பள்ளிகளில் பாகுபாடு

பள்ளிகளில் பாகுபாடு

செவ்வாய்க் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே செயற்கைக் கோளை அனுப்பி சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆனால் அதே இந்தியாவில்தான் ஆரம்பக் கல்வியை முடிப்பதற்கு முன்பே சுமார் எட்டு கோடி மாணவர்கள் பள்ளியைவிட்டுப் பாதியிலேயே நின்றுபோகிற அவலமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு வயிறு இருப்பதை மிகவும் தாமதமாகக் கண்டுபிடித்த மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு சத்துணவு வழங்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றன.அந்தக் குழந்தைகளுக்கு மனம் என ஒன்று இருக்கிறது என்பதை இன்னும் அவை தெரிந்துகொள்ளவில்லை. ஆசிரியர்களுக்கும்கூட அது புரிந்ததாகத் தெரியவில்லை.

பிஞ்சுக் குழந்தைகளின் மனம் கனவுகளால் நிரம்பியிருப்பதையோ, மான உணர்ச்சி அதில் தளும்பிக்கொண்டிருப்பதையோ ஆசிரியர்கள் அறிந்திருந்தால் ஒரு பள்ளி இப்போதிருப்பதுபோல் இருக்காது. பிரேசில் நாட்டுச் சிந்தனையாளர் பாவ்லோ ஃப்ரேர் சொன்னதுபோல ஆசிரியர்களில் பெரும்பாலோர் பிள்ளைகளைத் தங்களது வங்கிக் கணக்குகளைப் போலத்தான் நினைக்கிறார்கள்: தனக்குத் தெரிந்ததை அவர்களின் தலைக்குள் ’டெபாசிட்’ செய்வது. தேர்வு நேரத்தில் அதை ’வித்ட்ராவல்’ பண்ணிக்கொள்வது.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளோடு சேர்ந்து இருப்பதைத்தான் விரும்புவார்கள். அப்படி சேர்ந்திருக்க வாய்ப்பளிக்கும் பள்ளிக்குப் போவது அவர்களுக்குப் பிடித்தமானதாகத்தான் இருக்கவேண்டும். ஆனாலும் இடைநிற்றல் நடக்கிறது. ஒரு குழந்தை பள்ளிக்குப் போகாமல் இருப்பதற்குப் பலவித காரணங்கள் இருக்கின்றன. வறுமை கப்பிய குடும்பச் சூழல், வேலைதேடி இடம்பெயரும் பெற்றோர், குழந்தைத் தொழிலாளராய் மாற்றப்படும் அவலம் – என அந்தக் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால் தலித் பிள்ளைகள் இடைநிற்றலுக்கு இவை எல்லாவற்றையும்விட முக்கியமானதொரு காரணம் இருக்கிறது. வகுப்பறையில் காட்டப்படும் பாகுபாடு என்பதுதான் அந்தக் காரணம்.கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் உண்டு ஆனால் பாகுபாடு இல்லாத பள்ளிகள் இல்லை; ’காற்று நுழையாத வகுப்பறைகளில்கூட சாதி நுழைந்துவிடும்’ என்று சொல்லுமளவுக்கு அந்தப் பாகுபாடு எங்கும் நிறைந்ததாயிருக்கிறது.

இதை மிகைப்படுத்தப்பட்ட கூற்று என யாரேனும் கருதினால் உங்கள் அருகாமையிலிருக்கும் பள்ளி ஒன்றுக்குச் செல்லுங்கள் ஏதேனும் ஒரு வகுப்பறையில் நுழையுங்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் யாரென்று பாருங்கள்.அதில் தலித் மாணவர் இருக்கிறாரா என்று விசாரியுங்கள். எந்தவொரு பள்ளிக்கும் செல்லுங்கள் அங்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள் அதில் தலித் மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுங்கள். மதிய உணவு வழங்கப்படும் நேரத்தில் ஏதேனும் ஒரு பள்ளிக்குச் செல்லுங்கள் அங்கு தலித் மாணவர்கள் மற்ற மாணவர்களோடு சமமாக அமர்ந்து உணவருந்துகிறார்களா என்று கவனியுங்கள். எந்தப் பள்ளிக்கும் செல்லுங்கள் அங்கே காலையில் ’ப்ரேயரை’ வழிநடத்தும் பிள்ளைகளில் எத்தனைபேர் தலித் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று விசாரியுங்கள். பள்ளி ஆண்டுவிழாக்களின்போது, மற்ற கொண்டாட்டங்களின்போது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிள்ளைகளில் தலித் பிள்ளைகள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கேளுங்கள். எந்தவொரு பள்ளிக்கும் செல்லுங்கள் அங்கே பள்ளியைப் பெருக்குவது, கழிப்பறையைக் கழுவுவது போன்ற பணிகளை எந்த மாணவர்கள் செய்கிறார்கள் என்று கேளுங்கள்.

மத்திய அரசாங்கத்தின் சர்வசிக்‌ஷ அபியான் அமைப்பின் சார்பிலேயே இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டு அறிக்கையொன்றையும் தயாரித்திருக்கிறார்கள். ’நேஷன் சிந்தசிஸ் ரிப்போர்ட் 2012’ என்ற அந்த அறிக்கையில் பள்ளிகளில் பாகுபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டதோடு மட்டுமின்றி அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். சர்வசிக்‌ஷா அபியான் அறிக்கை மட்டுமல்ல, ப்ரோப் அறிக்கைகள் ( 1999,2009) மானபி மஜும்தார்,ஜோஸ் மூய்ஜ் (2012), பூனம் பத்ரா( 2005,2009), கீதா காந்தி கிங்டன்(2009), கார்த்திக் முரளிதரன், மைக்கேல் க்ரேமர் (2006) கீதா நம்பீஸன் ( 2006,2009) ஆகியோரின் ஆய்வுகள், ப்ராதம் அமைப்பின் ஏசர் அறிக்கைகள், அண்மையில் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை (ஏப்ரல் 2014) ஆகியவையும் இந்தப் பிரச்சனை குறித்து ஆழமாக ஆராய்ந்துள்ளன.

இந்திய அளவில் இவ்வளவு ஆய்வுகள் நடந்தாலும்கூட தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை இன்னும் கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.வகுப்பறைகளில் சமத்துவமற்ற தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் புலப்படுத்துகின்றன.சில சுயநலமிகள் விதைக்கும் வெறுப்பு, பள்ளி வளாகங்களில் பார்த்தீனியத்தைப்போல அடர்ந்து வளர்வதன் அடையாளங்கள் தென்படுகின்றன. இதை இப்போதே வேரோடு பிடுங்கியெறிந்தால்தான் தமிழகக் கல்விச் சூழலைக் காப்பாற்ற முடியும். அப்போதுதான் தமிழகம் பொருளாதாரரீதியாக வளர்வதும் சாத்தியமாகும்.

கல்விக்கூடங்களில் சமத்துவத்தைக் காப்பாற்றும் பொறுப்பு முதன்மையாக ஆசிரியர்களைச் சார்ந்தது. அவர்களில் இப்போதும்கூட நல்லவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காகத்தான் ’நிகரி’ விருதை ஆண்டுதோறும் மணற்கேணி வழங்கிவருகிறது. ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் சமத்துவ கருத்துகளை வேரூன்றச் செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த நூலை மனற்கேணி வெளியிடுகிறது.

இந்தியப் பிரதமருக்கு ஆலோசனை சொல்வதற்கென அமைக்கப்பட்ட தேசிய அறிவுரை மன்றத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை கடந்த ஆண்டு பேராசிரியர் கல்யாணியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அதைப் படித்த அவர் இந்த அறிக்கை தமிழில் வந்தால் பலருக்கும் உதவியாக இருக்குமே என்றார். அவர்தான் பேராசிரியர் சே.கோச்சடை அவர்களிடம் கொடுத்து தமிழில் இதை மொழிபெயர்க்கச் செய்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் மனற்கேணி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணி ஓய்வுபெற்ற பின்னும் மக்கள் நலனில் அக்கறையோடு பல்வேறு பொதுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர் சே.கோச்சடை கல்வியில் அக்கறைகொண்டவர் மட்டுமின்றி நல்லதொரு மொழிபெயர்ப்பாளருமாவார்.இந்த அறிக்கையைப் படிப்பவர்கள் அதை உணரமுடியும்.

இந்தியாவிலிருக்கும் மாநில அரசுகள் மத்திய அரசு வெளியிடும் இப்படியான அறிக்கைகளைத் தத்தமது மாநில மொழிகளில் மொழிபெயர்த்து உடனுக்குடன் மக்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. அதை வலியுறுத்தவும் ஆளில்லை. அதனால்தான் நாமே அந்தப் பணியைச் செய்யவேண்டியிருக்கிறது. இந்த அறிக்கையைப் படிக்கும் ஆசிரியப் பெருமக்கள் தமது வகுப்பறைகளில் சமத்துவத்தைத் தழைக்கச் செய்வார்கள் என நம்புகிறேன்.

- ரவிக்குமார்
26.09.2014

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp