கடலோடிகளின் வாழ்வியல்!

கடலோடிகளின் வாழ்வியல்!

‘மீனவர்கள் பேராசைக்காரர்கள்’

“அவர்களை நாகரிகப்படுத்த முடியாது”

“தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைய விரும்புவதில்லை”

‘நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக் கட்டைப் போடுகிறார்கள்”

இவை போன்று கடற்கரை சமூகத்துக்கு எதிராக ஏராளமான பரப்புரைகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் யார்? ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தான்.

அதிகார வர்க்கமும், அதிகார வர்க்கத்தின் அடிவருடிகளாக இருப்பவர்களும் (பெருமுதலாளிகள்) முன்னேற்றம், அபிவிருத்தி என்கிற பெயரில் இயற்கை வளங்களையும் அவற்றை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் மக்களை தங்களின் ஆதாயத்துக்காக சுரண்டி வருவதையும், அதை எதிர்த்து சமூக ஆர்வலர் குழுக்கள் போராட்டம் நடத்தி வருவதையும் நாம் தினம் தினம் பத்திரிகைச் செய்தியாகப் பார்த்து வருகிறோம்.

2004 ஆம் ஆண்டு சுனாமி தமிழகத்தின் கடற்கரைகளை தாக்கி பலரின் உயிரை காவு வாங்கியதுடன், ஆயிரக்கணக்கான கடற்கரையோர மக்களின் வாழ்க்கையையும் நிலை குலைய செய்து விட்டு கரையைக் கடந்து சென்றுவிட்டது.

கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது. மீனவர் வாழ்க்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை.

இது நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு 1076 கிலோ மீட்டர் நெடுக 600 கடலோர கிராமங்களில் வாழும் ஒன்பது லட்சம் மீனவர்களும் அவர்களைச் சார்ந்து கரையில் தொழில் செய்யும் சில லட்சம் உள்நாட்டு மீனவர்கள், வணிகர்கள் அத்துனை பேருக்கும் ஒரே வாழ்வாதாரம் கடல் மட்டுந்தான். இவர்கள் தங்களது பிழைப்பை நடத்த கடல் வேண்டும். கடல் இவர்களுக்கு உரியதாய் நீடிக்கிறதா? கடற்கரையில் வாழ இவர் அனுமதிக்கப்படுகிறார்களா? சுனாமி மறு கட்டுமானதிற்கெனக் கொட்டப்பட்ட பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன?

இதைக் கண்டறியும் பொருட்டு இந்நூலாசியர் முனைவர் வறீதையா தனித்தும், குழுவாகவும் கடந்த பத்தாண்டுகளாக களப் பணியாற்றி பதிவு செய்த பத்துக் கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது `பழவேற்காடு முதல் நீரோடி’ வரை என்கிற இந்தப் புத்தகம். இது 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தீராநதி, ஆனந்த விகடன், உயிர் எழுத்து, பூவுலகு, புதிய உலகு, அம்ருதா ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

பழவேற்காடு? இது எங்கேயிருக்கிறது? சென்னைப் பெருநகருக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில், இந்தியாவில் சில்கா ஏரிக்கு அடுத்த பெரிய ஏரியான பழவேற்காடு ஏரி (Pulicat Lake) அமைந்துள்ளது. ’ஒரு காலத்தில் செல்வச் செழுமையின் அடையாளமாக, துபாய் போல செழித்திருந்த பழவேற்காடு எண்ணூர்-பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையத்துக்காக கடல் நீரை உறிஞ்சியெடுத்த காலத்தில் இறால் குஞ்சுகளின் வரவு ஏரியில் கணிசமாய் குறைந்து போனது, பல தொழிற்சாலைகளிலிருந்து நச்சுக் கழிவுகளை நேரடியாக ஏரியில் கலக்கவிட்டனர் இதோடு மீனவர்களும் கட்டுக் கோப்பின்றி இறால் மீன்களை குறிவைத்துப் பிடிக்கத் தொடங்கினர். கடலில் பயன்படுத்து `அரைவலை’களை ஏரியில் பயன்படுத்தலாயினர்’. இதனால் இன்றைக்கு பழவேற்காடு களையிழந்து கிடக்கிறது” என ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு கடற்கரைக்குப் (இராமேசுவரம், பக்கிங்ஹாம், தொண்டி, அரிச்சல்முனை, ஆத்திக்காடு, இடிந்தகரை, இரையுமன் துறை) பின்னாலும் ஒரு சோகக் காவியமிருக்கிறது. ஆக்கிரமிப்பாளார்கள், காலனியர்களைத் தொடர்ந்து மறு காலனியத்தின் நீண்ட கரங்கள் தமிழக நிலவளங்களையும், கடற்கரை, கடல் வளங்களையும் திட்டமிட்டு சூறையாடி வருகின்றன.

தமிழகக் கடற்கரை நெடுக வளர்ச்சி, முன்னேற்றம் என்கிற பெயரில் சென்னை, திருவள்ளூர், நாகை, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பெருந்தொழிற்சாலைகளின் ஊடுருவலால் கடற்கரைகள் அழிகின்றன. கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள், பேசின் பிரிட்ஜ், தூத்துக்குடி அனல்மின் நிலையம், இராமேசுவரம் பகுதியில் சேதுக்கால்வாய் திட்டம், திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில் கனிம மணல் கொள்ளை. இப்படியாக தகித்துக் கொண்டிருக்கின்றன தமிழகக் கடற்கரைகள்.

நீரோடி ஒரு சின்ன கிராமம். தமிழகத்தின் கடல் எல்லை முடியும் கிராமம். தூத்தூர் தீவின் ஒரு பகுதி. இங்கும் பிரச்சனைக்குக் குறைவில்லை.

நகரத்தில் ஒரு தெருநாய்க்கு உள்ள பாதுகாப்பு கூட கடலில் மீனவர்களுக்கு இல்லை. கடலை `அம்மா’வாக நினைக்கும் கடலோடிகள் கடலுக்குச் சென்றால் எப்போது திரும்புவார்கள் என அறுதியிட்டு சொல்வதிற்கில்லை.

கைப்பாணிக்குப்பம் போன்ற இடங்களில் வீடுகளிலோ இல்லை பொது இடத்திலோ கழிப்பறைகள் இல்லை. காரணம், இங்குள்ள பஞ்சாயத்தார் இடம் ஒதுக்கிக் கொடுக்காததுதான். இது குறித்து ஆசிரியர், `வீட்டுக்குள் கழிப்பறை’ குறித்து கிராமங்களில் பண்பாட்டு ரீதியான மனத்தடை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மீனவ சமூகம் விளிம்பு நிலையிலோ அல்லது அதற்கும் கீழேயோ இருப்பதற்கு அவர்களும் ஒரு காரணம் என்கிறார் நூலாசிரியர். “மீனவ சமூகம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும், ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகர வேண்டும் என்று தோன்றுவதாக’க் குறிப்பிடுகிறார்.

ஆசிரியர் இச்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், நெய்தல் நில மக்களுடனே வாழ்ந்து வருவதாலும் பொருளாதார முன்னேற்றம் என்கிற பெயரில் அவர்கள் ஆட்சியாளர்களின் கையில் பகடைக்காயாகவும், அதிகாரவர்க்கத்தால் பந்தாடப்படுபவர்களாகவும், இருக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக பல விதமான சான்றுகள், பேட்டிகள், களப்பணியின் போது சேகரித்தத் தகவல்கள் மூலம் தெளிவாக அவர்களது பிரச்சனைகளை எடுத்து வைத்து இதை ஒரு ஆவணமாக்கியிருக்கிறார்.

நெய்தலை மையமாக வைத்து புனைவுகள் சில வந்திருக்கின்றன. ஆனால் அபுனைவு வரிசையில் இந்நூலும், ஆசிரியரின் இன்ன பிற நூல்களும் முக்கியமானவை ஆகும். கடலையும், கடல்சார்ந்த வாழ்வியலையும் அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தில் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்”

என்று வள்ளுவர் கூறியது போல ஆசிரியரும் `கடலை கடலோடிகளிடம்’ ஒப்படைச்சிடுங்க. கடல்ல என்ன செய்யணும்னு கடலோடிகளைக் கேட்டுச் செய்யச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்!’ உண்மைதானே?

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp