப்பர் 30ல் பயிற்சி பெற்ற 30 மாணவர்களில் 18 மாணவர்வர்கள் (60%) பேர் வெல்ல, அடுத்தடுத்த ஆண்டுகளில் 2004ல் 22 பேர், 2005ல் 26 பேர், 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் 28 பேர் என்றாகி சமீப கால ஆண்டுகளில் முப்பதில் முப்பது பேருமே ஐஐடி ஜேஇஇ தேர்வில் வென்று சாதனை படைத்து புகழ்மிக்க இந்திய ஐஐடிக்களிலும் மற்றும் பல முக்கிய நிறுவனங்களிலும் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் திறமை இருந்தும் வறுமையில் வாடியவர்கள். இவர்களுக்கு இலவச உண்டு, உறைவிடம் தந்து பயிற்சியும் தந்து நாட்டின் கடினமான தேர்விலும் வெல்ல வைத்த பெருமை ஆசிரியர் ஆனந்த குமாரையே சாரும். இது பற்றி கூறும் ஆனந்த குமார் ,” உலகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளைக் களைய கல்விதான் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாக விளங்குகிறது. ஏனென்றால் பெரும்பாலான பிரச்சினைகளின் அடிப்படையே வறுமையும் அறியாமையும்தான். இதை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சியே சூப்பர் 30” என்கிறார். மேலும் வறுமை என்பது முடக்கிப்போடும் வியாதி போன்றது. ஏழைகள் ஒவ்வொரு நாளை எவ்வாறு கடத்துகிறார்கள் என்பதை பணக்காரர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்கிறார். இளமையில் வறுமையால் தனது கனவான கேம்பிரிட்ஜில் மேல்படிப்பை படிக்க முடியாத ஏக்கமே தன் போல் திறமை இருந்தும் வறுமை கவ்விய வாழ்விலிருந்து பல மாணவர்களை மீட்டெடுக்க வைத்திருக்கிறது.

ஆனந்த் குமாரைப்பற்றி செய்தி வராத பத்திரிக்கைகள் குறைவு. இவரைப்பற்றியும், இவரது மாணவர்களைப்பற்றியும் திரைப்படங்கள் வந்துள்ளன. கணித மேதை ராமானுஜத்தின் மேல் மிகுந்த மதிப்பு கொண்ட ஆனந்த குமார் சமீபத்தில் டிசம்பர் 22 அன்று சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தில் கும்பகோணம் அவரது இல்லம் வந்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்ற செய்தியையும் நாளேட்டில் கண்டேன்.

இந்நூல் ஏழே தலைப்புகளில் உள்ளது. இதில் ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும் சூப்பர் 30 திட்டத்தால் பயனடைந்து வென்ற மாணவர்களின் பேட்டிகள் உள்ளன. இது மிகச்சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சூப்பர் 30 2008 குழுவிலிருந்து ஐஐடி ஜேஇஇ தேர்வில் வென்ற மாணவனான முகமது அக்பர் ரகுமான் என்பவர் கூறுகிறார். “ ஒரு நல்ல ஆசிரியர் மாணவரிடத்தில் நம்பிக்கையையும் கற்பனைத்திறனையும் உருவாக்க முடியும். இத்துடன் கற்றல் மீது அதீத பிரியத்தையும் மாணவரின் மனதில் வேரூன்றச் செய்ய முடியும். இந்தக் கூற்று அப்படியே ஆனந்த் சாருக்குப் பொருந்தும். மேலும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குஅவர் சிறந்த முன்மாதிரி. சூழ்நிலை என்னவாக இருந்தாலும், நினைத்ததை சாதிக்கத் தேவையான நம்பிக்கையைத் தனது மாணவர்களிடத்தில் விதைத்தவர் அவர்” என்று தனது ஆசிரியரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஆனந்த குமார் ஆசிரியரின் மாணவர். இது எல்லா ஆசிரியர்களுக்கும் பொருந்தக்கூடிய சத்தியமான வார்த்தைகள்.

இந்த புத்தகத்தை ஒருமுறை படிக்கும்போது நாமும் ஆனந்த குமாரைப் போல ஒரு ஆசிரியனாக மாறவேண்டும் என்ற பேராசை என்னில் படர்வதைத் தவிர்க்க முடியவில்லை. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp