சுமேரியர்கள் தமிழர்களா? எதிர்காலம் செவ்வாய் கிரகத்திலா? - 'வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' உடைக்கும் ரகசியங்கள்!

சுமேரியர்கள் தமிழர்களா? எதிர்காலம் செவ்வாய் கிரகத்திலா? - 'வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' உடைக்கும் ரகசியங்கள்!

அந்தக் கறுப்பு நிற வண்டியை வெளிச்சமின்றி இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் கொண்டு நிறுத்தினேன். குளிர் எடுத்தது. ஹெல்மெட் போட்டு கசங்கியிருந்த முடி, சுதந்திரமாக பறக்கத் தொடங்கியது. வாரநாள்தான் என்றாலும், வழக்கத்துக்கு மாறான கூட்டத்தோடு இருந்தது திருவான்மியூர் கடற்கரை. எல்லோரும் பெரும்பாலும் தலையைத் தூக்கியபடி, வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வானில் என்ன அதிசயம் நடக்கிறது? ஒரு வேளை ஏதும் விண்கல் விழப்போகிறதா? மக்கள் எல்லாம் வீடுகளைக் காலி செய்துகொண்டு வந்துவிட்டனரா? பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளதா? உலகம் அழியப் போகிறதா? ஆம்...இப்போது கூட கேப்டவுனில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டதாகச் செய்தி வந்ததே? இன்னும், இன்னும் உலகின் பல்வேறு நகரங்களும் அழிந்துக்கொண்டே வருகின்றன? அதன் தொடர்ச்சியா என்ற எண்ணங்கள் சூழ நடந்துகொண்டிருந்தேன்.

என்னை ஒதுக்கியபடியே அந்தச் சிகப்பு நிற கார் எனக்கு முன்னால் சென்று நின்றது. இறங்கிய 5 இளைஞர்களில் மூன்று பேர் ஜீன்ஸ் டிரவுசர் அணிந்திருந்தார்கள். அதில் ஒருவன் "போர்டபிள் டெலஸ்கோப்" (Portable Telescope) கைகளில் ஏந்தியபடியே காரிலிருந்து இறக்கினான். சிகப்பு நிறத்திலிருந்த அந்த டெலஸ்கோபை ஒரு ஸ்டாண்டில் மாட்டினார்கள். பின்னர், அவர்களும் அதன் வழி வானத்தைப் பார்க்கத் தொடங்கினர். அந்த டெலஸ்கோபைப் பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் பேசியதிலிருந்து..."ப்ளூ மூன்", "ரெட் மூன்", "சூப்பர் மூன்" போன்ற வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. சரி...உலகம் இன்று அழியப்போவதில்லை என்பதை உறுதிசெய்து கொண்டேன். கூட்டமிருந்த இடத்தைத் தாண்டி நடந்துபோனேன். அந்த மணலில் உட்கார்ந்தபடி கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்ன இது? திடீரென எங்கோ மிதப்பது போல் இருக்கிறதே? இது என்ன? கப்பலா? நான் எப்படி இங்கு வந்தேன்? தள்ளாட்டம் அதிகமாக இருந்தது...ஓர் ஓரத்திலிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்றேன். அதோ...அங்கு ஒருவர் அத்தனை கம்பீரமாக இருக்கிறாரே அவர் யார்?

"அரசே... இன்று பெளர்ணமி"

"ம்ம்ம்..."

"மாலுமிகள் சற்று பயப்படுகிறார்கள்..."

"ஏன்?"

"ஒரே மாதத்தில் இது இரண்டாவது பெளர்ணமி...இது எப்படி சாத்தியம்? ஏதும் கெட்ட சகுனமாக இருக்குமோ என்று பயப்படுகிறார்கள்? தொடர்ந்து கடாரம் நோக்கிப் போகலாமா?"

" ஹா..ஹா...ஹா..." என்ன ஒரு கம்பீரமான சிரிப்பு???

"ஒன்றும் பயப்படுவதிற்கில்லை தளபதியே. இது "நீல நிலா" தான். 152 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வது. மாலுமிகளை பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். ராஜேந்திர சோழனின் மாலுமிகள் இதெற்கெல்லாம் பயம் கொள்வதா? கிளம்புங்கள்...இரவு உணவைத் தயார் செய்யுங்கள். பசிக்கிறது."

ராஜேந்திர சோழன்? கடாரம்? நான் எங்கு இருக்கிறேன்?என்ன நடக்கிறது? அப்போது திடீரென பந்து போன்ற ஏதோ ஒன்று என் தலையின் மீது விழுந்தது? சற்றே வலி எடுத்தது? அது என்னவாக இருக்கும்? ஏதோ குரல் கேட்டது...

வேங்கை நன்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

"ண்ணா சாரிண்ணா. தெரியாம பட்ருச்சு."

யாரது? என்ன இது?

ஓ... பச்சை நிற டென்னிஸ் பந்து. இது என்ன? திருவான்மியூர் கடற்கரை. டெலஸ்கோப்...ப்ளூமூன் குரல்கள். அப்போ ராஜேந்திர சோழன்? என்னுடைய கடற் பயணம்? கடாரம்?

இது போன்ற கற்பனைகளில் சுற்றிச்சுழல பிடிக்குமா? வரலாற்று நிகழ்வுகள் தெரிந்துகொள்ளும் ஆர்வமா? தமிழின் தொன்மை வரலாறு, அது சூறையாடப்படும் அரசியல்? ஒரு நல்ல அறிவியல் புனைவு படிக்கும் ஆர்வமா? கீழடி? ஆதிச்சநல்லூர்? சிந்து சமவெளி? சுமேரியர்கள்? ஆரியர்கள்?திராவிடர்கள்?

இந்த வார்த்தைகள் குறித்த துளியளவு ஆர்வம் இருந்தாலும் போதும், ஒரு பெரும் அனுபவத்தை வழங்க 184 பக்கங்களோடு காத்திருக்கிறது "வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்".

தமிழில் அபூர்வமாக வரும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவல்களில் சமீபத்திய ஆச்சர்யம் "வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்". தலைப்புதான் முதலில் இந்தப் புத்தகத்தை வாங்கத் தூண்டியது.

கி.பி.2037- ல், ஜப்பானின் ஒகினவா தீவில் தொடங்குகிறது கதை. இரண்டாவது வரியில் வரும் அந்த "நெகிழிப் பட்டைகள்" என்ற அந்த வார்த்தை ஏனோ எனக்குள் ஒரு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வரி முதலே, அந்தப் புத்தகத்தின் கற்பனை உலகிற்குள் செல்ல முடிந்தது. முதலில் வரும் அந்த சுனாமி காட்சியும், தன் வீட்டிலேயே விட்டு வந்துவிடும் "செலிரியோ"வை எடுக்க கதை நாயகன் தேவ் மேற்கொள்ளும் முயற்சிகள், "மார்ஸ் மிஷன்" என முதல் அத்தியாயமே சயின்ஸ் ஃபிக்‌ஷனுக்கான பரபரப்போடு தொடங்கிவிடுகிறது.
சுனாமி நேரத்தில், பெரும் ரகசியத்தைக்கொண்டிருக்கும் "செலிரியோ"வைக் காப்பாற்ற அவனுக்கு ஜப்பான் காவல்துறையின் உதவி அவசியப்படுகிறது. ஆனால், முதலில் எவ்வளவு கேட்டும் அவர்கள் அதை மறுக்கிறார்கள்.

"அமெரிக்கவை அசைத்துப் பார்க்கிற ப்ராஜெக்ட் அது..." என்று தேவ் சொல்லும் ஒரு வாக்கியம், "அமெரிக்கா" என்ற அந்த ஒரு வார்த்தை ஜப்பான் போலீஸிடம் ஏற்படுத்தும் மாற்றம்...இதுவரை சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் ஆனாலும் சரி, ஆங்கிலப் புத்தகங்கள் ஆனாலும் சரி... பெரும்பாலும் அது அமெரிக்கர்களின் சாதனைகளைத் தாண்டி எதுவும் பேசிவிடாது. ஆனால், இந்த முதல் அத்தியாயமே இது வெறும் சுவாரஸ்ய சயின்ஸ் ஃபிக்‌ஷன் மட்டுமல்ல, உள் அரசியலும், நுண் அரசியலும் நிறைந்தது என்று நினைக்கத்தோன்றுகிறது. அது ஒவ்வோர் அத்தியாயத்திலும் நிரூபணமாகிறது. அந்த அரசியல், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பெல்ட் பாமில் பயன்படுத்தப்பட்ட "SFG - 78" என்ற கையெறி குண்டு குறித்த சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதில் தொடங்கி, ஆதிச்சநல்லூர், கீழடி ஆய்வுகளில் செய்யப்பட்ட அரசியல் ஆட்டங்கள், அந்த ஆட்டங்கள் மறைத்த தமிழரின் தொன்மை வரலாறு வரை நீண்டு பல கேள்விகளை எழுப்புகிறது.

தமிழில் நாம் அறுவடைத் திருநாளை பொங்கல் என்று கொண்டாடுகிறோம். அன்று நாம் "பொங்கலோ...பொங்கல்" என்று சொல்கிறோம். ஜப்பானிலும் அதே அறுவடைத் திருவிழா. அவர்கள் "ஹொங்கரே...ஹொங்கர்" என்று சொல்வார்கள்.

அதேபோல் கிளியோபாட்ராவில் தொடங்கி, கில்காமேஷ், சுமேரியர்கள், சிந்து சமவெளி, ஹரப்பா, எனப் பல வரலாற்றுத் தொன்மங்களில் தமிழுக்கான தொடர்புகளை ஆதாரபூர்வமாக எடுத்துரைப்பதற்குப் பின்னிருக்கும் உழைப்பு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. உச்சமாக குஜராத் வளைகுடாவில் கிடைத்த ஒரு பழங்கால (குறைந்தது 2 ஆயிரம் ஆண்டுகள்) கல் நங்கூரத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் எழுத்துகள் ( இன்றும் அந்த நங்கூரம் டெல்லியில் இருக்கிறது) குறித்தெல்லாம் பேசும்போது, ஒரு பெரும் பரவசம் தொற்றிக்கொள்வதை தவிர்க்கமுடியவில்லை. சொல்லப்போனால், தமிழ் மொழியின் பெருமையைப் பேசும்போது நமக்கு ஏன் அந்தப் பரவசம் ஏற்படுகிறது என்ற தேடல்தான் இந்த மொத்தக் கதையுமே!

இதன் கதையை ஒரு வரியில் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. படிக்கும்போது சற்று கவனம் சிதறினாலும், கதையின் ஓட்டத்தை விட்டுவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம் கதை கி.பி. 2037, 1032, 2017, 1924, 2008, கிமு 12,407 வரை எனப் பல கால நேரங்களுக்கு முன், பின்னாக கதை ஓடுவதுதான். அதே போல், தகவல்களும், தரவுகளும் இதில் கொட்டிக்கிடக்கின்றன Information Overloaded. அது சில இடங்களில் சில விஷயங்களை மறந்து போகச் செய்கிறது. (ஆனால், பதிய வேண்டிய தகவல்கள் இன்னும், இன்னும் கொட்டிக்கிடக்கின்றன என்பது வேறு விஷயம்). இந்தத் தகவல்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு வெறும் சயின்ஸ் ஃபிக்‌ஷனாக மட்டுமே படிக்க நினைப்பவர்களுக்கும் இது நல்ல அனுபவத்தையே கொடுக்கும்.

எதிர்காலத்தில் வரக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் சில தொழில்நுட்பங்கள் குறித்து வரும் தகவல்களும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. அப்படி இதில் சொல்லப்படும் சில எதிர்கால தொழில்நுட்ப சாத்தியங்கள்:

1. ஆல்டேப் (All Tab)

2. மல்ட்டி லேயர் எஸ்.எஸ்.டி. ஸ்கேன்னர் (MultiLayer SST Scanner)

3. டோமோகிராஃப் சென்சார் (Domograph Sensor)

4. டச் ஷீட் (Touch Sheet)

5. பாஸிட்ரான் எமிஷன் டெஸ்ட், அடினைன் மியூட்டேஷன்...என பல விஷயங்கள்.

ஆனால், இதையெல்லாம் கடந்து... இன்று பேசப்படுவதைக் காட்டிலும் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு இது அதிகம் பேசப்படும். தமிழ் மொழிக் குறித்த அத்தனை தரவுகள் கொட்டிக்கிடக்கும் இது தமிழின் மிகவும் அவசியமான, முக்கியமான ஒரு பதிவு "வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்".

ஆசிரியர் தமிழ்மகன்:

"மறைக்கப்பட்ட...மறைக்கப்படும் தமிழின் தொன்மத்தின் ஒரு பகுதியையாவது இன்றைய தலைமுறைக்குக் கடத்தும் ஒரு முயற்சிதான் இந்தப் புத்தகம். குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைக்கிறது. 2,000 ஆண்டுகள் பழைமையானது அது.

ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் கொற்கை, குறிஞ்சி என்ற பெயரில் கிராமங்கள் இன்றும் இருக்கின்றன. சிந்துவெளியில் கண்டெடுத்த சில எழுத்துகளும், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளும் ஒன்றுபோல் இருப்பது ஏன்? இடைபட்ட இந்த மூவாயிரம் கிலோமீட்டர்களும், மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைக் கொண்டிருக்கின்றன? தென்கோடி தமிழ்நாட்டிலிருந்து மெசபடோமியா, கிரேக்கம் வரை நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது? இதற்கான பதில்களை நான் தேடியபோது சிதறிய துளிகள்தாம் இந்த "வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்".

(நன்றி: விகடன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp