சாயாவனம்

சாயாவனம்

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு, போராட்டங்கள் பற்றிய படைப்புகள் தமிழில் குறைவானவையே. அவ்வகையில் சாயாவனம் மிக நுட்பமான விவரங்கள் கொண்ட நாவல். சுதந்திரத்திற்கு முன்பான தமிழக கிராமங்களில் இருந்த வாழ்வு முறைகள், சாதிய கட்டமைப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், உறவுகள் பற்றிய சுவாரசியமான பதிவு . வாசிப்பவரை கானகத்தின் உள்ளே அழைத்துச் சென்று அதன் ரகசியங்களை அறிந்நு கொள்ள வைக்கும் அற்புத அனுபவத்தை அளிப்பது இப்படைப்பின் உண்மையான வெற்றி. ஆசிரியரின் குரல் ஒலிக்காமல் வாசிப்பவரின் மனதில் கதைக்களம் விரிந்து ஒட்டுமொத்த தரிசனத்தைப் பெறுவது நல்ல இலக்கிய அனுபவம்.

மிகச்சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகில் ஆழ்ந்துவிட்ட எனக்கு இலக்கியங்கள் காண்பிக்கும் கனவுலகும் தரிசனங்களும் நுண்மைகளும் என்றென்றுமான மனவுலகு. ஒரு விதத்தில் புத்தகங்கள் மட்டுமே நான் வாழும் முழுமை என்று எண்ணுவதுண்டு. தீவிர வாசிப்புலகிற்குள் நான் வந்தபோது வாசித்த முக்கிய புத்தகங்களில் சாயாவனமும் ஒன்று. கானகமும் செடிகளும் என்னை மூழ்கடித்து என்னுள் பரவசத்தை உண்டாக்கிய நூல் இது.

தஞ்சையின் ஒரு சிறு ஊரான சாயாவனத்திற்கு இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் , அவ்வூரின் ஒரு வனத்தை கொஞ்சங் கொஞ்சமாக அழித்து கரும்பாலை ஒன்று கட்டுவதே கதைக்களம். சிதம்பரத்தின் அம்மாவின் சொந்த ஊர் அது என்றாலும் அவன் இலங்கையிலே பிறந்து வளர்ந்தவன் என்பதால் அனைத்து பழக்கங்களும் மனிதர்களும் அவனுக்கு விநோதமாகவே தெரிகின்றனர்.

“மாமா செத்தெ இஞ்ச வாங்க

அத்தாச்சி சுருக்க வாங்க

வேங்கைப்புலி கூட்டமில்லே உங்கம்மா?”

மொட்டாணிக் கூட்டம்னு அம்மா சொல்லுவாங்க”

போன்ற தஞ்சை வட்டார வழக்கும்

அம்மா வாத்து குளுந்துட்டா “

போன்ற இலங்கை மொழியும் உரையாடல்களுக்கு உயிர் தருகின்றன.

கிராமப்புறங்களில் ஓயாமல் பேசப்படும் கதைகளும் வம்புகளும் அடுத்தவர் வாழ்வை அறிய அவர்கள் காட்டும் ஆவலாதிகளும் சிதம்பரத்தை சலிப்புறச் செய்கின்றன. வேறு நாட்டிலிருந்து வந்த அவன் சோர்வின்றி உழைக்கிறான். இம்மக்களின் சோம்பேறித்தனம் அவனுக்கு அலுப்பூட்டுகிறது. இது இன்றளவும் ஓரளவு நம் கிராமங்களில் உண்மைதான். சிறு வேலையைச் செய்வதற்கே பெரிதாய் அலட்டிக் கொண்டு நாள் முழுவதும் பொழுது போகாமல் அமர்ந்து பேசுபவர்களைக் கண்டிருக்கிறேன். குறிப்பிட்ட பணியில் ஆர்வங்கொண்டவனால் சும்மா அமர்ந்திருக்க முடியாது என்பதற்கு சிதம்பரம் நல்ல உதாரணம். அவன் செய்யும் காரியம் அழிவென்றாலும், மனதில் இரக்கம், அன்பு, நெகிழ்ச்சியற்ற எந்திரத் தன்மை கொண்டவனாக இருந்தாலும், சிதம்பரம் பெரும் உழைப்பாளி. சிதம்பரம் அக்கானகத்தை தனி மனிதனாக அழித்து புதிய ஆலையை உருவாக்க எண்ணுகிறான். “தானே வலிய ஏற்றுக் கொண்ட நித்தியப் போராட்டம், வாழ்வோ சாவோ வனத்தோடு பிணைக்கப்பட்டிருக்காறது”…என்றெல்லாம் அவன் மனதுடன் எண்ணுவதே அதிகம். எப்பொழுதும் பேசும் கிராமத்தாரிடையே குறைவாகப் பேசும் சிதம்பரம் தனித்திருக்கிறான். அவனுடன் சிறுவர்கள் இருவர் மற்றும் அவன் உறவினர் சிவனாண்டித் தேவர். பழனியாண்டி கலிய பெருமாள் என்ற இரு சிறுவர்களிடமிருந்து காயத்திற்கு மருந்து போடும் செடி போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறான் சிதம்பரம்.

சாயாவனம் என்ற பெயரே அவ்வூரின் காட்டினைக் குறிப்பதே. காட்டுக் கொடிகளும், புதர்களும், குறுமரங்களும் பெரியவிருட்சங்களும் நிறைந்த அவ்வனத்தின் ஒவ்வொரு பகுதியும் நம் கண்ணில் தோன்றுகின்றன. ஊணாங்கொடிகளும், காட்டுக்கொடிகளும் தாழைப்புதர்களும் நிறைந்த சாயாவனத்தின் அழகு, மனிதப் பேராசையால் இவை அழிகின்றனவே என நம்மைப் பதற வைக்கிறது. ஈச்ச மரங்களும் மூங்கில் புதர்களும் அசோக மரங்களும் இலந்தை மரங்களும் விளா மரங்களும் அடர்ந்து தரையெங்கும் காரைப் புதர்கள் படர்ந்திருக்கும் அவ்வனமே நாவலின் உண்மையான மையப் பாத்திரம். நண்பகலில் கூட சூரிய ஒளி ஊடுருவ இயலாத அடர்ந்த கானகம் சிதம்பரத்தின் பேராசையால் அழிக்கப்படுகிறது.

நம் தேசம் எப்படி அழிக்க்பபட்டது என்பதே இந்த நாவலின் நுட்பக் குறியீடு என்கிறார் பாவண்ணன் இதன் முன்னுரையில். நம் இந்தியா மட்டுமின்றி உலக இயற்கையே இவ்வாறுதான் அழிக்கப்பட்டு ஆலைகளும் தொழிலகங்களும் உருவாக்கப்பட்டன. ஒரு காலகட்டத்தில் இவையெல்லாம் வளர்ச்சிகளாக எண்ணப்பட்டன. ஆனால் நாம் இன்று தான் உணர்கிறோம் அவற்றின் பலன்களை. அதனாலேயே வனத்தை அழிக்கும் ஓங்வொரு முயற்சியும் நமக்கு பதற்றத்தை உண்டாக்குகின்றன.

காட்டின் சின்னஞ்சிறு மலரையும் நாம் உணர வைப்பதே இப்படைப்பின் சிறந்த அனுபவம். சரக்கொன்றை மரங்களும் அவற்றிலிருந்து விழும் மஞ்சள் பூக்களும், ஊணாங்கொடிகளும், குறிஞ்சாக் கொடிகளும் அவற்றின் சிறு பூக்களும், மேகவண்ண நொச்சிப் பூக்களும், சப்பாத்தி முட்களும், காட்டாமணக்கு, நொச்சி, நுணா, எருக்கு, காரைப் புதர்களும்,நாணற் பூக்களும் நம் கைகளில் படும் அனுபவத்தைத் தரவல்லது சா.கந்தசாமி அவர்களின் விவரணைகள்.

“ஒளி வீச்சில் அழகிய இனிமை வாய்ந்த பொழுது மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது” போன்ற வரிகள் நம் உள்ளத்தை மௌனிக்கச் செய்யும் துக்கத்தை உருவாக்க வல்லவை. சிதம்பரத்திற்கு காட்டை அழிக்க இரும்புக் கோடாரிகளும், அலக்குகளும், அரிவாள்களும் தேவைப்பட்டன. மனித உழைப்பும் அவனுக்கு வேண்டியதே. அவனிடம் இருந்த பணத்திற்கு அங்கு மதிப்பே இல்லை என்பது அக்காலகட்ட வாழ்வை நமக்கு காண்பிக்கிறது. வேலையாட்கள் கூலியாக நெல்லைத் தான் கேட்கின்றனர்

சிவனாண்டித் தேவருக்கும் சிதம்பரத்திற்கும் இடையிலான முரண்கள் தலைமுறை இடைவெளியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்வதே. வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் ஆழம் பார்ப்பது கதையெங்கும் பிணைந்துள்ளது. நான் ஆசிரியப் பணியில் முதன்முதலில் சேர்ந்தபோது உடன் பணியாற்றும் மூத்தவர்களிடமிருந்து இத்தகைய அலட்சிய மனநிலையை அனுபவித்துள்ளேன். நீ எத்தனை அறிந்திருந்தாலும் என் வயதிற்கும் அனுபவத்திற்கும் முன் நீயெல்லாம் சாதாரணம் என்ற மனப்பாங்கு. கொஞ்சங்கொஞ்சமாகவே நம் இருப்பை திறன்களை உணர்வார்கள்..அனேகமாக இவ்வனுபவம் நிறைய பேருக்கு கிடைத்திருக்கும். சிதம்பரம் வெட்டி அழித்த செடிகளையும் மரங்களையும் பார்த்து “தம்பி எத்தனை வேலை செஞ்சிருக்கு”என சிவனாண்டித் தேவர் பிரமிக்கும் காட்சி அத்தகையதே.

பகல் முழுவதும் மரங்களை வெட்டிய சிதம்பரத்திற்கு இரவில் உறக்கம் வரவில்லை. எனவே இரவிலும் காட்டிற்கு செல்கிறான. இரவு நிலவில் தனியாக நின்று அவன் ஒரு அசோக மரத்தை வெட்டும் காட்சி முக்கியமானது. அதுவே அவன் வெட்டும் முதல் மரம். அவன் வெட்டிய மரம் அடர் வனத்திற்கும் வெளியிடத்திற்கும் ஒரு பாலம் போல விழுகிறது. அடர் வனத்திற்குள் செல்வது சிதம்பரம் மட்டுமல்ல. மனித குலமே அப்படித் தான் இயற்கையை அழித்தது.

ஒரு நள்ளிரவில் பிரப்பங்காட்டைத் தாண்டி உள்ளே செல்லும் சிதம்பரம் நிலவொளியில் சமவெளியைக் காண்பது நாவலின் அற்புத காட்சி. காத்தவராயன் எருதும் பசுவும் சீறிக் கொண்டு துள்ளும் காட்சிகள் எவரையும் ஈர்ப்பவை. நாவலெங்கும் வரும் சிறு உயிர்களான ஈச்சம் பாம்புகள், பூச்சிகள், குரங்குகள், நரிகள், புழுக்கள், பறவைகள், சிட்டுக்குருவிகள், மடையான்கள் என்று ஒவ்வொன்றும் இயற்கையில் உயிர்ப்பரவலையும் அனைத்து உயிர்களுக்கும் வாழும் உரிமை இங்கு உண்டு என்பதற்கும் குறியீடு.

அந்நாளில் இருந்த எளிய, நம்பிக்கையான பண்டமாற்றினை இப்படி விவரிக்கிறார் சா.கந்தசாமி..” சாயாவனத்தின் தெற்கு மூலையில் இரண்டு மளிகைக் கடைகள். ஒன்று அப்பு செட்டியாருடையது; மற்றொன்று மொகதீன் ராவுத்தருடையது. நெய் விளக்கு முனையில் கோமுட்டி செட்டிக் கடை.பிரசவ மருந்திற்கு பெயர் போனது கோமுட்டி செட்டிக்கடை.

கம்பு, கேழ்வரகு, தினை, கரும்பு இவைகளை வெளியூர்க்காரர்கள் வண்டியில் கொண்டு வந்து விற்றார்கள்.சாயாவனத்து மக்கள் தங்களிடம் அதிகம் உள்ளதைக் கொடுத்து தேவையானதை வாங்கிக் கொண்டார்கள்.

புளிக்கு ஐயர் தோட்டத்தில் உலுக்கித் தேவர் கொண்டு வந்து தருவார்.வீட்டுக் கொல்லையில் மிளகாய் பயிராகும்.செட்டியார் காணம் போட்டு நல்லெண்ணெய் தருவார்.அதற்கு கணக்கில்லை. செக்கடிக்குப் போனால் வேண்டுமென்ற முறையில் கொண்டு வரலாம்; கேள்வி முறை கிடையாது. துணிகளுக்கு மாயவரம் போகவேணும். பத்து மைல் வண்டியில் போனால் செட்டியார் வீட்டு வாசலில் இறங்கலாம். ,செட்டியார் வீட்டுத் தறி. சொந்தத் தறி போல-தேவையானபோது வேட்டி புடவை துண்டு எடுத்துக் கொண்டு அறுவடைக்குப் பிறகு நான்கைந்து பேர் சேர்ந்து வண்டியில் நெல் அனுப்புவார்கள். இதற்கெல்லாம் துல்லிய கணக்கு கிடையாது. நினைவும் வார்த்தையும் தான் கணக்கு.”

வாசிக்கும்போதே அக்காலகட்டம் நமக்குத் தெரிகிறது. இத்தகைய ஊரில் சிதம்பரம் பணம் தரும்போது அதை யாரும் வாங்கவில்லை. எனவே அவனே கடை வைத்து பணப்புழக்கத்தை அறிமுகம் செய்கிறான்.

வாழை இலைச்சருகில் பிழிந்து வைக்கப்பட்ட பழையதும் கெட்டி எருமைத் தயிரும் சுண்டக் குழம்பும் கருக்கிய இளஞ்சூடான வஞ்சனக் கருவாடும் சென்னாக்குன்னி பொடியும் என்று விவரிக்கப்படும் அக்கால உணவுகளும் ரசிக்க வைக்கின்றன.

இத்தகைய நுட்பமான எளிய செய்திகளே இந்நாவலின் அழகியல். காட்டினை நெருப்பு வைத்து சிதம்பரமும் தேவரும் அழிக்கும் காட்சி மிக அற்புதமாய் விரிவடைகிறது. அவர்கள் எதிர்பாரா அளவில் மரங்களும் காடும் அழிகிறது. ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட புளிய மரங்களும், இலுப்ப மரங்களும், மூங்கில் குத்துகளும் பிரப்ப மரங்களும் எரிந்து கரிக்கட்டைகளாய் நிற்கும் காட்சி இரக்கமற்ற எதார்த்த உலகை நமக்கு காண்பிக்கிறது. துள்ளித் திரிந்த காத்தவராயன் மாடுகளும் நரிகளும் குரங்குகளும் பாம்புகளும் குருவிகளும் தாழம் புதர்களும் அழிந்து சாயாவனம் வெறுமையாகிறது. புதிய ஆலை கட்டப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்புகள் என்று பெருகி அவ்வூரின் முகம் மாறுகிறது. இறுதியில் ஊரில் புளிய மரங்களே அற்று பல ஊர்களுக்கு வண்டி அனுப்பி சிதம்பரம் புளி வாங்குகிறான். தித்திப்புப் புளி, புளிப்புப் புளி, செங்காய் எல்லாம் கலந்து அடித்து புளியின் சுவையே மாறிவிடுகிறது. கனகலிங்கம் செட்டியார் வீட்டுக்குப் போன ஐந்து தூக்குப் புளி மறுநாளே திரும்ப வருகிறது.

நல்ல புளியா பாத்து அனுப்பறேன் ஆச்சி எனும் சிதம்பரத்திடம்,செட்டியார் வீட்டு ஆச்சி “ அதான் எல்லாத்தையும் கருக்கிட்டையே இன்னமே எங்கயிருந்து அனுப்பப்போற? “என்று கேட்பதுடன் முடிகிறது சாயாவனம். ஆம் அக்கேள்விக்கு பதிலே இல்லை என்பதே நிஜம்.

மிக உன்னதமான வாசிப்பனுபவம். சிதம்பரத்தின் சித்திரத்தை அவன் பின்னணியை, மற்றும் கிராமத்தில் நடக்கும் திருமணம், இறப்பு, ஆண் பெண் உறவுச்சிக்கல்கள் என வாசிக்க வாசிக்க நம்மை ஈர்க்கும் சிறந்த கதையமைப்பு.

தனிப்பட்ட முறையில் காடும், நெடிதுயர்ந்த மரங்களும புல்லிதழ்களும் காட்டுப் பூக்களும் கொடிகளும், செடிகளும் ,முட்களும், சிற்றுயிர்களும் என இந்நாவலில் வருவது போன்ற சூழலிலேயே வளர்ந்ததால் எனக்கு மிகவும் நெருக்கமான புனைவு இது. வடார்க்காட்டில் இருந்தாலும் ஈராண்டுகள் காவிரி தஞ்சை கடலூர் சுற்றுப் புறங்களில் இருந்ததால் எனக்கு அந்த ஊர்களும் வட்டார மொழியும் மிக ஈர்ப்புடையவை. ஆகவே என்னளவில் நான் ரசித்து வாசித்த புத்தகம் இது. காலச்சுவடு கிளாசிக் பதிப்பாக வந்துள்ள சாயாவனம் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.

(நன்றி: ஆம்னி பஸ்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp