குத்திக் கிழிக்கும் கிரீட முட்கள்

குத்திக் கிழிக்கும் கிரீட முட்கள்

தலைமைக் கிரீடம் சிலருக்கு முள்ளாக இருக்கும் – பொறுப்பின் காரணமாக. வேறு சிலருக்கோ முள்ளாலேயே கிரீடம் செய்து சூட்டப்படும் – வெறுப்பின் காரணமாக. ஊராட்சி அமைப்புகளின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுள்ள மிகப் பலரும் அப்படிப்பட்ட முள்கிரீடத்தைத்தான் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்திய சமுதாயத்தின் தனிப்பெரும் இழிவான சாதியக் கட்டமைப்பில் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்டவர்கள் தலித் சமூகங்கள். அதைத் தகர்க்கிற போராட்டப் பயணத்தில் ஒரு மைல்கல்தான், உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு. ஜனநாயக வேர்த்தளமாகிய உள்ளாட்சி மன்றங்களில் தலித்துகளின் இடம் உறுதிப்படுத்தப்படுவது அரசியல் உறுதிப்பாட்டை நிலைப்படுத்த இட்டுச் செல்வதற்கான ஒரு கட்டாயத் தேவை. தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறவர்களை ஏற்க மறுக்கிறது ஆதிக்க சாதி மனம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அச்சுறுத்திப் பதவி விலக வைக்கிறார்கள்.
சுழற்சிமுறை இடஒதுக்கீட்டுக் காலம் முடிகிற வரையில் தலைவர் பதவியைக் காலியாகவே வைத்திருந்து பின்னர் ஆதிக்க சாதிக்காரர்களையே பதவியேற்க வைக்க முயல்கிறார்கள். அந்த முயற்சிகள் நடந்த இடங்களில் இடஒதுக்கீட்டுக் காலத்தை நீட்டிக்கக் கோரி போராட்டங்கள் நடந்ததுண்டு. தடைகளைத் தாண்டி தலைவர்களாக வருகிறவர்கள் மற்ற சாதிக்காரர்களுக்கு சமமாக அமரவிடக்கூடாது என்று பல ஊராட்சிகளில் நாற்காலிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாய் விரிக்கப்பட்டிருக்கும்.

இதனைத் தடுக்க வேண்டிய அரசு அலுவலர்களோ பல இடங்களில் தலித் தலைவர்களோடு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அதன் பின்னணியில் இருப்பது உள்ளூர் சாதியவாதிகளை மீற முடியாத நிலைமை மட்டுமல்ல, அவர்களுக்குள்ளேயே ஊறிப்போயிருக்கிற பாகுபாடும்தான். இத்தகைய நிலைமைகள் பற்றிய ஒரு பதிவாக வந்திருக்கிறது ‘முள்கிரீடம்’ என்ற இந்த நூல். ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் பற்றிய ஒரு கள ஆய்வு நடத்தி இதனை வழங்கியிருக்கிறார் அ. பகத்சிங். “வர்க்க முரண்பாடுகளும் சாதிய வேறுபாடுகளும் இந்தியக் குடியரசின் ஜனநாயகத் தன்மையைக் காலாவதியாக்கிவிட்டன.

அடித்தள மக்களின் பார்வையிலிருந்து சமூகத்தை விவரிக்க, புரிந்துகொள்ள முயற்சிப்போமானால் நம் சமூகம் எவ்வளவு ஜனநாயகமற்றது, இறுக்கமான அமைப்பைக் கொண் டது என்பதை அறிய முடியும்,” என்று தமது முன்னுரையில் குறிப்பிட்டி ருக்கிறார் நூலாசிரியர். இதை அறிந்துகொள்வது அந்த இறுக்கமான அமைப்பைத் தகர்ப்பதற்கான முதற்படி. மன்னர்களின் ஆட்சிக்காலத்திலேயே கிராமத் தலைவர்களின் நிர்வாகமாக உள்ளாட்சி அமைப்புகள் இருந்தது பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது நூல். அதே வேளையில், அந்த கிராமத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிற உரிமை எல்லா சமூகங்களுக்கும் இருந்ததில்லை. குறிப்பாக “தாழ்ந்த” வேலைகளைச் செய்த மக்களுக்கு இப்படிப்பட்ட பொதுப்பங்களிப்புகளில் இடமளிக்கப்பட்டதில்லை. அடுத்தடுத்த பேரரசுகளின் கீழ் உள்ளாட்சிகள் எப்படி இருந்தன, பிரிட்டிஷ் ஆட்சியில் என்ன மாற் றங்கள் நிகழ்ந்தன என்ற தகவல்களைச் சொல்லிவிட்டு, சுதந்திர இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நிலைமைகள் இருந்ததையும், பின்னர் அரசமைப்பு சாசனத்திலேயே அனைத்து மாநிலங்களுக்குமான உள் ளாட்சி சட்டம் சேர்க்கப்பட்டதையும் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.

அதைத் தொடர்ந்து வருகிற பகுதிகள், இந்த ஜனநாயக வேர்கள் மீது கொட்டப்படும் சாதிய அமிலத்தின் வெப்பத்தை உணர வைக்கின்றன. எடுத்துக்காட்டாக கிராம சபை கூட்டங்களைக் கூட்டுவதில் கூட சாதியம் பல்லிளிக்கிறது. ஊராட்சி அலுவலகம் ஆதிக்க சாதியினரின் பகுதிகளில் இருக்குமானால் கிராமசபை கூட்டங்களில் தலித்துகள் பங்கேற்க முடியாது. தலித் பகுதியில் அலுவலகம் இருக்குமானால் கூட்டங்களில் மற்றவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

“முடியாது,” “மாட்டார்கள்” என்ற சொற்களுக்கிடையே எவ்வளவு வேறுபாடு! ஒரு தலித் தலைவரின் ஊரில், மற்றவர்களது பகுதிகளில் நடைபெறும் “பொது” நிகழ்வுகளுக்கு அவரை அழைக்கமாட்டார்கள். சம்பிரதாயத்துக்குக் கூட அழைப்பிதழ்களில் அவருடைய பெயரைச் சேர்க்கமாட்டார்கள். அந்த ஊரின் பெண்கள் பள்ளி ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேறொரு ஊரின் வேறு சாதித் தலைவரை அழைத்தார்கள்.ஊருக்குப் பொதுவான திட்டங்களைக் கூட தலித் தலைவர்களால் நிறைவேற்ற முடிவதில்லை. ஒரு ஊரில் சாலை போடுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்த பிறகு, ஆதிக்க சாதியினர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார்கள்.

நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லாத காரணம்: அந்தச் சாலையை தலித்துகளும் பயன்படுத்துவார்கள் என்பது.ஊராட்சி மன்றக் கூட்டம் நடக்கிறபோது உறுப்பினர் அல்லாதவர்கள் கூட புகுந்து தலைவரின் முடிவுகளை மாற்றுமாறு கெடுபிடி செய்வது, மீறினால் அவரது வீட்டின் முன் குவிந்து வசைபாடுவது, அதையும் மீறினால் கொலைமிரட்டல் விடுவது, அதிகாரிகள் ஒத்துழைப்போடு தலைவர் மீது பொய்யான புகார்கள் பதிவு செய்வது, அலுவலகக் கதவுகள் அடைக்கப் பட்டு தலைவர் தனது வீட்டிலிருந்தே பணிகளைச் செய்ய வைப்பது என எத்தனை முட்கள்… ஆவண விவரங்கள், நேர்காணல்கள் என ஆதாரப்பூர்வமாகத் தொகுக் கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வுக்கான களப்பணி 2006-11 காலகட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது என்றாலும், மாநிலம் முழுக்க, ஏன் நாடு முழுக்க இப்படித்தான் இருக்கிறது. இதற்கு மாறுபட்ட கிராமங்களும் இருப்பதை, அங்கு ஊராரின் ஒத்துழைப்போடு தலித் பிரதிநிதிகள் வெற்றிகரமாகச் செயல்படுகிற இணக்கமான சூழல் நிலவுவதைப் பதிவு செய்யவும் நூலாசிரியர் தவறவில்லை. அந்த இணக்கமே அனைத்து கிராமங்களுக்குமான பொதுநிலையாக நிலைநாட்டப்படுகிற நாள் வரவேண்டும். அதற்காகப் போராட்டக் களம் காண்கிறவர்களுக்குத் துணை செய்கிற இந்தப் புத்தகத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், எழுத்துப் போராளி சு. சமுத்திரம் நினைவு விளிம்புநிலை மக்களுக்கான சிறந்த நூல் விருது (2012) வழங்கப்பட்டிருக்கிறது. பொறுப்புள்ள பணிக்குப் பொருத்தமான அங்கீகாரக் கிரீடம்.

(தீக்கதிர் நாளிதழில் 16-9-2013 அன்று இலக்கிய சோலை பகுதியில் வெளியான விமர்சன கட்டுரை)

(நன்றி: மாற்றுக்களம்)

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...