ரூமியின் வரிகள்வழி பிரபஞ்சத்தை வாசித்தல்..!

ரூமியின் வரிகள்வழி பிரபஞ்சத்தை வாசித்தல்..!

"நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும்
தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு;
உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு."

ரூமியை ஈரமிகுந்த ஒரு கவிஞராக அணுகுவதற்கும் ஒரு இஸ்லாமிய சூபிச மரபின் பின்னணியிலிருந்து ஞானகுருவாக அணுகுவதற்கும் இடையே ஆழமும் நீளமும் மிகுந்த ஓர் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நதி இரு கரையோர வாசிகளுக்கும் இருவேறு உலகத்தைத் தரிசிக்கத் தருகிறது. ஒரு பெயர்ச்சொல் வினைச்சொல்லாவதற்கும் சரித்திரமாவதற்கும் அல்லது வெறும் பெயராக எஞ்சிவிடுவதற்கும் இடையே புரிதல் எனும் ரசவாதம் தேவையாயிருக்கிறது.

"தாகங்கொண்ட மீனொன்று" எனும் மெளலானா ரூமி ரஹிமஹுல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை சத்தியமூர்த்தி என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார் என்பதை அறியவந்தபோது எனக்கு பெரிதாக அபிப்ராயம் ஒன்றும் இல்லை. சூபிசம் குறித்த கல்வியும் இஸ்லாமிய வரலாறு குறித்த தேர்ச்சியும் இல்லாமல் ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக ரூமியை அணுகுபவர்கள் சந்தித்த தோல்விகளை ஏகப்பட்ட மொழியாக்கங்களில் சந்தித்த மனச்சோர்வுடன் புத்தகத்தைப் பிரித்தேன். ஆனால் புத்தகத்தைத் திறந்து பின்னட்டையில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஆறு முக்கியக் குறிப்புகள் தாங்கிய அட்டைகளைப் பார்த்ததும் சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பரவியது. சமர்ப்பணத்தைக் கண்டதும் அது இன்னும் பொலிவடைந்தது. பின் குறிப்புகள் உட்பட்ட நூலை முழுதும் படித்தபோது இஸ்லாமிய பின்புலம் இல்லாத ஒருவர் ரூமியை அணுகுவதன் இன்னொரு புத்துலகு உயிர்பெற்று நடனமாடியது. சிற்சில இடங்களில் சில வார்த்தைப் பிரயோகங்கள் மாறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த வாசிப்பு தமிழ் வாசகனுக்கு ஒரு அலாதியான அனுபவத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

பதினோராம் நூற்றாண்டின் மாபெரும் சூஃபியான இமாம் கஸ்ஸாலி அவர்கள் மரணித்தபோது அவர் தம் அந்திம காலத்தில் எழுதிவைத்திருந்த கவிதையொன்று தலைமாட்டில் இருந்தது. அதில்,

"நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு. அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்"

என்று எழுதப்பட்டிருந்தது. இதனை சூபி வாழ்வின் ஒட்டுமொத்த குறியீடு எனலாம்,மூலப்பொருளை அறிந்துகொள்வது மற்றும் ஐக்கியமாவது.

நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒப்புவமையில்லாத சூபி ஞானியான கல்வத்து நாயகம் அவர்கள் தமது சீடர்களுக்கான தினசரி விர்து எனப்படும் தியான உச்சாடனங்களில் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் " எனும் இறைமறை வசனத்தைப் பரிந்துரைக்கிறார்கள். "நாம் அனைவரும் இறைவனிடமிருந்து வந்தோம் மீண்டும் அவனிடமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம் " எனும் பொருள் கொண்ட இவ்வசனம் மரணித்த செய்தியைக் கேட்க நேர்பவர் மொழியும் வழங்கு சொல்லாக எளிமைப் படுத்தப்பட்டாலும் இதன் அசல் பொருளானது ஒரு மனிதன் தன் வாழ்வின் அநித்தியத்தையும் தன் ஆன்மாவின் ரகசியத்தையும் உணர்ந்துகொள்ளப் பயன்படும் மந்திரமாக ஜொலிக்கிறது.இதனையே ரூமி மெளலானாவின் கவிதை (பக்கம்113) இப்படிச் சொல்கிறது,

"ஆனால் நானறிவேன்
எனது ஆன்மா வந்தது வேறெங்கிருந்தோ
அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்

வேறேதோ மதுபான விடுதியிலிருந்து
பிறந்திருக்கிறது இந்த போதை
நான் அங்கு மீளும்போது
முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்
இப்போது இந்தக் கூட்டில்
அமர்ந்திருக்கும் நான்
வேறோர் நிலவுலகின் பறவை.

நான் பறந்து வெளியேறும் நாள்
வெகு தொலைவில் இல்லை"

சூஃபி எனும் சொல்லாடல் ஸுஃப்பா எனும் மூலச்சொல்லில் இருந்து பிறந்தது. நபிகள் நாயகத்தின் அவையில் திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) என்று குறிப்பிடப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் ஒரு திண்ணையில் தங்கி நபிகளாரின் ஒவ்வொரு அசைவையும் ஆவணமாக்கியதோடு மட்டுமின்றி வாழ்வியல் நெறிமுறைகள் சட்டதிட்டங்கள் போன்ற சமூக மனிதனுக்கான ஒழுங்குகளை போதிப்பதைத் தாண்டி ஆன்மீக ரகசியங்களையும் இறைமறையின் அகமியங்களையும் பயின்று வந்தனர்

அந்தத் திண்ணைத் தோழர்களின் நீட்சியாகவே இன்றுவரை உள்ள ஸூபிகள் இருக்கின்றனர். .அவ்வப்போது மனதில் ஏற்படும் சபலத்தை வெல்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் சாதாரண மனிதனைத் தாண்டி மனோ இச்சைகளுக்கெதிரான முழுமையான போரை மேற்கொள்வதே சூபிகளின் முழுமுதற் கொள்கையாகும்.உலக வாழ்வின் மீது பற்றற்றிருப்பது, எளிய உணவுகளை மட்டுமே உண்ணுவது, கிடைத்தவற்றைக் கொண்டு பொருந்திக் கொள்வது. என்று துறவற மனோநிலையில் வாழ்ந்தாலும் ஈராக்கின் ராபியத்துல் பஸ்ரியா தமிழ்நாட்டின் குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா,தக்கலை பீர்முகம்மது அப்பா போன்ற மிகச்சிலரைத் தவிர ஏனைய அனைவருமே திருமண பந்தத்தை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிற்க, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நூலின் பக்கம் 160 முதல் 193 வரையிலான குறிப்புகள் மிக முக்கியமானவை.அக்குறிப்புகளின் வழியாகக் கவிதைகளை அணுகும்போது மட்டுமே கவிதைகளின் ஆன்மாவின் நிழலை தரிசிக்கமுடியும். அவற்றில் முதற்குறிப்பாக உள்ள அத்தர் எனப்படும் பரீதுத்தீன் அத்தாரின் பறவைகளின் பரிபாஷை(மன்த்திகுல் தைர்) எனும் நூல் சூபிகளின் மிகமுக்கிய வழிகாட்டியாக உள்ளது. அதில் ஏழு பள்ளத்தாக்குகளின் ரகசியம் எனும் சொல்லாடல் மூலம் ஏழுவகையான நிலைகளில் இறைவனைச் சங்கமிக்கும் பயணத்தைச் சொல்லியிருப்பார்.

அந்த ஏழு நிலைகள்:

1. ஹுப் (நேசம்)

2.உன்ஸ் (நெருக்கம் INTIMACY)

3.இஷ்க் (தீவிரமான காதல்)

4.ஹக்கீகத் (பிரிவின்மை. இதன் மூலச்சொல்லுக்கு முடிச்சு என்று பொருள்.)

5.இபாதத் (அடிமைத்தனம்)

6.ஜுனூன் (பித்துநிலை)

7.மெளத் (இறப்பு)


இதில் கடைசி நிலையாக உள்ள மெளத் என்பது பக்தனின் சுயம் இறைவனில் அழிந்துவிடுகின்ற நிலையைக் குறிக்கும்.

சூஃபிகளின் ஞானக்கலையில் இது ‘ஃபனா’ என்று சொல்லப்படும். இந்த நூலின் சாரத்தைத்தான் ஓஷோ "வாழ்வின் ஏழு பள்ளத்தாக்குகள்" என்று The secret of the secrets எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (ஓஷோவின் ஒட்டுமொத்த இறையியல் கல்வியும் சூபிச ஞானத்தின் அஸ்திவாரத்தினால் எழுப்பப்பட்டதுதான்.பரீதுத்தீன் அத்தார்,ஸம்சுத்தப்ரேஸ்,ரூமி,மிர்தாத் ஆகிய ஞானியர்களின் எளிமைப்படுத்தப்படு நவீனமயமாக்கப்பட்ட நிழலின் ஒப்பனையே ஓஷோ என்றும் கூறப்படுவதுண்டு)

பரீதுத்தீன் அத்தார் மட்டுமின்றி இப்ராஹிம் நபி, சுலைமான் நபி,ஹிள்ர் நபி,யாகூப் மற்றும் யூசுஃப் நபி ஆகிய இறைத்தூதர்களைப் பற்றிய குறிப்புகளும் மன்சூர் ஹல்லாஜ், ஹகீம் ஷனாய்,சலாஹுத்தீன்,ஸம்சுத் தப்ரேஸ்,மற்றும் சூபிகளின் கிரீடமான இப்னு அரபி ஆகிய சூஃபி ஞானியரைப் பற்றிய குறிப்புகளும் ரூமியை அணுகுவதற்கு ஒரு இலகுவான முன் தயாரிப்பை அளித்தாலும் இவர்கள் குறித்த முழு சரிதமும் அறிந்தால் அது இன்னமும் விரிவான அர்த்தத்தை அளிப்பதாக இருக்கும். மேற்படி அனைவர் குறித்தும் பகிர எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருந்தபோதிலும் மூவர் குறித்து மட்டுமே சுருக்கமாக இங்கு பகிர விரும்புகிறேன்.

காலத்தால் முந்தியவரான மன்சூர் ஹல்லாஜ் அவர்களுடனான எனது ஆன்ம உறவு மிக மிக ஆத்மார்த்தமானது. முதன்முதலில் இவர்களது பெயரை கேள்விப்பட்டது கவிஞர் பிரமிளின் வாயிலாக என்பது இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம். தொண்ணூறுகளின் துவக்கத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களின் புகலிடமாக இருந்த ரங்கநாதன் தெருவின் முன்றில் மா.அரங்கநாதன் அவர்களின் அலுவலகத்தில்தான் ஒரு மாலை நேரத்தில் பிரமிளை சந்தித்தேன். பெயர்கூறி அறிமுகமானபோது "அப்போ நிஷாங்கற பேர்ல எழுதற மன்சூர் நீங்க...ஆமா, மன்சூர் ஹல்லாஜ் தெரியுமா உங்களுக்கு,பெரிய சூஃபி ஞானி அவரு.கொன்னுட்டாங்க பாவிப்பசங்க" என்றார். அதன்பின்னர் கோர்வையாக இல்லாமல் வெவ்வேறு விஷயங்கள் பேசியபோதும் மன்சூர் ஹல்லாஜைச் சுற்றியே என் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

ஊர் திரும்பியதும் எங்கள் பாட்டனாரிடம் சென்று விசாரித்தபோது அவர்களைக் குறித்த வரலாற்றைச் சொன்னதுடன் மன்சூர் ஹல்லாஜ் ரஹிமஹுல்லாஹ் என்கிற ஒரு மிகப்பழைய புத்தகத்தையும் கொடுத்து "எனக்கு மிகப்பிடித்த வலியுல்லாஹ் (இறைநேசர்) இவரு, இவர் ஞாபகமாத்தான் உனக்கு அந்தப் பேரு வெச்சிருக்கேன்" என்றும் கூறினார். மாபெரும் இறைநேசரான இவர் மஜ்தூப் எனப்படும் தன்னைமறந்த பித்துநிலை மிகைத்து "அனல் ஹக்" என்று முழங்க ஆரம்பித்து விட்டார். நானே மெய்ப்பொருள் என்பது இதன் பொருள். இஸ்லாமிய ஷரீஅத் எனப்படும் சட்ட நெறிமுறைகளின்படி எவரொருவர் தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனம் செய்து கொள்கிறாரோ அவர் சிரச்சேதம் செய்யப்பட வேண்டியவர் ஆவார். அதன்படி அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மரண தண்டனை வழங்கினர். "அனல் ஹக்" எனும் தலைப்பில் வைக்கம் முஹம்மத் பஷீர் அற்புதமான ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.அதில் அக்காலத்தைய கல்விக்கடலும் நீதிபதியும் சூபியுமான ஜுனைதுல் பக்தாதி அவர்கள் கூறியதாக வரும் இந்த வசனம் மிகப் பிரபலமானது "'மன்சூர், கவனம் தேவை. ஆபத்தான நாளொன்று உம்மை அண்மித்துக் கொண்டிருக்கிறது. சூடான உமது நிணநீர் யூப்ரதீஸ் நதிக்கரையின் வெண்மணலைச் சிவப்பாக்கும். அந்தத் தினத்தின் மீதும் உமது கவனம் பதியட்டும்"

முன்னவர் சொன்ன அதே விஷயத்தை முழு விழிப்புணர்வுடனும் கோட்பாட்டு வரைவுகளுடனும் தர்க்க ரீதியிலான சகல கேள்விகளுக்கும் பதிலளிக்கும் ஒரு தத்துவமாக முன்வைத்தவர்தான் ஷைகுல் அக்பர்-மாபெரும் குரு என்று போற்றப்படும் சூபி மாமேதை முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். "வஹ்தத்துல் உஜூது"எனும் அக்கோட்பாடே ஏகத்துவ உள்ளமை(அத்வைதம்) என்றழைக்கப்படும். இவர்கள் எழுதிய" ஃபுஸூசுல் ஹிகம்" -மெஞ்ஞான ஒளிச்சுடர்கள் மற்றும் ஃபுத்தூஹாத்தே மக்கிய்யா- மக்காவின் திறவுகோல் ஆகிய நூல்கள் இன்றளவும் இறைஞானிகளின் கலங்கரை விளக்கமாகவும் கப்பலாகவும் இருக்கின்றன. உலகம் முழுக்க யாரெல்லாம் ஆன்மீகம் ஞானம் என்று பேசுகிறார்களோ அவர்களில் ஒருவர்கூட இப்னு அரபி அவர்களின் தாக்கம் பெறாமல் இருக்கவியலாது.

அடுத்ததாக சம்ஸுத் தப்ரேஸ்,

ரூமியின் ஞானகுரு. ஒரு குருவை எப்படியெல்லாம் ஆராதிக்க வேண்டும் என்பதை சம்ஸுத்தப்ரேஸ்-ரூமி இவர்களிடையேயான பந்தத்திலிருந்து உணர்ந்து கொள்ளலாம். அதிலும் கற்றறிந்த மார்க்க மேதையான ரூமி, சம்ஸுத் தப்ரேஸ் போன்ற ஃபகீரை குருவாகக் கொண்டாடுவதென்பது அக்காலச் சூழலில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்றாகும். ஆனால் சம்ஸுத்தப்ரேஸோ கற்றறிந்த மேதைகள் தொடாத எல்லைகளை எல்லாம் தொட்டு விளக்கமளித்தார். இதே போன்ற ஒரு குரு சிஷ்ய உறவு நம் தமிழ்நாட்டில் பொதக்குடியில் சமாதி கொண்டிருக்கும் நூர் முஹம்மது வலியுல்லாஹ்வுக்கும் சென்னை பெரம்பூரில் சமாதிகொண்ட படேஷா வலியுல்லாஹ்வுக்கும் இருந்தது. நூர்முஹம்மத் வலி இஸ்லாமிய உயர்பாடசாலையின் தலைமைப் பேராசிரியர். படேஷாவோ சாதாரண ஃபகீர் கோலம் பூண்ட தேசாந்திரி. இறைக்காதல் மிகைக்க மிகைக்க படேஷா வலியுல்லாஹ்வுடன் இணைந்து காலில் சதங்கை கட்டியவாறு நடனமாட ஆரம்பித்து விட்டார் நூர்முஹம்மத் வலி. கற்றுத் தேர்ந்த சகல நூல்களையும்விட இதயத்தை பரிசுத்தமாக்கும் தஸவ்வுஃப் எனும் ஞானப்பாதையே பரம்பொருளான இறைவனைச் சந்திக்கும் பாதை என்றுணரும்போது

ஒரு அகல்விளக்காய் ஆகிவிடு
ஒரு ஏணியாய் மாறிவிடு
ஒரு உயிர் காக்கும் படகாய் தத்தளிப்போரைக் கரை சேர்
காயப்பட்ட ஆன்மாவுக்கு ஒளடதமாக இரு

ஒரு நாடோடி மேய்ப்பனைப் போல
சகலத்தையும் உதறிவிட்டு
இல்லத்தைவிட்டு வெளியேறிவிடு.

மெளலானா ரூமியின் கவிதையைப்போல ஒரு அகல்விளக்காக மாறிவிடுகிறார்கள்.

நிற்க,

பாரசீக மொழியில் சொற்கட்டுகளுடனும் தாள லயத்துடனும் ரூமியால் எழுதப்பட்ட இக்கவிதைகளை பாரசீகம் அறிந்த ஒருவர் வாசிக்கும்போது அம்மொழியின் வனத்தில்/வனப்பில் முற்றிலுமாகத் தொலைந்துபோக நேரிடும். அதனால்தான் பாரஸீக நேரடி மொழிபெயர்ப்புகள் ஒருவிதமான பக்தமனோநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. கோல்மன் பார்க்ஸ் மூலம் ஆங்கிலவழி தமிழில் மொழியாக்கம் செய்யும்போது மொழியின் மாயச்சுழிகளுக்குள் சிக்கிவிடாமல் நேரடியாக கவிதையை அணுகச் சாத்தியப்படுகிறது.

தமிழிலும் இதுபோல நேர்வதுண்டு.உதாரணமாக குணங்குடி மஸ்தான் அப்பாவின்,

"அழுக்கைத் துடைத்தணைத்தணைத்து மடிமீது வைத்தும்
புழுக்கைக் குணமெனக்குப் போவதிலை ஆகையினால்
தழைக்குங் குணங்குடிக்கென் தந்தையே வந்திடுவேன்
பழிக்காமல் ஏழைமுகம் பாரும் முஹையத்தீனே

பட்டதுவும் கெட்டதுவும் பாய்முடைந்து விற்றதுவும்
வெட்டவெளியாய் விடிந்தது மின்னும் பாருமையா
கொட்டமெல்லாம் விட்டு குணங்குடி கொள்ளா வீணர்
இட்டமென்னை விட்டொழிவ தில்லை முஹையத்தீனே"

இதனை இவ்வாறு,

"மீண்டும் மீண்டும் எனதழுக்கைத் துடைத்து
அணைத்து மடி மீது இருத்திக் கொள்கிறீர்கள்
எனினும் போவதேயில்லை என் புழுக்கைக் குணம்

நின்பதமலரே புகலிடமாய் தஞ்சமடைகிறேன்
பழிக்காமல் ஏழைமுகம் பார்த்தருள்வீர் முஹையத்தீனே

எல்லா உத்திகளும் தோற்றுப்போன ஒரு புள்ளியில்
சரணடைந்து நின்றாலும்
மேதமைத் திமிரை விடமுடிந்த எனக்கு
நின்பதம் சேரார் நட்பைத் துறக்க இயலுதிலையே"

என்று நவீனப்படுத்த முயற்சிக்கலாம்.

ஆனாலும் மொழியின் சடுகுடு ஆட்டத்திலிருந்து முழுமையாக வெளிவர இன்னும் கொஞ்சம் பிரயத்தனம் தேவைப்படத்தான் செய்யும். அதிலிருந்து விடுபட்ட தொகுப்பாக இந்தநூல் வெளியாகி உள்ளது.

நான் எனும் சுயத்தை அறுத்துப் பலியிடுவது நான் எனும் உள்ளமையின் ஏகபோக உரிமையாளனான இறைவனில் தன்னைக் கரைத்துக் கொள்வது,ஒரு துளிக்குள் அடங்கியிருக்கும் கடலைக் கண்டறிவது என்று தன்னையறியும் தவத்தைக் கண்டடையும்/பயிற்றுவிக்கும்
தேடல்தான் திருமூலர் சொன்னதுபோல

"சீவனெனச் சிவனென வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலார்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாகிவிட்டிருப்பாரே"

எனும் கவிதையின் சாரமாக பக்கம் 10 ல் இப்படி வெளிப்படுகிறது,

"காதலர்கள்
இறுதியில் எங்கேனும்
சந்தித்துக் கொள்வதில்லை.
அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக
இருந்து வருகிறார்கள்
காலம்காகமாக"

இறைத்தூதர் ஹிள்ர்(மொழி பெயர்ப்பாளர் கிதீர் என்று குறிப்பிடுகிறார்) சூபிவழி செல்லும் பயணிகளின் வழிகாட்டியாக உலகம் உள்ளவரை இருப்பார். ஏதோ ஒரு ரூபத்தில் ஏதோ ஒரு கோலத்தில் அவரது சந்திப்பு நிகழும் என்பது உறுதியான நம்பிக்கை. அவரது சரிதத்தில் இந்த சம்பவம் வரும்-பொறித்த மீனொன்றைத் தொட்டதும் அது அடுப்பில் இருந்து மீண்டும் நீருக்குள் தாவிச் செல்லும். இதேபோல இறைத்தூதர் ஈஸா (இயேசுநாதர்)இறந்தவர்களை உயிர்ப்புறச் செய்பவராக இருந்தார். அதேவழியில் சூஃபிகளின் தலைவர் என்று போற்றப்படும் முஹையத்தீன் ஆண்டகை அவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக பதிவுகள் உண்டு. இங்கு ஒரு சூபிகுருவானவர் தன்னை நம்பி வந்த சீடனை உயிர்ப்பிப்பது மட்டுமன்றி அடுத்தடுத்த மெஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும் என்பது அவசியமான தகுதியாகக் கொள்ளப்படுகிறது. "இரவில் ஒரு உரையாடல்" கவிதையில் "செம்மறியாட்டுக் கொட்டகை அல்ல இது" என்ற ஒரு வரி வருகிறது. உலக ஆசாபாசங்களிலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் சூபிகளிடம் வந்து மீண்டும் மீண்டும் உலகத்தை யாசிக்கும் பாமர பக்தர்களைக் குறித்த அயர்ச்சியை வெளிப்படுத்தும் வரிகள் இவை.

நம் பரஞ்சோதி மஹான் கூட தனது "நான் கடவுள்" நூலில் இப்படிச் சொல்லியிருப்பார்" ஒரு குருவிலிருந்து இன்னொரு குரு உருவாக வேண்டும்.செம்மறியாட்டுக் கும்பலை உருவாக்கிக் கொள்பவர் குரு அல்ல, அவர் அரசியல்வாதி" என்று. ரூமியைத் தூண்டி விடுபவராகவும் அவருள் கனன்று கொண்டிருந்த நெருப்பை ஊதிவிடுபவராகவும் சம்ஸுத்தப்ரேஸ் இருந்தார். இதைத்தான்

"உன் வாழ்வில் தீப்பிடிக்க வை
உன் தழல்களுக்கு ஊதி விடுவோரைத் தேடு"

என்றார் ரூமி.

இதில் உள்ள விருந்தினர் இல்லம் எனும் கவிதையை இன்றைய தினம் (6.8.17) பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தபின்னர் வாசித்தேன். நேற்று ஒருவர் வெளியேறினார்.இன்று ஒருவர் வெளியேற்றப் பட்டார்,

"ஓர் ஆனந்தம்
சற்று மனச்சோர்வு
சிறிது அற்பத்தனம்
நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு
எதிர்பாராத விருந்தாளிகளாக
அவ்வப்போது வந்து செல்லும்

வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவற்றை வாயிலுக்கே சென்று
இன்முகத்துடன் வரவேற்பாயாக"

வாழ்வின் எல்லா தருணங்களிலும் பொருத்திப் பார்க்கக்கூடிய அற்புத அனுபவத்தை நல்கும் ஒவ்வொரு கவிதையையும் ஒரு கடலைக் கடப்பதுபோலக் கடந்து செல்கிறோம். நான் இங்கு பகிர முயல்வதெல்லாம் ரூமியை அணுகுவதற்கான முன் தயாரிப்பையும் மொழியாக்க முயற்சி குறித்த உரையாடலையும் மட்டுமே. கவிதைகள் குறித்து விமர்சிக்க ஒன்றுமே இல்லை. அவை ஒரு மாபெரும் தேடலின் தீப்பொறிகள்.

இறைவணக்கம் எனும் கள்ள நாணயங்களையும் ஏற்றுக்கொள்ளும் இறைவனின் அளப்பெரும் கருணைதான் அழுகையையே பிரார்த்தனையாகவும் ஏற்றுக் கொள்கிறது. வார்த்தைகளின் போதாமை குறித்த வரிகள் எக்கச்சக்கம் உண்டு இத்தொகுப்பில். எனினும்

"உனது ஒளியில்
கற்றுக் கொள்கிறேன்
காதலின் ரகசியக்கலை"

எனும்போது நாம் வார்த்தைகளிடமே தஞ்சமடைபவர்களாக இருக்கிறோம்.

"ஒரு நிலவினைப்போல
எனது கிணற்றினுள் விழுந்தார் யூஸுப்" (பக்கம் 32)

எனும் இவ்விரு வரிகளுக்குள் ஒரு அழகிய சரித்திரம் ஒளிந்துள்ளது.

"யூஸுஃப்பின் கண்களில் ஒளியேற்றி
யாகூபின் துக்கத்தைப் போக்குவாயாக" (பக்கம் 53)

எனும் இவ்விரு வரிகளுக்குள் அந்த சரிதத்தின் சுபமுடிவு ஒளிர்கின்றது.

இவ்வாறு தன்னுள் ஒரு சரித்திரத்தை வைத்திருக்கும் வரிகளும் தன்னுள் ஒரு கடலை வைத்திருக்கும் சொற்துளிகளும் நிறைந்திருக்கும் இத்தொகுப்பை வாசிக்க வாசிக்க நம் முன்னே ஒரு கரைகாண முடியாத ஒரு சமுத்திரம் விரிகிறது. ரூமி எனும் சூபிஞானியின் கரம்பற்றி அச்சமுத்திரத்தின் அலைகளின்மேல் அந்தரநடை பதின்று எல்லா சூட்சுமங்களையும் தரிசிக்கிறோம். எல்லாத் திரைகளையும் அகற்றி ஆன்மாவின் பேரொளியை அண்மிக்கிறோம்.

பக்கம் 39-ல் "துயிலச் சென்றுவிடாதே மீண்டும்" எனும் தலைப்பிலுள்ள கவிதை இப்படி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

"உனக்கென ரகசியங்களை
பொதித்து வைத்திருக்கிறது
காலைத் தென்றல்.
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்

எதை உண்மையாக நீ விரும்புகிறாயோ
அதைக் கேட்டுப் பெற்றுவிடு
எப்படியும்.
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்

அவ்வுலகும்
இவ்வுலகும்
தொட்டு உறவாடும்
வாயிலின் வழியாக
மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்
வட்டவடிவான அவ்வாயிலோ
திறந்து கிடக்கிறது இப்போது
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்."

இந்தக்கவிதை இரவுகளைக் குறித்துப் பேசுகிறது. இஸ்லாமிய ஆன்மீகம், இரவுகளை எப்போதும் உறங்க/ஓய்வெடுக்க அளிக்கப்பட்ட நேரப்பகுதியாகப் பார்ப்பதில்லை. மாறாக முழு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகவே பார்க்கிறது.

"இரவு என்பது உறங்க அல்ல" எனும் மெஞ்ஞானி உவைஸுல் கர்னி அவர்களின் சொல் மிகப்பிரபலமானது.

மேலும் லைலத்துல் கத்ர்(கண்ணியம் மிகுந்த இரவு) எனும் ஆயிரம் வருடங்களைக் காட்டிலும் சிறந்த/ இறைமறை திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவை ரமலான் மாதத்தின் இறுதிப் பத்தில் உள்ள ஒரு இரவை அருளினோம் என்கிறது இறைமறை. அந்த இரவை குறிப்பிட்ட இந்த இரவுதான் என்று சுட்டிக்காட்டாமல் கடைசிப் பத்து என்று குறிப்பிட்டதற்கு இரவுகளை உயிர்ப்பிக்க வேண்டும் என்கிற தூண்டுதலே காரணம். மேலும் எந்த இரவு உனக்கு முழு விழிப்புணர்வை அளிக்கிறதோ அதுதான் லைலத்துல் கத்ர் என்றும் சூபிகள் கூறுவதுண்டு. இன்னும் பராஅத் இரவு, இறைவனை நேரடியாக இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் சந்தித்த மிஃராஜ் இரவு மற்றும் ஈத்பெருநாள்/பக்ரீத் பெருநாள் இரவு ஆகிய இரவுகள் மிகமிக முக்கியமான இரவுகளாகக் கருதப்படுகின்றன. இன்னும் லைலத்துல் கத்ர் இரவில் இறைவன் தனது முழு கவனத்தையும் மனிதர்களின்பால் செலுத்துவதாகவும் பிரார்த்தனைகளை செவிமடுத்து நிறைவேற்ற வாக்களிப்பதாகவும் அர்ஷ் எனப்படும் இறைச்சன்னிதானமானது எல்லா வாயில்களும் திறக்கப்பட்டு பூமிக்கு மிக அண்மையில் நெருக்கமாக இறங்கி வருவதாகவும் குறிப்பிடப் படுகிறது. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது இந்தக்கவிதை ஒரு பெரும் ஆன்மீக தளத்தில் விரிவடையும். இதை நான் "புனித மிஃராஜ் இரவு அகப்பயணம்" என்கிற தலைப்பில் கடந்த 2016 மேமாதம் மிஃராஜ் இரவில் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்

"வைகறையின் மென்காற்று
வைத்திருக்கின்றது
உன்னிடம் சொல்ல ரகசியங்கள்
மீண்டும் உறங்கச் செல்லாதே

உண்மையில் நீ ஆசைப்படுவதை
கேட்க வேண்டிய தருணம் இது
மீண்டும் உறங்கச் செல்லாதே

இகமும் பரமும் தொட்டுக்கொள்ளும்
கதவின் விளிம்பருகே
முன்னும் பின்னும் அசைகிறார்கள் எல்லோரும்
மீண்டும் உறங்கச் செல்லாதே

அகலத் திறந்துள்ளது கதவு
மீண்டும் உறங்கச் செல்லாதே."

மெளலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் (இந்த மொழியாக்கம் அன்பு நண்பர் ரமீஸ் பிலாலி அவர்களுடையது.)

ஒரு கவிதை எப்படி ஞானக்கவிதையாக மலர்கிறது அல்லது கவிதைக்கும் சூபி கவிதைக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்போமெனில் பாரதியையும் ரூமியையும் ஒப்பிட்டு இதனை விளக்க முயற்சிக்கலாம்.இது புரிதலை முன்னெடுக்கும் ஒரு ஒப்பீடு மட்டுமே. என் மண்ணின் கவிஞன் பாரதியைக் குறைகாண வேண்டிய அவசியமோ நோக்கமோ எனக்கில்லை.

"காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்தினிடையே ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் அங்கு
கேணியருகினிலே தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும், என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டுதர வேணும் அந்தக்
காட்டு வெளியினிலே -அம்மா! நின்றன்
காவலுற வேணும், என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்."

இந்தக் கவிதையைப் படித்து முடிக்கையில் ஒரு கனவு. அழகிய எளிய கனவு. ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனின் எளிய தேவைகளும் சின்னச்சின்ன ஆசைகளும் குடும்ப அழகியலும் பக்தியும் கவிமனமும் இங்கு பதிவாகியுள்ளது. படித்து முடிக்கும்போது அந்தத் தென்றல் நம் இதயத்துள் வீசுவதுபோலும் அந்த நிலவொளி நம் தலைக்குமேலே ஒளிர்வதுபோலும் குயிலோசையும் சிலுசிலுத்து ஓடும் நீரோடையும் கலந்ததொரு இன்னிசை வெளியெங்கும் படர்வதுபோலும் தளதளத்த மேனியுடன் ஒரு அணுக்கி சிணுங்கலுடனும் காதலுடனும் வெற்றிலை மடித்துக் கொடுப்பதுபோலும் ஒரு அழகிய காட்சி நம்முன் விரிகிறது.

அடுத்ததாக ரூமி,

"மரியாதைக்குரிய விருந்தாளி நீ,
இந்த உலகின் அற்ப நிலத்துண்டொன்றை
ஒரு பிச்சைக்காரனைப்போல
யாசித்துக் கொண்டிருக்காதே..!"

அவ்வளவுதான்.இப்போது நாம் எளிய அழகிய கனவிலிருந்து விடுபட்டவர்களாகிறோம்.இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நம்முடையதாக உணர்கிறோம்.

"நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்"

என்கிறார் ரூமி.

இந்த உலகமும் அதன் வசதிகளும் பொருட்களும் சார்ந்த தற்காலிக மகிழ்ச்சியை வேண்டுபவை அல்ல ஞானக் கவிதைகள்.மாறாக முழுப் பிரபஞ்சத்தின் அங்கமாகத் தன்னை உணர்வதும் தன்னுள் பிரபஞ்சத்தைக் கண்டுகொள்வதுமான ஏகப்பெருவெளியில் மூழ்கி முத்தெடுப்பவை.வேண்டிநிற்கும் பக்த மனோநிலையிலிருந்து விடுபட்டுச் சிறகுகளை விரித்து சகலத்தையும் தமதாக்கிக் கொள்ளும் இறைமையை நோக்கி நகர்த்துபவை.

பிஸ்மில்லாஹ் என்று எதனையும் துவங்கும் இஸ்லாமிய வழக்கத்தின் அகப்பொருள் தாங்கிய ஒரு கவிதை (பக்கம்94) சுயத்தை அறுத்துப் பலியிடப் பரிந்துரைக்கிறது பிஸ்மில்லாஹ் என்பது பி இஸ்மி அல்லாஹ் என்று விரிவடையும். அதாவது,

"அல்லாஹ் எனும் பெயரால்"
குர்பானிக்கு முன்னால்
கையில் கத்தியுடன்
உச்சரிக்கும் மெளலவியைப் போல

பழைய சுயத்தை அழித்து
உன் உண்மையான பெயரைக் கண்டறிய
பிஸ்மில்லாஹ் எனக்கூறு"

இது மன்சூர் ஹல்லாஜ் அவர்களுடைய "அனல் ஹக்" எனும் பிரகடனத்திற்கு இணையான பிரகடனமே அன்றி வேறில்லை.

நம் தமிழகத்தின் தக்கலை பீர்முஹம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா, திருமூலர், வள்ளலார் இன்னபிற ஞானியர் வழியாகப் பேசிய இறைவன் ரூமியின் உதடுகள் வழியாகப் பேசிய பேச்சைத்தான் தாகங்கொண்ட மீனொன்று வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

"ஆதி முன்னிற்கவே அஹதுஹது வாஹிதியத்தெனது முன்னிற்கவே
அத்துவித வஸ்து முன்னிற்கவே
அறிவகண்டாகார முன்னிற்கவே"

என்ற குணங்குடியாரின் வரிகளைக் கேட்டுப் பழகிய நமக்கு ரூமியை உள்வாங்குவதற்கு சிரமமொன்றும் இருக்காது. அதன்படி சத்தியமூர்த்தியின் கடும் ஈடுபாடு கொண்ட உழைப்பின் வாயிலாக அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கும் இந்நூலை வாசிப்பதும் அதில் லயித்து நம்மைத் தொலைப்பதும் பின்னர் கண்டடைவதுமான கண்ணாமூச்சியானது பேரானந்த அனுபவமாக விரிவடைகிறது.

நான் இந்நூல் வாயிலாக உணர்ந்ததில் பத்து சதவிகிதம்கூட இங்கு வெளிப்படுத்தப்படவில்லை. இப்படித்தான் ஆகிவிடுகிறது. மொழியில் எல்லைக்குள் வார்த்தைகளின் கட்டமைப்புக்குள் போதாமைமிகு உணர்வுகளின் பெருங்கடல் அடங்கத்தான் மறுக்கிறது. ரூமியின் வரிகளில் இந்தக் கட்டுரையை இப்படித்தான் முடித்தாக வேண்டும்,

"கவிதையை முடிக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
இப்படித்தான் ஆகிறது.
மாபெரும் மெளனம்
என்மீது கவிகிறது.
வார்த்தைகளைப் பயன்படுத்த
ஏன் எண்ணினேன் என்ற
தவிப்பே எஞ்சுகிறது"

"தாகங்கொண்ட மீனொன்று" என்கிற ரூமி அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் சத்தியமூர்த்தியின் வாயிலாக வெளியான, இறைவெளிப்பாடான இந்த மொழியாக்கத்தொகுப்பிற்கு ஆத்மநாம் நினைவு விருது வழங்கப்படுவது நிச்சயமாக அந்த விருதுக்கே அளிக்கப்பட்ட பெரும் அங்கீகாரமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp