கனவுகளின் மாற்றுமதிப்பு

கனவுகளின் மாற்றுமதிப்பு

ப்ரயன் மகே எழுதிய [ Bryan Magee] எழுதிய தத்துவவாதியின் சுயவாக்குமூலம் [Confessions of a Philosopher] என்ற நூலின் தொடக்கம் சுவாரசியமானது. இளமையில் அவர் தூங்கி விழித்ததும் ஒவ்வொருநாளும் உடன் தூங்கிய அக்காவிடம் கேட்பாராம் ‘நான் நேற்று எப்போது தூங்கினேன்?’ என்று. அக்கா ஒரு விஷயத்தைச் சொல்லி அதை நான் சொல்லிக்கொண்டிருந்தபோது என்பார். இல்லை , அது எனக்குத்தெரியும், அதை நான் கேட்டேன். அதற்குபிறகு எப்போது என்பாராம். அப்படியே கடைசியாக கேட்டதைக்கூட நினைவுகூரமுடியும். தூங்கிய கணத்தை நினைவுகூர முடியாது.

நம் அன்றாட வாழ்க்கைக்குள் இப்படி ஒரு பெரும்புதிர் இருப்பதை உணர்ந்து திகிலடைந்ததாக ப்ரயன் சொல்கிறார். அவருக்குள் இருந்த தத்துவவாதி தன்னைக் கண்டுகொண்டது அப்போதுதான். நான் அதைவாசித்தபோது நினைத்துக்கொண்டேன். எந்தெந்த விஷயங்கள் எல்லாம் தத்துவசிந்தனையைத் தூண்டும் புள்ளிகள் என.
ஒற்றைவரியில் இப்படிச் சுருக்கிக் கொண்டேன். நம் இருப்பையும் நம்மைச்சுற்றிய பிரபஞ்சத்தின் இருப்பையும் நாம் அனுபவமாக உணரும் கணங்கள். ஆச்சரியமென்னவென்றால் அவை எல்லாமே கவிதையின் கணங்களுமாக உள்ளன.

அப்படிப்பட்ட தருணங்களெல்லாமே கவிதையில் நிரந்தரமான படிமங்களாக ஆகியிருக்கின்றன.பிறப்பு,மரணம் போன்ற பெரிய தருணங்கள். பூ விரியும் கணம்போல சிறிய தருணங்கள். அவ்வாறு என்றென்றும் கவிதையில் படிமமாக உள்ள ஐம்பது அறுபது விஷயங்களைப் பட்டியலிடமுடியும். அவற்றில் ஒன்றாக நவீனக் கவிதையில் கவிதையை மொழிபெயர்ப்பதும் இருப்பது அப்போது நினைவுக்கு வந்தது. கவிதைமொழியாக்கம் பற்றி ஏராளமான வரிகள் நினைவில் நிறைந்தன. மொழியாக்கம் அப்படி ஒரு மகத்தான தருணமா என்ன?

இல்லையென்றால் ஏன் அதைக் கவிஞர்கள் அப்படி எழுதுகிறார்கள். கவிதை என்பது மொழியில் நிகழ்வதானாலும் மொழியில் தடமுள்ளதல்ல என்று கவிஞர்கள் உணர்கிறார்கள். அதிகடத்தி இழை வழியாக உயர் அழுத்தமின்சாரம் செல்லும்போது தோல்விளைவு என ஒன்று உருவாகுமாம். கம்பிவழியாக மின்சாரம் செல்லாது, கம்பிக்குமேல் ஒரு அயனிமண்டலத்தை உருவாக்கி அதனூடாகப் பாய்ந்து செல்லும். கம்பி இருப்பதனால்தான் மின்சாரம் பாய்கிறது, கம்பி அறுபட்டால் மின்சாரமும் அறுபடும். ஆனால் கம்பியில் மின்சாரம் இல்லை. அதுதான் கவிதைக்கும் மொழிக்குமான உறவு.

கவிதைக்கும் மொழிக்கும் இடையேயான உறவின் இந்த மர்மத்தை மிகச்சிறப்பாக வெளிக்காட்டுவது கவிதையின் மொழியாக்கம்தான். ஒருமுறை உரையாடலில் கல்பற்றா நாராயணனிடம் நண்பர் ஒருவர் கேட்டார் — சார் கவிதையை உண்மையில் மொழியாக்கம்செய முடியுமா? அக்கணமே கல்பற்றா நாராயணன் பதில் சொன்னார் – நாம் கொண்டாடி நினைவில் கொண்டிருக்கும் கவிதைகளில் பெரும்பாலானவை மொழியாக்கக் கவிதைகள்தானே? ஆமாம், காளிதாசனையும், ஹோமரையும், பாஷோவையும், நெரூதாவையும் மயகோவ்ஸ்கியையும் தாகூரையும் நாம் மொழியாக்கம் வழியாகத்தானே ரசித்திருக்கிறோம்?

மொழியில் இருந்தாலும் கவிதை கனவில்தான் நிகழகிறது. மானுடத்தின் கூட்டுக்கனவால் கவிதை எழுதிவாசிக்கப்படுகிறது என்று சொல்லலாம். பாஷோவின் வண்ணத்துப்பூச்சி ஜப்பானிய வயலில் பறக்கவில்லை. அழியாத மானுடக்கனவில் சிறகடிக்கிறது. அது நமக்கு அங்கிருந்து வரவில்லை. நம்முள்ளிருந்து நாம் அதை எடுத்துக்கொள்கிறோம். ஆம், மொழியாக்கம் என்ற செயல் ஒரு மகத்தான விஷயத்தை அடையாளம் காட்டுகிறது. மனிதகுலம் என்பது ஒற்றைப்பேரகம் கொண்டது என்பதை!

ஆகவேதான் கவிஞன் மனம் அதை ஒரு கவித்தருணமாக அடையாளம் கண்டது. தன் அகத்தே இருக்கும் கனவைப் புறத்தேயுள்ள மொழியில் மொழியாக்கம்தான் செய்கிறோம் என அவன் அறிகிறான். மொழியில் இருந்து அதைத் தன் கனவை நோக்கி மொழியாக்கம் செய்துகொள்கிறான் வாசகன். நடுவே ஒரு மொழிபெயர்ப்பாளன் வந்து அதை ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்தால் என்ன ஆகிவிடப்போகிறது?

பாஷோவை நான் ஜப்பானிய மொழியில் வாசித்தால் என்ன நிகழ்கிறது. பாஷோவின் சொற்களை நான் என் கனவாக மாற்றிக்கொண்டு பொருள் கொள்வேன். அதை டேவிட் பர்ன்ஹில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஜப்பானிய மொழியில் இருந்து தன் கனவுக்கு மொழியாக்கம் செய்து அக்கனவை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்கிறார். அதை நான் வாசிக்கையில் ஆங்கிலத்தில் இருந்து என் கனவுக்கு மொழியாக்கம் செய்துகொள்கிறேன். ஆங்கிலத்தில் இருந்து யுவன் சந்திரசேகர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து தரும்போது அதைத் தமிழ்மொழியில் இருந்து மொழியாக்கம் செய்து என் கனவுக்குக் கொண்டு செல்கிறேன்.

கண்டிப்பாக ஒவ்வொரு மொழியாக்கத்திலும் ஏதோ ஒன்று இழக்கப்படுகிறது. பண்பாட்டு நுட்பம், மொழி நுட்பம். பல விஷயங்கள் சேர்ந்துகொள்கின்றன. மொழியாக்கம் செய்தவர்களின் கனவுகள், அம்மொழிகளின் இயல்புகள். ஆனாலும் நான் அடைந்த பாஷோ ஜப்பானிய வாசகன் அடைந்த பாஷோவில் இருந்து அதிகம் வேறுபட்டவன் அல்ல. அல்லது பாஷோவுக்கும் ஜப்பானிய வாசகனுக்குமான அதே தூரம்தான் எனக்கும் பாஷோவுக்கும்.

காரணம் படைப்பு என்பது மொழியில் இருந்தாலும் மொழியில் நிகழவில்லை என்பதே. பாஷோவை நான் என் கனவின் மூலமே கண்டடைகிறேன். அதற்கு அக்கவிதையின் மொழிவடிவம் ஓர் ஊடகம் மட்டுமே. அதிலுள்ள எல்லாக் குறைகளையும் நான் என் கனவின்மூலம் ஈடுகட்டமுடியும். அந்த மாயம் மொழியாக்கத்தில் உள்ளது. கனவு வழியாகக் கனவுக்குள் செல்லும் ஒரு பாதையில் நிகழும் ஒரு மொழிப்பரிமாற்றமே மொழியாக்கம் என்பது.

கவிதை மொழியின் உச்ச சாத்தியங்களால் ஆனது என்றவகையில் அதன் மொழியாக்கம் பேசப்படுகிறது. எல்லா மொழியாக்கங்களும் அடிப்படையில் ஒன்றே. நவீனச்சிறுகதை என்பது வேறுவகையில் சொல்லப்பட்ட கவிதை.

[ 2 ]

பல்வேறு மொழிகள் புழங்கும் இந்தியாவில் மொழியாக்கம் என்பது எப்போதும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது. சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்வது சுதந்திர மொழியாக்கம் செய்வது என இருவகை மொழியாக்கங்களும் இருந்திருக்கின்றன. சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் பெரும்பாலும் மருத்துவம் இலக்கணம் போன்ற துறைகளில் நிகழ்ந்துள்ளது.இலக்கியம் எப்போதுமே சுதந்திரமொழியாக்கம்தான். மொழியாக்கம்செய்யப்பட்ட நூலை நாம் வழிநூல் என்று இலக்கணம் வகுத்துக்கொண்டோம்.

தமிழில் நவீனகாலகட்டம் தோன்றியபோது மொழியாக்கம் நமக்கு உலகச்சாளரமாக இருந்தது. தமிழ் உரைநடையே மொழியாக்கம் வழியாக உருவாகிவந்தது என்றால் மிகையல்ல. ஆரம்பகால பைபிள் மொழியாக்கங்கள் பிற்கால செய்திமொழியாக்கங்கள் சட்ட மொழியாக்கங்கள் போன்றவை நம் உரைநடையை வடிவமைத்தன. நம் நவீன இலக்கியம் மொழியாக்கம் வழியாகவே உருவாகி வந்தது. நம் மொழியின் முன்னோடிப்படைப்பாளிகள் அனைவருமே மொழியாக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். குறிப்பாக பாரதியார்.

நவீன இலக்கியம் தோன்றியபின் ஐம்பதுகள் தமிழிலக்கியத்தில் மொழியாக்கத்தின் பொற்காலம் எனலாம். த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி , ஆர்.ஷண்முகசுந்தரம், அ.கி.கோபாலன், கா.ஸ்ரீ.ஸ்ரீ போன்றவர்கள் வங்கமொழியிலிருந்தும் இந்தியிலிருந்தும் மராட்டியிலிருந்தும் இந்திய இலக்கியங்களை மொழியாக்கம் செய்தார்கள். க.சந்தானம், சுத்தானந்தபாரதி, டி.எஸ்.சொக்கலிங்கம், எஸ்.ராமகிருஷ்ணன் , க.நா.சு போன்றவர்கள் ஆங்கிலம் வழியாக முக்கியமான உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தனர். நம்.நவீன இலக்கியப்பிரக்ஞையை அவைதாம் உருவாக்கின.

அறுபதுகளுக்குப்பின் வணிக எழுத்தில் எழுந்த பேரலை மொழியாக்கங்களின் செல்வாக்கைக் குலைத்தது.வணிக எழுத்தின் இரு இயல்புகள் வாசகர்களை அடிமைப்படுத்துகின்றன. ஒன்று வாசகனுக்கு நன்குபழகிப்போன வாழ்க்கைமுறைச்சித்தரிப்பு. இரண்டு செயற்கையான சரளம் கொண்ட நடை. இரண்டுக்கும் பழகிய வாசகர்கள் மொழியாக்கப்படைப்புகளில் உள்ள சற்று கடினமான நடையையும் அன்னியவாழ்க்கையையும் வாசிக்கமாட்டார்கள்.

இக்காலகட்டத்தில் மொழியாக்கங்களைத் தொடர்ந்து கொண்டுவந்துகொண்டிருந்தவை ருஷ்யபதிப்பகங்களான முன்னேற்றப்பதிப்பகம், ராதுகாபதிப்பகம் ஆகியவை. அத்துடன் இந்திய அரசின் நிறுவனங்களான சாகித்ய அக்காதமி, தேசியபுத்தகநிறுவனம் ஆகியவை தொடர்ந்து முக்கியமான ஆக்கங்களை வெளியிட்டன. எழுபதுகளில் தமிழ்வழிக்கல்விக்காக தமிழ்நாட்டுப்பாடநூல்நிறுவனம் பல்வேறு துறைகளில் முக்கியமான நூல்களை மொழியாக்கம்செய்து வெளியிட்டுள்ளது.

தொண்ணூறுகளில் பதிப்பக மறுமலர்ச்சி உருவானபோது. தேக்கம் கண்டுவிட்ட மொழியாக்கச் சூழல் மீண்டும் உயிர்பெற்றது. பழைய மொழியாக்கங்கள் மீண்டும் வெளிவந்தன. புதியநூல்கள் தொடர்ந்து தரமான முறையில் மொழியாக்கம்செய்யப்படுகின்றன. ஆனால் நாம் இன்றைய உலகை அறிந்துகொள்ள இந்த மொழியாக்கங்கள் போதாது. அனைத்துத் துறைகளிலும் தரமான நூல்கள் வெளிவந்தாகவேண்டும்.

துளசி ஜெயராமன், சௌரி, சு.கிருஷ்ணமூர்த்தி, சித்தலிங்கையா, சரஸ்வதி ராம்நாத் போன்றவர்கள் தமிழில் முக்கியமான மொழியாக்கங்களைச் செய்தவர்கள். தமிழில் இன்று மொழியாக்கங்களைத் தொடர்ந்துசெய்து வருபவர்கள் பலர் உள்ளனர். பேரா.நா.தர்மராஜன்,எம்.ஏ.சுசீலா, புவியரசு போன்றவர்கள் மொழியாக்கம்செய்த ருஷ்யப்பேரிலக்கியங்கள் சமீபத்தில் வெளிவந்தன.பாவண்ணன், நிர்மால்யா, குறிஞ்சிவேலன் ,தி சு சதாசிவம்,நஞ்சுண்டன், குளச்சல் மு யூசுப், யூமா வாசுகி போன்றவர்கள் இந்திய மொழிகளில் இருந்து முக்கியமான மொழியாக்கங்களைச் செய்கிறார்கள். ஜி.குப்புசாமி போன்றவர்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கங்கள் செய்கிறார்கள். ஆயினும் இன்று மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை மிகமிகக்குறைவுதான்.

[ 3 ]


இவ்வரிசையில் முக்கியமான பெயர் எம்.எஸ். ஐம்பதாண்டுக்காலமாகவே இலக்கியத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் எம்.எஸ். அதிகம் மொழியாக்கங்கள் செய்ததில்லை. இலக்கியப்பிரதிகளை செம்மைப்படுத்துவது பிழைதிருத்துவது ஆகியவற்றையே அவர் அதிக ஈடுபாட்டுடன் செய்திருக்கிறார். ஆங்கிலம், மலையாளம் ஆகியவற்றை நன்கறிந்தவர். நிறைய மொழியாக்கங்கள் செய்திருக்கலாம். சூழல் அமையவில்லை.

நான் நண்பர்களுடன் இணைந்து சொல்புதிது இதழை நடத்தியபோது எம்.எஸ்.அதற்குப் பிழைதிருத்தி உதவிசெய்தார். அப்போதுதான் அவரை மொழியாக்கம் செய்யச்சொல்லலாம் என்ற எண்ணம் உருவானது. கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி மொழியாக்கங்கள்செய்யச் சொன்னேன். கதைகளை நானே தேர்வுசெய்து அவருக்கு அளிப்பேன். எம்.எஸ். மிகவேகமாக மொழியாக்கம் செய்வார். அதிகபட்சம் ஒருவாரம். எம்.எஸின் மொழியாக்கக் கதைகள் சொல்புதிதின் முக்கியமான கூறாக இருந்தன என்று சொல்லலாம்.

எம்.எஸ்.மொழியாக்கம் செய்த கதைகளை நூலாக ஆக்கலாம் என நினைத்து தமிழினி வசந்தகுமாரிடம் சொன்னேன். எம்.எஸ் மொழியாக்கத்தில் சகரியா கதைகள் ஒரு தொகுதியாகவும் ஆங்கிலம் வழி அவர் மொழியாக்கம் செய்த கதைகள் அமைதியான மாலைப்பொழுதில் என இன்னொரு தொகுதியாகவும் தமிழினியால் 2004இல் வெளியிடப்பட்டன. அந்நூல்களின் வெளியீட்டை நாகர்கோயிலில் என் செலவில் ஒரு விழா எடுத்து நிகழ்த்தினேன். எம்.எஸ்சின் நெடுங்கால நண்பர்களான நீல.பத்மநாபன், பொன்னீலன் போன்றவர்கள் கலந்துகொண்டு எம்.எஸ்ஸை வாழ்த்தினார்கள். அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு.

எம்.எஸ் அதன் பின் தொடர்ந்து மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். காலச்சுவடு இதழில் அவரது பல மொழியாக்கங்கள் வெளிவந்தன. காலச்சுவடுக்காக அவர் மொழியாக்கம் செய்த சொரெண்டினோவின் ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை முக்கியமான தொகுதி. பொதுவாக லத்தீனமெரிக்கக் கதைகள் நிறையவே தமிழில் வெளிவந்திருந்தாலும் உற்சாகமான வாசிப்பனுபவம் கொடுக்கும் மொழியில் அவை மொழியாக்கம் செய்யப்பட்டது மிகமிகக்குறைவு. தமிழைப்பொறுத்தவரை அவ்வகையில் மட்டுமே ஒரே தொகுதி
எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும், கேரளப்பழங்குடித்தலைவர் ஜானுவின் வாழ்க்கைவரலாறான ஜானு, பேபி ஹல்தரின் சுயசரிதையான விடியலைநோக்கி,மரியா ஸெரெஸ்சின் ஆதியில் பெண் இருந்தாள் என்னும் நாடோடிக்கதைத் தொகுதி ஆகியவற்றைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

எம்.எஸ்ஸின் மொழியாக்கத்தை நான் தொடர்ச்சியாகப் பல வருடம் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எம்.எஸ். வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வதில் நம்பிக்கை உடையவர். சொற்களைக் கூர்ந்து கவனித்து அகராதிப்பொருள் மற்றும் வழக்காற்றுப்பொருளை அவதானித்து மொழியாக்கம் செய்கிறார். அதன்பின் அந்த மொழியாக்கத்தை சரளமான தமிழுக்கு மீண்டும் மாற்றி எழுதுகிறார். கடைசியாக அந்த இரண்டாம்பிரதியில் எழுவாய்,பயனிலை அமைப்பை சரிசெய்து கொஞ்சம் மாற்றுகிறார். வாசிக்கையில் சுதந்திரமாக மொழியாக்கம் செய்யப்பட்டதுபோன்ற சரளத்துடன் இருக்கும். ஆனால் முழுமையான கச்சிதமான மொழியாக்கங்கள் அவை.

எம்.எஸின் மொழியாக்கத்திறனுக்குச் சவாலாக அமைந்தவை சொல்புதிதுக்காக நான் அவரிடம் அளித்த இரு கதைகள். ஒன்று, பாதி தோலுரித்த காட்டுமாடு. [ஆன்னி புரூக்ஸ்] இன்னொன்று பாரம்.[ ஜாட் எட்கார் வைட்மான்] இரண்டுமே சிக்கலான நவீனநடையில் எழுதப்பட்டவை. பெரும்பாலான நவீனப்புனைகதைளை நாம் மொழியாக்கத்தில் வாசிக்கையில் சொற்றொடர்த் திருகல்களால் பொறுமையிழப்போம். இவ்விரு மொழியாக்கங்களும் நவீனப்புனைவுகள் எப்படி மொழியாக்கம்செய்யப்படவேண்டுமென்பதற்கான மிகச்சிறந்த முன்னுதாரணங்கள். அம்மொழியின் சிக்கலான அமைப்பு உருவாக்கும் இலக்கிய அனுபவம் அப்படியே இருக்க அவை தமிழுக்குள் வந்து அமர்ந்திருக்கின்றன. தமிழிலக்கியத்தில் எம்.எஸின் இடமென்ன என்று காட்டும் படைப்புகள் அவை.

[ 4 ]
எம்.எஸ்ஸின் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய இத்தொகுதி எம்.எஸ்ஸின் மொழியையும் அவர் புனைவுகளைச் சந்திக்கும் புள்ளியையும் புரிந்துகொள்ள மிகமிக உதவியானது. பல முக்கியமான கதைகள் இதிலுள்ளன.

பாரம் கதையை எம்.எஸ். மொழியாக்கம் செய்து கொண்டுவந்தபோதுதான் நான் முதல்பகுதியில் சொன்ன உணர்ச்சியை அடைந்தேன். நான் பலமுறை வாசித்து ரசித்த படைப்பு அந்தக்கதை. அதன் ஊடுவழிகள் வழியாகப் பலமுறை பயணம்சென்றிருப்பேன். ஆங்கிலத்தில் ஓ ஹென்றி பரிசுக்கதைகள் நூலில் அதை வாசித்தேன். தமிழில் எம்.எஸ் மொழியாக்கத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது சட்டென்று தோன்றியது எனக்கு அது மொழியாக்கம்செய்யப்பட்டிருப்பதே தெரியவில்லை என. காரணம் நான் அதை முன்னரும் ஆங்கிலத்தில் வாசிக்கவில்லை.வாசிக்கையில் எனக்குள் அது மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது. என் கண்முன் அக்கதை நிகழ்ந்துகொண்டிருந்தது, அவ்வளவுதான்.

இடைவெளியில்லாமல் முப்பதாண்டுக்கும் மேலாக நான் ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்றாலும் ஆங்கிலம் எனக்கு எப்போதுமே அன்னியமொழியாகத்தான் இருக்கிறது. ஒருநாளும் ஆங்கிலத்தை சரளமாக வாசித்ததில்லை, வசதியாக உணர்ந்ததும் இல்லை. ஆச்சரியமென்னவென்றால் என் தாய்மொழியான மலையாளமே எனக்கு அன்னியமொழிதான். காரணம் என் மனதின் மொழி தமிழ். புனைகதையாளனாக நான் தமிழில் நீந்திக்கொண்டிருப்பவன். ஆங்கிலத்தில் பாரம் கதையைப் பலவகையான இக்கட்டுகளுடன் முட்டிமோதித்தான் வாசித்தேன். அந்தக்கதை ஒட்டுமொத்தமாக அளித்த அதே அனுபவம் இம்மிகூட குறையாமல் கூடாமல் அதைத் தமிழில் வாசித்தபோதும் நிகழ்ந்தது.

அப்படியென்றால் எம்.எஸ் அளித்த மொழியாக்கம் என்னதான் செய்தது? அக்கதையை அது ஒன்றுமே செய்யவில்லை. எம்.எஸின் தமிழ் வழியாக அக்கதை தொடாமல் ஓடிவந்து என்னைச்சேர்ந்தது. வைட்மேனின் கனவு ஆங்கிலம் வழியாக என் கனவை வந்தடைந்தது. பின்னர் எம்.எஸின் தமிழ் வழியாக வந்தடைந்தது. மானுடக் கனவின் ஒற்றைவெளியில் மிகமிக அருகே வைட்மேன் நின்றுகொண்டிருந்தார்.

மானுடம் என்பது அதன் கனவால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குக் காட்டியது அந்தக் கதை. அந்த மொழியாக்கம். அந்தத் தருணத்துக்காக நான் எம்.எஸ்ஸுக்கு என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

[காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கும் எம்.எஸ்ஸின் மொழியாக்கச்சிறுகதைகளின் தொகுப்பான விழுந்துகொண்டிருக்கும் பெண் நூலுக்கு எழுதிய முன்னுரை]

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp