ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல்கள்

ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல்கள்

கதை அல்லாத பிற குறிப்புகள்

எப்போதும் தன்னை அந்நியனாக உணரும் சிலுவையின் அங்கதம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தையும் தன்னையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இலக்கிய உத்திகளின் துணையின்றி, தன் ‘வாழ்க்கைப் பார்வையையே’ மையமாகக் கொண்டு இயங்கும் புதிய புனைகதை முயற்சி இது.

இப்படியான சிறு அறிமுகத்தைப் பின் அட்டையில் கொண்டிருக்கிறது ராஜ் கௌதமனின் இரண்டாவது நாவல் காலச்சுமை,

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமரிசகரான ராஜ்கௌதமன், ‘ சிலுவை ராஜ் சரித்திரம்’ என்ற தனது முதல் நாவலைத் தொடர்ந்து எழுதிய புதினம்
எனவும் கூடுதல் அறிமுகத்தையும் தந்துள்ளது. இது தவிர அப்புதினத்தின் கதைப் பகுதியல்லாமல் கிடைக்கும் கூடுதல் தகவல் ஆசிரியரின் பிறநூல்களின் பட்டியல்:

  1. எண்பதுகளில் தமிழ் கலாசாரம்
  2. தலித் பார்வையில் தமிழ் பண்பாடு
  3. அ.மாதவய்யா
  4. பொய் + அபத்தம் = உண்மை
  5. அறம்:அதிகாரம்
  6. புதுமைப் பித்தன் என்னும் பிரம்ம ராக்ஷஸ்
  7. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக
  8. சிலுவை ராஜ் சரித்திரம்
  9. தலித்திய விமரிசனக் கட்டுரைகள்

[அவருக்கு பலத்த அறிமுகத்தைப் பெற்றுத்தந்த தலித் பண்பாடு என்ற நூல் இப்பட்டியலில் இடம் பெறவில்லை] .

மனைவி பரிமளத்திற்கு எனச் சமர்ப்பித்துக் கதையைத் தொடங்கும் காலச்சுமை நாவல் முன் அட்டையின் உள்ளே 

மனிதர்கள் பணம் குவிக்கக் கடன்படுகிறார்கள்,  புகழ் ஈட்ட நாணம் இழக்கிறார்கள், அதிகாரம் பெற அடிமைகள் ஆகிறார்கள், உலகை வெல்ல உலகை ஆளுகிறார்கள்
உயிர் வாழ உயிரை விடுகிறார்கள்.

என்றவொரு முத்திரை வாக்கியப் பகுதியையும் கொண்டிருக்கிறது. ஆனால் முதல் நாவலான சிலுவை ராஜ் சரித்திரத்தில் இப்படியான கூடுதல் தகவல் எதுவும் அச்சிடப் படவில்லை. அதற்குப் பதிலாக முன் அட்டையிலும் பின் அட்டையிலும் ராஜ் கௌதமனின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ‘சிலுவை ராஜ் சரித்திரம’ என அச்சிடப் பட்டுள்ள முதுகுப் பகுதியிலும் கூட ஒரு புகைப்படம். மூன்று புகைப்படங்களில் இரண்டு படங்கள் பாஸ்போர்ட் அளவு. பின் அட்டையில் இடம் பெற்றுள்ள படம் தபால் அட்டை அளவு பெரியது. சிவப்புச் சட்டையும் சிவப்பு வண்ணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியும் அணிந்து பின்புலத்தில் மஞ்சள் பூக்கள் பூக்கும் செடிகளுக்கு முன்னால் அமர்ந்திருக் கிறார் நாவலாசிரியர் ராஜ் கௌதமன்.

இந்த மூன்று படங்களுக்குச் சமமாக மூன்று படங்கள் உள்ளே நாவலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. இவனது சரித்திரம் தான் சொல்லப்பட உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக சிலுவை ராஜ் சரித்திரம் என்ற எழுத்துக்கள் மேல் ஒரு சிறுவனின் பாஸ்போர்ட் அளவுப் படம். பின் அட்டையில் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் ராஜ் கௌதமனின் சின்ன வயதுப் படம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த பக்கத்தில் தெரிவது அந்தச் சிறுவனின் நின்ற கோலம். கால்களைச் சேர்த்து வைத்து நிற்கும் அவன் தனது கைகள் இரண்டையும் மார்பின் மேல் பெருக்கல் குறி போலக் கட்டியபடி நிற்கிறான்.எட்டு வயதுக்குள் இருக்கலாம். அவனது கால்களுக்குக் கீழே

சிலுவை ராஜ் சரித்திரம், ராஜ்கௌதமன், தமிழினி

என அச்சிடப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த பக்கத்தைத் திருப்பினால் ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்னா ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட ஒரு குடும்பப் புகைப்படம். அப்படத்தில் அதே கோலத்தில் சிறுவன் சிலுவை நிற்கிறான். இடது புறத்தில் அவனது அம்மை; இரும்பு நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்.விசேஷமாக அவளைப் பற்றிச் சொல்ல வேண்டு மென்றால் அவளது காதுகளில் தொங்கும் தண்டட்டிகளையும் காலில் செருப்பில் லாதையும் சொல்லலாம். வலது புறத்தில் ஒரு சிறுமி நிற்கிறாள் ; கைகட்டியபடி நிற்கும் அவள் அவனது தங்கையாக இருக்க வேண்டும். அவளை அடுத்து வலது ஓரத்தில் அவனது தகப்பன்; பேண்டிற்குள் செருகப்பட்ட முழுக்கைச் சட்டை. கால்களில் செருப்பு. பெருக்கல் குறி போல குறுக்காகச் சந்தித்துக் கொண்டுள்ளன.

573 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ள சிலுவை ராஜ் சரித்திரத்தையும், 330 பக்கங்களில் அச்சிடப் பட்டுள்ள காலச்சுமையையும் இரண்டு வெவ்வேறு நாவல்களாக ஒரு வாசகன் வாசித்துக் கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் நாவலாசிரியர் ராஜ்கௌதமன் இந்த இரண்டு நாவல்களையும் எழுதியதற்கான நோக்கம் ஒன்று இருக்கிறது. அந்நோக்கம் என்ன என்று அறிய விருப்பமிருந்தால் எழுதி அச்சிடப்பட்ட வரிசைப்படி முதலில் சிலுவைராஜ் சரித்திரத்தையும் (2002) இரண்டாவதாகக் காலச்சுமை (2003) யையும் தான் வாசிக்க வேண்டும். இவ்விரண்டு பாகங்களும் சேர்ந்து இன்று நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமரிசகராக அறியப்படும் ராஜ்கௌதமனின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய கோணத்திலிருந்து சொல்லுகின்றன. இவை ஒரு விதத்தில் புனைகதை என்பது போல எழுதப்பட்டாலும் ஒருவனின் வாழ்க்கை வரலாறுதான் என்பதை வாசிப்பவர்கள் மறந்து விடக்கூடாது என்ற அக்கறை கொண்ட எழுத்தாகவும் இருக்கிறது. முதல் பாகத்தில் தரப்பட்டுள்ள புகைப்படங்களின் வரிசைகளும் காலச் சுமையில் இடம் பெற்றுள்ள தகவல்களும் கூட இவற்றை வாழ்க்கை வரலாறாக வாசிக்க வேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவைதான்.

சரித்திரச்சுருக்கம்

ராஜ் கௌதமனின் வாழ்க்கையையே - தன் வரலாற்றையே- படர்க்கைக் கூற்றில் (Third person narrative) சொல்லும் சிலுவைராஜ் சரித்திரமும், காலச்சுமையும் சொல் முறையின் வழியாக ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளன. வாசிக்கின்றவனுக்கு தன்வரலாற்றை எழுதிய ஆசிரியன் தன்னை எழுதவில்லை; தன்னையே இன்னொருவனாகக் கருதி எழுதியுள்ளான் எனக் காட்டுவது தான் அந்த நோக்கம். அதனைச் சாத்தியமாக்க தன்னிடம் உள்ள மொழி நடையும், ஒளிவு மறைவின்றி நிகழ்ச்சிகளை விவரித்து விடும் போக்கும் உதவும் என்பது ராஜ்கௌதமனின் நம்பிக்கை.

வெளிப்படைத் தன்மை மற்றும் மொழிநடை மூலமாகத் தன்னையே அன்னியனாக உணரும் நிலையை அடைய முடியும் என அவர் கருதியிருக்கலாம். அந்நிலையை அடைதல் என்பதற்குச் செய்யப்படும் தவமாகக் கூட இந்த எழுத்தையும் அந்த எழுத்துக்களை உருவாக்க எடுத்துக் கொண்ட காலத்தையும் கருதக்கூட வாய்ப்புக்களுண்டு. எழுத்தைத் தவமாகக் கருதுவது இந்திய ஆன்மீக மரபில் உள்ள ஒன்றுதான். அந்தத் தவத்தின் மேன்மையையும் பலனையும் பற்றி விவாதிப்பதற்கு முன்னால் நாவல்களில் சொல்லப்படும் அவனது ஜீவிய சரித்திரத்தின் சுருக்கத்தைக் காணலாம்:

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு ஆகஸ்டு இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவில், இராமநாதபுரம் ஜில்லா, திருவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பிற்காவைச் சேர்ந்த புதுப்பட்டியில் ஆர்.சி.தெரு என்றழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க வடக்குத் தெருவில் அவனுடைய ராக்கம்மா பாட்டியின் குடிசையில் பிறந்த சிலுவை ராஜின் பிறப்பு , வளர்ப்பு, துடிப்பு என விரியும் கதை முதல் பாகம். அவனது பால பருவம் தொடங்கி எம்.ஏ. படித்துவிட்டு வேலை தேடிய -வேலை இன்றிக் கழித்த -துயர நாட்களையும் விவரித்து முடிகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளின் வாழ்க்கை அதில் உள்ளது.
சிலுவையின் பாலபருவ சாகசங்கள் பள்ளிக் கூடம் போகத் தொடங்கியது முதல் தான் தொடங்குகிறது எனக் கருதும் நாவலாசிரியர், கிறிஸ்தவ தேவாலயத்துக்குப் பக்கத்தில் இருந்த அமலோற்பவமாதா கான்வென்டில் ஐந்து வயதில் ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்ததிலிருந்து தான் தொடங்குகிறார். பிறந்த எட்டாம் நாள் ஞானஸ் தானம் பெற்ற ஒரு கிறிஸ்தவப் பிறப்பாளனாக அவனை அறிமுகப் படுத்தும் அவர் நாவலின் முதல் பாகத்தை முடிக்கும் போது அரசாங்கம் தரும் சலுகைக்காக அவன் இந்து மதத்திற்கு மாறி உரிய சான்றிதழ்களைப் பெற்றான்; அப்படிப் பெற்ற அந்தப் பேப்பர்கள் தான் அவனை எங்கெங்கோ கொண்டு போயின என்று சொல்லி .. தொடரலாம் என்று போட்டு முடிக்கிறார்.

முப்பத்திரண்டு இயலில் விரியும் முதல்பாகத்தில் சிலுவை தனது ஊரில் தாயாரம்மாள் பள்ளியிலும், திரிங்கால் பேஸிக் ஸ்கூலிலும் படித்த தொடக்கக் கல்வியும், நான்காம் பாரம் எனப்படும் ஒன்பதாம் வகுப்பு தொடங்கி எஸ்.எஸ்.எல்.ஸி. வரை மதுரை சென்மேரிஸ் பள்ளியிலும் கல்லூரிப் படிப்புகளான பி.யு.சி., பி.எஸ்ஸி (சுவாலஜி), எம்.ஏ.(தமிழ்) ஆகியனவற்றைத் திருநெல்வேலி சென்சேவியர்ஸ் கல்லூரியிலும் கற்றதை விவரிக்கிறார். பட்டப் படிப்புக்குப் பின்பு ஓராண்டு தமிழ் ட்யூட்டராகவும் அடுத்த ஆண்டு சுவாலஜி டெமான்ஸ்ட் டேட்டராகவும் அதே சென்சேவியர் கல்லூரியில் தற்காலிகப்பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் அதற்குள் அடக்கம்.அந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவன் படித்த விருத்தாந்தங்களை மட்டுமே நாவலில் சொல்ல வில்லை.

மிலிட்டரிக்கார அப்பன் மீது கொண்ட வெறுப்பு, சின்ன வயது சுட்டித்தனம், பதின் வயது விருப்பங்கள், ஆண் பிள்ளை அதுவும் தலைமூத்த பிள்ளை என்பதால் தனது தங்கச்சிகள் மேல் அதிகாரம் செலுத்தும் ஆண் அதிகாரம், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு, அதன் காரணமான விடுதி வாழ்க்கை அனுபவங்கள், திருமண மாகாத இளைஞனாகத் தங்கி நகரத்தில் வாழ நேர்ந்த இரண்டாண்டு வாழ்க்கை, திரும்பவும் படிப்பைத் தொடர்ந்த போது,பெண்களுடன் சேர்ந்து படிக்க நேர்ந்த வாய்ப்பு, அப்பொழுதெல்லாம் பெண் ணுடல்கள் அவனைப் படுத்திய பாடுகள், பிறகு கிராமத்தில் வேலையின்றித் தவித்த தவிப்பு எனச் சொந்த வாழ்க்கையின் சித்திரங்களைத் தரும் சிலுவை அதன் உடன் பதிவாகத் தனது கிராமம் சார்ந்து தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளையும் சொல்லிக் கொண்டே வருகிறான்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பே வெள்ளைக்காரப் பாதிரிகளின் கவனம் பெற்ற புதுப்பட்டிப் பறையர்கள் தங்கள் தெருவை ஆர்.சி. தெருவாக மாற்றிக்கொண்டவர்கள். படிப்பின் ருசியை உணர்ந்தவர்கள். அதன் காரணமாக அந்த ஊரில் இருந்த மற்ற சாதிக்காரர்களின் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளானவர்கள் என்றாலும் பொருளாதார நிலையிலும் சமூக மதிப்பிலும் பெரிய அளவு மாற்றம் எதையும் அடைந்து விடாதவர்கள். பள்ளர்கள், பண்ணாடிகள், கிறஸ்தவ நாடார்கள், இந்து நாடார்கள், பிள்ளைமார்கள, நாயக்கர்கள் எனப் பல சாதியினரும் வாழும் அந்தக் கிராமத்தில் காங்கிரஸ் அரசியல், எம்.ஜி.ஆர். கட்சி என அறியப்பட்ட தி.மு.க.அரசியல், பொதுவுடைமைக் கட்சிகளான சி.பி.ஐ., சி.பி.எம்.,தோழர்கள் எனப் பலரும் இருந்த போதும் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த சிலுவை, கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில்லாமல் இருந்த போது நக்ஸல்பாரிகள் என அழைக்கப்பட்ட மார்க்சீய -லெனினியக் குழுக்களின் சிந்தனைகளோடு ஒத்துப் போகின்றவனாகவும், அதே நேரத்தில் அவர்களின் செயல்பாடுகளை முழுமையாகவும் ஏற்று அழித்தொழிப்புப் பணியில் இறங்கி விட விரும்பாத அரசியல் மனிதனாகவும் நாவலில் முன்னிறுத்தப்படுகிறான்.

முதல் பாகம் முழுக்க சிலுவைராஜின் கல்வித் தேடலும், வேலை தேடலும் விரிந்துள்ளன என்றால் இரண்டாம் பாகம் முழுவதும் அவனது பணிக்காலம் விரிந்துள்ளது. கிறிஸ்தவனாக இருந்த சிலுவை, இந்துப் பறையனாக மாறிப் பெற்ற பணியின் பலனும் வளமும் அவனது வாழ்க்கையை எவ்வளவு சுகம் மிக்கதாகவும் சுமை கொண்டதாகவும் ஆக்கியது என்பதுதான் இரண்டாம் பாகம். இந்த இரண்டாம் பாகத்தில் பதினோ ராண்டுகள் காரைக்காலில் வாசம்; வாசஸ்தலங்கள் எல்லாம் வாடகைவீடுகள். பதினோராண்டுகளில் ஏழு வீடுகள் மாறப் பற்பல காரணங்கள். பணியோ புதுவை அரசின் அண்ணா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர். 1986 ஜூலை முதல் நாவல் எழுதி முடித்த காலம் வரை (2003) பாண்டிச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் பணி ; அக்கல்லூரிக்கருகிலேயே கொஞ்சகாலம் வாடகை வீட்டில் வாசம் ; பிறகு சொந்தவீடு. கீழ்தளம்-மேல் தளம் என இரண்டு மாடி வீடு.

இந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் அவனது திருமணம் பெற்றோரின் முழுமையான சம்மதம் இல்லாமலேயே நடந்தேறி விடுகிறது. மனைவியும் பாண்டிச்சேரி அரசாங்கத்தில் வேலை செய்யும் திருநெல்வேலிப் பெண். சொந்தச் சாதியைச் சேர்ந்த பெண்தான். இவர்களுக்கு முதலில் இரண்டு பெண் பிள்ளைகள். அப்பெண் பிள்ளைகளில் இளையவள் திடீரென்று இறந்து போன துயரம் ஒருபுறம்; இன்னொரு மகள் மெத்தப் படித்து டாக்டராகி விட்ட ஆனந்தம் மறுபுறம். திரும்பவும் இறந்து போன மகளின் பெயரில் இன்னொரு மகளைப் பெற்றுக்கொண்ட தந்தையான சிலுவையின் குடும்ப வாழ்க்கை, ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கை யாக விரிகிறது. சைக்கிளில் வலம் வந்த சிலுவை பஜாஜ் சேட்டக்கில் பயணம் செய்து பலதடவை விபத்தில் மாட்டியிருக்கிறான். அந்த விபத்துகளுக்குப் பலநேரங்கள் காரணமாக இருந்தது அவனது குடிப் பழக்கம். மாடி வீடு கட்டி இயற்கையை ரசிப்பவனாகவும் எல்லாவகை உயிரினங்களையும் நேசிப்பவனாகவும் மாறி விட்ட சிலுவைராஜ் மாணவப் பருவத்திலிருந்தே கைவிடாத ஒன்று உள்ளது என்றால் அவனது படிப்பு தான். தொடர்ந்து வாசிப்பதும் எழுதுவதும் அவனுக்கு இன்னும் அலுத்துப் போகவில்லை. குறுக்கும் நெடுக்கு மாகத் தமிழ் இலக்கியங்களை வாசித்துப் பத்து விமரிசின நூல்களை எழுதி வெளியிட்டுள்ளான். என்றாலும் தமிழ் அறிவுலகம் அவனை பொருட்டாக நினைக்கவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. தான் பணி புரியும் கல்வித் துறையில் தன்னை விட ஒன்றும் தெரியாத குப்பைக் கூலங்கள் எல்லாம் அங்கீகாரத் தையும் அதிகாரத்தையும் பெற்று வலம் வருகின்றன. அப்படியெல்லாம் தன்னால் வர இயலாது என்று தெரிந்தாலும் அப்படி வருபவர்கள் பற்றிக் கோபம் இருக்கிறது.

செயல்பாடுகளைப் பற்றிப் பேசும் தத்துவங்களையும் மனிதர்களையும் பற்றிப் படிக்கவும் எழுதவும் செய்யும் சிலுவையால் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. எழுத்தில் அவன் காட்டும் நம்பிக்கையும் கோபமும் அவனது நடைமுறை வாழ்விலும் செயல்பாடுகளிலும் இருப்பதில்லை. எல்லாவற்றையும் கேலியாகவும் நக்கலாகவும் விட்டேத்தியாகவும் பார்த்து ஒதுங்கி விடும் இயல்புகள் தொடக்கத்திலிருந்தே கைவரப்பட்ட சிலுவை ராஜுவுக்கு தனது நியாயங்கள் என்று பலவும் உள்ளன. ஆனால் அவனைச் சுற்றி இருக்கும் சமூக மனிதர்களும் அமைப்பின் நடைமுறைகளும் அவனது நியாயங்களுக்கு மாறாக இருக்கின்றன என முடித்துக்¢ காட்டுகிறார்¢ நாவலாசிரியர் ராஜ் கௌதமன். இரண்டாம் பாகமான காலச்சுமை இப்படி முடிகிறது.

கொஞ்ச வருஷமாகவே இப்பிடித்தான் மனிதர்களை விட மற்ற ஜீவராசிகளைப் பற்றித்தான் அதிகமாகப் பேசி வருகிறான். சாதி ஒழிப்பு, வர்க்கபேத ஒழிப்பு, பெண் விடுதலை பற்றி யெல்லாம் அதிகம் பேசுவதில்லை. கேட்டால் அந்த மாதிரி ஒழிப்புகளும் விடுதலையும் தான் வாழப் போகிற கொஞ்ச காலத்தில் நடக்கப் போறது கெடையாது. அதனால அதப்பத்தி இன்னும் ரொம்பக் காலம் உசிரோட வாழப் போறவங்க பேசட்டும்னு சொல்வான். புரட்சி பண்ணுவதற்கு ஆட்கள் வந்து போயிட்டுத் தான் இருக்கப் போறாங்க. சிலுவையைப் பொறுத்தவரை காலச்சுமையை இறக்கி வச்சாப் போதும்னு ஆயிடுச்சு.

நாவல்கள் எழுதக் காரணங்கள்

125 ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழ் நாவல் பாரம்பரியத்தில் சிலுவை ராஜ் சரித்திரம், காலச்சுமை என்ற இரண்டு நாவல்களின் வழியாகத் தனது வரலாற்றை எழுதி வைத்துவிட வேண்டும் என ராஜ்கௌதமன் நினைத்திடவும் அதைச் செயல் படுத்திடவும் தூண்டிய காரணிகள் எவைகளாக இருக்கும்? காரணிகள் பல இருக்கலாம் என்றாலும் மூன்று முக்கியமான காரணங்களைச் சொல்லத் தோன்றுகிறது. ஒன்று இலக்கியவெளி சார்ந்தது; இரண்டாவது அவரது குடும்ப உறவு சார்ந்தது; மூன்றாவது காரணம் சமூக அமைப்பு மேல் அவருக்கு இருந்த கோபம் சார்ந்தது என அவற்றைக் கணிக்கலாம். இக்கணிப்புகள் ஒவ்வொன்றுக்குமான ஆதாரங்கள் நாவல்களுக்கு வெளியில் இருப்பதாகக் கருத வேண்டியதில்லை. நாவல்களுக்குள்ளேயே கிடைக்கின்றன.

உலக நாவலாசிரியர்கள் பலரது நாவல்களை வாசித்துப் பழகியிருந்த ராஜ்கௌதமனாகிய சிலுவை ராஜுக்கு தாம் ஒரு படைப்பாளியாக வேண்டும் என்ற உந்துதல் இருந்துள்ளது . ஆனால் அவரது நண்பரும் பின்னாளில் பல விமரிசன நூல்களை எழுதி வெளியிட்டவருமான சார்லஸின் கறாரான விமரிசனத்தால் கதைகள் எழுதும் ஆசையைக் கை விட்டவன் சிலுவை (கார்லோஸ் என்கிற தமிழவன்). அவனிடம் இருந்த அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் அணுகிப் படிக்கும் பழக்கத்தையே அவர் பாராட்ட , அவரது பழக்கம் அவனை விமரிசகனாக ஆக்கி விட்டது. ஒரு பக்கம் வருத்தமானது என்றாலும் இன்னொரு பக்கம் அதுவே நாவல் எழுதத் தூண்டு கோலாகவும் இருந்திருக்கலாம். தொடர்ந்து விமரிசனத்திற்காக வாசித்த நாவல்கள் பெரும்பாலும் குடும்ப வரலாறாகவும் எழுத்தாளர்களின் மூதாதையர்களின் வரலாறாகவும் இருந்தது காரணமாக தனிமனிதர்களின் வரலாறுகளே நாவல்களாக எழுதப்படுகின்றன என்ற உண்மை புலப்பட்டிருக்கலாம். எல்லோரும் அவனவன் குடும்பக் கதைகளையே எழுதி விடுகிறான்; நாம் அதிலிருந்து விலகி நமது கதையையே எழுதி விடலாம் என முடிவு செய்திருக்கலாம். தலித்துக்களின் புனைகதைகளும் பெண்களின் புனைவுகளும் கடந்த காலத்திற்குள் செல்லாமல் நிகழ்காலத்தையே கவனப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த காலத்தின் சோகங்களையும் அடிமை நிலையையும் சொல்லுவதைவிட நிகழ்காலத்தின் விழிப்பையும் தவிப்பையும் சொல்லுவது படைப்பின் நோக்கத்தைக் கவனப்படுத்தும் என்ற நம்பிக்கை பல காரணங்களில் ஒன்று.

இரண்டாவது காரணமாக சிலுவைக்குஅவனது தங்கையுடன் இருந்த போட்டி உணர்வைச் சொல்லலாம். விமரிசன உலகில் தலித் பண்பாடு, தலித் அரசியல்.தலித் இலக்கியம் என்று பேசிய சொல்லாடல்கள் தன் வரலாற்றை அதன் வலிமையான வடிவமாக முன் மொழிந்து கொண்டிருந்தன. அதன் மாதிரிகளுக்குத் தமிழில் அவரது தங்கை பாமாவை (நாவலில்ஜெசிந்தா) விட்டால் கன்னட மொழிபெயர்ப்புகளுக்கும் மராத்திமொழி பெயர்ப்புகளுக்கும் தான் போக வேண்டியிருந்தது. எனவே தானே அதற்கான மாதிரி எழுத்தை உருவாக்கிக் காட்டலாம் என்று கருதி இவ்விரு நாவல்களையும் எழுதியிருக்கலாம். தனக்கு அடங்கி நடந்து கொண்டு தனது பட்டாளத்துத் தகப்பனின் பிரியத்துக்கு உரியவளாக இருந்த தங்கை, தன்னைவிட இலக்கியத்தில் பிரபல்யம் ஆகிவிட்டது ஒன்றும் அவனுக்கு உவப்பாக இருந்ததில்லை.அவளைக் காட்டிலும் தான் எல்லாவகையிலும் மேலானவன் என்ற எண்ணமும் கர்வமும் அவனுக்கு உண்டு.தான் தலை மூத்த ஆண் பிள்ளை என்ற ஆணவம் சிலுவை ராஜுக்கு உண்டு என்பதற்கு அவனது ஜீவிய சரித்திரத்தில் ஆதாரங்கள் நிறைய உள்ளன. எனவே ‘அவளை விடச் சிறந்த தன்வரலாற்று நாவலை நான் எழுதிக் காட்டுவேன’ என மனதிற்குள் ஏற்படுத்திக் கொண்ட சவாலின் வெளிப்பாடுகளாகக் கூட இந்நாவல்கள் இருக்கலாம்.

ராஜ் கௌதமன் என்னும் தனிமனிதனை மையமாகக் கொண்டு யோசிக்கும் போது இப்படி யெல்லாம் கூறத் தோன்றினாலும் இந்நாவல் எழுதப்பட்டதற்கான நிகழ்காலச் சமூகக் காரணம் ஒன்று இருப்பது தோன்றாமல் போகாது. இந்தியச் சமூகத்தின் கேடு கெட்ட சமூக அடித்தளமான சாதியக் கட்டமைப்பு பற்றிய புரிதலும் அதன் மீதான விமரிசனங் களும் தான் அந்த நிகழ்காலக் காரணம். இந்தக் காரணம் தான் ராஜ்கௌதமனின் இரண்டு நாவல்களையும் இந்த நூற்றாண்டின் நாவல்களாக ஆக்கியுள்ளது என்று கூடச் சொல்லலாம். எல்லா வெளிகளிலும், எல்லாருடைய மனங்களிலும், பரவும் உணர்வுகளிலும் தன்னை மறைத்துக் கொண்டு திரியும் சாதியுணர்வு மற்றும் சாதி மேலாண்மை தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதை உணர்த்து வதற்காகவும், அச்சாதிய உணர்வு எத்தகைய கொடூர முகங்களுடன் அலைந்து கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகவும் இந்நாவல்களை ராஜ்கௌதமன் எழுதியிருக்கலாம். தலித்இலக்கியம், தலித் அரசியல், தலித் பண்பாடு என்ற சொல்லாடல்கள் மேலெழுந்து எழுப்பிய அலைகள் இந்திய சமூகத்தின் அனைத்துப் பரப்பையும் தலித் நோக்குடன் பார்க்க வைத்துள்ள சூழலில் எழுதப்பட்ட இந்நாவல்களுக்கு அந்த நோக்கங்கள் இருந்தன என்று சொல்ல கூடுதல் ஆதாரங்களும் விளக்கங்களும் வேண்டியதில்லை.

ஜீவாத்மா, பரமாத்மா எனப் பிரித்து அவற்றின் பயணங்கள் பற்றிப் பேசிய இந்திய ஆன்மிக வாழ்வும், வானத்துப் பறவைகளைப் போலவும் கானகத்துப் புல்பூண்டுகளைப் போலவும் வாழ்வது பற்றியும், இறைத்தூதர்களின் வருகை, பரலோக ராஜ்ஜியத்தின் கதவுகளைத் தட்டுதல், நியாயத் தீர்ப்புக்களின் போது தங்களை ஒப்புக் கொடுத்தல் பற்றியும் பேசிய மேற்கத்திய ஆன்மீக வாழ்வும் எல்லோருக்கும் உரியதாக இல்லை; அவ்வாழ்விற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுக்கள் கூட இந்தியாவில் சாதி சார்ந்து தான் கிடைக்கின்றன என்பது புரிந்து போன முதல் பாடம். அதே போல் கடந்த நூற்றாண்டின், மக்கள் திரள் கனவான ஜனநாயகம் மற்றும் சமத்துவப் பண்புகள் என்பனவெல்லாம் வெளி முக அடையாளங்களாக - மனிதாபிமான அரசியல் முகம், மொழி இன விடுதலை அரசியல் முகம், வர்க்கபேத ஒழிப்பு அரசியல்முகம்-எனப்பல முகங்களைப் போட்டுக் கொண்டாலும் அதன் அக அடையாளங்களாக இருப்பவை சுயசாதிமோகமும், சாதிய மைப்புப் படிநிலைகளின் கடைசி இருப்பு பற்றிய கவனமும் தான் என்பதும் புரிந்து கொண்ட இரண்டாவது பாடம். ஒருவனின் வாழ்க்கை இப்படிப் பல பாடங்களை அவனுக்கே கற்றுத் தருகின்ற போது அவை அனைவருக்கும் சொல்லப்பட வேண்டியவைகளாக மாறிவிடுகின்றன. தனது வாழ்க்கை அனுபவங்களின் வழியாகப் புரிந்து கொண்ட உண்மை களை அனைவருக்கும் சொல்லியாக வேண்டும் என்ற உந்துதல்கள் தான் புனைகதை எழுத்தாளர்களை உருவாக்குகிறது .

ராஜ்கௌதமன் இந்த நாவல்களை எழுதுவதற்குச் சொல்லப்பட்ட மூன்று காரணங்களில் மூன்றாவது காரணமே முக்கியமானதாகவும் நிகழ்கால இலக்கியப் போக்கோடு பொருத்த முடையதாகவும் இருக்கிறது. அக்காரணம் தான் இந்த நாவல்களை இந்த நூற்றாண்டின் நாவல்களாக ஆக்குகின்றன.சேரிகளும் சேரிகளின் மக்களும் பழைய சமூகத்தில், ஆதிக்க சாதிகளின் திமிர், ஆணவம், மேலாண்மை, ஒடுக்குமுறை ஆகியவை செயல்படும் விளையாட்டுக் களங்களாக இருந்தன. இப்போது உருவாகியுள்ள புதிய சமூக அமைப்பில்- ஜனநாயக சமூக அமைப்பில்-அவர்களின் கருணை, இரக்கம், தியாகம், கபடம் ஆகியன வற்றின் சோதனைக் களங்களாக மாறியுள்ளன.இந்த மாற்றங்கள் சேரிகளுக்கான விடுதலையைக் கொண்டு வந்துவிடும் என முதலில் சொல்லப்பட்டது; நம்பப்பட்டது. ஆனால் காத்திருந்த காலம் அந்த நம்பிக்கைகளைச் சிதறடித்து விட்டது. அந்த வழிமுறைகளின் போக்கில் விடுதலையின் வெளிச்சம் தூரத்தில் கூடத் தெரியவில்லை என்பதைச் சிந்திக்கின்ற ஒருவன் மிகச்சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். சொல்லப் போனால் சாதியப் பிரச்சினை ஒன்றும் தலித்துகளின் பிரச்சினை மட்டுமல்ல; அது மற்றவர்களின் பிரச்சினையும் தான். இந்திய மனிதன் ஒவ்வொருவனையும் சகமனிதனை மதிக்கின்ற வனாக ஆகவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு தகர்க்கப்பட வேண்டியதும், அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டியதும் விடுதலையை விரும்பும் ஒவ்வொருவரின் விருப்பமாகவும் இருக்க வேண்டும். தலித்துகளுக்கு மட்டும் அல்ல தலித் அல்லாதவர்களுக்கே இதை உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தலித் இலக்கிய வெளிகளில் கௌதமனின் நாவல்கள்

சாதி இருப்பு, சாதியப்படிநிலைகளின் இயங்குநிலை, சாதிமேலாதிக்கம் என்பனவற்றை உணர்ந்து கவனப்படும் எழுத்துக்கள், ‘தலித் எழுத்துக்கள்’ என்னும் அடையாளத்தைத் தனதாக்கிக் கொண்டு அதன் எல்லை களுக்குள் நின்று வாசிக்கும்படியும் விமரிசனம் செய்யும்படியும் நிர்ப்பந்திக்கின்றன.

ஆர்.சி. தெருவைச் சேர்ந்த ‘கத்தோலிக்கக் கிறித்தவன்’ என்பதற்காகவே தனக்குக் கல்வி வாய்ப்பும் விடுதி வாய்ப்புக்களும் கிடைத்தன என நம்பிக்கொண்டிருந்த சிலுவைக்கு சாதியின் குரூரமுகம் வெளிப்பட்ட இடமும் வெளிப்படுத்திய மனிதர்களும் அவனுக்கு அடையாளம் தந்த சபையும் அச்சபையைச் சார்ந்த மனிதர்களும் தான். பி.எஸ்.ஸி. சுவாலஜி பட்டத்தேர்வில் முதல் வகுப்புப் பெற்றுத் தேர்வு பெற்றவன் சிலுவை. ஆனால் அவன் படித்த சென் சேவியர் கல்லூரியில் தமிழ் ட்யூட்டராக வேலை கிடைத்தது. தனக்கு வேலை கிடைக்கக் காரணம் தமிழைப் பிழையின்றி எழுதும் வல்லமை தனக்கு இருந்தது தான் என அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அது காரணமல்ல என்பதும் கல்லூரியில் எந்தெந்த சாதியினர் பதவிகளைப் பிடிப்பது என்பதில் இருந்த போட்டியே அவனுக்கு அந்தப் பணியைப் பெற்றுத் தந்தது என்பதும் வேலைக்குச் சேர்ந்த பின்பே தெரிகிறது.

அடுத்த ஆண்டு சுவாலஜி டெமான்ஸ்றேட்டராக வாய்ப்புக் கிட்டியதற்கு அவனது முதல் வகுப்புப்பட்டமே காரணம் என்பதாக வெளியில் சொல்லப்பட்டாலும் உள்ளே செயல் பட்டது இரண்டு சாதிகளுக்கு இடையில் நடந்த போட்டிதான் என்பது பின்னர் புரிய வருகிறது. எல்லா இடங்களிலும் எல்லா வெளிகளிலும் தங்கள் சாதியினரை இருத்தி வைத்துப் பார்க்க விரும்பும் ஆதிக்க சாதியினர் அந்த வாய்ப்பு இல்லாத போது தங்கள் கருணையை வெளிப்படுத்தும் மனிதர்களாக சமூகத்தின் கடைநிலையில் உள்ள தலித்துக்களை வைத்திருக்கிறார்கள் என்பது புரியத் தொடங்குகிறது. அங்கு தொடங்கிய புரிதல் தொடர்ந்து வீரியம் நிரம்பிய வீச்சாக மாறிக்கொண்டே போகிறது. சிலுவை சந்தித்த நேர்காணலில் அமர்ந்திருந்த மனிதர்கள், அவனோடு பணியாற்றிய- அவர்களில் சிலர் அவனது சாதியைச் சார்ந்தவர்கள், பலர் சாதி அடுக்கின் மேல் தட்டுக்களில் இருப்பதாக நம்புபவர்கள்- சக மனிதர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட பதவிகளுக்குரிய சட்டப்படி,எல்லா வேறுபாடுகளையும் தாண்டிச் செயல்பட வேண்டிய- செயல்படுவதாகப் பாவனை செய்யும் - துறைத் தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள், கல்வித்துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் இயங்குவது சாதியத் தன்னிலைகளின் விதிகளின் படிதான் என்பது அவனுக்குப் புரிகிறது. அதேபோல் சாதி மதங்களைக் கடந்து இயங்கவேண்டிய தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளும் அறிவுலகமும் இயங்குவதும் சாதியக் கட்டுமானங்கள் உருவாக்கி வைத்துள்ள பொய்யான - நம்பிக்கை சார்ந்த-விதிகளின்படி தான் என்பதும் புரிகிறது. இந்தப் புரிதல்களும், குடும்ப வாழ்வில் அவன் சந்தித்த மரணங்கள் தந்த துயரங்களும்- காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு அவளது கணவனாலேயே கொலை செய்யப் பட்ட தங்கையின் மரணம், திடீரென்று காரணங்கள் இன்னதென்று தெரியாமலேயே செத்துப் போன மகளின் துயரம் என எல்லாம் - சேர்ந்து அவனைச் செயல்பாடுகள் இணைந்த வாழ்க்கைப் போக்குகளிலிருந்து விடுபட்டவனாக மாற்றி விடுகிறது.

சிலுவைராஜ் சரித்திரத்தில் சாதியிருப்பின் கணங்கள் புரியத் தொடங்கிய போது சிலுவை மாணவன். தனது தகப்பன் மீது காரணம் ஏதுமின்றிக் கோபத்துடன் நிழல் யுத்தம் செய்பவன். மாறிக் கொண்டிருக்கும் புதிய உலகத்தின்¢ புரியாத் தன்மைக்குள் பயணம் செய்து கொண்டிருக்கும் இளைஞனும் கூட. காலச்சுமையிலோ அதன் ஒவ்வொரு கணத்தையும் கண்டு அதன் பொய்ம்மைகளையும் பாவனைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் கோபம்- ஏமாற்றம், தவிப்பு-சமரசம், ஆத்திரம் - இயலாமை என மாறிமாறிப் பயணம் செய்து இளமையைக் கழித்து நடுத்தர வயது அறிவாளியாக மாறுபவன்.

இத்தகைய பயணம் ஒருவனைத் தானுண்டு தன் வேலையுண்டு என மாற்றிக் குடும்ப எல்லை எனும் கூட்டுக்குள் அடைத்து விடும். அகவயம் சார்ந்த உலகிற்குள் சஞ்சரிக்கத் தொடங்கிப் புறவய நிகழ்வுகளின் மேல் நம்பிக்கையற்றவனாக மாறிவிடுவதும், அவைகளின் மேல் நம்பிக்கைகொண்டு செயல்படுகிறவர்களைக் கேலியுடன் பார்த்துப் புன்னகையுடன் நகர்ந்துவிடுபவனாக ஆக்கி விடுவதும் அதன் அடுத்த கட்டம்.ஒதுங்கிப் போகும் தன் மீது விமரிசனங்கள் எழுவதை அவன் மனது தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும். சில நேரங்களில் அந்த விமரிசனங்கள் அவனை உறுத்தத் தொடங்கி விடும். அதற்கான பதில்கள் அவனிடம் இருக்கும்; ஆனால் சொல்லத் தயக்கமும் இருக்கும். அந்தத் தயக்கத்திற்குக் காரணம் இவையெல்லாம் அவனது நிலைபாட்டை நியாயப் படுத்தும் வாதங்கள் தானோ என்ற குழப்பம்தான்.

தனக்குப்பல வாய்ப்புக்கள் வராமல் போனதற்குக் காரணங்கள் நானாக இருக்கக் கூடும் என்று மனிதத் தன்னிலைகள் பொதுவாக நினைப்பதே இல்லை ;தனக்கெதிராக எதிராளிகள் பலர் சதி செய்கிறார்கள் என நினைப்பது ஒரு வகை எண்ணம். எல்லாம் நேரமும் காலமும் என விதியின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தைப் போடுவது அல்லது குற்றம் சாட்டுவது இன்னொரு வகை வெளிப்பாடு. வெளியில் இருக்கும் சமூகமும் அதற்குள் செயல்படும் சீர்கேடுகளும் தான் இப்படிக் கோளாறாக நடக்கக் காரணங்களாக இருக்கின்றன என்று காரணங்கள் காட்டுவது இன்னொரு வகை வெளிப்பாடுதான். அறிவு சார்ந்து சிந்திப்பவர்களாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் பலரின் வெளிப்பாடுகள் இப்படித்தான் இருக்கின்றன. ஆனால் அதே மனிதன் அல்லது தன்னிலை சாதிய அடுக்கில் கடைசியில் இருப்பதாக நம்பும் தலித்தாக இருக்கும் பட்சத்தில் மொத்தக் காரணங்களும் கோபமும் சாதி அமைப்பின் மீது திரும்பி விடுவது தவிர்க்க முடியாத ஒன்று.அப்படித் திரும்பி விடும் கோபத்தில் நியாயம் இல்லை என்று சொல்வதற்கில்லை. சிலுவையின் எண்ணங்களும் நம்பிக்கைகளும் கோபங்களும் அந்தத் தடத்தில் தான் செல்லுகின்றன என்பது நாவல் முழுக்கப் பரவிக் கிடக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக சிலுவை ராஜ் சரித்திரம் சென்று முடிந்து போய்விடுகின்றது. ஆனால் காலச்சுமையை அவ்வாறு நிகழ்வுகளின் தொகுப்பாக சொல்ல முடியவில்லை.காரைக்கால் வாழ்க்கை வரை நிகழ்வுகள் அடுக்கப்படுகின்றன என்றாலும், பின் பாதியில் குறிப்பாகப் பாண்டிச்சேரி வாழ்க்கையின் பதினைந்து ஆண்டுகளை நிகழ்வுகளின் தொகுப்பாக இல்லை. அதற்குப் பதிலாக நபர்கள் சார்ந்து நியாய வாதங்கள் எழுப்பப் படுகின்றன. நியாயவாதங்கள் எழுப்பக் காரணங்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் சிலுவை யின் முன்னாள் நண்பர்களும் அவ்வப்போது வந்து செல்லும் படைப்பாளிகளும் தான். முன் வைக்கப் படும் நியாயவாதங்கள் அனைத்தும் அவன் மீது, அவனது நண்பர்களும் அவனது மனமும் எழுப்பிய கேள்வி களுக்கான விடைகள் தான் எனலாம்.

பொதுப் புத்தியில் காணப்படும் பலரின் அபிப்பிராயங்களுக்கெல்லாம் போகிற போக்கில் பதில் சொல்லி விட்டுப் போகும் சிலுவை, குறிப்பாக இருவரது விமரிசனங்களுக்கு நிதானமான பதில்களை முன்வைக்கிறான். அவனோடு இளமை முதலே பழகி அவனைப் புரிந்து வைத்திருந்த இவனோடு ஒத்த சிந்தனையையும் கருத்துக்களையும் கொண்டிருந்த நண்பர்கள் அவர்கள். அவனோடு இலக்கிய வெளிவட்டம் இதழில் பங்கேற்று சமூக மாற்றத்திலும் தீவிர இலக்கியத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த டெய்லர் குருசாமி ஒருவர்; இன்னொருவர் பாதிரியார் பிராங்ளின். பாதிரியார் பிராங்ளின் அவனது ஊர்க்காரர். அவர் வழக்கமான பாதிரியாரே அல்ல. வெள்ளை அங்கியைக் கைவிட்டுவிட்டு கைலி வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாக மக்கள் பணியில் இறங்கியவர். அடித்தளமக்களின் விடுதலைதான் உண்மையான இறைப்பணி எனச் சொன்ன விடுதலை இறையியல் என்னும் தத்துவத்தைப் பின்பற்றி வாழ்க்கையையும் பணிகளையும் அமைத்துக் கொண்டவர். டெய்லர் குருசாமி , பாதிரியார் பிராங்ளின் ஆகியோரின் விமரிசனங்களை அவ்விருவரின் பார்வை மற்றும் விமரிசனங்கள் என்று எடுத்துக் கொள்ளாமல் அறிவுத் தளத்தில் செயல்படும் சிந்தனையோட்டம் என எடுத்துக் கொண்டு சிலுவை பதில்களை முன்வைக்கிறான். அந்தப் பதில்கள் நீதிகேட்டு நிற்கும் வாதங்களாக இல்லாமல் தனது நீதி இவைதான் என நம்பிக்கையுடன் விரிந்துள்ளன ; எனது நியாயங்களை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்ற தீர்மானமும் அதில் வெளிப்படுகின்றன.

சிலுவை தரும் அந்தப் பதில்கள் ஒரு தனிமனிதனின் இப்போதைய இருத்தலுக்கான காரணங்களாக இருப்பதுடன் தமிழ்நாட்டின் அறிவு மற்றும் அரசியல் சூழல்களில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுவனவாகவும் உள்ளன என்பது கூடுதல் கவனத்துக்குரியது. வறுமையை ஆராதிக்கும் மனம், நடுத்தரவர்க்க வாழ்க்கையை வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளும் பாவனைகள், இலக்குகள் இல்லையென்றாலும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என நம்பும் வேடிக்கைகள், சாத்திய மற்றவைகள் என அறிந்த போதும் விட்டுவிடத் தயாரில்லாத மனநிலை எனச்சிலவற்றை அடையாளப் படுத்தி அதற்கான பதில்களை முன் வைக்கிறான் சிலுவை. பொதுவாக இந்த அடையாளங்கள் இடதுசாரிகளின் அடையாளங்கள் என்றாலும் போராட்டங் களையும் விடுதலையையும் நேசிக்கின்றவர்களின் அடையாளங்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம். போராட் டங்களையும் விடுதலையையும் நேசிப்பவர்கள் தனிமனிதனின் அந்தரங்க மற்றும் குடும்ப வெளிகளின் சிக்கல் களையும் நியாயங்களையும் புரிந்து கொள்ளாமல் பொதுநியாயங்களின் ஆதாரவாளர்களாகவே இருக்கிறார்கள் என்பது சிலுவை முன்வைக்கும் பதில்களாகவும் குற்றச்சாட்டுக்களாகவும் இருக்கின்றன.

தமிழக அரசியல் சூழலில் வர்க்கம் சார்ந்த சொல்லாடல்கள் மட்டும் அல்லாமல் மொழி, இனம், தேசம் போன்றவைகள் கூட பொதுநியாயங்களின் பேரில் தான் விவாதிக்கப் படுகின்றன என்பது சிலுவையின் மேல் வாதங்களாக இருக்கின்றன.பிராமணர்கள் தங்களிடம் அறிவு இருப்பதால் அது வேறிடத்தில் இருந்தாலும் ஆதரிப்பவர் களாகவும், பாராட்டுகிறவ ர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவனாக இருக்கிறான் சிலுவை. இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் படைப்பாளிகளிடம் இருக்கும் மொழிப்பற்று என்பது சுயநலம் சார்ந்த ஒன்றுதானே ஒழிய மொழி வளர்ச்சி சார்ந்ததல்ல என்பதும் சிலுவையின் விமரிசனங்களாக இருக்கின்றன.

நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்து கொண்டிருக்கும் தன்னிடம் பலரிடம் உள்ள போலித் தனங்களும், தன்னிடம் இல்லாத ஒன்றை அடைவதற்கான போட்டி மனநிலையும் கிடையாது என்பதில் அவனுக்குத் திருப்தி இருக்கிறது. சமூகத்தின் பொது ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுத் தன்விருப்பமான குடிப்பழக்கத்தை குற்றச்செயலாகக் கருதவில்லை என்பதில் அவனுக்குச் சந்தோசம் இருக்கிறது. பெண்களைப் பற்றிய தனது பார்வைகள் மகாப் புனிதமானவை என்று காட்டிக் கொள்வதில் விருப்பமில்லை என்பதையும் சொல்லி விடுகிறான். மாணவர்களுக்குத் தேவையான கல்வியை தரக் கூடிய சிறந்த ஆசிரியனாகத் தான் இல்லை என்ற போதும் மாணவர்களை ஏமாற்றவில்லை என நம்புகிறான்.

தன் வாழ்க்கை குறித்த விமரிசனங்களுக்கான பதில்களாகவும், தன்னை விமரிசிக் கிறவர்களின் நியாயமற்ற குற்றச் சாட்டுகளின் பின்னணியில் செயல்படும் அறியாமையை அம்பலப்படுத்தும் புலப்பாட்டு நெறியாகவும் இருக்கும் அந்த பகுதிகள் தான் நாவலின் பக்கங்களை இறுக்கமான தளத்திற்குள் நகர்த்தியுள்ளன என்று கூடச் சொல்லலாம். தனிமனிதனின் தன்வரலாறு என்ற தளத்திலிருந்து நகர்த்தி சமகால வாழ்வில் தனிமனிதன் தன் சொந்த அடையாளங்களை முன்வைத்துப் பேச வேண்டிய சூழல்களும் சுழல்களும் நிழல்களாகப் பின் தொடர்கின்றன என்பதைக் காட்டும் பகுதிகள் அவை. இத்தகைய பக்கங்கள் தமிழ்நாவல்கள் எதிலும் காண முடியாத பக்கங்கள் என்றே நினைக்கிறேன்.

அந்நியனாக நினைத்துக் கொண்ட தன்னிலை

சிலுவை ராஜின் சரித்திரத்தைச் சொல்லுவதின் வழியாக ராஜ்கௌதமன், தனது வாழ்க்கைக் கதையைத் தானே வெளியிலிருந்து அந்நியனாக நின்று சொல்ல வேண்டும் என்று விரும்பியுள்ளார் என்பது நூலின் பின் அட்டைக் குறிப்பு தரும் செய்தி. ஆனால் அந்த விருப்பம் முழுமையாக இந்த நாவல்களில் நிறைவேறியுள்ளன என்று சொல்வதற்கில்லை.அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவான மொழி நடை அவருக்கு வாய்த் திருக்கிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் தேர்வு செய்துள்ள நிகழ்வுகள் அந்த நோக்கத்திற்கு எதிராக நிற்கின்றன என்பதும் அதன் மறுதலையான உண்மை.

மொழிநடையும் கூட சிலுவையின் இளம்பிராயத்தினைச் சொல்லும் பொழுது காட்டிய விலகலைப் பின்பகுதியில் இழந்து நிற்கிறது என்றே சொல்லலாம். சிலுவைக்கும் அவனது தகப்பனுக்குமான உறவைப் பற்றிய குறிப்புக் களை எழுதும் பொழுதெல்லாம் விலகல் எதுவுமின்றிக் கோபம் கொப்பளித்து வழிவதைக் காண முடிகின்றது. தன் பக்க நியாயங்களை தர்க்க ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் சொல்லும் சிலுவைக்கு தன் தகப்பனின் செயல்களில் ஓரிடத்திலாவது நியாயங்கள் இருக்கும் என யோசிக்க முடிவதில்லை என்பது ஆச்சரியம் தான். அவர் வளர்ந்தவிதம் உருவான பின்னணி சார்ந்து பார்ப்பதற்குச் சிலுவை முயன்றதாகவே தெரியவில்லை. தனது பெண் குழந்தைகளிடம் காட்டும் பிரியத்தைத் தன் மீது காட்டாமல் போனதற்கான காரணங்களைச் சிலுவை அசை போடவே இல்லை என்பது விலகல் மனோபாவமாகத் தெரியவில்லை.முதல் பாகத்தில் சிலுவையின் எதிராளி யார் என்று கேட்டால் எந்த வாசகரும் அவனது பட்டாளத்து அப்பன் தான் என்று உறுதியாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் பற்றிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.

சிலுவையின் தன்னிலை, குடும்பம், விருப்பங்கள் என்பனவற்றின் மீது விமரிசனமற்ற பார்வையையும் மற்றவர்களின் நடவடிக்கைகள், கருத்துக்கள், மனநிலை போன்றவற்றின் மீது விமரிசனப் பார்வையையும் வெளிப்படுத்துவதற் கேற்பவே நிகழ்வுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாவலின் கதைப் பகுதிகளாகத் தேர்வு செய்யப்பட்டு வரிசைப் படுத்தப்படும் நிகழ்வுகளும் அவற்றில் கதைசொல்லி இடம் பெறும் முறையும், அவனது உணர்வு வெளிப்பாடுகளும் இணைந்து, தனது கதையைச் சொல்லும் சிலுவைராஜ் அந்தக் கதையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பதைத் தான் காட்டுகின்றன. காலச்சுமையின் பெரும்பாலான நிகழ்வுகள் விலகலின்றியே உள்ளன. சிலுவை ராஜ் சரித்திரத்திலும் கூட விலகலற்ற சில நிகழ்வுகள் உள்ளன. பாளையங் கோட்டையில் தற்காலிகப் பணியில் இருந்த போது அவனடி நடவடிக்கைகளும் எண்ணங்களும் அவனது கோணத்திலிருந்து மட்டும் தான் சொல்லப்படுகின்றன என்பது ஓர் உதாரணம்.
சிலுவை ராஜ் சரித்திரத்தில் சிலுவையின் கதாபாத்திரத்திற்குத் தொடர்பற்ற பலரைப் பற்றிய குறிப்புக்களின் போது மொழி நடை முற்றிலும் விலகல் நிலையை மேற்கொண்டுள்ளது. ஆனால் அவன் படிப்பு முடித்து வேலையற்றவனாக அலையும் பருவத்தை பற்றிய சித்திரிப்பின் போது மொழிநடை அவன் மீது பரிதாப உணர்வையும் இரக்க உணர்வையும் உண்டாக்க முயன்றுள்ளது. இத்தகைய முயற்சிகள் விலகலுக்குப் பதிலாக ஈர்ப்பையே உண்டாக்கவல்லன. மொத்தமாகச் சொந்த கிராமத்தை மறந்து நகரவாசியாகிவிடப் போகும் சிலுவை உண்மையில் கிராமத்தின் மீது பற்றும் கிராமத்து மனிதர்களைப் பற்றிய நினைவுகளும் நிரம்பியவன் என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்ட பகுதிகள் போல நாவலில் பல பகுதிகள் அடுக்கப்பட்டுள்ளன. பலரைப் பற்றிய சித்திரங்கள் தீட்டப்படுவதின் காரணங்கள் நாவலின் மைய நோக்கத்திலிருந்து விலகிய வனாகவே இருக்கின்றன. அப்படி எழுதுவது குறையல்ல என்றாலும் அந்த எழுத்து முறை நாவல் முழுவதும் கடைப் பிடிக்கப் படவில்லை என்கிற போது குறையாகவே கணிக்கப்படும். இப்படியான நிகழ்வுத் தேர்வும் மொழி நடையும் குறைகள் எனக் கருத வேண்டியதில்லை ; தன் வரலாற்று நாவலில் அவை தான் சாத்தியங்கள்.

தனதுசார்பும் தனது இடமும் எந்தக் கணத்திலும் எழுத்திற்குள் வந்து விடக்கூடாது என்று கருதி தன்னைப் படர்க்கையில் நிறுத்திக் கொண்டு கதை சொல்வது நவீனத்துவ எழுத்தின் விரும்பத் தக்க உத்தியாகக் கருதப்பட்டது. படர்க்கை கூற்றில் சொல்லப்படும் புனைகதையைக் கடவுளின் இடத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு சொல்லப் பட்ட கதை எனவும் அத்தகைய கதைகளில் ஆசிரியனின் சார்போ இடமோ வெளிப் படாது என்றெல்லாம் சொல்லப்பட்டது. அப்படிச் சொல்லப்படும் புனைவுகளிலும் கூட கதை சொல்லியின் இடம் அழிந்து போவதில்லை. நுட்பமான வாசிப்பில் அவனது சார்பு வெளிப்படத்தான் செய்கின்றன என்பதை நவீன மொழியியல் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழில் அறுபதுகள் தொடங்கி எழுதப்பட்ட பல நாவல்கள் கதை சொல்லியை மறைத்து விட்டு படர்க்கை கூற்றில் சொல்லப் பட்டவைகளாக இருந்த போதிலும் அப்புனைவுக்குள் கதை சொல்லியின் இடமும் அவர்களின் சார்பும் வெளிப்படத்தான் செய்கின்றன. அதிலும் குறிப்பாக வட்டார நாவல்களாகவும் கிராமத்தின் பொருளாதாரப் பண்பாட்டுக் கட்டமைப்பின் சிதைவைப் பேசும் நாவல்களாகவும் எழுதப்பட்டுள்ள ஏராளமான நாவல்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். தமிழின் சிறந்த நாவலாசிரியர்களாக அறியப்படும் அவர்கள் சொன்ன கதைகள் யாருடைய கதைளோ போல வாசகனுக்குத் தோன்றி னாலும் மறுவாசிப்பில் அந்த எழுத்தாளர்களின்-பரம்பரை வரலாறாக-மூதாதையர்களின் கதைகளாக-இருக்கின்றன என்பது புலப்படத்தான் செய்கின்றன.இப்படி இருப்பது எழுதுபவனின்குறை அல்ல. எழுதுபவன் ஒன்றை நினைக்க, எழுத்து வேறொன்றாக வெளிப்படுவது என்பது எழுத்தின் விளையாட்டு .

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp