நான் மலாலா - ஒரு வாழ்க்கை சித்திரம்

நான் மலாலா - ஒரு வாழ்க்கை சித்திரம்

எல்லையில் பதட்டம் நிலவி வரும் இன்றைய சூழலில் மலாலாவின் சுயசரிதை குறித்து நாம் அறிந்திருப்பது சற்று அவசியமே. மேற்கத்திய ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக உலகெங்கும் மலாலா கொண்டாடப்பட்ட காலத்தில், என் முன் நிறுத்தப்பட்ட பிம்பம் ஒன்றும் அத்தனை ஏற்புடையதாக இல்லை. குழந்தைகளின் இளமையையும் அவர்களின் துடுக்குத்தனத்தையும் களவாடி வாழ்க்கை வணிகத்திற்கு தேவையான சரக்கு மூட்டைகளை முதுகில் ஏற்றி முதிரா இளம் பருவத்திலேயே போட்டிக் களத்தில் இறக்கி ஓடவிட்டு ஆராதிக்கும் அன்னையர்களும் தந்தையர்களும் நிறைந்த சமூகத்தில் பலிகடா ஆவதென்னவோ குழந்தைகள்தான். தம் பிள்ளைகள் பிறவி மேதைகள் என்று நம்பும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டுதான் எனினும், பெரும்பாலும் அவர்களுடைய நியாயமற்ற எதிர்பார்ப்புகளின், கனவுகளின் சுமையில் மழலை மேதைகள் தங்கள் சுயத்தை கண்டறிவதற்கு முன்னரே போலியான பாவனைகளில் தங்களை இழந்து சுவடின்றி மறையும் நிகழ்வுகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மலாலாவும் அரசியல் காரணங்களுக்காக அப்படி ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பம் என்றொரு மனயெண்ணம் எனக்கிருந்தது. அதன் பின்னர்தான் மலாலாவுடன் இணைந்து இங்கிலாந்தின் கிறிஸ்டீனா லாம்ப் என்பவர் எழுதி வெளியிட்ட ‘நான் மலாலா’ என்ற நூலினை வாசிக்கத் தொடங்கினேன். எனது மன எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது அவருடைய இந்நூல்.

ஏனெனில், மலாலாவின் சுயசரிதை அவருடைய வாழ்க்கைக்கதை என்பதைத் தாண்டி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கோரமுகத்தை ஆவணப்படுத்தியுள்ளது. புறத்தோற்றம் வேறாக இருப்பினும், உலகெங்கும் அடிப்படைவாதத்தின் குரல்கள் ஒன்றுபோலத்தான் ஒலிக்கின்றன. பாகிஸ்தானிலுள்ள ஸ்வாத் சமவெளியில் யூசுப்சாய் குழுவைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கும் டோர் பீகாய்க்கும் அக்டோபர் 12, 1997 அன்று பிறந்த முதல் குழந்தைதான் மலாலா. யூசுப்சாய் என்பது அப்பகுதி பெரும்பான்மை பழங்குடி இன மக்களின் கூட்டுப் பெயர். பெண் குழந்தைகளைச் சுமையாக பார்க்கும் சமூகத்தில், ஆண் வாரிசுகளை மட்டும் தலைமுறை தொடர்ச்சியில் இணைக்கும் போக்கிற்கு மாறாக ஜியாவுதீன், தனது மகள் மலாலாவின் பெயரையும் இணைக்க ஆசைகொண்டார். இவர் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ஒரு கவிஞர், சிந்தனையாளர், கல்விநிறுவனங்களை நடத்துபவர்;, மதவெறியாளர்களுக்கெதிரான எண்ணம் கொண்டவர். 1880 களில் வெடித்த இரண்டாம் ஆங்கிலேய - ஆப்கானிய போரில் மேவாந்த் (அநறையனெ) மாகாணத்து மலாலாய் எனும் பெண், ஆப்கானிய பஷ்தூன்களுக்கு பெரும் ஊக்கமாக திகழ்ந்தார், இன்றளவும் பெரும் நாயகியாக அவர் போற்றப்படுகிறார். அவருடைய நினைவாகத்தான் தன் மகளுக்கு மலாலா எனப் பெயர்சூட்டினார் ஜியாவுதீன். பாகிஸ்தானிலுள்ள மின்கோரா எனும் நகரத்தில் பிறந்து வளர்ந்து, தந்தை உருவாக்கிய பள்ளியிலேயே கல்விகற்றவர் மலாலா. மலாலாவின் சிந்தனைப் போக்கிலும், கருத்திலும் ஜியாவுதீனுக்குப் பெரும்பங்கு உண்டு. சிறுவயது முதலே மலாலாவின் கருத்தோட்டத்தைக் கூர்மைப்படுத்தியவர் ஜியாவுதீன்.

அமைதியும் அழகும் ததும்பும் ஸ்வாத் சமவெளியில் இன்றும் மக்கள் வாழ்வதற்கே அஞ்சுகிறார்கள் என்றால் தாலிபான்களும், பாகிஸ்தானிய ராணுவமும், உளவமைப்பும், அமெரிக்க ராணுவமும் அவரவர் வழியில் தங்கள் இருப்பையும் பாதுகாப்பையும் நிலைப்படுத்திக்கொள்ள விளையாடும் போர்க்களமாக ஸ்வாத் பகுதி மாறிப்போனதுதான் இதற்குக்காரணம். மலாலாவின் குரல் தேசப்பற்று மிக்க பாகிஸ்தானியின் குரலாக இருந்தாலும், பஷ்தூன்களின் தேசிய அடையாளத்தை நிராகரித்து பெரிதாக இவர் எதுவும் எழுதவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்திய – பாகிஸ்தான் உறவும், காஷ்மீர் பிரச்சனையும் அங்கு பெரும்பான்மை மக்களுக்கு என்ன புகட்டப்படுகிறதோ அப்படித்தான் இவரும் புரிந்துகொண்டுள்ளார். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து “ஒருவேளை நாம் இந்தியாவைவிட்டு பிரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்று தந்தையிடம் வினவுகிறார். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்னர் இந்துக்களும் இஸ்லாமியர்களும் எப்போதுமே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் என்ற எண்ணமே எனக்கிருந்தது. ஆனால், எங்களுக்கான தேசம் கிடைத்த பின்னரும் சண்டை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இம்முறை மொஹாஜீர்களுக்கும் பஷ்தூன்களுக்கும் இடையிலும், சன்னிக்களுக்கும் ஷியாக்களுக்கும் இடையிலும் அடிக்கடி பிரிவினை ஏற்பட்டு பலூசிஸ்தானில் போர் நடந்துகொண்டுதானிருக்கிறது. இதுபோன்ற போர்களின் காரணமாக எமது தேசத்தை மீண்டும் துண்டாக்க வேண்டியிருக்குமோ?” எனும் அச்சம் கலந்த கேள்வியையும் மலாலா தனது நூலில் எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியில் தாலிபான்கள் செல்வாக்கடையத் தொடங்கியதும், பல கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். மீறுபவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன. அப்படி அவர்கள் முன்வைத்த ஒரு விதிமுறைதான் பெண்கள் கல்வி கற்கக் கூடாதென்பது. இவர்களால் பல பள்ளிகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. ஸ்வாத் சமவெளியில் தாலிபான் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலகட்டத்தினை ஆவணப்படுத்துவதற்காக ஆயிஷா என்ற பெண் முதலில் பிபிசிக்காக எழுதுவதாக ஒப்புக் கொண்டாலும், தங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கருதிய ஆயிஷாவின் பெற்றோர் அவரை எழுதவிடவில்லை. மாற்று ஆளாக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டாள். பள்ளி செல்ல முடியாத தனது அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது மலாலாவுக்கு வயது 11. ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த பெண்ணை விட 4 வயது குறைவான மலாலா அப்போது ஏழாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாள். எனினும் பிபிசி ஒப்புக் கொண்டது. தாலிபான்களால் பிரச்சினை எழும் என்பதால், 2009 ஜனவரி 3 - ஆம் தேதி முதல் குல்முகாய் என்ற புனைப்பெயருடன் பிபிசி இணையதளத்தில் உருது மொழியில் எழுதத் தொடங்கினாள் மலாலா. ‘நேற்றிரவு இராணுவ ஹெலிகாப்டர்களும், தாலிபான்களும் நிறைந்த ஒரு கொடுமையான கனவு கண்டேன். ஸ்வாட் பள்ளத்தாக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய காலத்திலிருந்து இப்படி கனவுகள் எனக்கு வருகின்றன. அம்மா செய்துவைத்த காலை உணவை முடித்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினேன். பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு தாலிபான்கள் தடைவிதித்திருப்பதால் எனக்கு பள்ளிக்குச் செல்ல பயம் இருந்தது. 27 பேரில் 13 பேர் தான் பள்ளிக்கு வந்திருந்தனர். தாலிபான்களின் தடையால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தத் தடைக்குப் பின்னர் எனது மூன்று தோழிகள் தங்கள் குடும்பத்துடன் பெஷாவருக்கும், லாகூருக்கும் ராவல்பிண்டிக்கும் குடிபெயர்ந்து விட்டார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில், உன்னைக் கொன்றுவிடுவேன் என்று ஒருவர் கத்தும் குரல் கேட்டது. நான் எனது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு, பின்னால் அவர் என்னைத் தொடர்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் நிம்மதியளிக்கும் விதமாக, அவர் யாருடனோ செல்பேசியில் பேசி, அவரை மிரட்டிக் கொண்டிருந்தார். இப்படித் தொடங்குகிறது மலாலாவின் டைரிக்குறிப்பு.’

மலாலாவின் அன்னை உட்பட பெண்கள் பலரும் அவருக்கு ஆதரவளித்தனர். இதற்கு உலகெங்கிலும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், பெண் கல்வியின் உயரிய அடையாளமாக உலகெங்கும் மலாலா அறியப்பட்டார். எனவே, தாலிபான் அவருடைய உயிருக்கு குறிவைத்து, அக்டோபர் 9, 2012 அன்று பள்ளி முடித்து வீடு திரும்பும்போது பள்ளி பேருந்தில் முகம் மூடிய தாலிபான் ஒருவரால் சுடப்படுகிறார். சுடப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் மலாலாவின் மண்டைஒட்டை ஓரமாக உடைத்துக்கொண்டு அவர் தோள்பட்டைக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், மலாலாவிற்கு அருகில் அமர்ந்திருந்த இரு சிறுமிகளும் குண்டடிபடுகின்றனர். கவலைக்கிடமான நிலையில் உயிர்காக்கும் சிகிச்சைக்காக பிரித்தானியாவில் உள்ள பிர்மிங்காம் நகரத்து ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு எதிர்பாராதவிதமாக உயிர் பிழைக்கிறார் மலாலா. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படுமென்று கைபர் - பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது. மலாலாவின் உடல் நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டபோது ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீமூன், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட எண்ணற்ற உலகத் தலைவர்களும், மடோனா, ஏஞ்சலின ஜோலி, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களும் மனித சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படும் சூழல் உலகிற்கு பெருமை தரக்கூடியதல்ல என தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

அடிப்படைவாதிகளுக்கும் சரி சுதந்திரச் சிந்தனை கொண்ட பகுத்தறிவுவாதிகளுக்கும் சரி சிந்தனைக் கொந்தளிப்புகள் பெரிதாக இருக்காது. கண்மூடித்தனமான எளிய நம்பிக்கையோ நேர்கொண்ட சிந்தனையோ, ஏதோ ஒன்று அவர்களின் எல்லாவற்றையும் வழிநடத்தும். ஆனால் இதற்கிடையில் சிக்கும் சாமானியர்கள், தொன்மையான நம்பிக்கைகளையும் மீற முடியாமல், பகுத்தறிவின் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாமல், ஒவ்வொரு நொடியும் சமரசம் செய்துகொண்டாக வேண்டும். மலாலாவிற்கும் அத்தகைய சில தத்தளிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் இத்தகைய தத்தளிப்புகளே அவரை சாமானியராக, மனதிற்கு நெருக்கமாக ஆக்குகிறது. மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டபோது பொழுதுபோக்கிற்காக அவருக்கு ஒரு டி.வி.டி வழங்கப்பட்டது. அப்போது மலாலா டீநனெ வை டுமைந டீநஉமாயஅ எனும் திரைப்படத்தை காண நேர்ந்த அனுபவத்தை எழுதுகிறார். “கலாசார இறுக்கங்களை எதிர்த்து கால்பந்து விளையாட முயன்ற சீக்கிய பெண் பற்றிய கதை எனக்கு ஊக்கமளிக்கும் என்று எண்ணியிருக்கலாம். அதில்வரும் பெண்கள் தங்கள் மேலாடைகளை துறந்து, விளையாட்டுக்குரிய உள்ளாடைகளுடன் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட காட்சியைக் கண்டு அதிர்ந்துவிட்டேன். செவிலியர்களிடம் கூறி அதை அணைக்கச் சொன்னேன்.” எனக் குறிப்பிடுகிறார். மேலும், நியூயார்க் டைம்ஸ் ஆவணப்படத்துக்குப் பிறகு, பல செய்தி நிறுவனங்களிலும் மலாலாவின் பேட்டிகள் இடம்பெற்றன. அவ்வாண்டு டிசம்பர் வாக்கில் பிபிசியில் கட்டுரைகள் எழுதியது மலாலா தான் என்பது வெளியானது. மெல்ல மெல்ல ஊடகங்களின் கவனிப்பிற்கும், மதவெறியர்களின் கண்டனத்திற்கும் மலாலாவும், அவரது தந்தையும் ஆளாகத் தொடங்கினார்கள். பெண் கல்விக்கும், மனித உரிமைக்கும் ஆதரவாகத் தனது குரலை தொடர்ந்து எழுப்பத் தொடங்கிய மலாலா குழந்தைகள் பாராளுமன்றத்தின் தலைவராக பங்கேற்ற வீடியோ காட்சி வெளியானது. 2011 - ல் உலகப் புகழ் பெற்ற டெஸ் மாண்ட் டூட்டு உலக அமைதிக்கான குழந்தைகள் பரிசுக்கு மலாலாவின் பெயரைப் பரிந்துரைத்தார். அதே ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதிப் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜூலை 12 இல் தனது 16 ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு தாலிபான்களைப் பற்றியும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் உரையாற்றுகிறார் மலாலா. இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என அறிவித்தது. மேலும், உலகம் முழுவதும் பெண்கள் கல்வி உரிமைக்காக போராடி வரும் மலாலாவுக்கு ஐ.நா சபை உள்பட பல்வேறு நாடுகள் விருதுகளும், பரிசுகளும் பாராட்டும் வழங்கி கவுரவித்தது. இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தானின் மலாலாவிற்கும் 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்குப் பின்னர் உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் இன்றும் அவரை கவுரவித்த வண்ணம் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக “நான் மலாலா” என்றொரு திட்டத்தை அறிவித்து, உலகநாடுகளில் பல்வேறு காரணங்களால் பள்ளி கல்வியை தொடர முடியாமல் போன 61 மில்லியன் குழந்தைகளுக்கு 2015 ஆம் ஆண்டுக்குள் கல்வியளிக்கபட வேண்டும் என அறிவுறுத்தியது.

இதுபோன்ற சர்வதேச அரசியல் பின்னல்களுக்கு அப்பால், மலாலாவின் சுயசரிதை என்பது ஒரு சிறுமி தனக்கான அல்லது தன்னையொத்த சிறுமிகளுக்கான ஒரு சுதந்திர வெளியை தக்கவைத்துக்கொள்ள நடத்தும் போராட்டமாக ;நான் மலாலா’ என்னும் நூல் வெளிவந்துள்ளது. ஏனெனில், தோழிகளும், சின்னச் சின்ன ஊடல்களும், விளையாட்டுகளும், தொலைக்காட்சியும், அழகுசாதனங்களும், பள்ளியும், புத்தகங்களும், கணினியும் மட்டும் ஸ்வாத் சமவெளியின் இஸ்லாமிய சிறுமி மலாலா என்றில்லை. உலகெங்கிலும் பதின்ம வயதை எட்டும் சிறுமிகளின் எண்ணம் இப்படிதான் இருக்கிறது. நியாயமான இந்த வாழ்க்கைக்குதான் மலாலாவும் ஏங்குகிறார். “பாகிஸ்தானில் பெண்கள் சுதந்திரம் வேண்டும் எனக் கூறினால், நாங்கள் எங்கள் தந்தையர், சகோதரர், அல்லது கணவர் சொல்பேச்சை கேட்க விரும்பவில்லை என்று மக்கள் எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. எங்கள் வாழ்க்கை முடிவுகளை நாங்களே எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் பள்ளிக்குச் செல்லவோ அல்லது பணிக்குச் செல்லவோ சுதந்திரம் வேண்டும் என்கிறோம். குர்ரானில் எங்குமே பெண்கள் ஆண்களை நம்பித்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை” என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தன் தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி இருந்ததால், சக பஷ்தூன் பெண்களை போல் உயரமில்லை, நிறமில்லை மேடையில் ஏறி நின்று பேசும்போதுகூட மக்கள் தன்னைக் காண முடிவதில்லை என்பதை நினைத்து வருத்தமடைகிறார். இதற்காக தானொரு இரண்டங்குலம் உயரமாக வேண்டுமென அல்லாவிடம் வேண்டுகிறார். தாலிபான் தாக்குதலில் இருந்து உயிர்பெற்று மீண்டபிறகு “நான் இறைவனிடம் ஓரிரு அங்குலங்கள் உயர வேண்டும் என வேண்டிக் கொண்டதுண்டு. ஆனால், இன்று என்னை வானளவில் அளக்கவியலா உயரத்தில் நிறுத்திவிட்டான். இது அபூர்வமான உயரம், அதேநேரத்தில் ஆபத்தான உயரமும்கூட என வியக்கிறார் மலாலா.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றதுமுதல் இன்றுவரை பல்வேறு இக்கட்டுகளை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் தந்தை ஜின்னா 1948 ஆம் ஆண்டிலே மறைந்தார். அதன் பின்னர் லியாகத் அலிகானின் மரணம். பின்னர் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சி. ஜுல்பிகார் அலி புட்டோவின் மரணம். முஷரப்பின் ராணுவ ஆட்சி என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், ராணுவமும், உளவமைப்பும் ஆளுக்கொரு பக்கம் தேசத்தை இழுத்துச் சென்றது. தாலிபான்கள் இவற்றையெல்லாம் மாற்றி தமது தேசத்தில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவர் என பாகிஸ்தான் மக்கள் நம்பினர். ஆனால், வெளியுலகமும் அமெரிக்காவும் தாலிபான்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அமெரிக்கா ஒசாமாவைப் பிடிக்க பாகிஸ்தான் அரசின் உதவியை நாடியது. தேடுதல் வேட்டைக்காக பில்லியன் டாலர்களை நிதியாக அளித்துக் காத்திருந்தது. பாகிஸ்தான் உளவுப்பிரிவின்மீதும் ராணுவத்தின்மீதும் நம்பிக்கை இழந்த அமெரிக்கா ஸ்வாத் பகுதியில் எட்டாண்டுகள் பதுங்கி இருந்த ஒசாமாவை பாகிஸ்தான் நிலப்பரப்பிற்குள் தாமாக இறங்கி சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் அரசிற்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு அருகிலேயே, அந்நாட்டின் தலைநகரமான இஸ்லாமாபாதில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபோட்டாபாதில்தான் இறுதியாக ஒசாமா கொல்லப்பட்டார். அதன்பின்னர் ஜமாத் உல் தவா, லஸ்கர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளுக்கு இருக்கும் மக்கள் பின் லேடனுக்கு ஆதரவாக தொழுகைகளும், ஊர்வலங்களும், அஞ்சலி கூட்டங்களும் நடத்தி பாகிஸ்தானில் அவரை ஒரு தியாகி அளவிற்கு பாவித்தனர். ஏனெனில், இங்கு நிலநடுக்கம் நேர்ந்தபோது பாகிஸ்தான் அரசாங்கம் சரிவர நிவாரண பணிகளை செய்ய இயலாதபோது, ஜமாஅத் உல் தவாதான் பெரும் பணிகளை செய்து மக்களை மீட்டு அவர்களுக்கு பெரும் ஆதரவளித்ததாகக் குறிப்பிடுகிறார் மலாலா.

ஏனைய நண்பர்களைப் போல் தானும் ஒரு மருத்துவராக வேண்டுமென்ற விருப்பத்தினூடே, பெனாசிர் புட்டோவின் வருகை அவரைப் போன்ற அரசியல்வாதியாக மாறவேண்டும் என்ற கனவையும் அவருக்குள் உருவாக்கியது. ஆனால், பெருத்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கப்பட்ட அவருடைய வருகை மரணத்தில் முற்று பெற்றது அவரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. லால் மஸ்ஜித்மீது நடைபெற்ற தாக்குதல், இரண்டாம் ஸ்வாத் போர், அதையொட்டி நிகழ்ந்த பெனாசிர் புட்டோவின் மரணம், ஒசாமா பின் லேடனின் மரணம், ஜெனரல் கியானி, ஆசிப் அலி சர்தாரி போன்றோரை சந்திக்க நேர்ந்த நிகழ்வுகள் என மலாலா தன் வாழ்நாளில் கடந்துவந்த சம்பவங்களை தனதுநூலில் பரவலாக பதிவுசெய்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் எனும் அச்சம் அவருக்கு இருந்தது. ஒருகால் தாலிபான்களை எதிர்கொள்ள நேரிட்டால் என்ன செய்வது? என்பது குறித்து அவர் சிந்திக்கிறார். செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் அப்படி செய்தால் தனக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்றும் யோசிக்கிறார். தன்னை கொல்ல வருபவனிடம் தான் பேச முடியும், தனது நியாயத்தை உணர்த்த முடியும் என்று நம்பினார். சுடப்பட்ட பிறகு, தன்னை சுட்டவன் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் என ஏதுமில்லை. அவனுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் தான் போராடுகிறேன். எனவே, “நான் தாலிபானால் சுடப்பட்டவள் என அறியப்பட விரும்பவில்லை மாறாக பெண்கல்விக்காக போராடியவள் என்றே அறியப்பட விரும்புகிறேன்” என்கிறார். உண்மையில் அவருக்குள் ஏதோ ஒரு ஆற்றல் உறைந்திருக்கிறது என்பதை இவ்வரிகள் என்னுள் விளங்கவைத்தது.

மேலும், அமெரிக்க சி.ஐ.ஏ உளவாளி என வசைபாடப்பட்டும், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியும், பெண்கல்வி பற்றியும் அவர் கூறிய கருத்துக்களுக்காக உள்ளூரில் கடுமையாக விமர்சிக்கபட்டார். பாகிஸ்தான் தாலிபான் தலைவர் எழுதிய கடிதத்தில், பெண் கல்வியை ஆதரித்ததற்காக அவரைக் கொலைசெய்ய முயற்சிக்கவில்லை, அவர் மேற்கத்தியமயமாக்கலை ஆதரிக்கிறார் என்பதாலே கொலைசெய்ய ஆணையிடப்பட்டது என்கிறார். உள்ளுர் வலைத்தளங்களும், ஊடகங்களும் இதில் பெரும் சதி இருப்பதாகக் கூறினார். மேலும், மலாலா சுடப்படவே இல்லை என்றும், அமெரிக்க டிரோன் தாக்குதல்களுக்கு சாக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று கூட பேசப்பட்டது. நோபல் பரிசுக்கு மலாலா பரிந்துரைக்கப்பட்டபோதுகூட அங்கு ஒருவித மவுனமே நிலவியது. எவ்வாறாயினும் தனியொரு சிறுமியாக மனதிற்குச் சரியெனப்பட்டதை எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் குரல் எழுப்பியதே மிகப்பெரிய சாதனைதான். எனவே, மலாலாவிற்கு கிடைத்த பாராட்டும் அங்கீகாரமும் நியாயமானதே என்பதனை வாசிப்பினூடே எண்ணுகிறேன்.

'ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், நாட்டிலும் அமைதி நிலவ வேண்டும் - இது என் கனவு. உலகில் உள்ள ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் கல்வி அவசியம். பள்ளியில் தோழிகளுடன் உட்கார்ந்து பாடங்களைப் படிப்பது என்னுடைய உரிமை. மனிதகுலத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் புன்னகையோடு இருப்பதைப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.' என்கிறார் மலாலா. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, முதல் பாகிஸ்தானியப் பெண்; என்ற பெருமைகள் மலாலாவுக்கு உண்டு. அவர் பெற்றிருக்கும் சர்வதேச விருதுகளின் பட்டியல் மிக நீளம். துப்பாக்கியால் துளைக்கப்பட்ட போதும் உறுதி குலையாமல் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் மறுக்கப்பட்ட கல்விக்காக உலகின் பல பகுதிகளிலும் ஒலிக்கிறது மலாலாவின் குரல்! மலாலா எழுப்பியிருக்கும் குரல் உலகெல்லாம் ஒலிக்க வேண்டிய ஒன்று. இந்தியாவில் தந்தை பெரியார் எழுப்பிய குரல் இன்று உலகெங்கும் கேட்பதுபோல!

(நன்றி: இண்டங்காற்று)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp