கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

• 04.11.2017 திருப்பூர் மாவட்டம் சுண்டக்காபாளையம் அருகே 7 ஆம் வகுப்பு மாணவன் சபரீஸ் தற்கொலை.
• 14.11.2017 தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு +2 மாணவன் சதீஷ்பாபு தற்கொலை.
• 24.11.2017 வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பள்ளி மாணவிகள் நான்கு பேர் (தீபா, மனிஷா, சங்கரி, ரேவதி) கிணற்றில் குதித்து தற்கொலை.
• 28.11.2017 கோவை மாவட்டம் சோமனூரில் +2 மாணவன் அருள் செல்வன் தற்கொலை.

மேலே உள்ளவை நவம்பர் மாதத்தில் மட்டும் நம்மை உலுக்கி எடுத்த மாணவ, மாணவியரின் தற்கொலைகள்.

பொதுவாகத் தற்கொலைக்குத் தீராத நோய்களும், வேலையின்மை, ஏழ்மை, பரீட்சையில் தோல்வியுறுவது, பொருளாதார நிலையில் ஏற்படும் திடீர் பின்னடைவு,சொத்துப் பிரச்சினைகள், தொழில் நஷ்டம், போதைக்கு அடிமையாதல், வரதட்சனைப் பிரச்சினை, பாலியல் பலாத்காரம், முறையற்ற கர்ப்பம், விவாகரத்து, குழந்தையின்மை என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

மாணவர்களைப் பொறுத்தவரை,

1.பரீட்சையில் தேர்ச்சி அடையாமை.
2.பள்ளியில் மற்ற மாணவர்களுடன் சுமூகமாக இருக்க முடியாமல் போதல்.
3.மற்ற சம வயது நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்படுதல்.
4.உடல்ரீதியான.குறைபாடு இருந்தால், அதனால் சுயபச்சாதாபம் ஏற்படுதல்
போன்றவைகள் மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கான முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.

“கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்” என்னும் இந்த நூலும் ஒரு தற்கொலையிலிருந்தே தொடங்குகிறது. ஒரு மாணவியின் தற்கொலை… இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் போலீஸ் அதிகாரி பள்ளி நிர்வாகி, வகுப்பாசிரியை, குடும்ப உறுப்பினர்கள் என ஒவ்வொருவரிடமும் தனது விசாரணையைத் தொடங்குகிறார். அப்போது தற்கொலை செய்து கொண்டு இறந்துபோன மாணவி எழுதிய கடிதம் கிடைக்கிறது. அது கடிதமா? அனைவரின் கன்னத்திலும் ஓங்கி அறைந்த கடிதம். ஒரு மாணவனோ, மாணவியோ சரியாகப் படிக்கவில்லை என்றால் அதற்கான சரியான காரணத்தை அறியாத அறியாமைச் சமூகத்தை ஓங்கி அறைந்த கடிதம். கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டு காயத்ரி என்ற மாணவி மரணமடைய, அவளது மரணத்துக்கு பள்ளி ஆசிரியையின் தவறான அணுகுமுறையே காரணம் என பொங்கி எழுந்த அவளது உறவினர்கள் போலீசுக்குப் போக, அந்த வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி எல்லோரிடமும் விசாரணை நடத்துகிறார். அப்போது அவருக்கு அந்த மாணவி எழுதிய தற்கொலைக் கடிதம் கிடைக்கிறது. அந்தக் கடிதத்தின் வழியே கற்றல் குறைபாட்டுக்கான பல்வேறு காரணங்களைப் பற்றி உரையாடல் வடிவில் அமைந்த இந்நூல் அலசுகிறது.

ஒரு மாணவனுக்கு சரியாகப் படிக்கத் தெரியவில்லை என ஒற்றை வரியில் நாம் தீர்ப்பெழுதிவிட முடியும். ஆனால் அதன் பின் உள்ள காரணங்களை அழகாக இந்நூலில் பட்டியலிடுகிறார்.

1.உடலியல் காரணங்கள் –-- பார்த்தல்/ கேட்டலில் உள்ள குறை, வலிப்பு நோய் முதலியன.
2.உளவியல் பாதிப்புகள், நடத்தை குறைபாடுகள், சரியான சூழல் இல்லாமை --- மன அழுத்தம், பதற்றம், எதிர்மறையான நடத்தைகள், வீட்டிலோ, பள்ளியிலோ படிப்பதற்குத் தேவையான நல்ல சூழல் இல்லாமை முதலியன
3.குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகளில் தாமதம் --- மனவளர்ச்சி குன்றியவர்( குறைந்த நுண்ணறிவு ஈவுத்திறன் உடையவர்), மெதுவாகக் கற்பவர் (slow learners)
4.குறிப்பிட்ட சில கற்றலுக்கான திறன்களின் குறைபாடு – கற்றல் குறைபாடுகள் (சராசரி ஐக்யூ) திறமைக்கும், திறமையை வெளிப்படுத்தும் விதத்திற்கும் வேறுபாடு காணப்படும். கேட்பதைப் புரிந்து கொண்டு வாய்மொழியாக பதிலளிப்பர். அதையே எழுத சிரமப்படுவர்.
5.கவனமின்மை ( அளவுக்கு மீறிய துறுதுறுப்பு, விளைவுகளைப் பற்றிய சிந்தனையற்ற செயல்) ---- ADD என்னும் கவனக்குறைபாட்டு பிரச்சினை, ADHD என்னும் துறுதுறுப்புடன் கூடிய கவனச்சிதறல் பிரச்சினை).
மேலே உள்ள வகைப்படுத்தல் மிக முக்கியமானது. ஒரு மாணவன் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை எனில் நாம் கோபப்படுகிறோம். உண்மையில் இந்தக் கோபம் நேர்மையாக வகுப்பறைச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியருக்கே அதிகம் ஏற்படுகிறது. அந்தச் சமயங்களில் தான் நாம் அந்த மாணவனுக்கு உடல்ரீதியாக, உளரீதியாக கடுமையான தண்டனைகள் தருகிறோம். இந்த சமயங்களில் நம்மைப் பிடித்து நிறுத்தி, ஒரு மாணவன் சரியாகப் படிக்காததற்கு மேலே உள்ள காரணங்களில் ஏதோ ஒன்றிருக்கலாம், அதனை முதலில் சரி செய்யுங்கள், பிறகு வகுப்பு சரியாகிவிடும் என இந்நூல் நமக்குக் கற்றுத்தருகிறது. இந்தத் தவறை நாம் சரி செய்யவில்லை எனில் ஒரு மாணவனோ, மாணவியோ சரிசெய்திருக்க முடிந்த கற்றல் குறைபாட்டுடனே தொடர்கின்றனர். இதனால் அவர்கள் அடையும் இன்னல்கள்,

• சோம்பேறி, ஊக்கமற்றவன், படிப்பில் ஆர்வமில்லாதவன், கெட்ட நடததை உடையவன், இவனோடு சேர்ந்தால் மற்ற பிள்ளைகளும் கெட்டுப் போவார்கள்… என்பன போன்ற தவறான முத்திரைகள்.
• குறைவான சுயமதிப்பீடு, தன்னைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள்.
• பிறரோடு ஒப்பிடுதலை வெறுத்தல்.
• தாழ்வு மனப்பான்மை.
• முயற்சி செய்தும் தன்னால் சாதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.
• பிறர் கவனத்தைக் கவர முயலுதல்.
• தன்னைப் பிறர் புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபம்.
• பெற்றோர் மீதும், சமுதாயத்தின் மீதுமுள்ள கோபத்தை எதிர்மறைச் செயல்கள் வழியாகக் காட்டுவது மற்றும் ஒத்துழையாமை.
• வெற்றிபெறும்போது அதை ‘அதிர்ஷ்டம்’ எனவும், தோல்வியடைந்தால் “ நான் முட்டாள்” என்றும் சொல்லிக் கொள்வது.
• தனிமைப்படுத்திக் கொள்ளல்.
• வாழ்க்கை மீது வெறுப்பு.
• தற்கொலைக்குத் தூண்டக்கூடிய சோகம்….

என சரிசெய்ய முடிந்த கற்றல் குறைபாடு, சரி செய்யப்படாமல் போவதால் தற்கொலைவரை இட்டுச் செல்கிறது. இது எவ்வளவு பெரிய பேரிழப்பு. கல்வி.ஒரு மனிதனைக் கொல்லுமென்றால், அந்தக் கல்வி அமைப்பே தேவையில்லை எனலாம்.

மேற்கண்ட கற்றல் குறைபாடு பிரச்சினைகளில் Dyslexia என்னும் மொழித்திறன் கற்றல் குறைபாட்டுப் பிரச்சினையை முதன்மைப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, அதனுடன் தொடர்புடைய Dysgrahia,Dyscalculia உட்பட மூளையின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களால், குறைபாடுகளால் உணடாகும் பத்துக்கும் மேற்பட்ட கற்றல் குறைபாடுகளை இந்நூல் அழகுற உரையாடல் வடிவில் விளக்குகிறது. பார்ப்பதற்கு தடியான நூலாக இருந்ததால் இதனைப் படிப்பதற்கு நிறைய நாளாகுமென்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஆனால் நான் செய்தது எவ்வளவு தவறு என்பதை இப்போது உணர்கிறேன். வாசிப்புக்கு சோர்வு தராத, இடையூறு செய்யாத எளிய, இயல்பான எழுத்துநடை. மிகக் கடினமான பல தகவல்களை, நுணுக்கமான மூளை பற்றிய விவரங்களை எளிமையாக உரையாடல் வடிவில் தந்துள்ளது இப்புத்தகம். உண்மையில் இதிலுள்ள தகவல்களைப் படித்துவிட்டு நண்பர்களுடன் விவாதிக்கும்போது என்னை பிரமிப்பாகப் பார்க்கிறார்கள்.

உண்மையில் நமது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் சிறப்புத் தேவையுடையோருக்கான உள்ளடங்கிய கல்விக்கான பயிற்சி ஆண்டுதோறும் மூன்று நாள் முதல் ஐந்து நாள் வரை வழங்கப்படுகிறது. ஆனால் அப்பயிற்சியில் சொல்லப்படும் செய்திகளைப் பற்றிய முன் அறிவு எனக்குக் குறைவாக இருப்பதால் அரை மனதுடனே அமர்ந்திருப்பேன். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது பயிற்சியின்போது நான் தெரிந்துகொண்ட அரைகுறை அறிவானது நிச்சயம் முழுமை நோக்கி பயணிக்கிறது.

இந்நூலில் முதன்மையான நோக்கம் Dyslexia என்னும் கற்றல் குறைபாட்டை விளக்குவதாக இருந்தாலும், ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்புடைய கற்றல் குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் நூலாசியர் அழுத்தம் தந்திருப்பது இதில் எதுவுமே நோய் கிடையாது, இவை அனைத்தும் முறையான பயிற்சிகள் மூலம் தீர்க்கக்கூடிய வெறும் நரம்பியல் குறைபாடுகள் என்பதாகும்.

1.Dyslexia என்னும் தாய் மொழியையோ பிற மொழியையோ கற்பதில் உள்ள சிரமம்.
2.Dysgraphia என்னும் ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடைவெளியின்றி எழுத்து வடிவமே புரியாத அளவு மிக மோசமாக இருக்கும் நிலை.
3.Dyscalculia என்னும் கணிதத்தில் பின்தங்கி இருக்கும் நிலை. “ கணிதத்திற்கு விடை காணத் தேவையான தர்க்கச் சிந்தனை இவர்களுக்குக் குறைவாக இருப்பதால் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற அடிப்படை கணக்குகளை செய்வதிலும், நேரம் கணக்கிடுதல், பணத்தைக் கையாளுதல், தூரம் வேகம் ஆகியவற்றை கணக்கிடுதலிலும் இவர்கள் சிரமப்படுவர்.
4.ADD – Attention Deficit Disorder என்னும் கவனக் குறைபாடுடையோர். இவர்கள் அமைதியாக இருப்பர்.
5.ADHD – Attention Deficit Hyperactivity Diaorder என்னும் கவனக்குறைபாட்டுடன் கூடிய துறுதுறு தன்மை கொண்ட குழந்தைகள்
போன்ற கற்றல் குறைபாட்டு செயல்களைப் பற்றி விளக்கமாகக் கூறும் நூலாசிரியர் மேலும் சில கற்றல் குறைபாடுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
6. கை, கால் தசைகளை ஒருங்கிணைப்பதில் (motor coordination) குறை உள்ள போது சட்டையின் பட்டன் போடுவது, ஷூ லேஸ் கட்டுவதில் போன்றவற்றில் பிரச்சினை ஏற்படுகிறது.
7. Visuo motor coordination என்னும் கண் பார்ப்பதை கை கால்களால் முழுமையாக உணரமுடியாத நிலையில், எழுதும்போது நிறைய எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன.
8. ADHD உடன் கற்றல் குறைபாடும் சேரும்போது உண்டாகும் போது, பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் எதிராகச் செயல்படும் நிலையான Oppositional Defiant Disorder. இதற்கு அடுத்த நிலையான conduct disorder என்னும் நிலை. இந்நிலையில் பொய் சொல்வது, திருடுவது போன்ற ஒழுக்கக் கேடுகள் உருவாகும் நிலை.
9. School phobia என்னும் பள்ளி செல்ல பயப்படும் நிலை… இந்நிலை தொடர்ந்தால் உண்டாகும் Truancy என்னும் பள்ளி போறேன்னு சொல்லிட்டு பீச், பார்க், சினிமா செல்லும் நிலை.
10. Hysteric conversion Reaction என்னும் ஒரு குறிப்பிட்ட சூழலைத் தவிர்க்கனும்னு நினைத்தவுடன் மயக்கம் வருவது, பள்ளி செல்வதைத் தவிர்க்க நினைக்கும் குழந்தைக்கு காலையிலேயே காய்ச்சல், வயிற்றுவலி உடனே உண்மையில் ஏற்படும் நிலை.

என பல கற்றல் குறைபாடுகளைப் பற்றியும், அதனைக் களைவதற்கான வழிமுறைகளையும் மிக அழகாக உரையாடல் வடிவில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்த உரையாடலின் போக்கிலேயே இவர் சிறப்புக் குழந்தைகளை கையாளத் தகுதியானவர்களை வரிசையாக அறிமுகம் செய்து வருகிறார்.. பொது வெளியில் உளவியல் ஆலோசனைக்கு மருத்துவமனை சென்றாலே “மென்டல் ஆஸ்பத்திரிக்கு போனீங்களா?” அதிர்ச்சியடையும் சமூகத்தில் இத்துறையில் என்னென்ன பிரிவுகள் உள்ளன, இதனைக் கையாள்பவர்களின் வெவ்வேறு பணி என்ன என்பதை இந்நூல் எளிதாக நமக்குக் கடத்துகிறது.

1.உளவியல் ஆலோசகர் - பிரசன்னா.
2.கற்றல் குறைபாடுடையோருக்கான சிறப்பு ஆசிரியை – பாரதி
3.மற்றொரு சிறப்பு ஆசிரியை – சுனந்தா
4. கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் (உளவியல் நிபுணர்) – சந்தர் குமார்.
5. ஆக்குபேசனல் தெரபிஸ்ட்(குழந்தையின் கை, கால் செயல்பாட்டிலோ, அறிவுத்திறனிலோ, சென்சரி இண்டக்ரேசன் என்னும் உணர்வு உறுப்புகளின் செயல்பாட்டிலோ குறையிருந்தால் திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் சரிசெய்பவர்கள்) - வசுமதி.

இந்நூல் கற்றல் குறைபாடுடைய காயத்ரி என்னும் மாணவியின் தற்கொலையில் தொடங்கி கற்றல் குறைபாடு பற்றிய அறிமுகம் தருகிறது. பின் ரவி என்னும் மாணவன் தனது அம்மா ரம்யாவுடன் கல்வி ஆலோசனைக்காக பிரசன்னா என்னும் உளவியல் ஆலோசகரிடம் செல்கிறார். அங்கு ரவிக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு இருப்பது கண்டறியப்படுகிறது. இதனைக் கேட்டு மிகவும் வருந்தும் ரவியின் அம்மா ரம்யாவுக்கு மேலே கண்ட சிறப்பு நிபுணர்கள் தரும் ஆறுதலும், விளக்கமும், தன்னம்பிக்கையுமாக இந்நூல் விரிகிறது. இதில் டிஸ்லெக்ஸியா குறைபாடு இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 15% முதல் 20% குழந்தைகள் கற்றல் குறைபாடு உடையவர்கள் என்று கூறப்பட்டிருக்கும் தகவல் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை எதிர்கொள்ள நாம் எந்த அளவில் தயாராகி இருக்கிறோம் என்பது கேள்விக்குறியே. அந்த வகையில் நாம் எத்தனை கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை உடலளவிலும், மனதளவிலும் கொலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை முகத்தில் அறைந்து கேள்வி எழுப்புகிறது இந்நூல்.

இந்நூல் விவரிக்கும் ஒவ்வொரு விஷயமும் அவ்வளவு சிறப்பு. கற்றல் குறைபாடு இருந்து சாதித்தவர்கள் பட்டியலில் எடிசன், ஐன்ஸ்டீன், சர்ச்சில், வால்ட் டிஸ்னி, பில் கேட்ஸ் என்று உலக அளவிலும் அபிஷேக பச்சன், வீர சிவாஜி, அக்பர், ராமானுஜர், பாரதியார் , நந்தக்குமார் ஐ.ஆர்.எஸ் என பலரைப் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் மேல் நாம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

நூலின் 33 அத்தியாயங்களின் இறுதியிலும் தரப்பட்ட கவிதைகள், தத்துவங்கள் போன்றவை மிகச் சிறப்பாக உள்ளன. அதில் ஒன்று,

“குறை சொல்பவர்களின் நடுவே வாழும் குழந்தைகள்
கண்டனம் செய்யக் கற்றுக்கொள்கிறார்கள்.
பரிகாசத்திற்கிடையே வாழும் குழந்தைகள்
கூச்சப்படக் கற்றுக் கொள்கிறார்.
அவமானத்திற்கிடையே வாழும் குழந்தைகள்
குற்ற உணர்வைக் கற்றுக்கொள்கிறார்கள்.
அரவணைப்படனும் நட்புடனும் வாழும் குழந்தைகள்
அன்பைக் காணக் கற்றுக்கொள்கிறார்கள்”

என்ன சிறப்பான வரிகள்… சமூகத்தின் மீதும், சிறப்புக் குழந்தைகளின் மீதும் தீராத அன்பு கொண்ட நூலாசிரியர்கள் தேடித் தேடி சென்று, பல நிபுணர்களிடம் பல தகவல்களைச் சேகரித்து இந்நூலை நம் கைகளில் தவழச் செய்துள்ளனர். இந்நூல் சிறப்புக்குழந்தைகளை நேசிப்போருக்கும், அவர்களை சாதனையாளராக மாற்ற நினைப்போருக்கும் மிகச்சிறந்த கையேடாக இருக்கும்.

இந்நூலில் ஒரு இடத்தில்இவ்வாறு வரும். ஒரு தூக்கு தண்டனை கைதியின் தண்டனையை கடைசி நேரத்தில் நீக்கி விடுதலை செய்து அந்த உத்தரவை விரைவாக அந்தச் சிறைக்கு அனுப்ப தட்டச்சரிடம் நீதிபதி சொல்ல அத்தட்டச்சர் “ Let him, not hang him” என்று தட்டச்சு செய்வதற்கு பதிலாக கமாவை மட்டும் மாற்றிப் போட்டு “ Let him not, hang him” என அவர் டைப் செய்ய முடிந்தது ஒரு நிரபராதியின் கதை. அவ்வாறு சிறப்புக்குழந்தைகளை கண டறிவது நமது முதல் பணி, அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைக்கு முறையான பயிற்சியும் மருத்துவ உதவியும் அளிப்பது நம் கடமை. இதில் நாம் செய்யும் சிறு தவறும் முன்கூறிய கதையில் கமாவை மாற்றிப் போட்டதால் முடிந்த வாழ்வைப்போல இருண்டுபோகும்.

சிறப்புக் குழந்தைகளை சிறப்புடன் கையாண்டு பலரது வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் நூலாசிரியர்கள், இந்நூலின் மூலம் நம்மையும் இந்த நல்பயணத்துக்கு தயார் செய்கின்றனர். நூலாசிரியர்களின் பணி மிகச் சிறப்பு வாய்ந்தது. வாழிய அவர்களின் மனிதநேயம்.
வாசிக்கத் தவறாதீர்!

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp