மென்மையின் பாடல்

மென்மையின் பாடல்

ஆசை
Share on

ரவிக்குமாரை அரசியல் மற்றும் இலக்கிய விமர்சகராக, சிந்தனையாளராக, அரசியல்வாதியாக அறிவோம். திடீரென்று பார்த்தால் அவர் கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் ஏழெட்டு மாத இடைவெளியில் இரண்டு கவிதைத் தொகுப்புகள். அதைவிட ஆச்சர்யமூட்டுவது என்னவென்றால் இந்த இரண்டு தொகுப்புகளிலிருந்தும் நமக்குக் காணக் கிடைக்கும் ரவிக்குமார்!

ரவிக்குமார் கவிதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்டவுடனே சரி எதிர்ப்புக் கவிதைகளாகவும் பிரச்சினைகளை முன்னிறுத்தும் கவிதைகளாகவும்தான் இருக்கும் என்று முன்முடிவுடன் இருந்துவிட்டேன். ஆனால், எனது நண்பர்கள் ''ரவிக்குமார் மேல் படிந்திருக்கும் படிமத்துக்கும் இந்தத் தொகுப்புகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை. பெரும்பாலும் காதல், காமம் சம்பந்தப்பட்ட கவிதைகள். படித்துப் பார்'' என்றார்கள். அப்போதும்கூட வேண்டா வெறுப்பாகத்தான் படிக்க ஆரம்பித்தேன்.

முதல் தொகுப்பு: 'அவிழும் சொற்கள்' (உயிர்மை வெளியீடு). படிக்கத் தொடங்கியதும் எனக்கு ஆச்சர்யமும் இனிமையும் கலந்த உணர்வு ஏற்பட்டது. மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்: "மன்னித்துவிடுங்கள் ரவிக்குமார், உங்களை முன்முடிவுடன் அணுகிவிட்டேன்."

ஆனால், 'அவிழும் சொற்கள்' என்னை பெரிய அளவில் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும். அதேசமயம், ஒரு நல்ல தொடக்கத்தை ரவிக்குமாரிடம் இந்தத் தொகுப்பில் கவனிக்க முடிந்தது. மென்மையான, எளிமையான சொற்கள், இறுக்கமில்லாத நடை மற்றும் படிப்பதற்கு இலகுவான தன்மை போன்றவற்றை இந்தத் தொகுப்பில் கண்டுகொண்டேன். அதைவிட முக்கியமான ஒன்று தனது கவிதைகளைப் பின்நவீனத்துவக் கவிதைகளாக ஆக்கிவிடுவதற்கு எவ்வித முயற்சியையும் அவர் செய்யாதிருந்தது.

அப்புறம், இரண்டாவது தொகுப்பான மழை மரம். முதல் தொகுப்பில் நான் அவரிடம் கண்ட நல்ல விஷயங்களை இந்தத் தொகுப்பில் அவர் மேலும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். நிச்சயமாக இது ஒரு குறிப்பிடத் தகுந்த தொகுப்பு. நிறைய நல்ல கவிதைகள்.

முதலில், 'மழை மரம்' என்ற தலைப்பே அலாதியானது; உள்ளே இருக்கும் கவிதைகளின் மென்மையைச் சரியாக அடையாளம் காட்டுவது. பின் அட்டையில் சொல்லியிருப்பதுபோல இவருடைய 'பல கவிதைகளில் காதல், கலவி, துயரம், மழை என்ற பல்வேறு அனுபவங்களின் பின்னணியில் அவ்வப்போது ஓர் அணில் வந்து எட்டிப் பார்க்கிறது. கடுமையான, முரண்பாடான, கொடூரமான இந்த வாழ்க்கையின் மென்மையான தன்மையை அடையாளப்படுத்தும் அந்த அணில் அவ்வப்போது வந்து விளையாடிவிட்டு நம் இதயத்தையும் பழமாகக் கொறித்துத் தின்றுவிட்டு ஓடிவிடுகிறது.'

தற்காலக் கவிதைகளில் பல கவிதைகள் மனரீதியான அனுபவங்களை அருவமான படிமங்களையும் வரிகளையும் கொண்டு எழுதப்படுபவை என்பதால் வாசகனால் சட்டென்று அவற்றுடன் ஒன்ற முடியாமல் போகிறது. அதிலும் பல கவிதைகள் பாசாங்காக எழுதப்படுபவை. ஆனால், ரவிக்குமாருடைய கவிதைகள் மனரீதியான அனுபவங்களை அன்றாட வாழ்க்கை சார்ந்த படிமங்கள், சொற்றொடர்கள் கொண்டு எழுதப்பட்டவை என்பதால் படிப்பதற்கு அவை சிரமம் ஏற்படுத்துவதில்லை. வாசக அனுபவத்தோடு எளிதில் ஒன்றிப்போய்விடுகின்றன. செறிவான தன்மையாலும் சொல் முறையாலும் பல கவிதைகளைச் சங்கக் கவிதைகளின் தொடர்ச்சி என்றுகூட சொல்லிவிடலாம்.

ஒரு கவிதையில் 'வறுத்த அரிசியின் வாசனையாய்' (பக்கம். 35) என்ற வரியைப் படிக்கும்போதே சிறு வயதில் வீட்டில் அம்மா வறுத்துத் தந்த அரிசியின் மணம் மறுபடியும் மனதை நிறைக்கிறது. இன்னொரு கவிதையில், 'தலைக்குள்/ நட்சத்திரங்கள் குலுங்குகின்றன' என்னும்போது கிறக்கம் ஏற்படுகிறது. சுமாரான சில கவிதைகளையும் இதுபோன்ற வரிகள் தூக்கிப் பிடிக்கின்றன. 'இன்று உன்னோடு கண் விழித்தேன்' என்று ஆரம்பிக்கும் கவிதையை

சூரியனின் முதல் கிரணங்களில் ஒன்றையெடுத்து
ஆராய்கிறேன் உன் முகத்தை
அதை விழிகளில் வாங்கி ஆயிரம்
நட்சத்திரங்களாய்
இரைக்கிறாய் என் மீது

என்ற வரிகள் தூக்கிப் பிடிக்கின்றன. இந்த வரிகளின் மென்மை எனக்கு எடித் சோடர்கிரன் (Edith Sodergran, 1892-1923) என்ற ஸ்வீடிஷ் பெண் கவிஞரின் கீழ்க்காணும் வரியை நினைவுக்குக் கொண்டுவருகிறது:

Only sunbeams pay proper homage to a tender female body...
(Violet Twilights, Love & Solitude)

ரவிக்குமாரின் கவிதைகள் காமத்தை நாசூக்காகவும் நுட்பமாகவும் சொல்கின்றன. 'தொலைபேசி வழியே' (பக்- 65), 'குதிருக்குள் கொட்டி வைத்த' (பக்- 67) போன்ற கவிதைகள் அப்படிப்பட்டவை. காதலைப் பற்றிய கவிதைகள் மென்மையான மொழியிலும் கூடல், பிரிவு, ஏக்கம் போன்றவற்றைப் பற்றிய கவிதைகள் வெக்கையான மொழியிலும் சொல்லப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. 'வாசவதத்தை' என்று ஆரம்பிக்கும் நீள்கவிதை நல்ல முயற்சி.

இறுதியாக, புத்தகத் தயாரிப்பு. குறைகளைத் தேடும் அளவுக்கு உழைத்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் ஒவ்வொரு பக்கத்திலும் கவிதைகளின் மேலும்கீழும் கோடுகளைப் பயன்படுத்தியிருக்கும் விதம். நல்ல வடிவமைப்பு.

கவிதைகளையே வெறுக்கும் அளவுக்கு வெளிவந்துகொண்டிருக்கும் கவிதைகளுக்கு நடுவே இந்தப் புத்தகம் உண்மையாகவே நல்ல ஆறுதல். வாழ்த்துகள் ரவிக்குமார்!

புத்தகத்திலிருந்து சில கவிதைககள்:

காலை
பனியாய் மீந்திருக்கும் மரத்தின்மேல்
பாய்ந்து வந்து
காலிரண்டை உயர்த்தி
வால் நிமிர்த்திப் பார்க்கிறாய்
அணில் குஞ்சே
வா என் மனக் கிளைகளில் தாவு
இதயத்தைப் பழமாகத்
தருகிறேன்
குடைந்து குடைந்து பசியாறு

உன் குன்றிமணிக் கண்களில்
மிதக்கும் கனவுக்குள்
என்னை எழுதுகிறேன்
இடம் கொடு என் அணில் குஞ்சே
(பக்- 23)

களைத்த இரவின் உறக்கமெனத்
தழுவுகிறாய்
காற்று கவனித்துக்கொண்டிருக்க
அவித்த மரவள்ளிக் கிழங்குபோல்
ஆவிபறக்கக் கிடக்கிறேன்

அமிலம் பட்ட துணியாகப்
பொடிகிறது உயிர்
அதை ஊதித் தள்ளுகிறது உன் மூச்சு

மெளனித்துவிட்டன சுவர்ப்பூச்சிகள்
உறங்கப் போய்விட்டது ஆந்தை
எங்கோ
பதறித் துடித்தழும் குழந்தையைச்
சொற்களற்ற மொழியால்
ஓய்ச்சுகிறாள்
தாலாட்டு தெரியாத தாயொருத்தி
(பக்- 68)

பூத்துக் கிடக்கும்
முந்திரிக் காட்டில் நுழைந்ததுபோல்
மூச்சுத்திணற வைக்கிறது
உன் நினைவு

வேறு எதையும் நினைக்காவண்ணம்
நாசி நிறைக்கும் தாழம்பூ வாசனையாய்
நொடிகளில் எல்லாம் படிந்திருப்பாய்

மேய்த்துத் திரும்புகையில்
ஆடொன்றைத் தவறவிட்ட
சிறுவனாய்ப் பதறுகிறேன்

வீதியில்
கையிலிருந்த பலூனைக் காற்று பிடுங்கிச் செல்ல
அலறுகிறாள் ஒரு சிறுமி

இறவாணத்தில் கட்டிய ஏணையில்
எலியொன்று இறங்குகிறது
குழந்தை சிரிக்கிறது
(பக்- 70)

(நன்றி: ஆசை)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp