ராஜராஜனும் சாதியும்

ராஜராஜனும் சாதியும்

ஜெயமோகன் அவர்களுக்கு,

ராஜராஜ சோழன் பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். இதுவரை நான் பேணிவந்த கருத்துகளுக்கு முற்றிலும் வேறொரு கோணத்தை இக்கட்டுரைகள் அளித்தன. தங்களுடன் பகிர்ந்து கொள்ள சில விஷயம்.. ராஜராஜசோழன் நாடு வளம் பெற, பண்பாட்டு ரீதியான ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கு ‘மட்டுமே’ பிராமணர்களுக்கு இலவசமாக நிலம், வரிவிலக்கு போன்ற சலுகைகளை கொடுத்தார் என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

வர்க்க வேறுபாடுகள் பிரபல்யமடையாத குல அமைப்பு இருந்த போது சொத்துரிமை தனியாருக்கு இன்றி, மொத்த சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் இருந்தது தானே(?)! அக்காலகட்டத்தில் தலைமைப்பொறுப்பு என்பது, சுழற்சி முறையில் சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய பொதுத்தன்மைகளை நீக்க முயன்ற வேந்தர்கள் ‘பொதுநீக்கி’ ஆட்சி செய்ய முயன்றவர்கள் என்று புறநானூற்றுப்பாடல்களிலும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

நம் மூவேந்தர்கள் குல அமைப்பின் அங்கத்தினர்கள் அனைவரின் உரிமையும் கபளீகரம் செய்து அந்த இடத்தில் தனி நபர் உரிமையை நிலை நாட்ட வேண்டிய அவசியம் இருந்தது. மற்ற குலங்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றும் சிறந்தவர்கள் என்றும் தங்களை வேந்தர்கள் என்றும் சூரிய குலம் என்றும் சந்திர குலம் என்றும் பல்வேறு ரிஷிகளின் கோத்திரங்கள் வழியாக வந்தவர்கள் என்றும் அக்காலத்தில் ஞானத்தில் சிறந்து விளங்கிய பிரமாணர்களைக்கொண்டு பிரஸ்தாபப்படுத்தினர். (உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல மையநிதியை திரட்டுவதற்காகத்தான் இத்தனை அக்கப்போர் என்றாலும்…)

பிராமணர்களும் அதை சிறப்பாக செய்ததன் பொருட்டு மன்னர்களின் பெருமை நாடு பரவியது. அதற்கு நன்றிக்கடனாகத்தான் வேந்த மன்னர்கள் பிராமணர்களுக்கு கோவில்களும், நிலங்களும் கொடுத்திருக்கிறார்கள். அந்த அதிகார மிதப்பில் பிராமணர்கள் கோயிலுக்குள்ளும், தங்கள் நிலத்திற்குள்ளும் யார் யார் நுழைய வேண்டுமென வேதங்களை சாட்சியாகக் கொண்டு முன் மொழிந்தார்கள். அதை வேந்தர்கள் தங்களின் சுயநலம் கருதி வழிமொழிந்திருக்கிறார்கள்.

‘கோவில் நிலம் சாதி’ எனும் ஆய்வுக்கட்டுரையில் பொ.வேல்சாமி இதுபற்றி இன்னும் விரிவுபட எழுதியிருக்கிறார்.
ராஜராஜசோழன் பெயரை குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் வேந்தர்கள் என்பதில் அவரும் பொருளடக்கம் என்பதால் தங்களின் கட்டுரையோடு தொடர்புப்படுத்தி கருத்தை முன்வைக்கிறேன். வரலாறு என்பதே ஆய்வுக்கு உட்பட்டது என்பதால் எதையும் ஒட்டாரமாக ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. இதொரு பகிர்வு அவ்வளவே.

அன்புடன்,

தமிழ்ப்பிரபா

***********************

அன்புள்ள தமிழ்ப்பிரபா,

பொ.வேல்சாமி போன்ற ஆய்வாளர்களை பெரிதாக கவனிக்கவேண்டாம் என்றே வாசகர்களுக்குச் சொல்வேன்.அவர்கள் வரலாற்றாய்வாளர்கள் அல்ல, அதற்கான பயிற்சியோ முறைமையோ அவர்களுக்கில்லை.

ஒரு பொதுவிவாதத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு, ஆனால் அரசியல் நம்பிக்கைகளுக்கும் விருப்புவெறுப்புகளுக்கும் ஏற்ப வரலாற்றை காணும் பார்வை அவர்களுடையது. அரசியல்நடவடிக்கை வேறு வரலாற்றாய்வு வேறு என்னும் தெளிவு அற்றவர்கள்.

நான் கருத்தில்கொள்வது முறைமை சார்ந்து ஆராய்பவர்களையே. அவர்களின் தனிப்பட்ட கருத்து இரண்டாம்பட்சமானது. அவர்கள் ஒரு முறைமையை உருவாக்குகிறார்கள். அதை நாம் விரித்து எடுக்கமுடியும்.

நான் சொன்ன நோக்கும், அம்முடிவுகளும் என்னுடையவை அல்ல என்பதை கட்டுரையில் தெளிவாகவே சொல்லியிருப்பேன். அது மார்க்ஸிய முறையியலை ஒட்டி இந்திய வரலாற்றை ஆராய்வதற்கு ஒரு முன்வரைவை உருவாக்கிய வரலாற்றாய்வாளரான டி.டி.கோஸாம்பியால் சொல்லப்பட்ட கோணம் . அதனடிப்படையில் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தை மதிப்பிட்டிருக்கிறேன்.

நீங்கள் உங்கள் குறிப்பில் சொல்லியிருப்பதும் நான் சொல்லியிருப்பதும் வேறுவேறல்ல என்பதை கட்டுரையை மறுமுறை வாசித்தால் புரிந்துகொள்வீர்கள். முதலில் நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறீர்கள் என்றே புரியவில்லை எனக்கு.

நிலம் இனக்குழுச் சமூகத்தின் உடைமையாக இருந்த காலத்தில் இருந்து மாறுபட்டுத்தான் நிலப்பிரபுத்துவ சமூகம் உருவாகிறது.அது சிறிய இனக்குழுக்களை ஒன்றாகத் தொகுப்பது, அதன்மூலம் நிலவுடைமையை தொகுப்பது, அதன் வழியாக நிலத்திலிருந்து உருவாகும் உபரிவருவாயை மையத்தில் தொகுப்பது என்னும் வழிமுறைகளைக் கொண்டது. அதற்கு வன்முறை ஒரு கருவி. ஆனால் வன்முறை எப்போதும் தற்காலிக ஆயுதம் மட்டுமே. முக்கியமான தொகுப்பு விசை என்பது கருத்தியல்.

ஆகவே தொகுக்கும் கருத்தியல்களும் அக்கருத்தியல்களை முன்னெடுக்கும் மனிதர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஆதிக்கத்தில் முக்கியப்பங்காளிகள் ஆகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல அரசர்களுக்கு அவர்கள் கருவிகள் மட்டுமே. அரசருக்கு புனிதத்தை உருவாக்குகிறார்கள். மீறமுடியாத அதிகாரத்தை அமைக்கிறார்கள்.

என்ன கவனிக்கவேண்டும் என்றால் பிற நிலவுடைமைச் சாதிகளுக்கும் போர்ச்சாதிகளுக்கும் அவர்கள்தான் மேலாதிக்கத்தை உருவாக்கி அளிக்கிறார்கள். தொன்மங்கள் வழியாக, சடங்குகள் வழியாக. இது உலகமெங்கும் இப்படித்தான் நிகழ்கிறது. பூசகர்தரப்பும் ஆட்சித்தரப்பும் மாறிமாறி பயன்படுத்திக்கொள்கின்றன என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

சமண பௌத்தத் துறவிகளும் பிராமணர்களும் ஆற்றிய பங்களிப்பு இது. அவர்கள் அடைந்த அதிகாரத்தின் பின்புலம் அது. இதை விரிவாக கோஸாம்பி விளக்குகிறார்.

அதை வெறும் சாதியமோசடி என்று சொல்வது மார்க்சிய நோக்கில் வெறும் அசட்டுத்தனம் மட்டுமே. நான் சொல்லவந்தது இதுவே. ராஜராஜன் காலத்திலும் பின்னர் நாயக்கர் காலத்திலும் பிராமணர் அடைந்த முக்கியத்துவத்தை கோஸாம்பியின் நோக்கில் எப்படி அணுகலாம் என நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அரசதிகாரம் என்பது நிலம் மீதான அதிகாரமே. சங்ககாலம் முதல் மருதநில மக்கள் மேலதிக ஆற்றல்கொண்டு பிற நிலத்து மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம். அதுவே மூவேந்தர் அரசுகளாக ஆயிற்று. சோழர்காலகட்டம் அந்தப்போக்கின் உச்சம்
அது நிலப்பிரபுத்துவ காலகட்டம். உலகமெங்கும் அந்த நிலப்பிரபுத்துவமே இருந்தது. ஆகவே அன்றைய உலகின் வழி அது என்றே கொள்ளவேண்டும். இன்றைய மதிப்பீடுகளால் அதை நிராகரிக்க முயலக்கூடாது.

நிலப்பிரபுத்துவம் அடிமைத்தனமும் நேரடிச்சுரண்டலும் கொண்டதாக இருந்தாலும் இன்றைய சமூகத்தை அதுதான் உருவாக்கியது. விளைநிலங்களை, தொழில்நுட்பத்தை, கலைகளை, இலக்கியத்தை ஆக்கியது. அதை மானுட வளர்ச்சிப்போக்கின் ஒரு காலகட்டமாகவே மார்க்ஸிய ஆய்வாளர் கருதுவார்கள்.

அது இயல்பாக முதலாளித்துவமாக ஆகிறது என்றும் முதலாளித்துவம் எத்தனை சுரண்டல் கொண்டதாக இருந்தாலும் அது நிலப்பிரபுத்துவத்தைவிட மேலானது என்று மதிப்பிடுவர். அடுத்தகட்டம் பொதுவுடைமை என்றும் பொதுவுடைமைக்குச் செல்லும் வளர்ச்சிப் படிநிலைகளே இவை என்றும் மார்க்ஸியர் சொல்வார்கள்.

நம் சமூகம் இன்னமும்கூட நிலப்பிரபுத்துவத்தில்தான் பாதிக்காலை ஊன்றியிருக்கிறது. இன்னமும் முழுமையான முதலாளித்துவ சமூகமாக ஆகவில்லை. ஆகவேதான் நிலப்பிரபுத்துவகால ஆதிக்க அமைப்புகளான சாதி போன்றவை இன்னும் நீடிக்கின்றன. இதுவே சாதிக்காழ்ப்பற்ற , மார்க்ஸிய முறைமை சார்ந்த ஆய்வாக இருக்கமுடியும். நான் சுட்டிக்காட்டியது இதைத்தான்.

சங்ககாலம் முதலே இங்கு ஆதிக்கத்தை உருவாக்கும் கருத்தியலை நிலைநாட்ட பிராமணர் தேவைப்பட்டனர். பிராமணர் பிற அப்பாவிகளை ‘ஏமாற்றி’ அந்த வேலையைச் செய்யவில்லை. அன்றைய உற்பத்திச்சமூகத்தில் அவர்கள் ஆக்கபூர்வமாக ஒரு பங்களிப்பை ஆற்றினர், அதனால்தான் மதிக்கப்பட்டனர் என்று சுட்டிக்காட்டுபவர் கோஸாம்பிதான். [தமிழிலேயே அவரது நூல்கள் உள்ளன. வாசித்துப்பாருங்கள்]

ஆனால் ஆதிக்கத்தை கையாண்டவர்கள் அவர்கள் அல்ல. அன்றைய ஆளும் சாதிகளான வேளாளரும் மறவர்களும்தான் ஆதிக்கத்தை கையாண்டனர், நிலைநிறுத்தினர். நிலம் முழுக்க அவர்களின் கைக்கே சென்றது. அவர்களால் ஆளப்பட்டது.

சாதியப்பாகுபாட்டை நிலைநிறுத்தியது ,அதைக்கொண்டு நில அடிமைமுறையை பேணி உபரியை உருவாக்கியது, அதைத்திரட்டி அரசுகளை அமைத்தது எல்லாமே மேலே சொன்ன ஆதிக்க சாதிகளின் செயல்கள். பொதுவாக அது வலங்கைச்சாதிகளால் ஆளப்பட்ட காலம். அதற்கு உதவியவர்கள் பிராமணர்கள். அந்தக்கருத்தியலின் மையம் ஆலயங்கள்.

அன்றைய சமூகத்தின் மையம் ஆலயங்கள். அங்கேதான் நிதி குவிக்கப்பட்டு மேலே சென்றது.இக்கட்டுகளுக்காக உபரி சேமிக்கப்பட்டது. நீர்நிர்வாகம் நிதிநிர்வாகத்தின் அலுவல்மையம் அது. கலைகளின் இலக்கியத்தின் இடம். ஆம், அன்றைய சுரண்டலின் விளைவும்கூடத்தான் –இன்றையக் கல்லூரிகள் இன்றைய சுரண்டலின் விளைவுகள் என்றால்.

சோழர்காலம் முடியும்போது தமிழகத்தில் வேளாளர்களின் நிலவுடைமை அதிகாரம் இருந்தது. மள்ளர்கள் போன்ற பிறசாதியினரும் சிறிய நிலவுடைமையாளர்களாக இருந்தனர். நாயக்கர் காலகட்டத்தில் நிலம் சோழர்காலத்தில் அதைக் கையாண்ட சாதியினரிடமிருந்து பறிக்கப்பட்டு தெலுங்கு சாதிகளிடம் சென்றது. வெள்ளையர் வரும்போது பெரும்பாலான நிலம் தெலுங்குச் சாதிகளிடம் இருந்தது. இன்றும் அப்படித்தான் நீடிக்கிறது.

இதெல்லாமே வரலாற்றின் போக்குகள். இப்படித்தான் இங்கு வந்துசேர்ந்திருக்கிறோம். இதிலிருந்து முன்செல்லவே அதை திரும்பி நோக்குகிறோம்
இந்தியா முழுக்க எங்கும் நிலப்பிரபுத்துவகாலகட்டத்தின் ஆதிக்கத்தை கையாண்டவர்களாக நிலவுடைமைச்சாதிகள், போர்ச்சாதிகள், வணிகச்சாதிகள் மூவரும்தான் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவியவர்கள் பிராமணர்கள்.

கேரளத்தில் என் சாதியாகிய நாயர்களே நிலஆதிக்கத்தை சாதியாதிக்கத்தை நிலைநிறுத்தியவர்கள். அதன் அதிகராத்தைச் சுவைத்தவர்கள்.அதை மறுக்க நான் நம்பூதிரிகள் மேல் பழியைப்போட்டு புரட்சிவேடம் கட்டுவேன் என்றால் நான் புரட்டுக்காரன் மட்டுமே.

தமிழகத்தில் மட்டும் விசித்திரமான ஒரு மாய்மாலம் நிலவுகிறது. நில அடிமைமுறையை நிலைநிறுத்தி அதன்மூலம் லாபம் அடைந்த அத்தனை நிலவுடைமைச்சாதிகளும், நிலஅடிமைமுறையை வன்முறைமூலம் நிலைநிறுத்திய, இன்னமும் கூட அதற்காகப்போராடுகிற அத்தனைப் போர்ச்சாதிகளும் அந்த காலகட்டத்தின் ஆதிக்கக் கருத்தியலின் பிழைகளுக்குரிய அனைத்துப்பொறுப்புகளையும் பிராமணர் மேல் சுமத்திவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் எல்லாரும் பிராமணர் உருவாக்கிய கருத்தியலை அறியாமல் ஏற்றுக்கொண்டு ,அறியாமல் அதை பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தி, தெரியாமல் சுரண்டி, ஒன்றுமே தெரியாமல் சொகுசாக வாழ்ந்த அப்பாவிகள் என ஒரு வரலாற்றை நமக்குச் சொல்கிறார்கள்.

இந்த அப்பாவி நிலவுடைமைச்சாதியினர்தான் இனி பிராமண ஆதிக்கத்தை ஒழித்து அடித்தள மக்களை விடுதலைசெய்வார்களாம். ஆகவே அடித்தள மக்கள் அவர்களின் சுரண்டலை காணாமல் பிராமணர்களை மட்டும் வெறுக்கவேண்டுமாம்.இந்நூற்றாண்டின் மிகமிகக்கேவலமான கருத்தியல்மோசடி இந்த மாய்மாலம்தான்.

இன்னும் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் கடைசியாக நடந்த அரசாட்சியான நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அந்த ஆதிக்கத்தை பயன்படுத்தி நிலம் மீது முற்றதிகாரத்தை அடைந்த தெலுங்குச்சாதியினர் [பொ வேல்சாமி உட்பட] மொத்த பழியும் பிராமணருக்கே என்று நூல்கள் எழுதி புரட்சியாளர்களாக பற்றி எரிகிறார்கள் என்பது.

ஆகவே சோழர் காலத்து பிராமண ஆதிக்கம் பற்றியெல்லாம் தலித் அல்லாத யார் பேசினாலும் அதிலுள்ளது சாதிவெறி, அதைமறைக்கும் புரட்டும் பசப்பும் மட்டுமே.முதலில் தன் சாதியின் ஆதிக்கவெறிக்கும் பிழைகளுக்கும் அவர் பொறுப்பேற்கவேண்டும். அதுவே அறிவுலக நேர்மை. அதன்பின் பேசுவார் என்றால் மட்டுமே அவர் வார்த்தைகளுக்கு ஏதேனும் மதிப்பு.

ஜெ

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp