கீதாரி - சு. தமிழ்ச் செல்வி

கீதாரி - சு. தமிழ்ச் செல்வி

அரசன்
Share on

சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் மிகப்பெரும் அதிர்வை தந்த புத்தகமிது, இயக்குனர் சமுத்திரகனி “கிட்ணா” எனும் பெயரில் திரைப்படம் எடுப்பதாகவும், அது சு. தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய “கீதாரி” எனும் நாவலை தழுவியக் கதை என்றும் எங்கேயோ வாசித்த செய்தியை மனதில் வைத்திருந்து தான் கடந்த புத்தகச் சந்தையில் இப்புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கினேன். இப்புத்தகத்தை தேடிய கதை மிக சுவாரசியமானது, அதைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக காண்போம்.

ஒரு புத்தகத்தை வாசிக்க துவங்குமுன், அப்புத்தகம் பற்றிய சின்ன மதிப்பிடலோடு தான் துவங்குவேன், பெரும்பாலும் என் மதிப்பிடலோடு ஒத்திருக்கும், சில புத்தகங்கள் நேரெதிராக அமைந்துவிடும். கீதாரி என் மதிப்பீட்டோடு நூறு சதவீதம் ஒத்திருந்தது. இப்புத்தகம் எனக்குப் பிடித்துப் போக முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது, இராமநாதபுரம் பகுதியிலிருந்து எங்களது பகுதி கிராமங்களுக்கு கிடை போடுவதற்கு வருடா வருடம் ஒரு இடையர்கள் குழு வரும் அதிலொரு ஆடு மேய்க்கும் பையன் எங்களது கூட்டாளிகளுள் ஒருவனாக இருந்தான், அதன்பொருட்டு அவன் படும் இன்னல்களை அவ்வபோது சிரிப்பினூடே சொல்ல கேட்டிருக்கிறோம் என்பதினால் கதையும், கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வியலும் சற்று பரிச்சயம்!

வாழ்க்கையில் எதுவுமே அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது அதற்கான கடின உழைப்பு தேவை என்பது எவ்வளவு சத்தியமான உண்மையோ அதைவிட இருமடங்கு கடின உழைப்பை தந்து தங்களது தினசரி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் கூட்டம் தான் இந்த இடையர்களின் கூட்டம். ஒருபக்கம் இரவினில் ஆட்டுக்கு காவல், இன்னொரு பக்கம் கிடை போட்டிருக்கும் நிலத்துக்காரர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் இன்னல்கள், நிலையற்ற இருப்பிடமற்று ஒவ்வொரு ஊராய் ஆட்டு மந்தைகளோடு மந்தைகளாக பண்ட பாத்திரங்களை தூக்கிக் கொண்டு திரியும் பெண்கள் இப்படி அவர்களின் வாழ்வியலே கோரமானதாகத் தான் இருக்கிறது.

ஓய்வு என்பதே இல்லை என்றாகிப் போன வாழ்க்கையை நம்மால் நினைத்துப் பார்க்க இயலுமா? ஆனால் அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். கொஞ்சமும் சளைக்காமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க தயாராக இருக்கிறார்கள். யாரிடமும் எதிர்த்துப் பேசுவதில்லை, எல்லோரிடமும் பணிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.

நாவலின் சுருக்கம்

இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மா, வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு பையனோடு வளசையில் இருக்கையில் ஒரு மழை இரவினில் வந்து கரிச்சா, வெள்ளச்சி எனும் இரட்டைப் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள் மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி. அடுத்த நாள் காலையில் ஊராரை கூப்பிட்டு தகவலை கூறினால் ஊரினர் எங்கு நம்ம தலையில் விடிந்து விடுமோ என்று எண்ணி நழுவ முயல, கஷ்டத்தோடு கஷ்டமாக நானே ஒரு குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன் என்று இராமு கீதாரி சொல்லவும், ஊரின் பெரும் புள்ளியான சாம்பசிவம் இன்னொரு குழந்தையை நான் எடுத்து வளர்க்கிறேன் என்று சொல்லி இப்போது என்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது எனவும் சில வருடங்கள் கழித்து வந்து வாங்கி கொள்வதாகவும் சொல்லி செல்கிறார்.

சொன்ன படியே சிறிது வருடங்கள் கழிந்து இரண்டில் ஒன்றை வாங்கி கொண்டு செல்லும் சாம்பசிவம் அப்பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்லி துன்புறுத்தி வளர்க்கிறார்.

கரிச்சா , வெள்ளையனோடு உதவியாக வளசையில் இருக்கிறாள், வளர்ந்து பெரியவள் ஆனதும் பெண் பார்க்க வரும் கூட்டத்தினர் வெள்ளையனையும், கரிச்சாவையும் இணைத்து வைத்து தவறாக பேசிவிட ராமு கீதாரி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தனி வளசை போட்டுக் கொண்டு இருக்குமாறு பணித்துவிட்டு தன்னோட மகள் மருமகனோடு இணைந்து கொள்கிறார்.

அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கும் போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று சாம்பசிவம் வெள்ளச்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறாள்.

ஆரம்பத்தில் ஒரு சுணக்கம் இருந்தாலும் கரிச்சாவும், வெள்ளைச் சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையை தவிர்த்து எவ்வித சிக்கலுமின்றி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். சரியான மேய்ச்சல் நிலமின்மையால் இன்னொரு பகுதிக்கு நகரும் நிலை நேரிடுகிறது, அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணனை சந்திக்கிறான் வெள்ளையன், அதன்பிறகு குழந்தையின்மையை காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவி முடிவு செய்து அதன்படியே காய் நகர்த்தவும்,

தன் மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளையன் இப்படி மனம் மாறிவிட்டானே என்று வருந்தி அவனைப் பிரிந்து ராமு கீதாரியிடம் வந்து சேர்கிறாள் கரிச்சா. ராமு கீதாரியோ பயங்கர பண நெருக்கடியில் இருக்கிறார். வெள்ளையனிடம் தனயே சென்று எடுத்து சொல்லியும் அவன் கேட்காமல் போனதில் ரொம்ப மன வருத்தத்தில் அவனை சபித்து விட்டு வந்துவிடுகிறார் ராமு. வெள்ளையன் திருமணம் ஏதோ காரணத்தினால் நின்று விட்டாலும் கரிச்சாவை மட்டும் மீண்டும் அழைக்க வரவே இல்லை.

வெள்ளையனை பிரிந்து வந்த சில நாட்களிலே அவள் கருவுற்றிருப்பதை அறிகிறாள், ஆனால் வெள்ளையனிடம் போகாமல் தானே சுயமாக நிற்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் ஆடுகளை பிடித்துக் கொடுக்க சொல்லி வளர்க்கிறாள், குழந்தை பிறந்து வெள்ளைசாமியோடு சேர்ந்தாளா இல்லையா ? என்பது நாவலின் முடிவு ...

*********

அண்ணனாய் இருந்து வளர்த்தவனே கரிச்சாவை திருமணம் செய்து கொள்வது, வாசிக்கையில் மனதுக்கு ஒப்பாமல் இருந்தாலும் யதார்த்தம் அதுவாகத்தான் இருக்கிறது, அவர்கள் திருமணத்தின் போது கிடை ஆடுகளை பார்த்துக் கொள்வதற்கு ஆளில்லை என்பதினால் வெள்ளையன் ஆடு வளைக்க வைத்திருக்கும் கம்பை, மாப்பிள்ளைக்கு பதிலாக வைத்து திருமணம் நடத்துவது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ஆனால் அது அவர்களின் சடங்காக மதிக்கிறார்கள். இப்படி அவர்களின் தொழிலுக்கு எவ்வித பாதிப்புமின்றி தான் தங்களது விசேசங்களை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

சமுத்திரகனி இயக்கி நடிப்பதாக சொல்லும் 'கிட்ணா' எனும் அந்தப் படம் எப்போது வருமென்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது. ஆனால் இன்னொரு கவலையும் மனதைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது, அது என்னவெனில், நாவலைத் தழுவி படமெடுக்கிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிய ஒரு சிலரைத் தவிர, பலரும் சொதப்பி இருக்கிறார்கள். அப்படி ஏதும் இக்கதைக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த நாவலை வாசித்து முடிக்கையில், நாமெல்லாம் சொகுசிலும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு அதிலும் எண்ணற்ற குறைகளை கூறிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்று உணர்ந்து கொண்டேன். ஆங்காங்கே டாக்குமென்ட்ரி உணர்வு எட்டிப் பார்த்தாலும் அது அவர்களின் வாழ்வியலை வரலாற்றில் செய்யும் பதிவாக நினைத்து கடந்து வந்தேன். நிச்சயமாய் இந்த நூல் என்னளவில் முழுமையான ஒரு நாவல் கட்டமைப்பு தான். இன்றைய விரைவான வாசகத் தோழர்களுக்கு இது பிடிக்குமா என்பது சற்று சந்தேகம் தான். வாசித்தே ஆக வேண்டிய வகையறா புத்தகமிது, தவறவிடாதீர்.

(நன்றி: வாசகர் கூடம்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp