போரெனும் தலைகீழாக்கம்: சயந்தனின் ஆதிரை

போரெனும் தலைகீழாக்கம்: சயந்தனின் ஆதிரை

சமூகம் ஒட்டுமொத்தமாக போருக்கு ஆதரவானது, தனிமனிதர்கள் போரின் இழப்புகளை மட்டுமே அறிபவர்கள். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்விருநிலைகளில் நின்றும் போரைப் பார்க்கிறான்.

- ஜெயமோகன்

பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். நம் கற்பனை செய்யும் போரில் வெற்றியும் தோல்வியும் இருந்திருக்கும். தொழில்நுட்பங்களும் சாகசங்களும் மரணங்களும் இருந்திருக்கும். ஆனால் அப்போர் தொடங்கி முடிவடைந்திருக்கும். போருக்கு முன்பான தயாரிப்புகளையோ போருக்குப் பிந்தைய நிலைகளையோ நாம் கற்பனை செய்திருக்கமாட்டோம். போர் களங்களில் மட்டும் நடப்பதாக எண்ணிக் கொண்டு இருந்திருப்போம்.

போரும் வாழ்வும் நாவலைப் படித்தபோது போர் குறித்த இத்தகைய மனச்சித்திரங்கள் கலையத் தொடங்கின. போர் வேறு வகையானதாக முன் ஊகங்களுக்கு வாய்ப்பற்றதாக தென்படத் தொடங்கியது. ஆனால் அந்த நாவலிலும் களம் என்ற ஒன்று உண்டு. அதில்தான் போர் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கழுகினைப் போல உச்சி மரக்கிளையில் அமர்ந்து கொண்டும் அவ்வப்போது களத்தில் ஊடுருவிப் பறந்தும் அப்போரினை நாம் காண டால்ஸ்டாய் நம்மை அனுமதிக்கிறார். ஆனால் சயந்தனின் ஆதிரை நாவலில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெறுகிறது. ஆனால் சயந்தன் நம்மை எக்களத்துக்கும் கூட்டிச் செல்லவில்லை. பிரம்மாண்டமான படை நகர்வுகளும் வியூக வகுப்புகளும் உணர்ச்சிகரமான உரைகளும் கூர்மையான தத்துவ விவாதங்களும் இந்த நாவலில் இல்லை. ஆனால் ஒரு போரின் நடுவே வாழ நேரும் மனிதர்கள் சந்திக்க நேரும் திகிலையும் வெறுமையையும் நாவல் கொடுப்பதே இதன் முதன்மையான வெற்றி எனச்சொல்லலாம்.

ஒரு எதார்த்தவாத செவ்வியல் படைப்பு

தமிழில் எழுதப்பட்ட முன்னோடி எதார்த்தவாதப் படைப்புகளின்(ஆழிசூல் உலகு,மணற்கடிகை) அதே வகையான நேரடிக் கதைகூறல் முறையையும் நுணுக்கமான தகவல் விவரணைகளையும் கொண்ட புனைவாக ஆதிரை தன்னை வகுத்துக் கொள்கிறது. நாற்பதாண்டு காலம் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வினை வலுவாகச் சித்தரித்துச் செல்கிறது. அந்த சித்தரிப்பினூடாக ஒரு பெரும் போரினை சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைத் தொடர்ந்த ஒரு பேரழிவினை ஆதிரை விரித்துக் காட்டியிருப்பதே இதனை முதன்மைப் புனைவாக மாற்றியிருக்கிறது.

ஈழம் குறித்து தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கொந்தளிப்பான சித்திரம் உண்மையில் இலங்கையில் நடந்தவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு ஆழமான மனத்தடையை என்னில் உருவாக்கி இருந்தது. சமீபத்தில் வாசித்த சில நூல்கள் வழியாகவே இலங்கை குறித்து ஓரளவு அறிய முடிந்தது. அந்த நூல்கள் வரலாற்றுத் தரவுகளை மட்டுமே தரக்கூடியவை. பாடப்புத்தகங்களை வாசிக்கும் மனநிலையுடன் மட்டுமே அணுகப்படக்கூடியவை. ஆனால் ஆதிரை வாசித்து முடித்தபோது ஒன்று தோன்றியது. போர் குறித்து உருவாக்கப்படும் கற்பனைகளை நம்மவர்களை பெரும்பாலும் மிகையுணர்ச்சி கொள்ளச் செய்கிறது. போரினைப் பற்றி பேசுவதும் அதில் ஈடுபடுவதும் அச்சூழலில் வாழ்வதும் முற்றிலும் வேறுவேறான அனுபவங்கள். ஆதிரை போர்ச்சூழலில் வாழ நேர்ந்த போரால் தொடர்ச்சியாக அலைகழிக்கப்பட்ட கொல்லப்பட்ட மனிதர்களின் கதை.

1991-ஆம் ஆண்டு லெட்சுமணண் சிங்கமலை என்ற இயக்கப் போராளி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுடன் நாவல் தொடங்குகிறது. அங்கிருந்து பின் சென்று அவன் தந்தை சிங்கமலை ஏழு வயதான லெட்சுமணனையும் அவனது அக்கா வல்லியாளையும் கூட்டிக்கொண்டு தனிக்கல்லடிக்கு வருவதாக நாவல் பயணிக்கிறது. தனிக்கல்லடியில் அத்தார் - சந்திரா தம்பதிகளிடம் லெட்சுமணன் பணிக்கு சேர்த்துவிடப்படுகிறான். வல்லியாள் கணபதிக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். அத்தாரின் நண்பன் சங்கிலியின் குடும்பமும் சித்தரிப்பின் வழி விரிகிறது. இக்குடும்பங்களின் வாழ்வின் தொடர் சித்தரிப்பாக ஆதிரை நாவலை சொல்லிவிட முடியும். எதார்த்தவாதப் படைப்புகளின் பண்புக்கூறாக ஒன்றைச் சுட்ட முடியும். அவை சற்று பெரிய காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. ஆகவே தொடர்ச்சியாக நிறைய மனிதர்களை அறிமுகம் செய்தபடி அவர்கள் வாழ்வில் எழும் முரண்களைச் சொல்லியபடியே முன் செல்கின்றன. எதார்த்தவாதப் படைப்புகளின் தரிசனம் என்பதே சிலந்தவலைப் போல பின்னப்பட்டிருக்கும் இவ்வாழ்வில் வரலாற்றில் தனிமனிதனின் இடம் என்ன அவன் அகத்துக்கான பெறுமானம் என்பதை விசாரிப்பதே. அவ்வகையில் ஆதிரையின் புறச்சட்டகத்தை இவ்வாறு விவரிக்கலாம். முதலில் தனிக்கல்லடி எனும் ஊரின் சித்தரிப்பு. அதைத் தொடர்ந்து அங்கு இலங்கை ராணுவத்தினரின் வருகையாலும் போராலும் சிங்களக் குடியேற்றங்களாலும் மற்றொரு நிலத்தினை நோக்கி நகரும் புலம் பெயர்வு. புது நிலத்தில் வாழ்வு நிலைத்து கிளைவிட்டு வரும்போது இறுதிப்போர் உக்கிரம் கொள்ள அங்கிருந்து மற்றொரு இடப்பெயர்வு. இந்த இறுதிப் பெயர்வு அதீத இழப்புகளை உண்டு பண்ணுகிறது. இந்த இரண்டு இடப்பெயர்வுகளுக்கு இடையிலான வாழ்க்கையே ஆதிரை நாவலாக விரிந்துள்ளது.

நாவலின் கதையை சுருக்கிச் சொல்வது நிச்சயம் இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்த நாவலை எங்கு நின்று அணுகுவது என்ற புரிதலை அளிப்பது மட்டுமே என் நோக்கமாக இருக்கிறது. நவீன நாவல் இன்று அடைந்திருக்கும் சாத்தியங்களை ஆதிரை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறது. நவீன இலக்கியம் அறிவுஜீவியின் குரலாக தரப்பாக ஒலிப்பதல்ல. அப்படியொரு பாவனையை அது மேற்கொண்டாலும் இலக்கியத்தின் நோக்கம் அகம் நோக்கியத் தேடலே. படைப்பாளியின் அரசியல் நிலைப்பாடோ கருத்தியல் நிலைப்பாடோ அவரின் படைப்புகளை பாதிக்க வேண்டிய கட்டாயமில்லை. எனினும் போர் குறித்து அதிலும் போர் நிகழும் காலத்தையே பேசுபொருளாக கொண்டெழுதப்படும் படைப்புகளில் கருத்தியலின் சாயலோ சாய்வோ புலப்படுவது தவிர்க்க முடியாதது. அது அதிகமாகுந்தோறும் படைப்பின் கலையமைதி குன்றி படைப்பு மற்றொரு பிரச்சாரத் தட்டியாகிறது. அதேநேரம் சூழலின் மனிதர்களின் வலியை இழப்பை பொருட்படுத்தாமல் படைப்பு தன்னை "அப்பால்" நிறுத்திக் கொள்ளுமென்றால் வெறும் தத்துவ விசாரணையாக சுருங்கிவிடுகிறது. ஆதிரை தன்னை யாரின் குரலாக ஒலிக்கவிட வேண்டும் என்ற தெளிவினைக் கொண்ட நாவல். போரினால் அதிகம் இழக்க நேரும் சாமானியர்களின் குரலாக இந்த நாவல் ஒலிக்கிறது. மண்ணோடும் காட்டோடும் நெருங்கி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வின் சிதைவைச் சுட்டுவதாலேயே இது தலைசிறந்த படைப்பாகிறது.

முன்பே சொன்னது போல எதார்த்தவாதப் படைப்புகள் வாழ்வின் அன்றாடத் தருணங்களையே சித்தரிக்கின்றன. படைப்பாளியின் தனித்தன்மையும் ஆளுமையும் சித்தரிப்பில் வெளிப்பட வேண்டிய ஒரு கட்டாயம் இவ்வகை படைப்புகளுக்கு உண்டு. அவ்வகையில் சயந்தன் கதைக்களமாக எடுத்துக் கொண்ட நிலத்தினை கண்முன் நிறுத்தும் வலிமையான படைப்பு மொழியைக் கொண்டிருக்கிறார். இந்த நாவல் வாசிக்கும் போது நான் அடைந்த திடுக்கிடல்களுக்கு காரணம் இதுவே. தமிழகத்தில் ஏதோவொரு கிராமத்தில் பிறக்க நேர்ந்த யாருக்குமே தனிக்கல்லடி ஒரு அந்நிய கிரமமாகத் தோன்றாது. ஆனால் அங்கு நிகழும் போர்களும் மரணங்களும் நமக்கு அந்நியமானவை. ஏற்றுக் கொள்ள முடியாதவை.

சூழும் போரும் மலரும் வாழ்வும்

சங்கிலி அரசியல் சண்டைகளை காட்டுக்குள் கொண்டு வருவதை விரும்பாத வேட்டைக்காரனாகவும் அத்தார் விடுதலை புலிகளின் ஆதரவாளனாகவும் இருக்கின்றனர். அத்தாரின் மனைவி சந்திரா வெள்ளாளர் சாதிப்பெண். அத்தார் அம்பட்டர் சாதியைச் சேர்ந்தவன். அவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள். குழந்தையற்ற அந்த தம்பதிகளின் மகனாகவே வளர்கிறான் சிங்கமலையின் மகன் லட்சுமணன். சந்திராவுக்கும் லட்சுமணனுக்குமான உறவு இந்த நாவலின் உயிர்ப்பான சித்தரிப்புகளில் ஒன்று. அதுபோல சங்கிலி மீனாட்சி தம்பதிகளின் மகளான ராணியின் தோழியாக வரும் ஜோதிமலரும் ஒரு வீரகதை நாயகி என்றே சொல்லிவிடும் அளவிற்கு தீரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

தனிக்கல்லடியில் இயல்பான போக்கில் நகரும் வாழ்வில்(எளிய பிரியங்கள்,வருத்தங்கள்,பொறாமைகள்) மெல்ல சிங்கள ராணுவமும் விடுதலைப் புலிகளும் ஊடுறுவுகின்றன. புலிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து நியாயப்படுத்துகிறவனாக அத்தாரும் அதற்கு எதிர்நின்று வாதிடுகிறவர்களாக சந்திராவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். சங்கிலியின் அண்ணன் ராணுவ வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார். சங்கிலியின் தாயான ஆச்சிமுத்து கொல்லப்பட்ட மகனின் குடும்பத்தை சந்திக்கச் செல்லும் இடம் நிலக்காட்சி வர்ணனைகளின் மிகக்கூரிய சித்தரிப்பு. நாவல் முழுவதுமே இத்தகைய நீண்ட அதேநேரம் விரைவான சித்தரிப்புகளை அளிப்பதன் வழியாக தொடரும் நிகழ்வுகள் மீது ஒரு வகையான பதற்றத்தை உருவாக்கி விடுகிறார் ஆசிரியர். தனிக்கல்லடியினரின் குல தெய்வமாக விளங்கும் இத்திமரம் புயலில் அழிகிறது. சிங்கள ராணுவம் நிலை கொண்டதால் தனிக்கல்லடியை விட்டு இடம்பெயர்கிறார்கள்.

நாவலில் திருமணங்களும் குழந்தை பிறப்புகளும் வந்தவண்ணமே உள்ளன. பெரும்பாலும் பெண் குழந்தைகள். நாமகள்,முத்து,முத்துவின் மகள்களான ஒளிநிலா,இசைநிலா என ஒவ்வொரு பிறப்பின் போதும் அங்கு வாழ்கிறவர்களின் சூழல் மாறியிருக்கிறது. ஒன்றுமே இல்லாதவர்களாக தனிக்கல்லடியைவிட்டு சங்கிலியின்,சிங்கமலையின், அத்தாரின் குடும்பங்கள் வெளியேறுகின்றன. மீண்டும் ஒரு புதுநிலத்தில் வாழ்வினை அமைத்துக் கொள்கின்றனர். மெல்ல மெல்ல வாழ்க்கை நம்பிக்கை நிறைந்ததாக காதலும் சண்டைகளும் நிறைந்ததாக கனவுகளுக்கு வாய்ப்பளிப்பதாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மீண்டும் போர் அவர்களை சூழ்ந்து தாக்குகிறது. இம்முறை மேலும் உக்கிரமாக.

வெளியேறிச்செல்லும் இளைஞர்கள்

தகப்பனின் தலையை கண்டறிய முடியாத மகனும், வல்லுறவுக்கு ஆளாகி தாயினை இழந்த மகளும் என இயக்கதினை நோக்கி இளைஞர்கள் சென்றபடியே உள்ளனர். தொடக்கத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும் இயக்கச் செயல்பாடுகள் ஒரு கட்டத்தில் இறுக்கம் கொள்ள கட்டாய ஆள் சேர்ப்புகள் நடக்கின்றன. தோழிகள் இறந்ததால், தனி நாடமையும் என்ற கனவால் வினோதினி, மலர்விழி என பெண்கள் புறப்பட்டுச் சென்ற வண்ணமே உள்ளனர். அறியாச் சிறுமிகளாகத் திரிந்தவர்கள் போராளிகளாகத் திரும்பி வருவதைக் கண்டு உறவினர்கள் அஞ்சுவதும் பதைப்பதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. லெட்சுமணன் வினோதினி என இறுதிவரை மீளாதவர்களையும் நாவல் சித்தரிக்கிறது. லட்சியங்கள் போர் என்று வரும் போது ஒரு புள்ளியில் எளிதாக முனை கொள்கின்றன. அந்த முனைப்பு உந்த சென்றவர்கள் இறுதிப்போரில் படும் துயரும் அலைகழிப்புகளும் மனம் கனக்கச் செய்கிறவை.

போரெனும் தலைகீழாக்கம்

போர்கள் இரண்டு வகையாக நடைபெறுகின்றன எனலாம். உயர்மட்டத்தில் அது நிலம் கைப்பற்றல்களுக்கான கணக்குகளாக உள்ளது. அதிகார பேரங்களும் ஆயுத பேரங்களும் நிகழும் மேசையாக உள்ளது. அடிமட்டத்தில் அது மனிதர்களின் வாழ்வை அலைகழிப்பதாக உள்ளது. சாமனியர்களிடமிருந்து அவர்களின் நிலம் உடைமை என அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது. அரசாங்கம் தனது நிலத்தையும் உடைமைகளையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையின்பாற்பட்ட ஒப்பந்தமே சாமானியனை அரசாங்கத்துக்கு அடங்கி நடப்பவனாக விதிகளை மதிப்பவனாக வைத்திருக்கிறது. ஆனால் போரின் போது இரண்டு தரப்புகளில் ஒன்று தங்களை அரசாங்கமாக நிறுவிக் கொள்ள முனைப்பு கொள்கின்றன. அங்கு சாமானியன் தான் இத்தனைநாள் கடைபிடித்த அறங்கள் அனைத்தும் பயனற்றுப் போவதைக் காண்கிறான். ஏதேனும் செய்து உயிர்பிழைத்திருந்தால் மட்டும் போதும் என எண்ணுகிறான். கையூட்டு கொடுத்து தப்பிச் செல்கிறான், காட்டிக் கொடுத்து பிழைக்க முடியுமா எனப் பார்க்கிறான். அருகில் இருப்பவனையே சந்தேகிக்கிறவனாகவும் முழுமையான சுயநலம் மிக்கவனாகவும் மாறிவிடுகிறான்.

அதுவரை நிகழ்ந்த வாழ்வின் பாவனைகளை முற்றாக உதறி உயிரோடு இருந்தாக வேண்டிய ஒரு கட்டாயத்தால் மட்டுமே உந்தப்படும் மனிதர்களால் சமூகம் தலைகீழாகிறது. இந்த தலைகீழாக்கத்தை போரின் உச்சக் கொடுமைகளை மிகச் சரியாக சித்தரிக்கிறது படுகளம் பகுதி. ராணுவம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான கடற்கரை பிரதேசத்தில் நடைபெறும் சில அத்தியாயங்கள் இப்படைப்பை சிறந்த நாவல் என்ற நிலையில் இருந்து உயர்த்தி ஒரு செவ்வியல் படைப்பாக மாற்றிவிடுகிறது. மூன்று தலைமுறைகளாக புலம்பெயர்ந்தபடியே இருக்கும் சாமானியர்களின் துயர் உச்சம் கொள்கிற தருணங்களை கூர்மையுடன் சித்தரிக்கிறது இப்பகுதி. பிள்ளைகளின்றி வாழ்ந்து இறந்து போகும் அத்தார்-சந்திரா தம்பதியினர், இறுதி நேரத்தில் உயிர் பிழைப்பதற்காக "போலி" கல்யாணம் செய்து வைக்கப்படும் நாமகள், கூடாரத்திலேயே புதைக்கப்படும் மீனாட்சி என இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு நிகழ்வும் தீவிரத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக இயக்கத்தில் இருந்து தான் புதைத்த கன்னிவெடிகளை தானே எடுக்க நேரும் வெள்ளையனுடன் நாவல் நிறைவடைகிறது.

செவ்வியல் தன்மை கொண்ட படைப்புகள் வாசித்து முடித்ததும் நமக்குள் நிறைப்பது ஒரு வெறுமையை மட்டுமே. பெரும் திட்டங்கள் செயல்கள் முன் வாழ்வு கொள்ளும் நெருக்கடிகளை மிக நுட்பமாகச் சொல்லும் அதேநேரம் தனிமனித அகம் கொள்ளும் சஞ்சலங்களை நுண்மையாகத் தொட்டெடுக்கும் தன்மையும் கொண்ட படைப்புகளை செவ்வியல் தன்மை கொண்டதாக நான் காண்கிறேன். அதற்கு சிறந்த முன்னுதாரணத்தை போரும் வாழ்வும் அளித்தது. ஸ்லாமென்ஸ்க் மாஸ்கோ பீட்டர்ஸ்பர்க் என பெருநகரச் சித்தரிப்புகள் பெயர்வுகள் என ஒரு பக்கம் நாவல் நகர மறுபக்கம் தனிமனித அகத்தையும் கூர்மையாகச் சொல்லிச் செல்லும் படைப்பது.

அதுபோலவே ஆதிரையிலும் பல முரண்படும் தரப்புகளின் விவாதங்கள் வருகின்றன. இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்குமான உரசல்கள், இயக்கம் ஜாதியிலிருந்து வெளிவர முடியாத அவலம், தமிழ் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமான முரண்பாடுகள், விடுதலைப் புலிகளுக்கும் பிற தமிழீழ இயக்கங்களுக்குமான சச்சரவுகள், ஆயுத வியாபாரம் என பல தளங்களை தொட்டுப் பேசிச்செல்கிறது இப்டடைப்பு. அதேநேரம் போரில் கணவனைத் தொலைத்த ராணியின் மன உணர்வுகள், பிள்ளையற்ற வெறுமையில் திளைக்காமல் நம்பிக்கையுடன் மாணவர்களை தேற்றிக் கொண்டுவரும் சந்திரா,இறுதிவரை மகளைத் தேடி அலையும் கணபதி என தனிமனிதர்களையும் மிக உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது இப்படைப்பு.

சூழல் சித்தரிப்பிலும் உரையாடல்களிலும் சயந்தன் காட்டியிருக்கும் கவனமும் தேர்ச்சியும் ஆச்சரியமளித்தாலும் அது நாவலுக்கு ஒரு மெல்லிய செயற்கைத்தனத்தை அளிக்கிறது. பதற்றமான ஒரு சூழலை சொல்லும் மொழி என்பதால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அதீத கவனம் வாசகனிடமும் அப்பதற்றம் எந்நேரமும் தொற்றி இருக்கும்படி செய்து விடுகிறது. கலையமைதியை குலைப்பதாக இந்த ஒரு அம்சம் மட்டுமே இப்படைப்பில் உள்ளது.

போரிலிருந்து ஒரு சமூகம் துயரையும் வஞ்சங்களையும் தவிர வேறெதையும் பெறுவதேயில்லை என்ற போதும் போரை நோக்கியே வாழ்க்கை உந்தப்படுகிறது. அதற்கு எதிரே நின்று போரின்மையை வலியுறுத்துகிறவைகளாகவே அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியங்கள் உள்ளன. நான் வாசித்த அத்தனை பெரும் படைப்புகளிலும் பேரழிவுச் சித்திரங்கள் இருந்திருப்பதை உணர்கிறேன்(குற்றமும் தண்டனையும் நீங்கலாக). எனினும் வெறும் அழிவுகளை மட்டுமே சித்தரிக்கும் படைப்புகள் பேரிலக்கியங்களாக எழுந்துவிடுவதில்லை. அவை வாழ்வின் மணங்களை கொண்டிருக்க வேண்டும்.ஆதிரை காட்டின் பச்சை மணத்தில் இருந்து துப்பாக்கி வெடிப்பின் கந்தக மணம் வரை தன்னுள் கொண்ட படைப்பு.

Buy the Book

More Reviews [ View all ]

ஆதிரை

பா. ரவீந்திரன்

வந்தாரங்குடி

க. பஞ்சாங்கம்

ஏழு அரசியல் நாவல்கள்

யமுனா ராஜேந்திரன்
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp