பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

ஆற்றல் துணிவு தியாகம்

நவீன தமிழகத்தில் ஏற்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் முதல் சமூக எழுச்சி சேரன்மாதேவி குருகுலப் போராட்டம். 1920களில் நிகழ்ந்த அப்போராட்டத்தை அக்காலத் தகவல்களின் அடிப்படையில் கூர்ந்து பார்த்தபோது பேருண்மைகள் பல புலப்பட்டன. பாய்ந்த புதிய வெளிச்சத்தில் வீர விளக்குகள் மின்மினிகளாய் ஒளி மங்கின. இரண்டாம் நிலைத் தகவல்களால் முன்பு உருவாகியிருந்த பல பிம்பங்கள் தாமாகப் பின்னகர்ந்தன. அப்போராட்டத்தில் எல்லை மீறிய துணிவுடன் பேராளுமையாகச் செயல்பட்டவர் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு. தன் மீது தாக்குதல் கள் தொடரத்தொடர ஒரு பந்தைப் போல் அவர் உயரஉயர எழுந்தார். வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பேரரவம் அவரிடமிருந்து ஓங்கி ஒலித்தது. அவரது பிற செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் தேடித் தொகுத்தபோது அவர் மிக முக்கியமான ஆளுமையாகப் புலப்பட்டார். அவரது செயல்கள் வரலாற்றில் பதிவாகியிருந்தாலும் போதிய கவனமும் முக்கியத்துவமும் பெறாமல்போயிருந்தது தெரிந்தது.

1915-1940 காலப் பகுதியில் இந்திய விடுதலைப் போரின் தன்னேரில்லாத தமிழகத் தலைவராக விளங்கிய வரதராஜுலுவை வரலாற்றின் நினைவில் நிறுத்துவன: மதுரைத் தொழிலாளர் வேலைநிறுத்தம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு, தமிழ்நாடு பத்திரிகை, குலக் கல்வித் திட்ட எதிர்ப்பு ஆகியவற்றோடு அவர் தயாரித்து விற்ற புகழ்பெற்ற மின்சார ரசம். வெளியில் தெரியும் இவை மட்டுமல்ல அவரை நினைவுறுத்துபவை. தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தியது, காங்கிரசை மக்கள் மயப்படுத்தியது, அரசியல் மேடைகளைத் தமிழ் மயப் படுத்தியது, தமிழை ஜனநாயகப்படுத்தியது, ஒருங்கிணைவு மூலம் கிடைக்கக்கூடிய பேர ஆற்றலைத் தொழிலாளர்களுக்கு உணர்த்தியது என நவீன தமிழகத்தின் கருத்துலகில் பல முற்போக்குச் செல்நெறிகளை முன்னெடுத்தவர் வரதராஜுலு.

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் (1925), அகில இந்திய காங்கிரசுக் காரியக் கமிட்டி உறுப்பினர் (1925, 1926), அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் காரியக் கமிட்டி உறுப்பினர் (1926), சட்டசபை நுழைவு பெற்ற சுயராஜ்யக் கட்சியினரின் செயல்களைக் கட்டுப்படுத்தும் இந்திய அளவிலான காங்கிரசு சிறப்புக்குழு உறுப்பினர் (1926) எனக் காங்கிரசு கட்சியில் பல பொறுப்புகளை வகித்த வரதராஜுலு 1940 வரை தமிழகக் காங்கிரசின் முக்கியமான ஒப்பற்றத் தலைவர். சென்னைப் பெருநிலத்தில் 1937இல் ஆளுநர் அமைத்த இடைக்கால அரசில் கட்சி எல்லையையும் மீறி, அமைச்சராக அவருக்கு அழைப்பு வந்தது. ஒரு முதலமைச்சரையே மாற்ற முடிந்த அளவுக்கு 1953 வரைகூட அவரது செல்வாக்குத் தமிழகக் காங்கிரசில் நீடித்தது.

பெசண்ட், இராஜாஜி, பெரியார், காந்தி, திரு.வி.க., எஸ். சீனிவாச ஐயங்கார், சி.ஆர். தாஸ், சாவர்கர், டாக்டர் மூஞ்சே, மீர்சா இஸ்மாயில், கே.எம். பணிக்கர் முதலியவர் களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். விடுதலைப் போராட்டத்தில் பன்முறை சிறை சென்ற தியாகி. விடுதலை அடைந்த இந்தியாவில் சட்டமன்ற, மேலவை உறுப்பினர், தொழிலாளர் நலனில் அக்கறை காட்டிய தொழிற்சங்கவாதி, பார்ப்பனரல்லாதார் நலனுக்கு உழைத்தவர். இன்றைய தமிழகக் காங்கிரசைப் பிற்படுத்தப்பட்டவர்கள் புழங்குமிட மாக மாற்றியதில் வரதராஜுலுவுக்குப் பெரும் பங்குண்டு.

தொழில்முறை மருத்துவராக லௌகீக வாழ்க்கையைத் தொடங்கிய டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு (1887-1957) வங்கப் பிரிவினை எதிர்ப்பு, ஹோம்ரூல் இயக்கம் வழியாகப் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். பேச்சு, பத்திரிகை, பொதுத் தொண்டு மூலம் போராட்ட அரசியலைப் பரப்பிய அவரது அரசியல் வாழ்க்கையை நான்கு பிரிவுகளாக்கிப் புரிந்துகொள்ளலாம். 1929 வரை காங்கிரசில் கழிந்தது முதல் பகுதி. 1929-1939 வரை காங்கிரசோடு பிணங்கிக்கொண்டிருந்த பத்தாண்டு ஊடல் காலம். 1939-1945 வரை இந்துக்களுக்காகப் பணி செய்த இந்து மகாசபைக் காலம். 1945இல் காங்கிரசில் மறுபடியும் சேர்ந்து இறக்கும்வரை அதிலேயே தொடர்ந்தார்.

பேச்சுதான் வரதராஜுலுவின் முதல் மற்றும் மூலபலம். சுண்டி இழுக்கும் கவர்ச்சி மிக்க பேச்சால் அரை நூற்றாண்டுக் காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் அவர். 1925இல் அவர் பெயர் தெரியாத தமிழகக் கிராமமே கிடையாது என்கிறார் பழம்பெரும் பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம். பேருந்துகள் இல்லாத காலத்தில் அவர் பேச்சைக் கேட்கப் பல மைல் நடந்துவந்ததாம் மக்கள் கூட்டம். ‘போட் மெயிலுக்குக் காத்துக் கிடக்கும் கிராமத்துக்காரனைப் போல’ அக்கூட்டம் அவரது வருகைக்குக் காத்துக்கிடந்தது என்கிறார் நேரில் பார்த்த வ.ரா. 1900-1950 காலப் பகுதியின் தமிழக பிரபலங்களைப் பற்றி நூல் எழுதிய வ.ரா., டி.எஸ். சொக்கலிங்கம், பி.ஸ்ரீ. ஆகிய மூவருமே புகழ்பெற்றிருந்த வரதராஜுலுவைப் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளனர். அனைவரும் அவரது ஆற்றலில் பேச்சையே பிரதானப்படுத்தியுள்ளனர். கூட்டத்தை இழுத்துப்பிடித்து நிறுத்திவைக்க, வரதராஜுலு கொஞ்ச நேரமாவது பேசிய பிறகுதான் இராஜாஜியே பேசுவார் என்று குறிப்பிடும் பெரியார், ‘வரதராஜுலுவிடமிருந்துதான் நான் பேசக் கற்றுக்கொண்டேன்’ என்றும் சொல்லி யிருக்கிறார்.

சிறை என்றாலே பயந்துகொண்டிருந்த காலத்தில் சிறை செல்வதைச் சாதாரணமாக்கிக் காட்டியவர் வரதராஜுலு. 1918 மே மாதம் மதுரை ஆலை வேலைநிறுத்தத்தைத் தூண்டியதற்காக மதுரை சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட் வழங்கிய 15 மாத கடுங்காவல் தண்டனையே வரதராஜுலு பெற்ற முதல் சிறைத் தண்டனை எனத் தேசிய சங்க நாதம் குறிக்கிறது. பிரபஞ்சமித்திரன் இதழில் வெளிவந்த கட்டுரைக்காக முதலில் கைதானதாகவும் தெரிகிறது. மதுரை நீதிமன்றத்தின் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் பின்னர் ரத்து செய்துவிட்டது. இரண்டாவதாக அவர் பெற்ற ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையை வழங்கியவர் சேலம் மாவட்ட மாஜிஸ்டிரேட். 1921 தமிழ்நாடு இதழில் வெளியான கட்டுரை ஒன்றின் அரசு விரோதக் கருத்துகளுக்காகக் கிடைத்தது அந்தச் சிறைப் பரிசு. மூன்றாவது சிறைவாசம் (1923) ஜூலை பெரியகுளம் அரசியல் மாநாட்டில் தடையை மீறிக் கலந்து கொண்டதற்கான தண்டனை. அது ஆறு மாத காலம். நான்காவதும் இறுதியானதுமான 15 நாள் சிறைவாசத்தை அனுபவித்தது 1941இல் பீகார் மாநில பாகல்பூரில். இந்து மகாசபைக் கூட்டத்தில் தடையை மீறிக் கலந்துகொண்டதற்கான தண்டனை. இவை தவிர 1922இல் காந்தியைச் சிறை வைத்தமையை எதிர்த்து வரி தர மறுத்துக் காரையும் நிலங் களையும் இழந்து அரசின் ஜப்தி நடவடிக்கைக்கும் அவர் உள்ளானார்.

தொடக்க கால தமிழ்ப் பத்திரிகையாசிரியருள் ஒருவர் வரதராஜுலு. ஆங்கிலப் பத்திரிகைகளின் செல்வாக்கே ஓங்கியிருந்த காலத்தில் தேச மொழியில் பத்திரிகை நடத்தி வெற்றிபெறுவது சூழலில் அவ்வளவு எளிதல்ல. புதிய விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு அதில் பெரு வெற்றிபெற்றவர் பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு ஆகிய தமிழ் இதழ்களை நடத்திய வரதராஜுலு. தெலுங்கிலும்கூட இதழ் நடத்தினார் அவர். ஆங்கிலத்தில் அவர் தொடங்கிய இதழே இன்றைய ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’.

பேச்சு, அரசியல், பத்திரிகை எனப் பல துறைகளில் உழைத்த பல் திறன் கொண்ட பேராளுமையாகத் திகழ்ந்தவர் வரதராஜுலு. இந்து மகாசபையில் கழிந்த ஆறாண்டுகளைத் தவிரத் தன் ஆயுள் முழுவதும் காங்கிரசுக்காரராக அல்லது அதன் ஆதரவாளராகவே வரதராஜுலு விளங்கினார். நீதிக்கட்சியின் எழுச்சியைத் தடுக்கவும், முடியாதபோது குறைக்கவும் உதவும் வலுமிக்க ஆயுதமாக வரதராஜுலுவைக் காங்கிரசு கருதியது / நடத்தியது. நீதிக்கட்சியை வீழ்த்த காங்கிரசுக்காரர்களால் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்தில் வரதராஜுலு போன்றோர் செயலாளர்கள். நீதிக்கட்சி முன்னெடுத்த பார்ப்பனரல்லாதார் நலனைத் தாமும் நாடுவதாகக் காங்கிரசு காட்டிக்கொள்ள வரதராஜுலு பயன்பட்டார். இவ்வாறு ஒருவகையில் காங்கிரசின் முகமூடிகளாக வரதராஜுலு போன்றோர் விளங்கினர்/ பயன்பட்டனர். காங்கிரசின் சில சக்திகள் தம்மைப் பயன் கொள்ளும் இந்நிலைமையைப் புரிந்துகொண்டு முதலில் வெளியேறியவர் பெரியார். புரிந்துகொண்டிருந்தாலும் நிலைமையை இராஜதந்திரமாகப் பயன்படுத்த நினைத்தோ என்னவோ மேலும் சில காலம் அங்கே இருந்தார் அவருடைய நண்பர் வரதராஜுலு. “தூய தேசாபிமானம் ஒருபுறம் பிடித்திழுக்க சாமர்த்திய ராஜதந்திரம் மற்றொரு பக்கம் பிடித்திழுக்க இரண்டு பக்கமிடையே மன அமைதியின்றி ஊசலாடுகிறார் வரதராஜுலு” என வ.ரா. (தமிழ்ப் பெரியார்கள், ப.4) இந்நிலைமையை எதிர்நிலையிலிருந்து விளக்கினார். நாம் காங்கிரசிலிருந்ததை இராஜதந்திரம் எனச் சொல்ல, காங்கிரசுக்காரரான வ.ரா. நீதிக்கட்சிச் சார்பை இராஜதந்திரம் என்கிறார்.

1918இன் மதுரை ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம், 1935இல் அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்புக்குக் கண்டனம், 1937இல் கே.வி. ரெட்டியின் இடைக்கால அமைச்சரவை மீதான குற்றச்சாட்டு போன்ற வரதராஜுலுவின் செயல்பாடு களை ஆதரித்த காங்கிரசின் ஒரு பகுதியினர் இந்து சமய அறநிலைய மசோதா, சேரன்மாதேவி குருகுலத்தில் சாதி சமத்துவ கோரிக்கை முதலிய நேர்வுகளில் அவரைக் கடுமையாகத் தாக்கினர். இந்த எதிர்ப்புகளைக் கட்சி நலன் என்ற நோக்கத்தில் முடிந்தவரை பொறுத்துக்கொண்டார். இயலாதபோது வெளியேறினார். எனினும் அவரைக் காங்கிரசு ஆதரவாளராகவே உலகம் எப்போதும் பார்த்தது.

காங்கிரசில் செல்வாக்கு செலுத்திய சக்திகளோடு அவரால் இணைந்து செல்ல முடியவில்லை. வகுப்புவாதம், தேசிய விரோதம் என நீதிக்கட்சியை விமர்சித்தபோதிலும் அக்கட்சியையும் முற்றிலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. பார்ப்பனரின் பிடியில் இருந்த காங்கிரசுக்கும் பார்ப்பன ரல்லாதாரைக் கொண்ட நீதிக்கட்சிக்கும் இடையில் நிலைகொள்ள விரும்பிய சிலருள் வரதராஜுலுவும் ஒருவர் எனச் சொல்லலாம். அந்தர ஜீவிகளாய் இருந்த இத்தகைய பார்ப்பனரல்லாதாரை இரு சாராரும் நிலைமைக்குத் தக்கபடி வேண்டும்போது எடுத்துக் கொஞ்சவும் தேவை தீர்ந்ததும் தூக்கி எறியவும் செய்தனர். ஊறுகாய், கறிவேப்பிலை, கைத்தடி, பொடி டப்பா, ஆணுறை வரிசையில் இவர்கள் இருந்தனர். இப்படிச் சொல்வது கொச்சைப்படுத்துவதாகாது.

காங்கிரசில் இயங்கிய வரதராஜுலு கட்சியில் பார்ப்பனரல்லாதார் சிலருடன் மிகவும் இணைந்து செயல்பட்டார். இந்நிலைகள் இப்போது கோஷ்டிகள் எனப்படுகின்றன. 1920களில் ஆர்.கே. சண்முகம் செட்டியார், ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு ஆகியோர் நெருக்கமாக இருந்து பணியாற்றியுள்ளனர். முதலிருவர் பொதுத் தேர்தல் களில் சொந்த காங்கிரசுக்காரர்களாலேயே பரிதாபமாகத் தோற்கடிக்கப்பட்டு மனங்கசந்து வெளியேறினர். வரதராஜுலு வெளியேற விரும்பினாலும் மேலும் சில காலம் தாக்குப் பிடித்தார். 1925 வாக்கில் அமைந்த ‘நாயுடு, நாயக்கர், முதலியார்’ என்ற இரண்டாவது கூட்டணி தண்டபாணி பிள்ளை, எஸ். இராமநாதன், பவானி சிங், ஆதிநாராயண செட்டியார் போன்ற செயல் வீரர்களின் துணையால் பரிமளித்தது. அதனால்தான் சேரன்மாதேவி சம்பவத்தில் பார்ப்பனர் தோற்றனர். இறுதியாக 1950களில் அமைந்தது நாயுடு, (காமராஜ்) நாடார், (கட்சி தாண்டிய) பெரியார் இணைவு. அரசியலில் பெரும் வெற்றியை அது பெற்றது. புதிய கல்வித் திட்டம் தோல்வியுறவும், அதைக் கொணர்ந்த முதலமைச்சர் பதவி விலகவும் நேரிட்டது. தமிழக அளவில் கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு பிரிவினரின் ஆதிக்கம் ஒழிந்ததற்கும் / குறைந்ததற்கும் வரதராஜுலு முக்கியமான பின்னணி எனலாம். பெரியார் சொல்லி அடித்தார்.

மேலாதிக்க உணர்வுக்கு மட்டுமே எதிரானவரான வரதராஜுலு தனிப்பட்ட பார்ப்பனரின் மேல் சற்றும் வெறுப்பு கொண்டவர் அல்ல. மாறாகப் பேரன்பும் பெரு மதிப்பும் கொண்டவர். ஆத்திகரான வரதராஜுலுவின் இல்லத் திருமணங்கள் இரண்டு சி.பி. இராமசாமி ஐயர், வி. பாஷ்யம் ஐயங்கார் தலைமையில் ஆரிய சமாஜ முறையில் நிகழ்ந்தன. (உறுப்பினர்களாக இல்லையாயினும் தங்கள் இல்லத் திருமணங்கள் சமாஜ முறையிலேயே இன்றும் நடப்பதாக அவர் மகன் கிருஷ்ணதாஸ் என்னிடம் தெரிவிக் கிறார்.) அவரது 60ஆம் பிறந்தநாள் விழா கே.எஸ். இராமசாமி சாஸ்திரி தலைமையில் நடந்தது. இந்து மகாசபை நண்பர்களான சாவர்கரும் மூஞ்சேயும் வேறு யார்? குன்னூரில் ஒடுக்கப்பட்டவர்கள் அமைத்த கிருஷ்ணன் கோயிலுக்குப் பார்ப்பனரையே பூசாரியாக இருக்கச் செய்தார் வரதராஜுலு.

தலித் ஆதரவு

“ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்கால வலிமை, உறுதி, சிறப்புநிலை ஆகியவை இந்துக்களின் கலாசார ஒருங்கமை விலும் அரசியல் சுதந்திரத்திலும் இந்திய ஒற்றுமையிலும்தான் இருக்கிறது. வெளிநாட்டு மதங்களுக்கு மாறுவதும் இந்துகள் அல்லாதவர்களிடம் கொள்ளும் உறவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்தையும் சுதந்திரத்தையும் தாமதப்படுத்தும்” என்று ஒருமுறை வரதராஜுலு குறிப்பிட்டார். இந்து மதத்தில் ஆர்வம் கொண்ட இந்திய ஒருமையை விரும்பும் ஒருவரின் தலித் ஆதரவுப் பேச்சாக இதைப் புரிந்துகொள்ளலாம் என்றாலும் இதுமட்டுமல்ல வரதராஜுலு.

தலித்துகளுக்கான தனித்தொகுதியை காந்தியைப் போலவே முதலில் வரதராஜுலுவும் மறுத்தார். முஸ்லிம் தனித்தொகுதி முறை முஸ்லிம்-இந்து ஒற்றுமைக்கு எந்தப் பயனும் அளிக்காததைப் போலவே இம்முறையும் அமைந்து விடும் என காந்தியைப் போல இவரும் காங்கிரசுக்குச் சாதகமாகவே முதலில் எண்ணினார். ஆனால் யோசிக்கும் அறிவை விட்டுவிடாத வரதராஜுலு பின்னால் மாறினார்.

‘ஆதி திராவிடர் அனைவரும் கூடித் தங்களுக்குத் தனித்தொகுதியே வேண்டுமென்று கோருவதை இனித் தடுத்துப் பயனில்லை என்ற கருத்து நமக்கு இன்று முதல் உண்டாகிவிட்டது’ என்று தன் நிலையைத் தலித்துகளின் கோரிக்கைக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார். இம் மாற்றத்தின் பின்னணியில் பெரியார் இருந்தார் என்று தண்டபாணி பிள்ளை கிண்டல் செய்தார் (தேசபக்தன், 26 அக்டோபர் 1931) என்பது வேறு.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆதி திராவிடர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென முறை யிட்டவர் வரதராஜுலு. தலித் நண்பரை வீட்டுக்குள் இருத்திக்கொண்ட அக்காலத்தின் ஒரே தலைவராக விளங்கியவர் வரதராஜுலு. மதத்தின் செல்வாக்கால் பாதிக்கப்பட்டவ ராகத் தோன்றினாலும் அதன் அழுக்குகளிலிருந்து மீண்டவர் வரதராஜுலு.

இந்து மகாசபை

அடிமை இந்தியாவில் பிறந்த வரதராஜுலு என்ற விடுதலை வீரரின் கனவு இந்தியா என்பது தோள் வலிமை உடைய இந்துக் குடிகளைக் கொண்ட சுதந்திர, ஜனநாயக பழம் பெருமையில் மிதக்கும் இந்தியா. அகண்ட பாரதமான வல்லரசு இந்தியா. சிறுபான்மையினர் பெரும்பான்மை யினரின் வலிமையை ஒப்புக்கொண்ட இந்தியா. சாதி அடையாளமற்ற இந்தியா. நில ஆளுகையில் அசோகரின் இந்தியா. ஒன்றுபட்ட பாரத ஆசையால் சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மொழிவாரி மாநிலச் சீரமைப்பைக்கூடத் தவிர்க்க நினைத்துத் தவித்தது அவர் மனம். ஒரு மொழி மட்டுமே பேசும் ஒரு மாவட்டத்தையேனும் காட்ட முடியுமா இந்தியாவில் என்று சவால் விட்டது அவரது இந்தப் பற்று.
இத்தகைய எதிர்பார்ப்புகள் கொண்ட ஒருவர், இந்துகளின் ஒற்றுமையையும் அதன் மூலம் கிடைக்கும் வலிமையையும் வலியுறுத்திய இந்து மகாசபையில் சேர்ந்தது தற்செயலானதாகவும் தோன்றவில்லை. அரசியல் நிர்ப்பந்த மாகவும் கருத முடியவில்லை. சுயசாதியை முன்னேற்ற கிடைத்த வாய்ப்புகளுள் ஒன்றாக அன்றைய தலித் தலைவர்கள் சகஜானந்தர், எம்.சி. ராஜா போன்றோர் இந்து மகாசபையைத் தேர்ந்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாயுடு சங்கக் கூட்டத்துக்கே போய் சாதிகள் ஒழிய வேண்டுமெனப் பேசிய வரதராஜுலு இந்து மகாசபையைத் தேர்ந்தது ஏனோ? தமிழக அரசியல்வாதி களில் இந்து மகாசபையில் பலகாலம் இருந்த சாமர்த்தியக் குறைவானவர் இவராகவே இருக்கலாம்.

மறைவான நோக்கங்களைக் கொண்ட பிரிட்டீஷாரின் அன்பான ஆதரவைப் பெற்று வளர்ந்த முஸ்லிம் லீக், காங்கிரசின் மேல் செலுத்திய தகுதிக்கு அதிகமான செல்வாக்கைக் குறைக்கும் எண்ணத்தில் இந்து மகாசபையில் செயல்பட்ட காங்கிரசுக்காரராக வரதராஜுலுவை வரலாறு கருதுகிறது. அகண்ட பாரத ஆசை மற்றும் மதப்பற்று இருப்பினும் புறச் சூழல்களின் மேற்கண்ட உந்துதலால்தான் இந்து மகாசபையின் உள்ளே போய் விருப்பமற்று வீழ்ந்து கிடந்தார் வரதராஜுலு. ஆறாண்டுகள் அடைந்து கிடந்த பின் ஒரு நாள் வெளியில் வந்துவிட்டார். சேர்ந்திருக்கும் கட்சிக் காகவோ சார்ந்திருக்கும் அமைப்புக்காகவோ சுயத்தை இழக்க விரும்பாதவரான வரதராஜுலுவால் அமைப்புக் கட்டுப்பாட்டுக்குப் பெயர் பெற்ற சபாவில் இருக்க முடியாதது ஆச்சரியமல்ல. கட்டுப்பாடு மட்டும் போதுமா? நோக்கமும் வழிமுறையும் முக்கியம் இல்லையா?

தூதுவர்

ஆங்கில அரசாங்கத்துக்கும் காங்கிரசுக்கும், அரசாங்கத் துக்கும் மக்களுக்கும் இடையில் தூதுவராகப் பல சமயம் செயல்பட்டார் வரதராஜுலு. 1930இல் காங்கிரசில் இல்லை எனினும் உப்புச் சத்தியாகிரகிகள் மீதான அரசின் அடக்கு முறையைக் கண்டித்ததோடு அரசாங்கம் அவர்களிடம் கௌரவமாக நடந்துகொள்ள வேண்டிய முறையை நேரிடையாகவும் பத்திரிகை மூலமும் எடுத்துரைத்தார். பர்மா அகதிகள் பிரச்சினை தொடர்பில் சென்னை ஆளுநரைப் பார்த்துப் பேசினார். தான் காங்கிரசில் இல்லாத காலத்திலும் காங்கிரசு கொள்கையை ஏற்றுச் சிறை சென்ற ம.பொ.சி.க்காக அரசிடம் பேசி இடமாற்றம் செய்வித்தார். வரதராஜுலு எழுதுகிறார்.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் 1942-43இல் இவர் [ம.பொ.சி] அமராவதி (மத்திய பிரதேசம்) சிறையில் நோயுற்றிருந்தபோது இவர் விஷயமாக கவர்னரையும் பிரிட்டீஷ் மந்திரி ஒருவரையும் கண்டு பேசி இவரை வேலூர் சிறைக்கு மாற்றும்படி கேட்டபோதுதான் திரு. ம.பொ.சி.யின் சுதந்திர உணர்ச்சி எனக்குப் புலப்பட்டது. ம.பொ.சி. மிகவும் அபாயகரமான அரசியல்வாதி என்று கவர்னர் கூறினார். எனது மனம் குதூகலமடைந்தது (தலைவர் ம.பொ.சி., ப. 38).

தூதுவராக வரதராஜுலு செயல்படக் கூடாது, அவரது ஆற்றலுக்குக் கட்சிப் பணிதான் மிகவும் சிறந்தது என்று ஒருமுறை வ.ரா கருத்துத் தெரிவித்தார். நடப்புக் கட்சி எதனோடும் முழுப் பிடிப்பு இல்லாமல் போனதால் தொழிலாளர்களை உள்ளீடாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முயன்றார். அம்முயற்சி 1929, 1934, 1939 எனப் பல ஆண்டுகளில் தொடர்ந்தாலும் வெற்றியாக மலரவில்லை.

ஆசை அற்ற அரசியல்வாதி

பதவியா கொள்கையா என்ற கேள்வி எழும்போது எப்போதும் கொள்கையின் பக்கமே நின்றவர் வரதராஜுலு. உண்மை, உயர்ந்த நெறி போன்றவை அவரது முடிவுக்கு அடிப்படைகளாய் இருந்தன.

1926 ஜனவரி 28இல் கே.வி. ரெட்டி, பிஞ்சால சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் சென்னைப் பெருநிலத்தின் கூட்டணி அரசில் அமைச்சராக வேண்டுமென வரதராஜுலுவைப் பனகல் அரசர் அழைத்தார். நீதிக்கட்சியில் சேராமலேயே இப்பதவியைத் தரவும் அவர் இசைந்தார். காங்கிரசின் கொள்கையான ஒத்துழையாமையில் தனக்கு நம்பிக்கை இல்லாதிருப்பினும் தான் ஆட்சியில் பங்கேற்பதன் மூலம் காங்கிரசு பலவீனப்படும். அதை நான் விரும்பவில்லை. ஏனெனில் அதுதான் ஆங்கில ஏகாதிபத்தி யத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது என்று பதவியை மறுத்தார் வரதராஜுலு. தான் சார்ந்த கட்சிக்கு உண்மையாக இருந்தார்.

அதே 1926இல் சட்டசபையில் நுழையவும் சுயராஜ்யக் கட்சிக்குத் தலைமை ஏற்கவும் எஸ். சீனிவாச ஐயங்கார் சேலத்திற்கு வந்து வற்புறுத்தியும் இணங்க மறுத்தார். இவ்விவாதத்தின்போது இராஜாஜி, முத்துரங்க முதலியார், அப்துல் ஹமீத் கான் ஆகியோர் உடனிருந்ததாக தெரிகிறது (நேஷனல் தர்மா, ப. 13). சட்டசபையில் நுழைய வேண்டு மானால் இரகசிய காப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும். தான் எதிர்க்கும் ஒரு அரசிடம் இத்தகைய உறுதிமொழியை எப்படி எடுக்க முடியும் என்ற கேள்வியுடன் அந்த வாய்ப்பை உதறி எறிந்தார் நெஞ்சுக்கு நீதியைப் பூண்ட வரதராஜுலு.

சென்னை ஆளுநர் ஸ்டேன்லி லண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள வரதராஜுலுவை வேண்டினார். ‘காந்தியே இதற்குப் பொருத்தமானவர். அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் அம்மாநாட்டால் பயனில்லை; அவர் கலந்துகொண்டால் தான் தேவையே இல்லை’ என்று தர்க்க நியாயம் சொல்லி அந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்தார் தர்க்கத்துக்குக் கட்டுப்பட்ட வரதராஜுலு.

1937இல் சென்னை ஆளுநர் எர்ஸ்கின், இடைக்கால அரசில் வரதராஜுலுவை அமைச்சராக்க விரும்பினார். சக அமைச்சர்களைத் தேர்ந்துகொள்ள இசைவதானால் அமைச்சராகலாம் என்ற காங்கிரசு நண்பர்களின் யோசனையை நிபந்தனையாக விதித்தார் வரதராஜுலு. இதை ஆளுநர் ஏற்க மறுத்தார். நிபந்தனையில் வரதராஜுலு உறுதியாக நின்றார். இப்படிப் பல பதவிகள் அவர் முன்னால் வந்தன. அவற்றை அவர்தான் மறுதலித்தார்.

1953இல் இராஜாஜி-வரதராஜுலு இருவருக்கிடையில் பிரச்சினை எழுந்தபோது பிரசண்ட விகடன் அது குறித்து எழுதிய குறிப்பு இதன் தொடர்பில் பொதுப் பார்வையையும் நமக்குத் தெரிவிக்கிறது.

டாக்டர் நாயுடுவிடம் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அரசியல் வாழ்வில் ஒழுங்கங் கெட்டவர், பதவியாசைக்காகக் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டவர் என்று யாரும் சொல்ல முடியாது. டாக்டர் நாயுடு குறிப்பிட்டிருப்பது போல இவர் எந்தச் சமயத்திலும் பதவிக்கோ செல்வாக்குக்கோ ஆசைப் பட்டதில்லை என்பது ஆச்சாரியாருக்கு நன்கு தெரியும் (பிரசண்ட விகடன், நவம்பர் 1953).

குணநலன்கள்

காங்கிரசில் இருந்தாலும் காந்தியுடன் (காங்கிரசுடன்) முழுவதும் உடன்பட்டவரல்லர். நீதிக்கட்சியின் சில நடை முறைகளில் அவருக்கு உடன்பாடு என்றாலும் பெரியாருடன் பல விஷயங்களில் முரணி நின்றவர். இந்து மகாசபையில் செயல்பட்டிருந்தாலும் சாவர்கருக்குக் கட்டுப்பட்டவரல்லர். நாட்டு நலனே மனிதர்களையும் விடவும் கருத்துகளை விடவும் முக்கியம் என்று கருதிய சுயசிந்தனை கொண்ட தேசிய வீரர் வரதராஜுலு.

சூழலின் செல்வாக்கில் தன்னைக் கரைத்துக் கொள்ளாதவர் வரதராஜுலு. சுற்றிலும் அகிம்சைக் கொடி உயர்ந்து பறந்தபோது வலிமையே வாழ முடியும் என்று துப்பாக்கி வைத்திருந்தவர் அவர். தான் சார்ந்த கட்சியின் தலைவர் காந்தி வலியுறுத்தியும்கூட வரதராஜுலு அகிம்சையை ஆதரிக்கவில்லை. ஒருமுறை வரதராஜுலு இதை விவரித்தார்.

அஹிம்சையையும் உதவி மறுத்தலையும் எனது மதம் என்று நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ராஜீய விஷயத்தில் சாத்வீகமான உதவி மறுத்தலை ஏற்றுக் கொண்டேனே ஒழிய எனது தினானுபவ கிரகஸ்த வாழ்க்கைக்கு இதை ஒரு உற்ற துணையாக நான் ஒப்புக்கொள்ளவில்லை. உதாரணமாக சுயராஜ்யப் போராட்டத்தில் ஒரு அதிகாரி என்னைத் துன்புறுத்துவானானால் எனது கோபத்தையும் ரோஷத்தையும் அடக்கி அந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்வேன். ஆனால் ஒருவன் எனது மனைவி மக்களை மானபங்கம் செய்யத் துணிவானா னால் அவனைக் கொன்றுவிடுவேன். தன்னையும் தன்னை நம்பியுள்ளோரையும் காக்க சக்தியற்றவன் சுயராஜ்யம் கேட்பது பேடித்தனமாகும். மகாத்மா காந்தி சென்ற வருஷம் [1922] எனது வீட்டில் தங்கியிருந்தபோது நான் சொல்வது என்னைப் பொறுத்தமட்டில் சரி என்றும், ஆனால் சுயராஜ்யத்தை யும் மனைவி மக்களையும் விட அஹிம்சா தர்மத்தை மேலானதாகக் கருதுவதால் துஷ்ட சம்ஹாரத்தைச் சரியென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார் (சுதேசமித்திரன், 6 பிப்ரவரி 1923).

அகிம்சையைப் பற்றிய இக்கருத்தில் வரதராஜுலுவுக்குப் பெரிய மாற்றம் ஏதும் அவரது பிந்தைய வாழ்வு அனுபவத் தாலும் ஏற்படவில்லை. இன்னும் சொன்னால் வன்முறைக்கு வன்முறைதான் பதிலாக இருக்க முடியும் என்றுகூடப் பின்னாளில் நினைத்தார்.

அகிம்சையை ஒரு போர்முறையாகவே வரதராஜுலு கருதினார். அதை வாழ்முறையாகக் கருதிய காந்தியிடமிருந்து அதனால் விலகியே இருந்தார். இது வரதராஜுலுவின் பிரச்சனை மட்டும் அல்ல, காங்கிரசுக்குமானது. 1940 ஜூன் 17இல் வார்தாவில் கூடிய காங்கிரசுக் கமிட்டி ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ எனத் தீர்மானமே இயற்றி அகிம்சையைத் தள்ளிவைத்தது.

உடல் வலிமைக்குத் தேவை புலால் என்பது வலிமையை விரும்பிய வரதராஜுலுவின் கருத்து. அதைப் பரிந்துரைத்தார், பின்பற்றினார், பிரசாரம் செய்தார். இதன் தொடர்பில் ஒரு சம்பவம் திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளில் கிடைக்கிறது. 1926இல் கோவை ஆர்.கே. சண்முகம் செட்டியார் வீட்டில் விருந்தினராக வரதராஜுலு பலரோடு தங்கியிருந்தார்.

“இரண்டாம் நாள் இரவு டாக்டர் வரதராஜுலு நாயுடு பந்தியிலே தமக்கென்று புலால் உணவை வரவழைத்தார். தண்டபாணி அதைத் தடுக்க முயன்றார். பந்தியில் எல்லாருஞ் சைவ உணவு கொள்ளும் வேளையில் ஒருவர் மட்டும் புலால் வரவழைப்பது நாகரிகமாகுமா என்பதைப் பற்றி விவாதம் மூண்டது” (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், ப. 320).

பந்தி வழக்கத்தையும் மீறி தன் விருப்பத்தை நடை முறைப்படுத்திய வரதராஜுலு, புலாலைப் பிரசாரமும் செய்தார். சைவ உணவுப் பழக்கத்தவரான அமைச்சர் பக்தவத்சலத்துடன் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் வரதராஜுலு பேசியது இப்படிச் செய்தியாகத் தினந்தந்தியில் வந்தது. “இந்த மந்திரி சொல்வதைக் கேட்காதீர்கள். கறி சாப்பிடுங்கள்”. புலால் உணவே வலிமையும் வீரமும் கொண்ட இளைஞர்களை ஆக்கும் என்பது அவர் கருத்து.

இந்தியர் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்பது இந்துகளின் வலிமையை விரும்பிய வரதராஜுலுவின் இன்னொரு அவா. தன் வீட்டு உறுப்பினர் மிகப் பலரை இராணுவ சேவைக்கு அனுப்பினார். இக்கருத்தின் தொடர்ச்சியாகக் குடும்பக் கட்டுப்பாட்டிலும் அவருக்கு விருப்பம் இல்லை. 50 வயதில் ஒன்பதாவது குழந்தைக்குத் தந்தையானவர் வரதராஜுலு.

ஒவ்வொரு முறை சிறைக்குப் போய் திரும்பும்போதும் ஒவ்வொரு குழந்தை பெற்றுக்கொள்வார் என்று நகைச்சுவை யாக வரதராஜுலுவின் மக்கள் பேற்றை அவரது நூற்றாண்டு விழாவில் ம.பொ.சி. வர்ணித்தார் என்றாலும் அது முழு உண்மை அல்ல. ஒன்பது குழந்தைகளுக்குத் தந்தையானவர் நான்கு முறைதான் சிறைக்குச் சென்றார். ஆனாலும் சிறைக்கும் சில குழந்தைகளுக்கும் சிறு சம்பந்தம் இருந்தது. வரதராஜுலுவுக்கு மதுரையில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் விடுதலை கிடைத்த 1919 பிப்ரவரி 2ஆம் நாள்தான் முதல் மகன் கிருஷ்ணதாஸ் பிறந்தார். (ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் சுவாமி நிர்மலானந்தா குழந்தையை ஆசீர்வதித்துப் பெயர் வைத்தார். சேலம் ஆதிநாராயண செட்டியார் குழந்தைக்குத் தேன் ஊட்டினார்.) ஐந்தாவது மகன் பாலச்சந்திரன் (26 ஜூன் 1923) பிறந்தபோது வேறொரு வழக்கில் மதுரைச் சிறையிலிருந்தார். அங்கிருந்தே குழந்தைக்குப் பெயர் சூட்டினார்.

தேசியம், அசோகம்

பேச்சாளராகவும் பத்திரிகையாளராகவும் சொற்களோடு புழங்கிய அரசியல்வாதி வரதராஜுலுவுக்குப் பிடித்த இரண்டு சொற்களைச் சொல்லுங்கள் என்றால் நான் சொல்வன தேசியம், அசோகம் ஆகியன. இவ்விரு சொற்களில் ஒன்றேனும் முன்னொட்டாக இல்லாத அவரது பெயர் சூட்டல்கள் இல்லை. அவர் தொடங்கிய கட்சிக்கு மட்டுமல்ல தொழிற்சாலைக் கும் தேசிய அடைமொழியைச் சேர்த்தவர் அவர். எண்ணெய் ஆலை, பட்டு உற்பத்தி, கால்நடைச் சந்தை முதலிய தொழில்களைச் செய்யுமிடத்திற்குத் தேசிய தொழிற்சாலை என்று யாராவது பெயரிடுவார்களா? இட்டார் வரதராஜுலு. புதிதாக உருவான தேசியம் என்ற கருத்தாக்கத்தைப் பிரபலப் படுத்தியவர் வரதராஜுலு. இன்று திராவிடத்துக்கு எதிர்ச் சொல்லாகப் புழங்கும் தேசியத்தை, இன்றைக்குத் தோன்றும் கட்சிகூடச் சுமக்கச் செய்ததில் வரதராஜுலுவுக்குப் பங்குண்டு.

அதேபோல மாமன்னர் அசோகர் மீது வரதராஜுலு வுக்கு அளப்பரிய மதிப்பு இருந்தது. தன் சேலம் வீட்டிற்கு அசோக விலாஸ் என்று பெயரிட்டார். ஏறக்குறைய அவரே உருவாக்கிய விழுப்புரத்திற்கு அருகமைந்த சிறு ஊருக்கு அசோகபுரி என்று பெயர் சூட்டினார். டாக்டரான அவர் தயாரித்த மருந்துப்பு ஒன்றின் நாமகரணம் அசோகா சால்ட். அவர் ஆரம்பித்த மருத்துவமனைக்கு அசோகா ஆஸ்பிட்டல் என்று பெயர். வீரம், இரக்கம், உறுதி, செயல் திறன், பரந்த இந்திய ஆளுகை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற கலிங்க அரசன், தேவனாம் பிரியன், அசோகன் மீது ஏறக்குறைய இதே வகை ஜீவ லட்சணம் கொண்ட வரதராஜுலுவுக்குப் பிரியம் இருந்தது பொருத்தமானதாகவே படுகிறது.

துணிவு

நாடகக் காட்சிகளை நினைவூட்டும் பல சம்பவங்களைக் கொண்டது, சிரமங்களும் தியாகங்களும் நிறைந்த அவரது 70 ஆண்டு வாழ்க்கை. துப்பாக்கி ஏந்திய வீரர்கள் வழக்கு மன்றக் கட்டட உச்சியில் நிற்க விசாரணையைச் சந்தித்தவர் வரதராஜுலு. துப்பாக்கி கொண்டு சுட்டதில் அவர் மடிந்திருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் இளைஞர் இருவர் உயிர் நீத்தனர். குண்டுக்கடங்கா அப்படி ஒரு பெருங்கூட்டம் திரளும்படி இருந்தது வரதராஜுலுவின் பிரபலம். 1922 டிசம்பரில் கயா காங்கிரசுக்கு மனைவியுடன் சென்றிருந்த வேளையில், வீட்டில் அவரது காரும் நிலமும் ஜப்தி செய்யப் பட்டது நாடகக் காட்சியை நினைவூட்டும். சேரன்மாதேவி குருகுலத்துக்கு முன்னால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஒருமுறை எச்சரித்தார். கைதுசெய்ய போலீஸ் பின்தொடரப் பலமுறை தடை மீறினார். திடீர் கலகத்தின் விளைவாய்ச் சொந்த நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் அமானுல்லாவுக்காகத் துப்பாக்கி ஏந்திய தொண்டர் படையுடன் ஆப்கன் செல்ல முயன்றார் ஒருமுறை. . . இப்படி பல காட்சிகள் நிறைந்தது அவரது வாழ்க்கை. சுட்டுவிரலை நீட்டி இவர் பேசும் முறையைப் பார்த்து ‘துப்பாக்கி நாயுடு’ என்று மக்களிட்ட செல்லப் பெயருக்கு இப்படியும் ஒரு பொருத்தம் போலும்.

இலக்கியப் பற்று

ஒரு காலகட்ட தமிழகத்தை இசை லயமிக்க அரசியல் பேச்சால் வசீகரித்திருந்த வரதராஜுலுவுக்கு இலக்கியச் சொற் பொழிவு, வளவளா உரையாடல் போன்றவற்றில் விருப்பம் இல்லை. இலக்கியத்தில் அவருக்கு வெறுப்புகூட இருந் திருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.

இதன் தொடர்பில் இலக்கியச் சொற்பொழிவாளர் பண்டிதை அசலாம்பிகை – வரதராஜுலு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தைத் திரு.வி.க. தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1924இல் ஆர்க்காடு தாலுகா மாநாடு டாக்டர் வரதராஜுலு தலைமையில் நடந்தது. முதல் நாள் மாலை பண்டிதையின் பேச்சு. அக்கூட்டத்தில் தானும் கலந்து கொள்ளாமல், திரு.வி.க.வையும் கலந்துகொள்ள விடாமல் கூட்ட இடத்திலிருந்து வெகு தூரத்துக்குக் காரில் அவரை அழைத்துச் சென்று விட்டாராம் வரதராஜுலு. ‘டாக்டருக்கு என் பேச்சு பிடியாது. உங்களுக்குமா பிடியாமற்போயிற்று’ என்று பின்னர் திரு.வி.க.வைக் கடாவினாராம் அசலாம்பிகை. இரவு உணவுக்குப் பிறகு வரதராஜுலு தங்கியிருந்த இடம் அம்மையார் வந்தாராம். இனித் திரு.வி.க.வின் சொற்களில்...

“அம்மையார் வண்டியினின்றும் இறங்கியதைக் கண்டதும் படுக்கையில் கிடந்து எல்லோருடனும் உரையாடிய டாக்டர் வரதராஜுலு ஐயோ! ஒரு மணியாகும் என்று கண்ணை மூடிக்கொண்டார். அம்மையார் வந்தார். என்ன! நீங்களெல்லாம் கண் விழித்திருக்கிறீர்கள்? டாக்டர் மட்டும் உறங்குகிறார் என்று வினவினார். சிலர் நகைப்பு உண்மையை விளக்கியது. அம்மையாரும் நானும் பேசப் புகுந்தோம். சிறு கூட்டம் பெருஞ்சபையாகியது. நாங்கள் வள்ளுவரிடம் போனோம். கம்பரிடம் சென்றோம். சேக்கிழாரைச் சேர்ந்தோம். பரஞ்சோதியை அடைந்தோம். பாரதியாரைப் பார்த்தோம். திலகரைக் கண்டோம். காந்தியடிகளை நோக்கினோம். மணி இரண்டாயிற்று. அம்மையார் விடை பெற்றார். தண்டபாணி வரதராஜுலுவை எழுப்பினார். ‘அசலாம்பிகை போய்விட்டாரா? என்று அவர் வாய் பிதற்றியது’ (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், ப. 158).

இக்குறிப்பைப் படித்ததும் நம் மனக்கண்ணுக்குத் தோன்றும் வரதராஜுலுவின் அறிதுயில் காட்சி அவரது இலக்கியப் பற்றின்மையைக் காட்டும். இலக்கியமும் இலக்கிய வழக்கும் வரதராஜுலுவுக்கு எப்போதும் மிகையானதாகவே இருந்திருக்கிறது. அதன் விளைவே அவரது எளிமைத் தமிழ்.

வரதராஜுலு தமிழ்நாடு அச்சகம் மூலமாகப் பத்திரிகை மட்டுமல்ல பல நூல்களையும் வெளியிட்டார். தமிழ்நாடு கார்ட்டூன், ஹென்றி போர்டு என்பவை கைக்குக் கிடைத்த நூல்களுள் சில. வரதராஜுலு ராணா பிரதாப் சிங்கின் வரலாற்றை எழுதியுள்ளதாகவும், ராமதீர்த்த சுவாமிகளின் வாழ்வின் இரகசியம் என்ற நூலை மொழிபெயர்த்துள்ள தாகவும் எம். அன்பழகன் (Dr. Varadarajulu Naidu-A Study, p.13), இல. வின்சென்ட் (விடுதலை வேள்வியில் தமிழகம், ப. 243) ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவ்விரு நூல்களும் இருக்குமிடம் தெரியவில்லை. ஆனால் தன் மூன்றாவது மகனுக்குப் பிரதாப் என்று பெயரிட்டிருந்தது வரதராஜுலு ராணா பிரதாப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதி யிருப்பதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. இச்செய்தி தரும் அச்சம் பெரிது.

மருத்துவ முறை

சித்த மருத்துவக் கல்வியை வரதராஜுலு கல்கத்தாவில் படித்ததாகப் பலரும் தெரிவிக்கிறார்கள். கல்கத்தாவில் சித்த மருத்துவக் கல்லூரி இருக்க வாய்ப்பில்லை. டாக்டர் வரதராஜுலு கையாண்ட மருத்துவ முறை அநேகமாக நேடிவ் மெடிசன் என்னும் இயற்கை மருத்துவ முறையாக விருக்கலாம் என்றே அவரோடு 38 ஆண்டுகள் வாழ்ந்த அவர் மகனும் சித்த மருத்துவருமான டாக்டர் கிருஷ்ணதாஸ் கருதுகிறார்.

தோல்விகள்

சொந்த வாழ்க்கையில் வரதராஜுலு பல தொழில் களைச் செய்து பார்த்தார். மெழுகுவத்தி செய்யும் தொழிலைச் செய்தார் (பின்னர் அதை நண்பர் பவானி சிங்குக்கு அளித்துவிட்டார்). மின்சார ரசத் தயாரிப்பு அவருக்குப் புகழும் பணமும் கொடுத்தது. அதையும் கை விட்டார். (உறவினர் ராமசந்திர நாயுடுவிடம் ஒப்பளித்தார்.) 1930இல் அப்போதைய முதல்வர் முனுசாமி நாயுடுவைத் திறப்பாள ராகக் கொண்டு தொடங்கிய மருத்துவமனையும் சிறப்பாக வளர்ந்ததாகத் தெரியவில்லை.

சிந்தாதிரிப்பேட்டையில் இந்தியா எனும் பெயரில் ஒரு உணவகம் நடத்திப் பார்த்தார். ஒரு நிதி நிறுவனம்கூடத் தொடங்கினார். இடையில் இந்து குருகுலங்கள் வேறு. இறுதியாகத்தான் அந்தத் தேசிய தொழிற்சாலை முயற்சி. ஏன் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவ வேண்டும்?

It was Dr. Naidu who introduced me to public life; it will be correct to say that it was the same Dr. Naidu who introduced even Mr. C. Rajagopalachari to public life said E.V. Ramasamy Naicker. He [Dr. P. Varadarajulu] had also inspired many people to join public life. The conspicious case was Shri K. Kamaraj (The Mail, 20 November 1955).

இக்குறிப்பின்படி பெரியாரையும் இராஜாஜியையும் காமராசரையும் பொது வாழ்க்கைக்கு அழைத்துவந்த வரதராஜுலு அவர்களைப் போல நீண்டகாலம் வெகுமக்கள் அறிந்த தலைவராக நீடிக்காதது ஏன்? அம்மூவருள் அதிகாரத்தை விரும்பாத பெரியாரைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இராஜாஜி, காமராசர் ஆகியோர் முதலமைச்சர் களாக உயர்ந்தனர். ஆனால் வரதராஜுலுவால் சட்டமன்றத் தைத் தாண்டி மேலுயர முடியவில்லை. நான்கு முறை சிறை சென்ற தியாகத்துக்குப் பதவிப் பொறுப்புகள் என்னும் பரிசுகள் இல்லையே! என்ன காரணம்?

எலியும் பூனையுமாய் அரசியல் களத்தில் எதிரெதிர் நின்ற காங்கிரசும் நீதிக்கட்சியும் தத்தம் சார்பில் இந்திய சட்டசபைத் தேர்தலில் வரதராஜுலுவை நிற்கச் சொல்லி 1934இல் வற்புறுத்தின. இது அவருடைய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. எனினும் பின்னால் அரசியலில் உயரங்கள் அவருக்குக் கூடிவராததன் காரணம் என்ன?
காங்கிரசிலும் தொடர முடியவில்லை. நீதிக்கட்சியையும் ஏற்க இயலவில்லை. இந்து மகாசபைக்குள் மூச்சு முட்டியது. புதிய கட்சி முயற்சிகளும் தோல்வியில் முடிந்துகொண்டி ருந்தன. மனிதர் பாவம் அலைகழிந்துதான் போயிருப்பார். இவை எல்லாவற்றுக்கும் என்ன காரணம்?

எல்லையில்லாத துணிவும் தான் நினைத்ததில் தவறு ஏதும் இருக்க முடியாது என்ற உறுதியும் அவரது தோல்விக்குக் காரணங்கள் என வ.ரா. மதிப்பிட்டது உண்மையாக இருக்குமோ?

தானே வளர்ந்த தாவரம்

வரதராஜுலு எந்தப் பின்புல உதவியுமின்றித் தானே வளர்ந்த தாவரம். ஏழாவது வயதில் தாயை இழந்த அவர் 11 வயதில் தந்தையையும் பறி கொடுத்தார். தாயைப் பெற்ற பாட்டி லட்சுமி அம்மாளிடம் சேலம் கோட்டைப் பகுதியில் வாழ்ந்தார். அந்த அம்மாளும் 1911இல் உடுமலைப்பேட்டை யில் காலமானார். உடன்பிறந்த ஒரே தமக்கையான நாகம்மாளும் 1918இல் திருப்பூரில் இறந்துபோக வரதராஜுலு பிறந்தகத்து சொந்தங்களை இழந்தவரானார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. இதற்கிடையில் 1911இல் குருசாமி நாயுடு மகள் ருக்மணியம்மாளைத் திருமணம் முடித்திருந்த வரதராஜுலு 1918 நவம்பரிலிருந்து சேலத்தில் நிரந்தரமாகத் தங்கலானார். அதற்கு முன் ராசிபுரத்திலும் திருப்பூரிலும் அடுத்தடுத்து வசித்தார். பின் 1929இல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், அண்ணா சாலை அரசினர் தோட்ட அரசுக் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வாழ்ந்தார். 1930களிலிருந்தே விழுப்புரம் அருகே தோட்ட வீடு ஒன்று அவருக்கு உரிமையாயிருந்தது.

கோவை, லண்டன் மிஷன் பள்ளியோடு தன் ஏட்டுக் கல்வியை நிறுத்திவிட்டிருந்த வரதராஜுலுவுக்கு வெளிநாட்டி லும் உள் நாட்டிலும் பெரும் படிப்பு படித்த துணைவேந்தர் களும் திவான்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் நண்பர் களாக இருந்தனர். அவர்களுடன் நீண்ட கடிதப் போக்குவரத் தும் இருந்தது. இவையெல்லாம் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. அறிவும் கற்பனையும் மிக்க மூளையை உடையவர் வரதராஜுலு என்று இராஜாஜி தன் இரங்கலுரையில் குறிப்பிட்டிருந்தது சம்பிரதாய பாராட்டு அல்ல என்றே தோன்றுகிறது.

சேரன்மாதேவி போராட்டம் வரதராஜுலுவின் வாழ்க்கையின் மூலைக் கல்லாயினும் அதன் நினைவுகளைப் பிற்கால வாழ்வில் அவர் சந்தோஷமாக எதிர்கொள்ள வில்லை. இராஜாஜியுடன் நட்பு முறிந்ததற்கு அதுவே காரணமாகிவிட்டது என்ற உள்ளார்ந்த வருத்தம் அவருக்கு இருந்தது. ‘பாழாய்ப்போன குருகுலப் போராட்டம்’, ‘குருகுலப் பிரச்சினை வேறு வீண் செலவுக்குக் காரணமானது’ என வருத்தம் தோய்ந்த சொற்களுடனேயே பின்னாளில் அதை நினைவுகூர்ந்தார். அவரது வாழ்காலத்தில் வெளிவந்த அவர் குறித்த இரண்டு மலர்களிலும் குருகுலம் பற்றிய பிரஸ்தாபத் தைத் தவிர்த்துவிட்டிருந்தார். பெற்ற வெற்றியைக் கொண்டாடக்கூட முடியாத சூழலின் எதிர் நிலைமையை என்னவென்று சொல்வது? வரதராஜுலுவின் மறைவின்போதான இரங்கலுரைகளில்கூடப் பெரியார், கண்ணதாசன் தவிர மற்றவர்கள் குருகுலத்தைக் குறிப்பிடவில்லை. ‘குருகுலப் போராட்ட வீரர் காலமானார்’ என்று பெரியார் தலைப்புச் செய்தி வெளியிட்டார். காமராசரோ, இராஜாஜியோ, இந்து பத்திரிகையோ பிரசண்ட விகடனோ கூட குருகுல விஷயத்தைத் தம் இரங்கலுரைகளில் குறிப்பிடவில்லை.

நிலைமையில் முன்னேற்றமில்லை என்றாலும் பிற்காலத் தில் சிலரது கவனிப்பை வரதராஜுலு பெற்றிருந்ததைப் பரவாயில்லை எனலாம். அதற்கான சான்று வரதராஜுலு வின் குடும்பத்திற்குக் கலைஞர் உதவி செய்தது. வரதராஜுலு இறந்து 10 ஆண்டு காங்கிரசு ஆட்சிக்குப் பிறகு தி.மு.க. பொறுப்பேற்றபொழுது, அவர் குடியிருந்த அரசு வீட்டைக் காலிசெய்ய முயன்றது. முதல்வர் கலைஞர் கவனத்துக்குச் செய்தி போனபோது ‘வரதராஜுலுவின் மனைவி ருக்மணியம்மாள் ஆயுட் காலம்வரை உரிய வாடகை செலுத்தி அங்கேயே வாழலாம்’ என்று ஆணையிட்டார் (முரசொலி, 7 பிப்ரவரி 1989). இதையே முன்னுதாரணமாக்கி என்.வி. நடராசன் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத் தினருக்கும் இந்தச் சலுகையைப் பின்னாளில் கலைஞர் வழங்கியது வேறு செய்தி.

வருமானத்தை வாரிக் கொட்டிய மருத்துவத் தொழிலைத் தேச சேவைக்காகக் கைவிட்டார். காந்தியைச் சிறை வைத்ததற்காக நூதன முறையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கார், நிலம் முதலியவற்றை இழந்து நின்றார். பல்வேறு எதிர்ப்பு களுக்காக அரசின் கண்காணிப்பில் பல காலம் இருந்தார். பல வழக்குகளைச் சந்தித்தார். பல முறை சிறை சென்றார். சுயராஜ்ய நிதி உட்பட பல விடுதலை முயற்சிகளுக்கும் தலித் முன்னேற்றத்திற்கும், பத்திரிகைக்கும், தம்மிடமிருந்த பொருளை வாரி வழங்கினார். இப்படியாக அவரைச் செயல்பட வைத்தது எது? சுயநலமற்ற தேசபக்தி, துன்பங் களைத் தாங்கும் விருப்பத்துடன் கூடிய தைரியம் என்கிறார் அவரது நெடுநாள் நண்பரும் அறிவுஜீவியுமான கே.எம். பணிக்கர்.

எது எப்படியாயினும் தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் எழுச்சியின் பின்னணியில் உருவான காங்கிரசு தலைவர் களில் வரதராஜுலுவின் மரபு தனித்துவம் கொண்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்குதிரட்டும் முயற்சியில் பார்ப்பனியச் செயல்பாடுகளை நேர் எதிராக வைத்துப் பார்த்தார் பெரியார். வரதராஜுலு அவ்வப்போது பிரச்சினை அடிப்படையில் முடிவுசெய்யும் ராஜதந்திர நிலை எடுத்தார். காங்கிரசுக்குள்ளிருந்தே அது எதிர்த்த இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்தார். குறிப்பிட்ட சூழலில் இந்திய விடுதலையில் டொமினியன் அந்தஸ்து போதும் என்றார். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதாக வரதராஜுலுவின் பார்ப்பனரல்லாதார் ஆதரவு நிலைப்பாட்டை கேலியாகவும் விவரிக்கலாம் என்றாலும் பெரியார் அவரை நம்பினார்.

காங்கிரசின் ஜி. சுப்பிரமணிய ஐயர், எஸ். சீனிவாச ஐயங்கார், இராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோரின் மரபு ஒரு வகை. இது ஆங்கிலத்தால் இயங்கும். படிப்பறிவாலும் சட்ட அறிவாலும் ஆங்கில அரசைத் திணறடிக்கும். வ.உ.சி., திரு.வி.க., சக்கரை செட்டியார், சிங்காரவேலர் ஆகியோர் வழிவந்தது இன்னொரு மரபு. இதற்கு ஆங்கிலம் தெரியுமெனி னும் தமிழால் இயங்கும், உணர்ச்சியில் கிளர்ந்த சொந்த அறிவால் முன்னேறும். தடையை மீறும். சிறைப்படும். வீரத்தால், தியாகத்தால் ஆங்கில அரசைத் திணறச் செய்யும்.

முன்னதற்கும் தொழிலாளர்க்கும் தொடர்பில்லை. பின்னது தொழிலாளர் இயக்கங்களில் கால் பதித்திருக்கும். முன்னதற்கு வடநாட்டுத் தலைவர்களின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டென்றால் பின்னது உள்ளூர்த் தலைவர்களின் செல்வாக்கில் திளைக்கும். முன்னது தேவையின்பொருட்டு அரசுடன் ஒத்துழைக்கும். பின்னது நீதிக்கட்சியுடன் சில அம்சங்களில் உறவுகொள்ளும்; போராடுவோருடன் தோள் சேரும். பின்னதே வரதராஜுலு கைக்கொண்ட மரபு. அதுவே பார்ப்பனரல்லாதார் தலைவரும், பெரியாரின் நண்பருமான வரதராஜுலு நடந்த தொடர்வாரற்ற தேசிய பாதை.

(நன்றி: மலைகள்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp