சாத்திரியின் 'ஆயுத எழுத்து': ஈழ அரசியல் நாவல்களின் அனுபவப்புலம்

சாத்திரியின் 'ஆயுத எழுத்து': ஈழ அரசியல் நாவல்களின் அனுபவப்புலம்

ஈழத்தின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர் சாத்திரி. முன்னாள் புலி இயக்க உறுப்பினரான அவரதும், அவரையொத்த புலிகள் இயக்கத்தின் சக உறுப்பினர்களினதும் போராட்ட கால இயக்க அனுபவங்களை பேசும் ஒரு நாவலே ஆயுத எழுத்து. ஒரு நவீன நாவலொன்றின் (modern novel) பண்புகளோடு நகரும் இந்நாவலில் மையக் கதாபாத்திரத்திற்கு ஒரு பெயர் சூட்டப்படாமல் நாவல் முழுவதும் அவன் என்ற படர்க்கை ஒருமையிலேயே அழைக்கப்படுகிறான். கதையும் “தன்மைக் கதைசொல்லலன்றி (first person narration) படர்க்கை கதைசொல் (third person narration) மாதிரியிலேயே கதைசொல்லப்படுகிறது. சாத்திரி தன் கதைகூறலுக்கு வசதியாக அதைத் தெரிவு செய்திருக்கலாம்.

சாத்திரியின் இந்நாவல் பேராட்டம் சார்ந்த ஒரு வித மாயவாழ்வு சார்ந்த அனுபவப் புலத்திலிருந்து உருவான ஒரு பதிவே ஆகும். மிகைப் புனைவற்ற ஒரு நடப்பியல் (realism) அனுபவ நாவல் இது. அதற்கு அப்பால் இந்நாவலுக்கு வேறு அடையாளங்களும் உள்ளன. அதீத புனைவுத் தன்மையும் , மொழியின் விளையாட்டுத் தன்மையும் இந்நாவல் கொண்டிராததனால் “ஓர் அரசியல் வரலாற்றுக் கதையாக” இதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அநேக ஈழத்து அரசியல் நாவல்கள் அந்த எழுத்தாளர்களின் போராட்டம் குறித்த சொந்த அனுபவப் புலத்திலிருந்து உருவாகி வருபவையாக இருக்கின்றன. மிகவும் அரசியல் தன்மை மிக்கவை. தன்னனுபவம்சார் இலக்கியப் பதிவு எனும் வகைமையை தீவிரமாக முன்னிறுத்திக் கொண்டிருப்பவை. இந்தவகை நாவல்களை எழுதும் ஒரு எழுத்தாளர் அவரது சொந்த அனுபவங்கள் தீர்ந்ததும் இன்னொரு நாவலை எழுதிக்கொள்ள முடியாத பெரும் அவலத்துக்கு அவர் ஆளாக நேரிடும் என்றே நான் நினைக்கிறேன்.

ஆயுத எழுத்து நாவலின் நிலவியல் என்பது பன்முக வடிவங்கொண்டு ஒரு பயணத்தின் நிலக்காட்சி போலவே அடிக்கடி மாறியபடியும் இருக்கிறது. வடக்கு-கிழக்கு-தெற்கு என ஒரு விரிந்த உள்ளூர் களமும், ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா என ஒரு உலகக் களமும் இந்த ஒரே நாவலின் நிலவியலாக விரிகிறது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பும் தொடர்புகளும் எப்படி ஆச்சரியமூட்டத்தக்க வகையில் படர்ந்திருந்தது என்பதை ஒரு அரசியல் செய்தி போல நாவலின் சில அத்தியாயங்கள் விபரிக்கின்றன.

சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்நாவல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கங்கள் உருவாகி வந்த சூழலில் ஏதேனுமொரு இயக்கத்தில் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டிருந்தனர். சாத்திரியின் நாவலின் மையக் கதாபாத்திரமான அவனும் தமிழீழக் கனவோடு (சிலவேளை விளையாட்டாக) புலிகள் இயக்கத்தில் இணைகிறான்.

நாவல் முழுவதும் அவன் இரண்டு விதங்களில் செயற்படுகிறான். ஒன்று எத்தகையதொரு சந்தர்ப்பத்திலும் தனது உயிரை பாதுகாத்துக் கொள்வது. யாரைக்கொன்றேனும் தனது மரணத்தை வென்றுவிடுவது. இரண்டு புலிகள் இயக்கமே எல்லாம். அதற்காக எதையும் செய்வது என இயக்கத்துக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக் கொடுத்த நிலை. இது ஒருவித “தயை அற்ற” இலட்சியத்துக்கு (ruthless ambition) அவனை இட்டுச் செல்கிறது. இந்த நிலையிலிருந்து காதல், காமம், நட்பு, உறவுகள், பாசம் என எந்தவிதமான மனித உணர்ச்சிகளும் அவனை அசைப்பதில்லை. அவனைத் தன் நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கச் செய்வதுமில்லை.

ஒரு போராளிக்குரிய அனைத்துக் குணச்சித்திரங்களும் அவனுக்குள்ளிருக்கின்றன. போராட்ட இயக்கங்கள் இளமைக்குரிய கனவுகளை எவ்வாறு நசுக்கின என்பதை சாத்திரி அவனைக் கொண்டே வெளிப்படுத்துகிறார். “காதல்வயப்படுவது“ போன்ற இளமையின் சராசரிக் கனவுகள் “தேச உருவாக்கம்“ எனும் இலட்சியக் கனவாக மாற்றீடு செய்யப்படுவதையும், இயக்கம் அதற்காக எடுத்துக்கொள்ளும் அதீத சிரத்தையையும் ஒரு குழந்தை மனநிலையில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக உண்மையைச் சொல்கிறார் சாத்திரி. சராசரி மனிதத் தேவைகள் உதாசீணம் செய்யப்பட்டு ஒரு சிலரின் அரசியல் தேவையாக மட்டுமே கீழிறங்கிப் போன போராட்டத்தின் அவலத்தை இதுபோல் வேறெந்த ஈழ நாவலும் பேசவில்லை.

நாவலின் மையக்கதாபாத்திரமான அவன் இந்த இலட்சியவாதக் கனவுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதால் “மனிதத்தை“ முழுமையாக இழந்து ஒரு வாசகனுக்கு வேதனையூட்டும் வகையில் காட்சியளிக்கிறான். அவனது செயல்பாடுகள் ஒரு இயக்கத்தின் நலனுக்கானவையாக மட்டுமே சுருங்கி இருக்கின்றன. மனிதாபிமானத்துக்கு அங்கு இடமிருப்பதில்லை. காதல், நட்பு, பாசம் போன்ற அடிப்படையான மனிதப் பண்புகளை அந்த இயக்கம் தன் உறுப்பினர்களிடமோ, பிற மனிதர்களிடமோ காண்பிப்பதில்லை. இயக்க உறுப்பினர்கள் கூட தமக்குள்ளேயோ அல்லது பிற மனிதர்களுக்கிடையேயோ அத்தகையை மனிதப் பண்புகளை வெளிக்காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக, அந்த “சுதந்திரப் போராட்ட“ இயக்கத்தின் அசையாத விதியாக இருப்பதைக் கண்டு ஒரு வாசகனால் உண்மையில் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.

இப்படி வாசகனை அதிர்ச்சியைடயச் செய்யும் சம்பவங்களும் விபரிப்புகளும் நாவலில் பல இடங்களில் வருகின்றன. அந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவரான சாத்திரியே அதனை ஓர் உள்ளார்ந்த விமர்சனமாக எழுதுவதன் மூலம் அவருக்குள் ஏற்பட்டிருக்கும் ஒரு “சுய விழிப்புணர்வையும்” கருத்தியல் மாற்றத்தையுமே அது காட்டுகிறது. ஈழத்தமிழர்களில் அநேகரால் கடவுளின் இடத்தில் வைத்துப் போஷிக்கப்பட்ட பிரபாகரனின் புனித பிம்பம் குறித்த தமிழ் மனச் சித்திரம் அநேகமாக இந்நாவலால் சிறிதளவேனும் மறுவரைவுக்குள்ளாக்கப்படுகிறது.

புலிகள் இயக்கம் அதன் போராளிகளுக்கு கற்றுக்கொடுத்த ஒரே பாடம் மனிதர்களை நண்பர்கள், எதிரிகள், துரோகிகள் எனும் மூன்று நிலைகளில் வைத்து நோக்குவதைத்தான். மனிதர்கள் குறித்த இந்த முக்கோண நோக்கு “மக்களுக்காக இயக்கமல்ல, இயக்கத்துக்காகவே மக்கள்” எனும் அதிதீவிர வாதமாமாகவே போராட்டத்தை வடிவமைத்தது.

தேச உருவாக்கத்துக்கான செயற்பாடுகள் அறரீதியான போக்கிலிருந்து திசைமாறிப் போவதை நுண்மையான அங்கதத்துடன் இந்நாவல் பேசுகிறது. வங்கிக் கொள்ளையிடல், கோயில் நகைகளை கொள்ளையடித்தல், இன்னொரு சிறுபான்மையினத்தின் பொருளாதாரத்தை அபகரித்தல், அதற்காக அந்த சிறுபான்மையினம் குறித்த போலிக் கதைகளை கட்டிவிடல், தேசம் என்ற பெருங்கனவுக்கு முன்னால் மனித உயிர்களைக்கூட துச்சமாக மதித்தல் போன்ற மானுடப் பண்பற்ற செயற்பாடுகளை நோக்கி அந்த இயக்கம் கீழிறங்கிச் செல்லத் தொடங்கும் போதே அதன் வீழ்ச்சியும் இன்னொரு புறத்தில் ஆரம்பித்திருந்ததை ஒரு வாசகன் உணர்ந்து கொள்கிறான். இந்த இடத்தில் சாத்திரியின் நேர்மையான அரசியல் நோக்கு நாவலில் மேலோட்டமாகவன்றி ஆழமானதாகவே வெளிப்படுகிறது.

சாத்திரியின் இந்நாவலின் அதிக பக்கங்கள் “தேச உருவாக்கம்” எனும் பெருங் கனவால் ஒடுக்கப்பட்ட சாமான்ய மனிதர்களின் உணர்வுகளாலும், கனவுகளாலும், அவர்களின் உயிர் வலியாலும் நிரம்பி இருக்கின்றன. துன்பியல் (tragedy) வாழ்வை, அனுபவங்களைப் பேசும் ஒரு நாவலில் இந்த வகைச் சித்தரிப்புகள் தவிர்க்க முடியாதவையுங்கூட.

ஆக, ஈழப் போராட்டத்தின் வரலாற்றை யதார்த்தமாக சித்தரித்துச் செல்கிறது இந்நாவல். ஆயுதப் போராட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்றம் பெறும் கட்டத்திலிருந்து அதன் முடிவு வரைக்கும் பேசும் இந்நாவல் புலிகளின் பிரதி தலைவராக இருந்த மாத்தையாவுக்கு கடைசியில் என்ன நடந்தது என்பது பற்றி எதையும் பேசவில்லை. இந்நாவலின் மையக் கதாபாத்திரமான அவனுக்கும் மாத்தையாவுக்குமிடையில் கோள் காவி ஒருவரின் செயற்பாடு காரணமாக தற்செயலாக ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் இறுதிக் கட்டமும் நாவலில் இல்லை. மாத்தையா பிற்பட்ட காலத்தில் புலிகளால் கொல்லப்பட்டார் என்பது வரலாறு. மாத்தையாவுக்கான மரண தண்டனைக்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா எனவும் ஆர்வக் கோளாரில் ஒரு வாசகன் சிந்திக்க இடம் உள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை இந்நாவல் திறந்தே வைத்துள்ளது.

இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்நாவல் கூறும் அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் திரண்டிருந்தாலும் புலிகள் இயக்கம் மீதான நுண்மையான ஒரு விமர்சன நோக்கு நாவலின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்நாவலின் ஒரு உபபரிமாணமாகும். இந்த உபபரிமாணம் ஈழத்தின் இன்னொரு கதைசொல்லியான ஷோபா சக்தியின் “கொரில்லா“, “ம்” நாவல்களில் வெளிப்பட்டளவு அவரது மூன்றாவது நாவலான “பொக்ஸ்“ இல் வெளிப்படவில்லை. யுத்தம் முடிந்ததும் அது குறித்தும் ஒரு நாவல் எழுதிவிட வேண்டும் என்ற பரபரப்பே நாவலின் எல்லாப் பக்கங்களையும் நிறைத்திருக்கிறது. இதனால் “பொக்ஸ்“ முன்னையவற்றிலிருந்து பலபடிகள் கீழிறங்கிச் செல்லும் ஒரு நாவலாக தோற்றங்கொள்கிறது.

சாத்திரியின் “ஆயுத எழுத்தை“ப் பொறுத்தவரையும் போர் அனுபவப் புலம் தவிர்ந்து வாழ்வு பற்றிய வேறு நுண்ணோக்குகளோ, புதுமைகளோ நாவலில் வெளிப்படவில்லை. ஈழத்தின் சில கதைசொல்லிகளிடம் காணப்படும் இரசனையான கதைசொல்லல் மரபு சாத்திரியின் இந்நாவலிலும் உள்ளது. புனைவுத் திறன் அறவே இல்லாத எழுத்தாளர் என வாசகனால் புறக்கணிக்க முடியாதபடி “ஆயுத எழுத்து“ சாத்திரியை பல இடங்களில் காப்பாற்றவும் செய்கிறது.

புலிகள் இயக்கத்தின் வரலாற்றினூடாக ஈழப் போராட்ட வரலாற்றை பேச முற்படும் புனைவாகவே ஆயுத எழுத்தை நோக்க வேண்டியுள்ளது. வரலாற்றை ஒரு நேர்கோட்டில் சொல்லிச் செல்லும் இந்நாவல் ஒரு காலகட்ட விடுதலைப் போராட்டமொன்றின் இராணுவ மற்றும் அரசியல் போக்குகள் மீது ஒரு தனிமனித அனுபவத்தை ஏற்றிப் பேசுவதிலேயே அதிக அக்கறையாகவுள்ளது. இதனால் ஆயுத எழுத்து வாழ்க்கை வரலாறு அல்லது வரலாற்றுப் பதிவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இப்படி வரலாற்றுப் பதிவாக இருக்கும் ஒரு நாவலில் இலக்கியத் தன்மையை அதிகமாக ஒரு வாசகனால் எதிர்பார்க்க முடியாது.

நாவலின் வரலாற்றுச் சம்பவங்களை விபரிப்பதில் சாத்திரி எடுத்துக்கொள்ளும் அக்கறையை நாவலின் புனைவுத் தன்மையில் எடுத்திருக்கவில்லை. நாவல் தன் ஆழ்புனைவுத் தன்மையை வரலாற்றிடம் இழந்துவிட்டு ஒரு கதையாக மட்டுமே வாசகன் முன்னால் தன்னை நிலைநிறுத்துகிறது. ஆசிரியனின் தன்னனுபவங்களும், அவனது குரலும் வாசகனுக்கு ஒற்றைப்படையான கதையை விபரித்துச் செல்கிறது. நாவலின் சம்பவங்கள் வாசிப்புக்கான உந்துதலை வாசகனுக்குள் ஏற்படுத்துவதைப் போல் சாத்திரியின் புனைவு மொழி தரும் உந்துதல் இரண்டாம் பட்சமானதாகவே வாசகனை உணரச் செய்துவிடுகிறது. எனினும் நாவலை வாசிக்க ஆரம்பித்துவிட்டால் முடிவு வரை செல்லாமல் இடைநடுவில் நிறுத்திக் கொள்ளும் சலிப்பிலிருந்து இந்நாவல் வாசகனை உண்மையில் காப்பாற்றவே செய்கிறது.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp