கமலாதாஸின் “என் கதை

கமலாதாஸின் “என் கதை

நான் இங்கு பேசுவதற்கு எடுத்திருக்கும் நூல் கமலாதாஸ் எழுதியுள்ள அவரது சுயசரிதை நூலான ‘என் கதை’ என்ற நூலாகும். இது கமலா தாஸ் அவரது தாய்மொழியான மலையாளத்தில் ‘என்டெ கதா ‘ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிர்மால்யாவின் தமிழ் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக இந்த நூல் இவ்வாண்டு வெளிவந்திருக்கிறது.

மலையாளத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான இந்நூலின் மொழி பெயர்ப்பு 43 ஆண்டுகளுக்குப்பின் இவ்வாண்டுதான் வெளியாகியுள்ளது. இந்த மலையாள நூலில் 27 அத்தியாயங்கள் காணப்படுகின்றன. ஆனால், கமலாதாஸ் இதே சுயசரிதையை ‘My Story’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 15 ஆண்டுகளுக்குப்பின் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தபோது அது 50 அத்தியாயங்கள் கொண்ட விரிவான நூலாக வெளியாகியது. இது மலையாள மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகள்தான்.

கமலா தாஸ் மலையாளம். ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவராக இருந்திருக்கிறார். மாதவிக்குட்டி என்ற புனைபெயரில் அவர் மலையாளத்தில் எழுதிய சிறுகதைகள் ‘மாதவிக்குட்டியுடெ கதகள் ‘ என்ற பெயரில் வெளியாகியுள்ளன. மலையாளத்தின் மிகச்சிறந்த முதல் ஐந்து எழுத்தாளர்களில் கமலாதாஸ் ஒருவராகக் கருத்தப்பட்டதாக மலையாள விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். கமலா தாஸ் என்ற பெயரில் அவர் எழுதிய ஆங்கிலக்கவிதைகள் அவருக்கு இந்திய ஆங்கிலக்கவிஞர்கள் வரிசையில் அவருக்கு தனியிடத்தை தேடிக்கொடுத்திருக்கிறது. நாவல், சிறுகதை, கவிதை, சுயசரிதை, பத்தி எழுத்துகள் என்று இருபதிற்கும் மேற்பட்ட அவரது நூல்கள் வெளிவந்துள்ளன. மலையாள இலக்கியத்தில் கமலாதாஸ் தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்கிறார்.

குடும்பம்

கமலாதாஸ் கேரளத்தின் புன்னையூர்க்குளத்தைச் சேர்ந்த பாரம்பரியம் மிகுந்த நாலப்பாட்டு நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை V.M.நாயர் மலையாளத்தில் “மாத்ருபூமி “பத்திரிகையை ஸ்தாபித்தவர். கல்கத்தாவில் ஒரு பிரிட்டிஷ் போக்குவரத்துக் கம்பெனியில் மானேஜராக இருந்திருக்கிறார். தாய் பாலமணி அம்மா ஒரு கவிஞராவார். இவரின் பெரிய மாமன் நாராயண மேனன் ஆங்கில இலக்கியத்திலும், சம்ஸ்கிருத இலக்கியத்திலும் புலமைமிக்கவராகத் திகழ்ந்தார்.இந்திய பிரம்மஞான சபையில் முக்கிய அங்கத்தவராக இருந்தார். மிகச்சிறந்த இலக்கியப்பின்புலத்தை கமலாதாஸ் கொண்டிருந்திருக்கிறார்.

1934 இல் பிறந்த கமலாதாஸ் கேரளத்திலும் ,கல்கத்தாவிலுமாக பெரும்பாலும் வீட்டிலேயே கல்வியைப்பெற்றிருக்கிறார்.அவரது 15 ஆவது வயதில் அவரது உறவுமுறைக்குள் மாதவதாஸ் என்ற Reserve Bank of India அலுவலரைத் திருமணம் செய்கிறார்.மூன்று ஆண் பிள்ளைகள்.1984 இல் லோக் சேவா கட்சியை ஆரம்பித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1984 இல் இலக்கியத்தில் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இலக்கியத்திற்கான அதி உயர் விருதுகளை கேரளாவிலும் அகில இந்திய ரீதியிலும் சர்வதேச அளவிலும் பெற்றிருக்கிறார். University of Calicut கமலாதாஸின் இலக்கியப்பணியை கௌரவித்து D.Litt பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

அவரது கணவரின் மறைவுக்குப்பின், சாதிக் அலி என்ற முஸ்லிம் லீக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்தார். 1999 ம் ஆண்டு அவரது பிற்காலத்தில் கமலா சுரையா என்ற பெயரை ஏற்று இஸ்லாத்தை தழுவினார்.கமலாதாஸ் பற்றிய இந்தப் பின்னணித் தகவல்களுடன் அவரின் ‘என் கதை’ என்ற தன்வரலாற்றை அணுகுவது பொருத்தமாக இருக்கும்.

கமலாதாஸ் தன் சுயசரிதையை ‘மலையாள நாடு’ என்ற மலையாள வார இதழில் எழுத ஆரம்பித்தபோது மலையாள இலக்கிய உலகில் மாத்திரமல்ல மலையாள சமூகத்திலேயே பெரும் புயலைக்கிளப்பியது. கமலாதாஸின் தந்தை அத்தொடரை நிறுத்துமாறு பணித்தார். ஆனால் கமலாதாஸ் சுயசரிதைத்தொடரை நிறுத்தவில்லை. கமலாதாஸின் ‘என் கதை’ வெளியானபோது அந்த வாரஇதழின் பிரதிகள் 50 ஆயிரத்தால் அதிகரித்தது. 1976 இல் ‘என் கதை’ நூலாக வெளியானபோது 11 மாதங்களில் 6 மறுபதிப்புகளைக்கண்டது. 36000 பிரதிகள் விற்பனையாகித் தீர்ந்தன. “என் வாழ்க்கையில் நான் பல நூல்களை எழுதியிருக்கிறேன்.ஆனால் My story யை எழுதும்போது நான் அடைந்த மகிழ்ச்சியை வேறு எந்த நூலும் தந்ததில்லை ” என்கிறார் கமலாதாஸ். மறுபுறம் இந்த நூல் என் சொந்த மண்ணில் வரவேற்கப்படவில்லை. என் நெஞ்சிற்கு நெருக்கமான எத்தனையோ விஷயங்களை நான் இந்த நூலால் இழக்க நேர்ந்தது என்றும் பதிவு செய்கிறார்.

எதிர்ப்பு

“என் எழுத்தால் என் உறவினர்கள் சங்கடப்பட்டார்கள்.மகிமை நிறைந்த என் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் கற்பித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்கள். எனக்குப்பிரியமான அநேக விஷயங்களை நான் இழக்க இந்தப்புத்தகம் காரணமாக இருந்தது. நான் எழுதியது எதற்காகவுமோ, அல்லது நான் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதற்காகவோ நான் ஒருபோதும் வருந்தியது கிடையாது. ஆனால்,’என் கதை’ என்ற இந்த நூலுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதை சொல்லித்தானாக வேண்டும். எனது நூல் வெளியான பின், நான் திருவனந்தபுரத்திற்கு சென்றிருந்தபோது. நான் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றி ஜனங்கள் திரண்டு நின்று என்னை வேசை என்றும் ‘மாதவிக்குட்டி திரும்பிப்போ ‘ என்றும் உரத்துக் கூச்சலிட்டனர். ஆனால், அவற்றை எல்லாம் நான் கடந்து வந்துவிட்டேன்.”அக்கினி பர்வதத்தை ஈரத்துவாலையால் மூடமுடியாது”

என்று அவர் அதற்கு பதில் சொன்னார். அதே சமயம் கேரளாவின் அதிர்ஷ்டம் மிகுந்த பெண்மணி தான் என்கிறார் கமலாதாஸ். மலையாளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளார் நான். இன்னும் 50 வருஷங்களுக்கு என்னை மேவி எழுதக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே சொல்வேன் என்கிறார் இவர். மலையாளத்தில் எழுத்திற்காக அதிகம் பணம் வாங்கும் எழுத்தாளர் நான் என்று கமலா தாஸ் ஒரு முறை கூறியுள்ளார்.

பாராட்டு

கமலா தாஸின் எழுத்துகளைப்பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, உலக இலக்கியத்தில் அவரது கவிதைகளை முன்வைத்துப் பாராட்டும் விமர்சகர்கள் உள்ளனர். அமெரிக்கப்பெண் கவிஞரான சில்வியா பிளாத்துடன் கமலாதாஸை ஒப்பிட்டு ஆய்வுகள் நடந்துள்ளன, பெண்களின் நுண் உணர்வுகளை இவரைப்போல அநாயாசமாக சித்திரித்த இந்தியக்கவிஞர்கள் யாரும் இல்லை என்றே சில விமர்சகர்கள் கருதுகிறார்கள்.”

கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அகவாழ்க்கையை – அதன் அதன் சோகத்தனிமையுடனும், உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும், தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும், அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும், அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப்பார்க்கவே முடிவதில்லை” என்கிறார் மலையாளக்கவிஞர் சச்சிதானந்தன்.

கமலா தாஸ் தந்தை வழி சமூகஅமைப்பை முற்றுமுழுவதாக நிராகரிக்கிறார் என்கிறார் சச்சிதானந்தன். தன் அகங்காரத்திலும், அதிகாரத்திற்கான பேராசையிலும் , விஸ்தாரத்திலும் , கதாநாயக வழிபாட்டிலும், வன்முறையிலும், யுத்தத்திலும், மனிதரையும் இயற்கையையும் ஈவிரக்கமின்றி சுரண்டுவதிலும், அறிவு நுட்பங்களை துஷ்பிரயோகம் செய்வதிலும் மென்னுணர்வுக்கும் அனுபவத்திற்கும் மேலாக தர்க்கத்திற்கும் கோட்பாட்டிற்கும் மேன்மை வழங்குவதிலும் திளைத்துப்போன தந்தைவழி சமூகஅமைப்பை கமலாதாஸ் முற்றாக நிராகரித்ததாக சச்சிதானந்தன் கூறுகிறார்.

 தீவிரமான படைப்புகளை வாசக சௌகரியத்துடன் வெளிப்படுத்தியவர் என்பதே மாதவிக்குட்டியை அல்லது கமலாதாஸை இன்றும் வாசிப்பிற்குரிய எழுத்தாளராக நிலைநிறுத்துகிறது. வாசகன் என்ற நிலையில் மட்டுமல்ல, எழுத்தாளன் என்ற நிலையிலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருந்தன. மொழியைக் கச்சிதமாகவும் செறிவாகவும் கையாள்வது எப்படி என்பதை ச்சொல்லிக்கொடுத்த மறைமுக ஆசிரியர்கள் பலரில் அவரும் ஒருவர். மொழிசார்ந்து அவரிடமிருந்து பயின்ற பாடங்கள் இவை.இவற்றைவிடவும் பார்வை சார்ந்து அவருடைய எழுத்தின் மூலம் பெற்ற பாதிப்பையே முதன்மையானதாகக் கருதுகிறேன்” என்கிறார் இந்த நூலிற்கு முன்னுரை எழுதியிருக்கும் கவிஞர் சுகுமாரன்.

கண்டனம்

இந்தப்புகழுரைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் இவர் எழுதியதெல்லாம் குப்பை என்று சொல்பவர்களும் இல்லாமல் இல்லை. இவர் எழுத்து மிகச்சாதாரணமானது என்றும் காமத்தைத்தூண்டும் எழுத்து என்பவர்களும் உண்டு. இடுப்பிற்கு கீழ் பகுதியைப்பற்றிய படுக்கையறை முணுமுணுப்பு என்று எழுதிய மலையாள விமர்சகர்களும் உண்டு.

ஜெயமோகன்

கமலாதாஸின் மீதான நாகரிகமற்ற – மிகக்கேவலமான குறிப்புகளை எழுதியிருப்பவர் ஜெயமோகன். அதுவும் கமலாதாஸ் மறைவுக்குப்பின் அவர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு அது. ஜெயமோகன் எழுதுகிறார்:

"கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான்.அவர் அழகி அல்ல. கறுப்பான , குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது, இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர். கமலா செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப்பேசுவார். ஒன்றும் தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார்.விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்து கொள்வார்."

என்ன வக்கிரம் இருந்தால் இறந்துபோன ஒரு இலக்கியப்பெரும் ஆளுமைக்கு இத்தகைய ஒரு அவமதிப்பான அஞ்சலிக் குறிப்பை ஜெயமோகன் எழுதியிருப்பார். இத்தகைய ஒரு நபரிடம் கமலாதாஸின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கு முன்னுரை வாங்கிப்போட்டிருப்பது போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.

பழமைவாதிகள்

ஆசாரம் மிகுந்த நாயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் மனம் திறந்த- அந்தரங்க வாழ்வு குறித்த எழுத்துகள் பாரம்பரியத்தில் தோய்ந்துபோன பழமைவாதிகளுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. “மயக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, அந்த மயக்க நிலையில் எழுதியவைதான் இவை” என்று அவரது தந்தையே சாட்சியம் கூறநேர்ந்தது. இதெல்லாம் அபத்தம் என்கிறார் கமலாதாஸ்.

‘என் கதை’ வெளிவந்த காலம் முதல் மரணம் வரை அதீதமான பாராட்டு, கேவலமான தூஷணை” என்ற இரட்டைநிலை தொடர்ந்தது என்கிறார் சுகுமாரன். இந்திய இலக்கிய உலகில் ஒரு பெண்ணின் ஏக்கங்கள், பாலியல் சார்ந்த வேட்கைகளை கமலாதாஸைப்போல வெளிப்படையாக, துணிச்சலோடு எழுதியவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

மலையாளத்தில் எழுதினால் என்ன, ஆங்கிலத்தில் எழுதினால் என்ன இம்மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்வதில் இந்திய மனம் ஒன்றாகவே இருக்கிறது என்கிறார் கமலாதாஸ்.

தந்தைவழி சமூக அமைப்பின் மீது – அந்த அமைப்பிற்குள் பெண் மூச்சுவிட முடியாமல் திணறும் அவஸ்தையைப்பற்றி கமலாதாஸ் காரசாரமான வாதங்களை முன்வைத்திருக்கிறார். அவரது தந்தை, அவரது கணவர், அவரது நாலப்பட்டு குடும்பத்தின் ஆண் மக்கள் அனைவருமே கொண்டிருந்த ஆணாதிக்கக் கொடுமையை கமலாதாஸ் தன் அனுபவத்திலேயே கண்டிருக்கிறார்.

தந்தை

தனது தந்தையை மிக்க கறாரானவர் என்றும் ஒரு குட்டிச்சர்வாதிகாரி என்றும் கமலாதாஸ் குறிக்கிறார். ஒரு பிரிட்டிஷ் கார் கம்பெனியின் மானேஜராக பதவி வகித்த அவரது தந்தை கிழித்த கோட்டை யாரும் தாண்டிச்செல்லமுடியாது. மனைவி, குழந்தைகள் எல்லாம் அவருக்கு ஒரு பொருளே கிடையாது.தனது கம்பெனி வேலையைவிட அவர் வேறு எதனையும் கருத்தில் கொண்டதில்லை.

நிறைந்த ஆடைஅலங்காரங்களுடனும் நகைஅணிகளுடனும் வந்த தன் மனைவியை , தாலிக்கொடியைத்தவிர அவளின் சகல நகைகளையும் களைந்து, ஒரு விதவையைப்போல் கதர் ஆடையை அணிய வைத்து கொத்தடிமையாய் நடத்தியிருக்கிறார். மலையாளத்தின் மிகச்சிறந்த கவிஞராகத்திகழ்ந்த தன் மனைவியை பிள்ளைபெறும் இயந்திரமாகவே பாவித்திருக்கிறார்.

கணவன்

தனது பதினைந்தாவது வயதில் மாதவதாஸ் என்பவரைத் திருமணம் முடிக்கிறார். சிறுபிராயத்திலிருந்தே குடும்ப ரீதியில் நெருக்கமாகத் தெரியுமென்றாலும் தன்னைவிட 20 வயது மூத்த அவருடன் அந்தத்திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார் கமலாதாஸ். ஆனால், நாலப்பட்டு நாயர் குடும்பத்தில் ஒரு ஆண்மகனின் கட்டளையை ஒரு அபலைப்பெண் எவ்வாறு நிராகரிக்க முடியும்? திருமணம் முடிந்து, தன் கணவன் தன்னிடம் வெளிப்படுத்திய மூர்க்கமான காமவெறியினைக்கண்டு கமலாதாஸ் திகைத்துப்போகிறார். தன் உடலைத்தழுவி, கூந்தலைக்கோதி, கைகளைத்தடவி, அன்பு செலுத்தவேண்டும் என்று ஏங்கிய ஒரு இளம் பெண்ணின் ஆசைக்கனவு எடுத்தஎடுப்பிலேயே சிதைந்துபோனது.

மூர்க்கமான காமத்தைத்தவிர தனது முதல் கணவரிடமிருந்து எந்த காதல் உணர்வையும் கமலாதாஸ் அனுபவித்ததில்லை. கமலா தாஸ் தனது சுயசரிதையில் கூறுகிறார்: “ஏற்கனவே என் கணவர் வேறு பெண்களுடன் பாலியல் உறவை வைத்திருந்தார். அத்தகைய பராக்கிரமச் செயல்களைப்பற்றி என்னிடம் சொன்னார். இந்த லீலைகளில் கைதேர்ந்த இருபது வயதிற்கு மேற்பட்ட விலைமாதர்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினார். நான் சிறுத்துப்போவதாக உணர்ந்தேன். ”வீட்டுவேலைக்காரியுடன் உடலுறவு கொண்டதைப்பற்றி கமலா தாஸிடமே சொல்லியிருக்கிறார். இதற்கும் மேலே அவரது கணவர் மாதவதாஸ் ஒரு gay ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர் ஆவார்.

 தனது ஆண் காதலர்களுடன் தன் கண்முன்னேயே கொஞ்சிக்குலவி, கதவைத்தாளிட்டு படுக்கை அறைக்குக்கொண்டு செல்லும் கணவரோடு கமலா தாஸ் வாழ்ந்திருக்கிறார். “திருமணத்தின் புனிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்று கமலாதாஸிடம் கேட்டபோது, இல்லை, காதலின் புனிதத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று அவர் பதில் கூறினார்.”நான் மிகப்பலரைக்காதலித்தேன். அதே போல் என்னையும் மிகப்பலர் காதலித்தனர்” என்று கமலா தாஸ் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்.

"சாரியை அணிந்து கொள்.
பெண்ணாக இரு.
மனைவியாக இருந்து கொள்.
தையல் வேலையைக்கற்றுக்கொள்.
சமைத்துப்போடு.
எப்போதும் வேலைகாரனுடன் சண்டை பிடித்துக்கொண்டிரு.
Fit in.
இதற்குள் உன்னைப்பொருத்திக்கொள்.”

என்று ஒரு கவிதையில் பேசுகிறார் கமலா தாஸ். இந்த நொந்துபோன வாழ்விற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார் கமலா தாஸ்.ஒரு கவிஞரின் கனவுகளுடன் காதல் உலகில் சிறகடித்துப் பறக்க முனைகிறார் கமலா தாஸ். தன்னை ராதையாகவும் கிருஷ்ணனைக் காதலனாகவும் சிறுவயதிலிருந்தே கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணனை தனது ஆத்மார்த்த காதலனாக உருவகித்து அவர் நிறையவே கவிதைகள் எழுதியிருக்கிறார்.

காதல் உறவு

கேரளத்தில் தன்னுடன் படித்த லெஸ்பியன் மாணவி தன்னை முத்தமிட்டதிலிருந்து, வேலு, கோவிந்த குருப் ஆகியோரிலிருந்து தனக்கு ஓவியம் கற்றுத் தந்தவரிலிருந்து, வீடு கட்டித்தந்த கட்டிடக்கலைஞர், பேனா நட்பில் உருவான இத்தாலியக்காரரான கார்லோ, பற்சிகிச்சை அளித்த பல்மருத்துவர் என்று எண்ணற்ற ஆண்களுடன் தான் கொண்டிருந்த காதல் உறவுகளை கமலா தாஸ் மிக வெளிப்படையாகவே தன் சுயசரிதையில் விவரிக்கிறார். இந்தக்காதல் உறவுகள் சில ஒரு நாளிலேயே முடிந்துபோயிருக்கின்றன. சில உறவுகள் ஆண்டுக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன.

தன் எழுத்தின் மீது பொதுசன அபிப்பிராயம் எத்தகையதாக இருக்கிறது என்பதுபற்றி அவர் ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது. அவரது எழுத்துகளை பார்த்து நாயர் குடும்பங்கள் அஞ்சின.கமலாதாஸ் கட்டுப்பாடுகளும் ஆணாதிக்கமும் பொய்யான போலிமதிப்பீடுகளும் கொண்ட மலையாள சமூகத்தைப் புரட்டிப்போட்டார். ஆணாதிக்கமுறைக்கு எதிரான கலகக்காரியாகத் திகழ்ந்தார்.

கிழவி

கமலா தாஸ் தன் சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார்:

“சமுதாயத்தை அருவருக்கத்தக்க தோற்றம் கொண்ட கிழவியாக நான் காண்கிறேன். பகைமை நிறைந்த மனம் படைத்தவர்களையும் பொய் சொல்பவர்களையும் ஏமாற்றுபவர்களையும் தன்னலவாதிகளையும் ரகசியக் கொலையாளிகளையும் இந்தக்கிழவி ஒரு கம்பளியால் பாசத்தோடு போர்த்துகிறாள். இந்தக்கம்பளியின் ரகசியத்தை வெறுப்பவர்கள் வெளியில் கிடந்து குளிரால் நடுங்குகிறார்கள். பொய்களைச் சொல்லியும் நடித்தும் நம்பிக்கைத்துரோகமிழைத்தும் பலரையும் வெறுக்க வைத்தும் இந்த ஒழுக்கப் போர்வைக்கடியில் கதகதப்பும் தன்னலமும் கொண்ட ஓரிடத்தை நான் பெற்றிருக்கலாம். ஆனால், நானோர் எழுத்தாளராகி இருக்கமாட்டேன். எனது குரல்வளையை அடைத்துக் கொண்டிருக்கும் உண்மைகள் ஒருபோதும் வெளிச்சம் பெற்றிருக்காது”

இது கமலா தாஸின் சுயநிலை விளக்கமாகும்.

தான் எழுத வராமல் போயிருந்தால் தனது வாழ்க்கை என்ன மாதிரி இருந்திருக்கும் என்பது பற்றி கமலாதாஸ் இப்படிக்கூறுகிறார்:

"நான் ஒரு மத்தியதர குடும்பத் தலைவியாக இருந்திருப்பேன். கயிற்றுப்பையை தூக்கிக்கொண்டு, தேய்ந்துபோன செருப்புடன் மரக்கறிக்கடைக்கு போய் வந்து கொண்டிருந்திருப்பேன்.பிள்ளைகளை போட்டு அடித்து வளர்த்திருப்பேன். என்னுடைய கணவரின் மலிவான கச்சையை கழுவித்தோய்த்து, ஒரு தேசியக்கொடியைப்போல பால்கனியில் காயப்போட்டிருப்பேன்.”

 

வேலைக்காரி

நாலப்பாட்டு நாயர் குடும்பத்தில் வேலைக்காரியாக இருந்த ஒரு பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை கமலாதாஸ் ஒரு கவிதையில் விவரிக்கிறார்:

கர்ப்பிணியான நானி என்ற வேலைக்காரி
ஒரு நாள் மலசலகூடத்தில் தூக்கில் தொங்கினாள்
மூன்று மணி நேரமாக பொலிஸ் வரும்வரை
அவள் உத்தரத்தில் தொங்கினாள்.
ஒன்று அல்லது இரண்டு வருஷம் கழிந்து என் பாட்டியிடம் அந்த வேலைக்காரியைப்பற்றிக்கேட்டேன்.
பாட்டி, நானியை உனக்கு நினைவிருக்கிறதா?
என்னைக் கிணற்றருகே வைத்துக் குளிப்பாட்டிய அந்தக்கறுத்த –
உருண்டு திரண்ட வேலைக்காரியை நினைவிருக்கிறதா?
தனது மூக்குக்கண்ணாடியை சரி செய்து கொண்ட பாட்டி
என்னை உற்றுப்பார்த்துவிட்டுக் கேட்டாள்:
நானி? யாரது?

நாயர் குடும்பங்களில் கர்ப்பிணி ஆக்கப்பட்ட வேலைக்காரிகளின் மரணத்திற்கு ஒரு மரியாதையும் இல்லை.இந்த ஆணாதிக்கக்கொடுமைகளுக்கு எதிரான கிளர்ச்சியின் ஒரு அம்சமாகவே அவரது பாலியல் சார்ந்த எழுத்துகள் அமைகின்றன.

இந்திய சமூக,கலாசார அமைப்பின் அடுக்குகளை அவர் கலைத்துப்போட்டார். அவரது எழுத்துகளில் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல்கள் எதிரொலித்தன. ஒழுக்கத்தின் பெயரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த அம்சங்களை அவர் வெளியில் கொணர்ந்தார்.

பெண்களின் வலிகளை, அவர்களது நிலைப்பாடுகளை, அவர்களின் புரிதல்களை,அவர்களது உலகப்பார்வையை கமலாதாஸ் வெளிப்படுத்தினார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எழுப்பப்பட்டிருந்த வலிய இரும்பு மதில்களை அவர் உடைத்து நொறுக்கப்பார்த்தார். பாலியல்தான் அவரது சிந்தனையில் கவிந்து கிடந்தது என்று கூறிவிடமுடியாது.

அவர் ஒரு இலட்சிய ஆணுக்காக ஏங்கினார். அவர் ஒரு மனோரதியக்காதலுக்காக ஏங்கினார். தன்னில் அக்கறை காட்டும் ஆணுக்காக, தன் கரங்களில் தன்னை அரவணைத்துப்பாதுகாக்கக்கூடிய ஒரு ஆணுக்காக அவர் ஏங்கினார்.

ஏக்கமும் துயரமும்

தனக்கு நிராகரிக்கப்பட்ட அன்பிற்காக காலமெல்லாம் ஏங்கியிருக்கிறார். அவர் தன் வாழ்வில் அன்பைத்தவிர வேறு எதனையும் இப்படி யாசித்ததில்லை .தனது எண்ணக்கனவுகளை, ஆசை எழுச்சிகளை, தன் பலவீனங்களை, தன் கடூரமான முரண்பாடுகளை மிக நேர்மையாக இந்த நூலில் முன்வைக்கிறார். தன் 40 ஆண்டு கால எல்லையில் ஏற்பட்ட மனப்போராட்டங்களை தயக்கமின்றி எழுத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மைக்கும் புனைவிற்கும் இடையில், புராணங்களுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில், கனவுகளுக்கும் நாளாந்த நடப்புகளுக்கும் இடையில், அவர் மாறி மாறிப்பயணிக்கிறார். வாழ்வின் அர்த்தத்திற்கும் அர்த்தமின்மைக்கும் இடையில் அவர் குழம்பித்தவிக்கிறார். தற்கொலையையும் நாடமுனைகிறார், நீரில் அமிழ்ந்து மரணிக்கும் ஆவல் அவரைப்பின் தொடர்கிறது.

அவருக்கு மிக நெருக்கமாக இருந்த பாட்டியின் மறைவு அவரைப்பெரிதும் துயரில் ஆழ்த்துகிறது. அவரைப்பீடித்த தொடர் நோய்களும் , மகனின் மோசமான உடல்நிலையும் போதிய வருமானம் இல்லாத நிலைமைகளும் அவர் மனதை வாட்டியிருக்கின்றன. அமைதியும் நிம்மதியும் குலைந்த சூழலில் , கொந்தளிக்கும் கடலின் நடுவில் சுழல்வதுபோல் சிக்கி, வாராத துணை நாடி அலை மோதுகிறார். சூறாவளியில் தெப்பமாக மிதக்கிறார்.

இறை நம்பிக்கையில் அதீத விசுவாசம் கொண்டிருந்திருக்கிறார். அவ்வப்போதுள்ள மனநிலைமைகளில் கருத்துகளை உருவாக்குகிறார். அவை பின்னரோ முன்னரோ முரண்பட்டுக்கொள்வதைப்பற்றி அவருக்கு அக்கறை இல்லை. ஏறுக்குமாறான கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார். அதிரடியான சர்ச்சைகளை அவர் விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்,

நீட்ஷே

கமலாதாஸ் இந்த நூலில் எழுதுகிறார்:

"மனித மனத்தை முழுமையாகவும் நுட்பமாகவும் கற்றுக்கொள்ள நான் எப்போதும் முயன்றதுண்டு. விதியை எதிர்த்தும் பின்னர் விதியின்மையை எதிர்த்தும் முடியும் ஓர் அற்ப வாழ்க்கையின் கதை இது. தத்துவவாதியான நீட்ஷே ஒருமுறை கூறினார்:ஓர் எழுத்தாளர் தனது ரத்தத்தால் எழுதிய வார்த்தைகளுக்கு மட்டுமே மதிப்பளிப்பேன். ரத்தம் கலப்படம் அற்றது. அதில் அவனுடைய ஆத்மாவின் சாரம் கரைந்திருக்கிறது. அது ஆத்மார்த்தத்தின் குறியீடாகும்.

எனது மனத்தை உற்று நோக்கியபடி யதார்த்தவாதிகளும் நீதிமான்களும் நலம்விரும்பிகளும் முணுமுணுப்பதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த நேர்மையுடன் இக்கதையை எழுதுவதற்கான வலிமையையும் தைரியத்தையும் தருமாறு இன்று ஸ்ரீ கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்.மென் உணர்வு மிக்க கவிஞர் என்ற வகையில் உள்மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நாடிபிடித்து எழுதும் ஆற்றல் அவருக்கு வாய்த்திருக்கிறது.”

நான் மூன்று மொழிகளைப்பேசுகிறேன். இரண்டு மொழிகளில் எழுதுகிறேன். ஒரு மொழியில் கனவு காண்கிறேன் என்கிறார் கமலாதாஸ்.

இலங்கை

இறுதியாக, கமலாதாஸின் இலங்கை அனுபவத்தோடு இந்த உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். Asia Net News தொலைக்காட்சிக்காக கமலாதாஸ் மலையாளத்தில் வழங்கிய பேட்டியை youtube இல் நான் பார்க்கக் கிடைத்தது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, கமலாதாஸ் தனது கணவருடன் கொழும்பில் இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் அவர் இலங்கையில் இருந்திருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த மோதலைப்பற்றியும், தனக்கு அயலிலேயே ஒரு தமிழர் கொல்லப்பட்ட சம்பவத்தை தான் கண்கூடாகப்பார்த்ததாகவும் அந்த மலையாளப்பேட்டியில் கமலாதாஸ் கூறுகிறார். தனது நிறத்தாலும் தோற்றத்தாலும் கமலாதாஸ் தமிழராக சந்தேகப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். தமிழர்கள்மீது சிங்கள இனவாதிகள் நடத்திய கொடூர இனவெறித்தாக்குதலை கமலாதாஸ் தனது ஆங்கிலக்கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

Fear
The Sea at Galle Face Green
Smoke in Colombo
After July
The New Sinhala Films

ஆகிய கவிதைகள் ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறையைப் பேசுகின்றன.

உன்னத பௌத்த சாரத்திலிருந்துதான் இந்த இனப்பிரச்சினைக்கு முடிவு காணமுடியும் என்று கமலாதாஸ் அந்த மலையாளப் பேட்டியில் கூறுகிறார். ஆனால், அத்தகைய தீர்வு வெறுங்கனவாய் முடிந்துபோவதை அவர் உணர்ந்திருப்பார்.

2009 இல் புனேயில் தனது 75 ஆவது வயதில் அவர் மரணமுற்றபோது அவர் எப்போதும் பேசிவந்த ஆத்மா வெற்று உபாதைகளிலிருந்து விடுபட்டு, ஓய்ந்து அமைதி பெற்றிருக்கும் என நம்புகிறேன். கமலாதாஸின் “என் கதை” என்ற சுயசரிதை இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

(கடந்த 09 ஜூலை 16 இல் , தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நடாத்திய , நான்கு பெண்களின் எழுத்துக்களை முன்வைத்து…பெண்களால் நடாத்தப்பட்ட உரையாடல் நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம்.)

(நன்றி: எதுவரை)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp