நிச்சலனம்

நிச்சலனம்

(நூலிலிருந்து ஒரு பகுதி)

மும்தாஜை வளர்த்ததில் இக்ஸானுக்கும் அவன் மனைவிக்கும் முக்கியப் பங்கு உண்டு. மும்தாஜின் அப்பாவும் அம்மாவும் சில வாரங்கள் இடைவெளியில் ஒருவர்பின் ஒருவராக இறந்துபோனபோது, இக்ஸான்தான் அவனை எடுத்து வளர்த்தான். மஸீதை விட்டால் இக்ஸான், இக்ஸானை விட்டால் மஸீத் என நூரனோடு அவனுக்குப் பரிச்சயம் ஏற்படும் வரையிலும் அவனது வாழ்க்கை கிட்டதட்ட அவர்களோடே கழிந்தது. இக்ஸான் அவனுக்குத் தந்தையும் ஆசானுமாக இருந்தான்.

மஸீதிற்கு உடல்நிலை தேறியபிறகு மும்தாஜ் இரண்டு ஆண்டுகள் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டபோது அங்கும் இக்ஸானின் தாக்கம் அவனுக்குள் தொடர்ந்தது. மனதைத் திசைதிருப்பும் பல்வேறு ஈர்ப்புகள் நிறைந்த அந்தப் புதிய சூழலிலும் அவன் சீரழியாமல் இருந்ததற்கு இக்ஸானின் வழிகாட்டுதல் ஒருவிதத்தில் காரணம். இதனால் அவன் நேரத்தை வீணடிக்கவில்லை.

அவனுக்கு ஒரு பெண்ணின் பாசமும் அழகும் அளிக்கக்கூடிய ஆசுவாசம் தேவைப்பட்ட கட்டத்தில் மஸீத் அவன் வாழ்க்கையில் நுழைந்தாள். அவளைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் “நான் ஒரு இளவேனிற்கால மரக்கிளையின் கீழே எனது இளமையின் சில நாட்களைக் கழித்தேன்” என்று மும்தாஜ் மனதிற்குள் சொல்லிக்கொள்வதுண்டு. எனவே இக்ஸானின் நோய் இளைஞனான மும்தாஜின் உள்ளத்தைக் குலுக்கிப்போட்டுவிட்டது. மருத்துவரின் உதட்டிலிருந்து ‘நிமோனியா’ என்ற வார்த்தை உதிர்ந்த கணம்தொட்டு அவன் பதற்றமும் குழப்பமுமாக இருந்தான்.

இம்மாதிரியான பதற்றத்தை உணர்வது மும்தாஜுக்கு இது முதல் முறையல்ல. பதற்றம் அவனுக்குள் எப்போதுமிருந்தது. மனதில் எங்கோ அடியாழத்தில் இருந்தாலும் அவனை அது ஆட்டிப்படைத்துக் கொண்டுதானிருந்தது. மும்தாஜின் மனதிற்குள் சுருண்டு படுத்துக் கிடக்கும் இந்தப் பாம்பை விரட்டியடிக்கவும் அந்த மரத்தை வேரறுக்கவும் இக்ஸான் பலமுறை முயன்றிருக்கிறான். ஆனால் மஸீதின் வரவுக்குப் பின்னர்தான் மும்தாஜிடம் மலர்ச்சி ஏற்பட்டு, வாழ்வின் ஒளிபொருந்திய பகுதியை நோக்கி அவனது பார்வை திரும்பியது. மஸீதின் கரங்களில் அவன் ஒப்படைக்கப்படும்வரை மும்தாஜ் மனக்கசப்புகள் மட்டுமே கொண்ட ஒருவனாக, உலகைப் பார்க்க விரும்பாதவனாக, பேரழிவையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனாக இருந்தான். அதற்கும் காரணமில்லாமலில்லை.

முதலாம் உலகப்போருக்குப் பின்னால் போர் நிறுத்தம் அமலுக்கு இருந்தபோது, ச என்னும் நகரத்தின் மீது கிரீஸ் படையெடுத்த சமயத்தில், மும்தாஜ் குடும்பத்தினர் குடியிருந்த வீட்டு எஜமானரின் பகையாளியான உள்ளூர் அனடோலிய கிரேக்கன் ஒருவன் வீட்டுக்காரர்தான் என்று நினைத்துத் தவறுதலாக மும்தாஜின் அப்பாவைச் சுட்டுவிட்டான். அந்த நகரம் கைப்பற்றப்பட இருந்த நேரம் அது. துருக்கியக் குடும்பங்கள் பல ஏற்கனவே தப்பி ஓடியிருந்தன. துரதிருஷ்டக்காரரான மும்தாஜின் அப்பா, தன் மனைவியும் பையனும் அன்றிரவு தப்பிச் செல்வதற்காக ஒரு வாகனத்தை ஒருவழியாக ஏற்பாடு செய்திருந்தார். பெட்டிகளும் சாமான்களும் தயார் செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயண ஏற்பாட்டைச் செய்வதற்காக அன்று முழுவதும் அவர் அலைந்து திரிந்திருந்தார். இரவு கவியத்துவங்கிய சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அவர், “ஹைடி! எல்லாம் தயாராகிவிட்டது. ஏதாவது சாப்பிட்டுவிட்டு இன்னும் ஒரு மணிநேரத்தில் நாம் சாலையை அடைந்துவிட வேண்டும். பாதைகள் இன்னும் திறந்தேதான் இருக்கின்றன” என்றார். அவர்கள் துணியொன்றைத் தரையில் விரித்து உணவருந்தினார்கள். அப்போதுதான் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. வேலைக்காரன் வந்து, அந்த வீட்டுக்காரரைப் பார்ப்பதற்காக ஒருவர் வந்திருப்பதாகச் சொன்னான். மும்தாஜின் தந்தை தான் அன்று காலையிலிருந்து அந்திவரை அலைந்து திரிந்து ஏற்பாடு செய்திருந்த வண்டி பற்றிய செய்தி ஏதாவது வந்திருக்கும் என்று எண்ணத்தில் அவசர அவசரமாக வாசலுக்குச் சென்றார். சில நொடிகளில் ஒரு தோட்டாச் சத்தம், எதிரொலி எழும்பாத ஒரு வேட்டின் ஒலி அவர்களுக்குக் கேட்டது. கட்டுமஸ்தனான அவனது தந்தை ஒரு கையால் தனது வயிற்றைப் பிடித்தபடி தட்டுத்தடுமாறி எப்படியோ படிக்கட்டில் ஏறிவந்து, ஹாலுக்குச் செல்லும் பாதையில் சுருண்டு விழுந்தார். ஐந்து நிமிடங்களுக்குள் இதெல்லாம் நடந்துவிட்டது. அம்மாவுக்கும் பையனுக்கும் கீழே அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்றோ வந்தவன் யார் என்றோகூடத் தெரிந்திருக்கவில்லை. அந்தத் துப்பாக்கி வேட்டை தொடர்ந்து தடதடவென்று மனிதர்கள் ஓடும் ஒலி. அதிர்ச்சியில் உறைந்துபோன அவர்களுக்குப் பீரங்கிப்படையினர் முன்னேறிவருவது கேட்டது. சற்று நேரத்தில் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களில் ஒரு முதியவர் “அவர் எங்களை எப்போதும் மதிப்புடன் நடத்தியவர். அவரை இப்படியே விட்டுவிட வேண்டாம். அவரை அடக்கம் செய்ய வேண்டும். அவர் ஒரு தியாகி. எனவே இந்த உடையிலேயே சடங்குகள் எதுவுமில்லாமல் அவரை அடக்கம் செய்யலாம்” என்று கூறி உடன் வந்திருந்தவர்களிடம் உடலைத் தயார்படுத்தச் சொன்னார்.

தோட்டத்தின் மூலையிலிருந்த சினார் மரத்தின் கீழே, புகைபிடித்த ஒரு லாந்தர் மற்றும் அரைக்கிறுக்கனான தோட்டக்காரன் பிடித்திருந்த - கொண்டு செல்லும் பொருட்களோடு இன்னும் கட்டப்படாத - ஒரு எண்ணெய் விளக்கு இவற்றின் தணிந்த ஒளியில், அவசரஅவசரமாகக் குழி வெட்டப்பட்டது.

அந்தக் காட்சியை மும்தாஜ் ஒருபோதும் மறக்கவில்லை. மேலே அம்மா அப்பாவின் உடலருகில் அழுதவண்ணம் இருந்தாள். மந்திரத்தால் கட்டுண்டவனைப் போல மும்தாஜ், தோட்டத்து வாசல் கதவொன்றில் ஒட்டி ஒடுங்கிக்கொண்டு மரத்தடியில் குழி வெட்டிக்கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்தபடி நின்றிருந்தான். லாந்தரைக் கிளையொன்றில் தொங்கவிட்டு, மூன்று பேர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். காற்றில் லாந்தர் அணைந்துவிடும்போல இருந்தது. தோட்டக்காரக் கிழவன் தனது மேல்சட்டை நுனியால் எண்ணெய் விளக்கை மறைத்து அது அணைந்துவிடாமல் பார்த்துக் கொண்டான். அந்த இரு விளக்குகளின் ஒளியில் நிழல்கள் விரிவதும் ஒடுங்குவதுமாக இருந்தன. பீரங்கிப் படைகள் நகரும் மெத்தொலிக்கு மத்தியில், அம்மாவின் தேம்பல் மண்பறிக்கும் ஓசையோடு வந்து கலந்தது. அவர்கள் வேலையை முடித்தபோது, சுற்றுப்புறம் சட்டென்று செந்நிறமாக ஒளிர்ந்தது. வீடுகள் இருந்த திசையிலிருந்துதான் அந்த ஒளி வந்தது. நகரம் எரிந்துகொண்டிருந்தது. ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே தீப்பிடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். சிவப்பாக மாறிப்போயிருந்த ஆகாயத்தின் கீழே இந்த மனிதர்கள் வேலையைத் தொடர்ந்தார்கள். பீரங்கிக்குண்டுகள் அங்குமிங்கும் விழத்துவங்கியிருந்தன. அணையை உடைத்துக்கொண்டு பாயும் நீரின் ஓசையைக்காட்டிலும் பெருத்த முழக்கம் நகரத்திலிருந்து எழுந்தது. அதனைத் தொடர்ந்து அழிவைக் குறிக்கும் ஓசைகள். தோட்டத்து வேலியைத் தாண்டி உள்ளே குதித்து வந்த ஒருவன் உரக்கக் கத்தினான்: “அவர்கள் நகரத்துக்குள் நுழைந்துவிட்டார்கள்.” எல்லோரும் உறைந்துபோனார்கள். அவனது அம்மா மட்டும் கெஞ்சியபடியே படியிறங்கி வந்தாள். இதற்குமேல் மும்தாஜால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கதவைப் பிடித்திருந்த கைகள் தளர்ந்தன. அப்படியே மயங்கி நிலத்தில் விழுந்தான். அவன் விழுந்து கிடந்த இடத்திலிருந்தே சில ஓசைகள் அவனை வந்தடைந்தன. ஆனால் அவன் பார்த்தது அவனைச் சுற்றியிருந்தவற்றிலிருந்து வேறாக இருந்தது. அவனது அப்பா, ஒவ்வொரு நாளிரவும் செய்வதுபோல, அந்தப் பெரிய கண்ணாடி லாந்தரின் அடிப்பாகத்தை உயர்த்தி அதைப் பற்றவைக்க முயன்றுகொண்டிருந்தார். மும்தாஜுக்கு நினைவு திரும்பியபோது, தான் வேலிக்கு வெளியே கிடப்பதைக் கண்டான். “உன்னால் நடக்க முடியுமா?” என்று அவன் அம்மா கேட்டாள். அவன் விச்ராந்தியாகச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “நடக்க முடியும்” என்றான். நடக்கவும் செய்தான்.

அதன்பிறகு அவர்கள் மேற்கொண்ட பயணத்தை மும்தாஜால் முழுமையாக நினைவுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எந்த மலையின் மேலிருந்து அந்த நகரம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம்? துன்பத்துக்கு ஆளான நூற்றுக்கணக்கானவர்களின் கொடுமையான ஊர்வலத்தோடு எந்தச் சாலையில் வைத்து இணைந்தோம்? புலரும்பொழுதில் அவர்களை ஒரு கோச்சு வண்டியில் ஏற்றி, அவனை வண்டிக்காரன் அருகில் அமர்த்தியது யார்? இன்றுவரை விடை கிடைக்காத கேள்விகள் இவை.

அரைகுறையான சில நினைவுகள் அவனுக்கு இருக்கின்றன. அவற்றில் ஒன்று, அந்த வெளியேற்றத்தின் போது அவனது அம்மா அடைந்த மாற்றம். தனது கணவனின் இறந்த உடல் அருகில் சோகத்துடன் அழுதுகொண்டிருந்த பெண்ணல்ல அவள் இப்போது. தனது மகனையும் தன்னையும் உயிர் காத்துக்கொள்ளத் தயாராகிவிட்ட ஒரு தாய் அவள். அந்த ஊர்வலத்தை நடத்திச் சென்றவர்கள் என்ன சொன்னார்களோ அவற்றை அவள் அமைதியாகப் பின்பற்றினாள். தனது மகனின் கரத்தை உறுதியாகப் பற்றியபடி அவள் நடந்தாள். அந்தப் பிடியின் இறுக்கத்தை மும்தாஜால் இன்னமும் உணர முடிகிறது. அவள் இறந்த பின்னும் தொடரும் பிடி அது.

சில நினைவுகள் இன்னும் தெளிவாக இருக்கின்றன. தனது அம்மா கிழிந்த முக்காடுடன், இறுக்கமான முகத்தோடு அவனருகில் அசைவற்று நின்றுகொண்டிருந்த காட்சி அவனுக்கு அடிக்கடி வரும். வண்டியில் போகையில், அவன் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவள் வெளிறியதைப் போலத் தோன்றும்; நிராசையுடன், நொந்த முகத்துடன், அடக்கிய கண்ணீருடன்.

வெளியேற்றத்தின் இரண்டாம் நாளிரவை அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட விசாலமான ஒரு சத்திரத்தில் கழித்தார்கள். அந்த அனடோலிய ஸ்டெப்பி வெளியில் தனியாகக் காத்துக்கொண்டிருப்பதைப் போலிருந்தது அது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் வெளி வராந்தாவிலேயே இருந்தன. மாடியின் அறை ஜன்னல்கள் வேனிற்காலத்தில் பழங்களை உலர்த்தும் ஒரு மொட்டைமாடியைப் பார்க்க அமைந்திருந்தன. மும்தாஜ் ஓர் அறையில் நான்கைந்து குழந்தைகளுடனும் பல பெண்களுடனும் சேர்ந்து உறங்கினான். சத்திரத்தின் வாசலில் சரக்குகள் இறக்கப்பட்டவையும் வண்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவையுமான ஒட்டகங்கள், மட்டக்குதிரைகளின் கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அவற்றில் ஏதாவது ஒன்று நகர்ந்தால்கூட மொத்தக்கூட்டமும் உடன் நகர்ந்தது. அவற்றின் கழுத்துமணி ஓசையும் காவல்காரர்களின் குரல்களும் இரவின் நிசப்தத்தைக் கலைத்தன. அவ்வப்போது, அந்தக் காரிருளில் வாசலுக்கருகில் சிகரெட் பிடித்தபடியிருந்த மனிதர்களின் பேச்சு அவன் காதில் விழுந்தது. அந்த வார்த்தைகளின் முழு அர்த்தமும் அவனுக்குப் புரியாவிட்டாலும் அவை அவனைத் துக்கமும் ஆவேசமும் கொள்ளச் செய்தன. அவன் அன்றுவரை வாழ்ந்த சுகமான, எதற்கும் கவலையற்ற வாழ்க்கையை அந்தச் சொற்கள் கொடூரமானதாகவும் அபத்தமானதாகவும் ஆக்கின. திறந்த ஜன்னல்களின் வழியே நுழைந்தக் காற்று, திரைச்சீலைகளை உப்பச் செய்தது. தொலைதூரத்

திலிருந்து வந்த பேச்சரவங்கள் அருகிலிருந்தவர்களின் குரலோசைகளோடு கலந்தன.

நடு இரவில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு அனைவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பியது. துறவிகளின் வாழ்க்கையைப் போலச் சுற்றுப்புறம் மாபெரும் அமைதியிலிருந்ததால், மிக மெல்லிய ஓசையோ சிறிய சத்தமோகூடப் பேரோசையாக, கண்ணாடி மீது ஏதோ விழுந்து நொறுங்குவதுபோல ஒலித்து அவர்களிடம் அழிவு நேரப்போகிறது என்ற உணர்வை உண்டாக்கியது. எல்லோரும் ஜன்னல் பக்கமாக விரைந்தார்கள். சிலர் கீழே குழும ஆரம்பித்தார்கள். மும்தாஜின் அம்மா மட்டுமே அசையாமலிருந்தாள். குதிரையின் மீது நான்குபேர் வந்தார்கள். அவர்களில் ஒருவன் தன் குதிரையின் முதுகிலிருந்து ஓர் உருவத்தை இறக்கினான். குதிரையின் சேணத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த மும்தாஜ், அந்தக் கிராமத்து இளம்பெண் “இறைவன் உங்களால் சந்தோஷமடைவானாக” என்று முணுமுணுத்ததைக் கேட்டான். அந்தச் சத்திரத்தின் காப்பாளன் உயர்த்திப் பிடித்திருந்த விளக்கின் வெளிச்சத்தில் அவளது கருவிழிகள் பளபளத்தன. இடுப்புக்குக் கீழே ஓபியம் வயலில் வேலைசெய்யும் பெண்கள் அணிவது போன்று உடையணிந்திருந்தாள். மேலே, ஏஜியன் மலைப்பகுதிகளின் ஸேய்பெக் போராளிகள் அணியும் பூவேலைப்பாடுகள் கொண்ட மேலங்கியை அணிந்திருந்தாள். அந்தக் குதிரைக்காரர்கள் சத்திரக் காப்பாளனின் உதவியாளன் - அவன் தான் அறைகளுக்குத் தேநீர்கொண்டு வந்து கொடுத்தான் - அளித்த மண்குடுவையிலிருந்து நீர் பருகினார்கள். சத்திரக் காப்பாளன் கொடுத்த ரொட்டியைப் பகிர்ந்து கொண்டார்கள். பின்னர் சாக்குப்பைகளில் பார்லியை நிரப்பினார்கள். ஏதோ இதற்கு முன்னர் ஒத்திகை எடுத்துக்கொண்டதுபோல எல்லாம் கச்சிதமாக நடந்தன. சத்திரத்தின்முன் குழுமியிருந்த ஆண்கள் அவர்களிடம் செய்திகள் ஏதாவது உண்டா என்று திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“ச வில் யுத்தம் இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. நாளை வரை உங்களுக்கு அவகாசம் இருக்கிறது. ஆனால் ரொம்ப நேரம் தங்க வேண்டாம். அகதிகள் கூட்டம் பெருவெள்ளத்தைப் போல வந்துகொண்டிருக்கிறது.”

பின்னர் அவர்கள் சட்டென்று குதிரைகளைக் கிளப்பிக்கொண்டு - போய் வருகிறோம் என்றுகூடச் சொல்லாமல் - சென்றுவிட்டார்கள். எங்கு போகிறார்கள் அவர்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

மும்தாஜ் மாடிக்குத் திரும்பிச் சென்றான். அங்கு புதிதாக வந்த, பதினெட்டு அல்லது இருபது வயதினளான அந்தப் பெண் தனது அம்மாவின் அருகிலமர்ந்து, கண்களை அகலத்திறந்து இறுக்கமான முகத்துடன் தேம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். மும்தாஜின் அம்மா சற்று நகர்ந்து அவள் படுத்துக்கொள்வதற்கு இடமளித்தாள். மும்தாஜ் அந்தப் பெண்ணிற்கு அருகில் சில மணி நேரம்தான் படுத்திருந்திருப்பான். ஆனால் அவளது அந்த இரவு நேரத்து நெருக்கம் ஏற்படுத்திய கிளர்ச்சியை அதன் பின் பல இரவுகளில் அவன் தன் உடலில் உணர்ந்திருக்கிறான். அதற்கு நீண்ட நாட்கள் பிறகும்கூட, அவளது முடி அவனது முகத்தை மூடியிருக்க அவளது மார்புகள் அவனது நெஞ்சோடு அழுத்தியபடியிருக்க அவளது ஈர மூச்சு அவனது நெற்றியில் பட்டுக்கொண்டிருக்க, அவளது கையணைப்பில் தான் இருப்பதுபோல உணர்ந்து அவன் உறக்கம் கலைந்தெழுந்திருக்கிறான். உண்மையில் அந்த ஓர் இரவில் பலமுறை பெற்ற அனுபவம் அது. அவ்வப்போது அவள் அதிர்ந்து எழுவாள். இதுபோன்ற இடைவெளிகளில், கிட்டத்தட்ட மனிதக் குரலற்றது போன்ற தேம்பலுடன் கேவிக்கேவி அழுவாள். அந்தத் தேம்பல் மும்தாஜுக்குத் தன் அம்மாவின் மௌனத்தைப் போலவே நெஞ்சையுருக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் மறுபடியும் உறங்கும்போது மும்தாஜை அவன் அம்மாவின் மார்பிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுப்பதைப் போல, கைகளாலும் கால்களாலும் பிணைத்துக்கொள்வாள். அவளது முகம் அவனது முகத்தோடு பொருந்தி இருக்க முடிகளும் மூச்சும் அவன் முகத்தில் படரும். சிலநேரம் அவனை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொள்வாள். இந்த அரவணைப்பும் முனகலும் அவனை எழுப்பும்போது, தெளிவற்றதும் மர்மமுமான இச்சைகளால் நிரம்பிய அவளது உடல் தனது உடலோடுப் பின்னிப் பிணைந்திருப்பதைப் பார்த்து வியப்படைந்தான். முந்தைய இரவு அவன் உணர்ந்த தனது உடலல்ல இன்று தான் உணர்வது, அது முற்றிலுமாக நேற்றைய உடலைவிட்டுப் பிரிய விரும்புகிறது என்ற எண்ணம் தோன்ற, அவன் எச்சரிக்கையானான். அது போலவே, தான்படும் எல்லாவற்றையும் நெகிழ்வாக்கிவிடுவது போன்ற அவளது இனிய சுவாசமும் அவளது அச்சமூட்டும் இறுக்கமான முகமும். அங்கு இன்னமும் எரிந்து கொண்டிருந்த லாந்தர்களின் வெளிச்சத்தில் அவளின் அச்சம் மிகுந்த விழிகளின் ஒளியைத் தவிர்ப்பதற்காக அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

அணைப்புகள், முனகல்கள் இவற்றால் வெளிப்பட்ட உடல் இச்சையின் மந்திரத்தன்மை அவன் அறியாதது. அவளது அணைப்பிலிருந்து அவனால் தன்னை விடுவித்துக்கொள்ள இயலவில்லை. வெது வெதுப்பான பன்னீர்குளத்தில் தூக்கத்தில் நழுவி விழ நேர்ந்த ஒருவன் மூழ்கிவிடுவேமோ என்ற பயம் ஒரு புறமும் தூக்கம் அளித்த ஆசுவாசத்தைக் கலைக்க முடியாமல் மறுபுறமுமாக ஒரு விசித்திரமான நிலையிலிருப்பதைப் போல, தன்னை அவன் அந்த அணைப்பின் போக்கிலேயே விட்டுவிட்டான். இந்த அனுபவம் அவனுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. எளிய கிளர்ச்சியைத் தவிர வேறெதையும் இதற்கு முன்னால் அனுபவித்திராத அவனது உடல், புதியதொரு உலகம் திறந்துவிடப்பட்டது போல உணர்ந்தது. இந்தப் போதை நிலையில் அவனது உடலின் இதுவரை அறிந்திராத, மர்மமான சில நாளங்களில் தொடர்ந்து இந்த மாசற்ற கிளர்ச்சியின் இன்பக் கணங்கள் சென்று குடியேறின. அவனுக்குத் தான் உருகிக்கொண்டிருப்பது போன்ற ஓர் அற்புத உணர்வு ஏற்பட்டது. உறக்கம் முற்றும்போது ஏற்படும் உணர்வு. இத்துடன், அந்த வெதுவெதுப்பான அணைப்புகளிலும் வருடல்களிலும் தன்னைக் கரைத்துக்கொள்ளும் ஒரு விழைவு அவனுக்கு இருந்தது. இது உச்சத்தை எட்டியபோது, அவன் தன்னிலை இழந்தான். அவனைச் சுற்றியிருப்பவற்றோடு அவன் கலந்தான். சோர்வும் பதற்றமும் வாட்டியெடுத்திருந்த அவன் உடலும் சட்டென்று உணர்விழந்தது. விநோதமாக, அவனைத் தூக்கம் கவ்வியபோது, முந்தைய இரவின் கனவு மீண்டும் தோன்றியது. பெரிய லாந்தருடன் தன் தந்தையைப் பார்த்தான். ஆனால், புதியதொரு அனுபவம் அளித்த அவஸ்தையில் இந்தக் கனவு வந்ததால், அவனை அது அடிக்கடி உலுக்கி எழுப்பியது. அவனது உள்ளார்ந்த துக்கம் அந்தப் பெண்ணிடமிருந்து வெளிப்பட்ட கிளர்ச்சியோடு ஒன்றிணைந்து, அவனை முழுமையாக மூழ்கடித்தது. அவன் உடலாலும் மனத்தாலும் இரட்டித்துப்போன விநோதப்பிறவியாக மாறிப்போனான்.

பொழுது புலர்ந்து, அவன் முழுமையாக உறக்கம் கலைந்து விழித்தபோது, அந்தப் பெண்ணின் கரங்களில் தானிருப்பதைக் கண்டான். அவளது ஒடுக்கமான கன்னத்தை அவனது நாடித் தொட்டுக்கொண்டிருந்தது. அவனது எல்லா உணர்வுகளும் அவளது கட்டுப்பாட்டி லிருந்தன. அவளது கண்கள் கூச்சமின்றி அவனை வற்புறுத்துவது போலத் திடீரெனத் திறந்தன. அவளது பார்வையைத் தவிர்ப்பதற்காக அவன் தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டு, அம்மாவின் பக்கமாகப் பதற்றத்துடன் புரண்டு சென்றான்.

அவனது இரண்டாவது ஞாபகம் நேரிடையானது. அவர்கள் வந்த வண்டி அன்று மதிய நேரம் அவர்களை ஏற்றிக்கொண்டு அந்த அகதிகள் கூட்டத்திலிருந்து பிரிந்துசென்றது. அவனுடன் அவன் அம்மா, மூன்று பெண்கள் மற்றும் இரண்டு சின்னக் குழந்தைகள் இருந் தார்கள். அவளும் இருந்தாள், இருக்கைகளின் பின்னே ஒடுங்கியபடி.

உள்பக்கமாகத் திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்த வண்டியோட்டி ப என்னும் ஊரை நெருங்கிவிட்டதாக அறிவித்தான். அந்த வண்டியோட்டி அவளிடம் பேச்சுக்கொடுக்கவும் விவரங்களைச் சொல்லவும் விரும்புகிறான் என்பது மும்தாஜிற்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால் அவள் அவனுடனோ அல்லது உடன் வந்து கொண்டிருந்த குதிரை வீரனுடனோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. குதிரைவீரன் தனது குதிரையின் நடையை எதற்காகவும் மாற்றாமல் வந்துகொண்டிருந்தான். முந்தைய இரவின் கலக்கம் அவளிடம் நின்றிருந்தது. மும்தாஜ் அவள் முகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் மூழ்கிப்போயிருந்தான். ஆனால் தலையைத் திருப்ப அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. அவனால் தனது அம்மாவைக்கூடப் பார்க்க முடியவில்லை. இரவு வந்தபோது, அந்தப் பெண்ணின் அருகாமை அவனை அச்சமூட்டியது. அவ்வப்போது அவள் தனது தோளை அவனது தோள்மீது வைத்து அழுத்துகையில் அந்த உணர்வு அவனை வாட்டியெடுத்தது.

அந்தத் தொடுதல் அவனுக்குத் திகைப்பையளித்தது. முந்தைய இரவைப் போலத் தீவிரமாக இல்லாவிட்டாலும், அந்த ஞாபகத்தின் அம்சங்களைக் கொண்டிருந்தது அது. தன்னையறியாமலேயே அந்த வெம்மையின் வரவை அவன் விரும்பினான். இந்த எதிர்பார்ப்பில், அவனது தோள் கிட்டத்தட்ட விறைத்துப்போய்விட்டது. இந்த எதிர்பார்ப்பின் ஒரு கட்டத்தில், அவனது கண்கள் வண்டியோட்டியின் கையிலிருந்த கற்கள் பதித்தச் சாட்டையின் மீது படிந்திருக்க மனவெறுமையுடன் அவன் தன் அப்பாவை நினைவுகூர்ந்தான். அவனுக்குள் அவன் இதுவரையிலும் அனுபவித்திராத ஓர் ஆழ்ந்த வேதனை எழுந்தது. எந்தப் பிரிவையும் தாண்டிவிடக்கூடிய ஒரு வேதனை. அவன் அவரை மீண்டும் பார்க்கப் போவதில்லை. வாழ்க்கையிலிருந்து அவர் நிரந்தரமாக விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். அவனுக்குள் வெளிச்சமிறங்கிய அந்தக் கணத்தை அவனால் ஒருபோதும் மறக்க முடியாது. எல்லாமே அவன் கண்முன் துலக்கமாக விரிந்து கிடந்தன. சாட்டையின் நுனியிலிருந்த கற்கள் அந்த இலையுதிர்காலச் சூரிய ஒளியில் பிரகாசத்துடன் மினுங்கின. அவற்றில் சில வண்டியோட்டிச் சாட்டையை மேலேயுயர்த்தும்போது அந்தரத்தில் மினுங்கின. சில அந்தச் சாட்டை குதிரையின் பின்முதுகில் படிந்திருந்தபோது மினுங்கின. குதிரைகள் பிடறிகளைச் சிலிர்த்துக்கொண்டு நடந்தன. தந்திக்கம்பம் ஒன்றிலிருந்து, பெரிய சிறகுகளைக் கொண்ட பறவையொன்று காற்றில் ஏகியது. அந்த வெட்டவெளிப் பிரதேசத்தில் எல்லாம் அமைதியாக இருந்தது, வண்டிகளின் ஓசையையும் ஒரு மூன்று வயதுச்சிறுமியின் அழுகையையும் தவிர. அவன் வண்டியோட்டியின் அருகில் அமர்ந்திருந்தான். முந்தைய இரவு முழுவதும் அவனைத் தன்வசம் வைத்திருந்தவளும் ஏதுமறியாத அவன் உடலில் மாய இச்சைகளைக் கிளர்த்தியவளுமான அந்தப் பெண் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தாள். அவளுக்கு நேரெதிராக அவனது அம்மா. அவர்களிடையே என்ன நடந்தது என்றோ என்ன நடக்கவிருக்கிறது என்றோ எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

எதிர்பாராதவிதமாக அவன் தன் தந்தையை முழு உருவமாகப் பார்த்தான். தான் இனி அவரைப் பார்க்ககூடாது என்பதும் தான் நிரந்தரமாக அவரிடமிருந்து பிரிந்துவிட்டோம் என்பதும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவரைப் பிரிவதும் அவரது குரலை இனி ஒருபோதும் கேட்காமலிருக்கப்போவதும் அவனது வாழ்வின் ஒரு பகுதியாக அவர் இல்லாதிருக்கப்போவதும் தாங்கிக்கொள்ளவே முடியாத, கூரிய வேதனைதான்.

அந்தக் கிராமத்துப்பெண், மும்தாஜ் மயங்கி விழப்போகிறான் என்று தெரிந்துதானோ என்னவோ அவன் கீழே விழுந்துவிடாமல் பின்னாலிருந்து தாங்கிப் பிடித்துக்கொண்டாள். முந்தைய இரவின் பாலுணர்வு தூண்டல் அவனது தந்தையின் மரணத்தோடு ஒரு புதிய விதத்தில், பிரித்தறிய முடியாதபடி இணைந்தது. தான் பாவமிழைத்துவிட்டோம் என்று அவன் உள்ளூர ஆழமாக உணர்ந்தான். தான் நெறி தவறிவிட்டதாக அவன் குற்றபோதம் அடைந்தான். இந்த கணத்தில் யாரேனும் அவனிடம் விசாரணை செய்திருந்தால், “என் தந்தையின் மரணத்திற்கு நான்தான் காரணம்” என்று சொல்லியிருப்பான். அவன் தன்னைப் பரிதாபமானவனாக உணர்ந்த ஒரு கோர அனுபவம் அது. மனதின் இந்த முரணுணர்வு அவனைப் பலகாலம் பீடித்திருந்தது. அவன் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் திருப்பத்திலும் அது அவனைத் தடுமாற வைத்தது. இளைஞனாக வளர்ந்தபின்பும்கூட இந்த உணர்விலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. அவனது கனவுக் கொட்டகையை நிரப்பிய காட்சிகளும் தயக்கங்களும் பதற்றங்களும் களிப்பும் மன அவசமும் கொண்ட அவனது மனோநிலை மாறுபாடுகளும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்தன.

அந்தப் பெண் ப நகரத்தில் அவர்களிடமிருந்து பிரிந்து சென்றாள். உருக்குலைந்துபோயிருந்த அந்த நகரத்துத் தெருக்கள் ஒன்றில், வெட்ட வெளிச்சத்தில் அவர்களது வண்டி நிறுத்தப்பட்டது. யாரிடமும் ஒரு வார்த்தைப் பேசவோ எவரையும் பார்க்கவோ செய்யாமல், அவள் வண்டியிலிருந்து விருட்டென்று இறங்கினாள். குதிரைகளின் முன்பாக வேகமாகக் கடந்து தெருவின் மறுபக்கம் சென்றவள், அங்கிருந்து மும்தாஜை இறுதியாக ஒருமுறைப் பார்த்தாள். பின்னர், வேகமாக ஒரு சந்துக்குள் திரும்பினாள். முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் மும்தாஜ் அவளது ஒளிமிக்க முகத்தைப் பார்த்தான். ஆறிக்கொண்டு வந்த ஒரு கத்தியின் வடு அவளது வலது நெற்றியில் தொடங்கிக் கன்னம்வரை பாய்ந்திருந்தது. அந்த வடு அவளது முகத்துக்கு விநோதமான கடுமைத்தன்மையை அளித்தது. ஆனால் அவள் மும்தாஜைப் பார்த்தபோது அவளது முகம் இளகியது; கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு அந்திப்பொழுதில் மும்தாஜும் அவன் அம்மாவும் அ என்னும் நகரத்திலிருந்த ஒரு தூரத்து உறவினர் வீட்டை வந்தடைந்தார்கள்.

 (நன்றி: காலச்சுவடு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp