ஜனனி

ஜனனி

லாசராவின் முதல் சிறுகதைத் தொகுதி, ஜனனி. 1952ல் வெளிவந்தது. லாசரா பிறந்ததும் மறைந்ததும் இந்நாள். எனவே, அவரது முதல் தொகுப்பை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள்- இலக்கியப்பீடம் அமைப்பினர். விலை ரூ.3/- மற்றும் பதிப்பகத்தின் பழைய முகவரி உட்பட அச்சு அசலாக அதே எழுத்துகளைப் (வேறு வடிவெழுத்துகளில்- fonts) பதிப்பித்த இலக்கியப்பீடம் அமைப்பினருக்குப் புதுமை தேவைப்பட்டிருக்கிறது. மூல நூலின் முன்னட்டையை இந்தப் புத்தகத்தின் பின்னட்டையாக வைத்திருக்கின்றனர், முன் அட்டை நவீன மரபில் வரையப்பட்டுள்ளது.

-o00o-

ஜனனி சிறுகதையைப் படித்திருப்பீர்கள். பராசக்திக்கு மானுட ஜன்மமெடுக்கும் ஆசை வருகிறது. திருவிளையாடல் அல்ல, அவதாரம் அல்ல. மானுட ஜென்மமாய், சராசரி மானுட வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் ஆசை.

அப்போதே ஈசுவரனாகப்பட்டவர் சொல்கிறார், “நீ ஜன்மத்தில் படும் சபலமே அசத்யத்தின் சாயைதான் என்று.”

சொன்ன மாதிரியே ஆகிறது. ஒரு அற்புதமான பத்தியைத் தவிர எல்லாமே அர்த்தமற்றதாகி விடுகிறது.

பராசக்தி ஒரு சிறு குழந்தையாய், தீபத்தின் சுடரில் ஈசனைக் காண்கிறாள்- இது அதன் வர்ணனை:

பிறந்தபின் சக்தி முதல் முதலாய் இப்பொழுதுதான், ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை விளக்குச் சுடரில் பார்க்கிறாள். தானும் அதுவாய் இதுவரை இழைந்திருந்துவிட்டு, இப்பொழுது அதனின்று வெளிப்பட்ட தனிப பொறியாய், அதனின்று விலகி, அதையே தனியாயும் பார்க்கையில், அதன் தன்மை ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது”.

இதுதான் அந்த அற்புதமான பத்தி- மானுட ஜென்மத்தின் வாதைகளை ஒரு ஆணின காமக் கண்களைக் கண்டபின் தனிமையில் உணர்கிறாள்:

“கண்ணெதிரில், இருள்திரையில், அவன் விழிகள் மாத்திரம் பேருருக்கொண்டு நீந்தின. அவற்றில் உலகத்தின் ஆசாபாசத்தின் எல்லை கடந்த சோகத்தையும், அதே சமயத்தில் உயிரின் ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் அடிப்படையான மிருக குரூரத்தையும் கண்டாள். அந்த ஏக்கத்தை ஆற்ற, ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையைக் கல்லாயடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடூரம், சோகத்தின் பின்னிருந்து பாம்பைப் போல் தலை நீட்டுகையில், அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே சுருங்கிற்று”

பராசக்தி தன்னை மணந்தவனை முதலிரவன்று கொன்று விடுகிறாள்- நிலை குலைந்து, தன் செய்கை குறித்து விதிர்விதிர்த்து நிற்கிறாள். அப்போது ஈசன் சொல்கிறான்,

“நீ விளக்கைத் தூண்டியபோது யாரைத் தூண்டுவதாக நினைத்தாய்? உன்னையேதான் நீ தூண்ட முயன்றாய்….இப்பொழுது நேர்ந்த பூகம்பத்தினால் நீயே புரண்டதால், உன்னுள் புதைந்து போன நான் இப்போது வெளியே வந்தேன்…என்னைப் புதைத்துவிட்டு என்னைக் கூப்பிட்டால் நான் வர முடியுமா? ஆனால் நீயே உன்னுள் இப்போது புரண்டதால், நான் வெளி வந்தேன்…. நீ நானாக இருப்பினும், நான் நானாய்த்தான் இருக்க முடியும். நான் நான்தான். நான் நீயாக முடியாது. நீதான் நானாக முடியும். எனக்கு ‘நானில்’ இருந்து மாறும் இயல்பு இல்லை.. ஜனனி, நீ இதை அறி. இப்பொழுது நீ- என்னிலிருந்து பிரிந்த நீ- மறுபடியும் நானாகிக் கொண்டிருக்கிறாய்”

அற்புதமான எழுத்து.

-o00o-

லாசரா தன் கதைகளுக்கு ஓவியம் வரைபவருடன் பேசி எதை எப்படி வரைய வேண்டும் என்று முடிவு செய்வாராம். அப்படி வரையப்பட்டது 1952ல் வரையப்பட்ட புத்தக முன்னட்டை. இந்தப் பதிப்பில் பின் அட்டையை அலங்கரிக்கிறது.

புகைப்படத்தை கிளிக்கினால் பார்க்கலாம்- பாம்பு போல் வரிசை கட்டி வளைந்து நிற்கின்றன தீபச்சுடர்கள். அந்தப் பாம்பின் உடலை ஒளி சூழ்ந்திருக்கிறது. நெருங்கிப் பார்த்தால்தான் தெரியும், தீபங்களுக்கு இடையில் உள்ள இருள்.

“தாபத்தின் கொடூரம், சோகத்தின் பின்னிருந்து பாம்பைப் போல் தலை நீட்டுகையில்” என்று எழுதுகிறார் லாசரா. பராசக்திக்கு அன்று, “அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே சுருங்கிற்று”

இப்போது அட்டையில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தைப் பாருங்கள்- இந்தப் பாம்பின் முகங்களில் தீபங்கள்.

கதை தரும் உணர்வை எப்படி விளக்க முடியாதோ, அதே போல், இந்த ஓவியம் கதையின் சாரத்தை வரைகிறது, அதைப் பேச முடியாது, இல்லையா?

அது நீயே நானாகும் நிலை, அந்த தாபத்தின் மிருக குரூரமும் ஏக்கமும், கொடூரமும் சோகமும், இருளும் ஒளியும். அந்த ஏக்கத்தை ஆற்ற நினைக்கும் பரிவு தீபமாய் ஒளிரும் நிலை.

“நீ நித்திய கன்னியாய் இருப்பது எதனுடைய அர்த்தம்?” என்று கேட்கிறார் ஈசுவரன். சத்தியம். ஜன்மத்தில் படும் சபலம் அசத்தியத்தின் சாயை. ஆனாலும் பிறக்காமல், தாபத் தீயில், புரண்டு எழாமல் இருக்க முடிகிறதா?

நீயும் நானும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் நான், நீ என்ற உணர்வறியாமல், இந்த ஒருமைக்குப் பொருளில்லை. அதை உணர்ந்தடங்கிய பின்னரே, இந்த ஒருமை உயிர்ப்புள்ள ஒன்றாகிறது.

மூல புத்தகத்தின் முன் அட்டையைப் பாருங்கள்: விளக்குகளால் ஆன பாம்பின் முக தீபங்கள், தாபமும் அதன் முக ஜோதியும், இருளும் ஒளியும். இதுதான் ஜனனி.

-o00o-

பராசக்தி காலத்தைக் கடந்து ஓங்கி உயர்ந்து நிற்பவளாக இருக்கலாம். ஆனால் நம் அற்ப புத்தி, காலத்தின் சக்கரங்களில் தேய்ந்து சின்னா பின்னமாகிறது.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் நவீனப்படுத்தப்பட்ட முன் அட்டையைப் பாருங்கள். ஜுராசிக் பார்க் போன்ற ஒரு செட்டிங்கில் யாரோ ஒரு வெள்ளைக்காரப் பெண் நிற்கிறாள்- அவள் போட்டிருக்கும் ஆடை கூட கவுன் மாதிரி இருக்கிறது, திரும்பி நிற்கும் அவள் முதுக்குக்குப் பின், நமக்கு காணக்கிடைப்பது ஒரு நீர்ப்பாம்பு: ஆனால் அதனால் அது விஷமற்றது என்று பொருளல்ல. மூல நூலின் அட்டையை குங்குமச் சிவப்பு நிறைத்ததென்றால், இந்த நூலின் அட்டையை விஷ நீலம் நிறைக்கிறது.

ஜனனி பிறந்தது மட்டுமல்ல, லாசராவால் அது எழுதப்பட்டதும் வியர்த்தம் என்று தோன்றுகிறது.

ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை:

இந்த தொகுப்பின் முன்னுரையில் லாசரா எழுதுகிறார்-

“கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம் கண் முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்து கொண்டே பார்க்க முடியும்”.

இதுதான் உண்மையின் தன்மை என்கிறார் லாசரா. என்ன ஒரு மகோன்னதமான காட்சி!

தேர் திரும்ப முடியாமல் திரும்பிக் கொண்டிருக்கிறது, தவறான திசையில்: தேர் தன் நிலைக்குத் திரும்பும் ஊசலாட்டத்தில் நமக்குக் காணக் கிடைத்த லீலை இது என்று மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்வோம்.

OoOoO

தி.ஜானகிராமன், லாசரா இருவரிடமும் ஒரே தலைப்பைக் கொடுத்து இதற்குக் கதை எழுதுங்கள் என்று அமுதசுரபியில் சொன்னார்களாம். “கொட்டு மேளம்”. படித்திருப்பீர்கள்.

லாசராவின் இந்தக் கதை செண்டிமெண்டல் கதைதான், இதில் சந்துருவுக்கு ஒரு கனவு வருகிறது. அதை அவன் விவரிக்கிறான்:

“இது மாதிரிதான் வானம் இருந்தது. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலை மலையாகக் குவித்திருந்தது. என் கண்ணுக்கு எட்டிய வரையில் இந்த மேகங்களில் கற்கண்டுக் கட்டிகள் போல் நக்ஷத்திரங்கள் வாரியிறைத்திருந்தன.

“அப்பொழுது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண் குரல். ஹிந்துஸ்தானி சங்கீதம். ‘கஜல்’ என்பார்களே, அது. இடையிடையே நீண்ட தொகையராக்கள். குரலோடு இழைந்து இழைந்து பத்து சாரங்கிகள் அழுகின்றன. திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன் ஆரம்ப எடுப்புடன் ஆரம்ப அடியில் பாட்டு முடியும்போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக் கொண்டு ‘பகீர் பகீர்’ என்று எழும்புகிறது. அந்த மாதிரி குரலை நான் கேட்டதேயில்லை. என் எலும்பெல்லாம் உருகிவிடும் போலிருக்கிறது. நான் அதைத் தேடிக் கொண்டே போகிறேன்.

“நான் போகிற வழியெல்லாம் யார் யாரோ மேடுகளிலும், பள்ளங்களிலும், மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும் கூட்டங்கூட்டமாயும், கொத்து கொத்தாயும், தனித் தனியாயும் அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். நான் போகப் போக, பாட்டின் நெருக்கமும் இனிமையும் இந்த உடல் தாங்கக் கூடியதாயில்லை.

“பாடும் ஆளும் தென்படுவதாயில்லை. என் எதிரே கட்டிடமுமில்லை. ஒரே பரந்த வெளிதான். ஆனால் குரலின் கணகணப்பும் நெருக்கமும் இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி, என் மேல் மோதுகையில் எனக்கு ஏற்பட்ட தவிப்பு இன்னமும் தணிந்தபாடில்லை. திகைப்பூண்டாமே, அதை மிதித்த மாதிரி கடைசியில் நான் என்னையே சுற்றி வருகிறேன். என் மார்பே வெடித்து விடும் போலிருக்கையில், நல்ல வேளையாய் விழித்துக் கொண்டேன். ஜானா, இதற்கு அர்த்தம் உண்டா?”

இந்தக் கேள்வியை சந்துரு தன் சகோதரி ஜானாவிடம் கேட்கிறான். ஜானா இளம் விதவை, தன் சகோதரன் மற்றும் அண்ணா மன்னியுடன் இருக்கிறாள். புதிதாய் மணமாகி வந்த மன்னியின் போக்கு, இந்தக் கனவை சந்துரு கண்டதைத் தொடர்ந்த சில நாட்களில் மாறுபடத் துவங்குகிறது. சண்டித்தனம் செய்கிறாள். நின்ற நிலையிலேயே மணிக்கணக்காக நின்று கொண்டிருக்கிறாள். அரைமணிக்கொரு முறை முகம் கழுவிக் கொள்கிறாள். தன் பெட்டியின் சாமான்களைக் கலைத்து அடுக்குகிறாள். முடிவில், சந்துருவுக்கும் ஜானாவுக்கும் தவறான உறவு இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, வயிற்றில் பிள்ளையோடு அவர்களைப் பிரிகிறாள். இவர்களின் காத்திருப்பு துவங்குகிறது.

ஜானா இந்த அபவாதத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறாள். அவளுக்கு இன்ன வியாதி என்று தெரியாமலேயே உடல் நலம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆகி விடுகிறது. அங்கு தேறுவதாயில்லை. ஜானாவால் ‘நாயகத் தன்மை’ கொண்டவனாக உணரப்படும் சந்துரு, அப்போது அவளிடம் சொல்கிறான், “சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம், எதற்காக வாழ்கிறோம் வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகிவிடும் பொழுது அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை,” என்று சொல்லி, அவள் இந்த சூழலில் சாவது உயிருக்கு இழைக்கும் துரோகம் என்கிறான்.

ஜானா உயிர் பிழைக்கிறாள். சந்துருவுக்கு ஒரு சிறு காய்ச்சல் வருகிறது. முடி முற்றிலும் நரைத்து நேற்றில் கோடுகள் விழுகின்றன. பிரிந்தவர்கள் வருவதற்காக எல்லாரும் காத்திருக்கிறார்கள். அதே போல் ஒரு நாள், “என்னை மன்னிச்சுடுங்கோ…” என்று அழுதுக் கொண்டு பிரிந்து போன மன்னி தன் குழந்தையுடன் வருகிறாள். அவளுடைய பிறந்த வீட்டு உறவுகளைத் துண்டித்துக் கொண்டு தன் வீட்டினுள் நுழைய அவளைச் சந்துரு அனுமதித்தாலும், அவளைத் தன் மனைவியாக ஏற்பதில்லை, மகனைத் தன் மகனாக நினைக்க அவனுக்கு முடிவதில்லை- “ஒரு வேளை நானும் அவனும் தோழர்களாவோம்; ஆனால் அப்பாவும் பிள்ளையும் ஆவோமா? இல்லை. என்னுள் அம்மாதிரி உணர்ச்சிக்கு ஆதாரமான ஏதோ எரிந்துவிட்டது. இனி நான் என்ன செய்வேன்?” என்று கேட்கிறான் சந்துரு.

லாசரா, “வாழ்க்கை வதங்கிப் போவது ஆச்சரியமல்ல. ஆனால் வதங்கிப் போன நினைவு மாத்திரம் வாடாமல் வாசமும் இல்லாது இருக்கும் இலைதான் பயங்கரம்.” என்று எழுதுகிறார் இது பற்றி. இப்படி ஒரு அப்பா, “என்னை மன்னிச்சுடுங்கோ…” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் அம்மா இவர்களின் பிள்ளை ராமதுரை, தன் அத்தை ஜானாவை ஒட்டி வளர்கிறான், சில சமயம் அவளை, “அம்மா!” என்றே அழைக்கிறான் (ஜானா தன் கணவனை இழந்ததும், சந்துரு அவளைத் தேற்றும்விதமாக “நீ இனி என் தம்பி!” என்று சொல்கிறான்; இது ஆண் துணையில்லாத ஜானாவுக்கு ஆண் தன்மையளித்து அவளது குறையை நிறைவு செய்கிறது. ஆண்-பெண் உறவே முழுமையான மனிதனை உருவாக்குகிறது என்கிறார் லாசரா, இது பற்றி அப்புறம்.)

இந்த ராமதுரைக்குக் கல்யாணம் ஆகிறது, ராமதுரை மாலையும் மனைவியுமாக மேளம் முழங்க வீடு திரும்புகிறான்.- அப்போதுதான் கதையின் தலைப்பில் வருகிற கொட்டுமேளம் கதைக்குள் வருகிறது. எவ்வளவு அற்புதமான வர்ணனை பாருங்கள்; சந்துருவிடம் ஜானா,

“மேளத்தை கவனி!” என்றாள்.

நாயனத்தின் வாசிப்பைவிட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேலையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து, கலியாணக் கூடம் முழுவதும் சிதறி ஓடி உருண்டு, பந்துகள் போல எகிறி எழும்பியது. மாவு கட்டிய விரல்கள் தோல் மேல் துடித்துத் துழாவி மறுபடியும் துடித்து அக்குண்டு மணிகளை எழுப்பின. மேளத்துள் சலங்கை குலுங்கி அதிர்ந்தது.

இந்தச் சப்தத்திற்குத்தான் சந்துரு இருபத்திரண்டு வருடங்களாய்க் காத்திருந்தானோ என்னவோ, ஜானா அறியாள். ஆனால் அவள் நிச்சயமாகக் காத்திருந்தாள்.”

சந்துரு தன் கனவில் “திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன் ஆரம்ப எடுப்புடன் ஆரம்ப அடியில் பாட்டு முடியும்போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக் கொண்டு ‘பகீர் பகீர்’ என்று எழும்புகிறது” என்று எந்த இசையைத் தேடிச் சென்றானோ, அந்தக் கனவின் பொருள் என்ன என்று ஜானாவைக் கேட்டானோ, அந்த இன்பம் இன்று மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து, சிதறியோடி உருண்டு, எகிறி எழும்பி வருகிறது- அதை ”கவனி!” என்று சொல்லும் ஜானா, அன்று சந்துரு எழுப்பிய கேள்விக்கு இன்று பதில் சொல்கிறாள். “எல்லாருக்கும் இன்று ஒரு புதுக் கல்யாணம் நடந்து கொண்டிருக்கிறது; வீம்பின் நித்திய கல்யாணம்.” என்று எழுதுகிறார் லாசரா.

ரயில் என்ற கதையில் எழுதுவதுபோல், “எல்லாம் கண்ணெதிரே நடக்கிறதுதான். ஒரு சிமிழுக்குள்ளேயே உலகம் அடங்கியிருக்கிறது,” இதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் யோகம். இந்த இன்பத்தையும் துன்பத்தையும் உணர்வதும் விவரிப்பதும்தான் தபஸ். எழுத்து பிறந்த கதையில், தன்னைப் பிரிந்து உருவான சக்திக்கான விரகம் முற்றிய நிலையில் யோக நிலை சாரும் பகவானில் சக்தி லயிக்கிறாள்: அதன் பின் தன் தோல்வியின் அடையாளமாக ஆணையும் பெண்ணையும் படைத்து சிருஷ்டியைத் துவக்கும் பகவான்- முன்னொரு முறை சிவன் தன்னை இழைத்த இன்பத்தில் இழைந்த சக்தி, ஒரு ஓலையை தன் நகத்தால் கீறிய வண்ணம் தன்னை இழக்கிறாள்- சக்தியின் கீறல்களைக் கொண்டு எழுதத் துவங்குகிறார். எழுத்து பிறந்த கதை இதுதான், என்று முடிகிறது அந்த கதை. தபஸ் எதற்காகவும் அல்ல. தானாக இருப்பதே தபஸ். இன்பமும் துன்பமும் ஒன்றான, கூடலையும் பிரிவையும் கடந்த சிவமும் சக்தியும் ஒருமையடைந்த, இருமைகளற்ற நிலையே தானாயிருத்தல். இந்த தபஸ், யோகமன்றி வேறல்ல. இது போன்ற முழுமையான தத்துவப் பார்வை எளிதில் வசப்படக் கூடியதல்ல.

——————

இப்புத்தகத்தின் முதல் பதிப்பின் முகப்பில் உள்ள பாம்பைப் பேசினோம். பாம்பில் முடிப்போம்.

ஆங்கிலத்தில் Ouroboros என்றொரு சொல்லுண்டு. இது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் எகிப்தியக் கடவுள் என்கிறார்கள் கிரேக்கத் தத்துவத்தில் தன்னைத் தானே விழுங்கிக் கொள்ளும் சுழல் பாம்பாகச் சொல்கிறார்கள். பிளாட்டோகூட இதைப் பற்றி பேசியிருக்கிறாராம். இந்திய மரபில் பாம்பின் விஷயம் அஞ்சக்கூடிய ஒன்றாக இருந்தாலும் குண்டலினி வடிவில் ஆன்மிக ஆற்றலாக உருவகித்துப் போற்றப்படுகிறது.

புற்று என்ற சிறுகதை பாம்பின் இவ்விரு இயல்புகளும் எளிமையாக, அதன் முரண்பாடுகளை உள்ளடக்கி ஒருமை பெற்ற படைப்பாக உருவாகியுள்ளது. பாம்பு தீண்டி உயிர் போகும் தருவாயில் உள்ள நச்சுத் தன்மை கொண்ட ஒருவனின் நினைவுகளாக விரிகிறது கதை. அவன் அஞ்சினாலும் அவனது சிறு வயதிலிருந்தே அவனோடு தொடர்ந்து இருக்கிறது பாம்பு –

“பிறகு அடிக்கடி, அல்லது அப்போதைக்கப்போது, அது அவன் கனவில் வந்து கொண்டிருந்தது. ஒரு சமயம் தவளையைப் பிடித்துக் கொண்டிருக்கும். அல்லது ஆடிக் கொண்டிருக்கும். அல்லது உடம்பை முறுக்குப் போல் சுற்றிக் கொண்டு, ஒரு முழ உயரத்திற்குத் தலையை மாத்திரம் தூக்கி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சமயம் அவனுடனேயே படுக்கையில் குளிருக்கடக்கமாய், ஒட்டிக் கொண்டு படுத்திருக்கும். அவன் கண்களிலோ,வாயிலோ முத்தமிட்டு, முகத்தை நக்குவது போலுமிருக்கும். திணறித் திணறி அதனின்று விடுபட முயன்று விழிக்கையில், உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்கும்”

கதையைப் பற்றிப் பேசப்போவதில்லை. சிறு வயதில் ஏதோ ஒரு கரிப்புச் சம்பவம், அது அவனில் அந்தக் கரிப்பைக் கெட்டித்து அவனை வன்மம் கொண்டவனாக, இரக்கமற்றவனாக மாற்றி விடுகிறது- ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு, மிச்சமிருக்கும் இன்னொரு வன்மம் தீர்க்க ஊர் திரும்புகிறான். அப்போதுதான் பாம்பு தீண்டி மரணடைகிறான். கதை இப்படி முடிகிறது:

“நீ யார்?”

“தப்பிப் போகும் நினைவின் முழுப்பலமும் அவன் உடலின் பலமும் அக்கடைசிக் கேள்வியில் பிரதிபலித்தன.

அது இதற்குள் அவனுக்கும் அதற்கும்கூட வித்தியாசம் தெரியாதபடி வியாபித்துவிட்டது.

“நீ எங்கிருந்து வந்தாயோ, அங்கே திரும்பிப் போகும் இடம் என்று வைத்துக் கொள்ளேன். நீ பாம்பானால், உன்னை விழுங்கும் பெரிய பாம்பு என்றுதான் வைத்துக் கொள்ளேன். அல்லது கருடன் என்று வைத்துக் கொள்ளேன். எந்தப் புற்றின் இருளுடன் இழைந்துவிட வேண்டுமென்று நீ ஒரு சமயம் விரும்பினாயோ, அந்த இருள் என்று வைத்துக் கொள்ளேன். அல்லது, தன் குஞ்சுகளை அன்புடன் சிறகடியில் அணைக்கும் தாய்ப் பட்சி என்று வைத்துக் கொள்ளேன். அல்லது, நீ சொல்லியபடி, நீ உன்னை விழுங்கியபிறகு, மிச்சம் இருக்கும் மீதி என்று வைத்துக் கொள்ளேன்!”

ஆலிங்கனத்தில் அவன் மேல் அது கவிந்தது.

பாம்பு நமக்கு எதன் குறியீடாக இருக்கிறது, பாம்பைப் பார்க்கும்போது நாம் என்ன நினைக்கிறோம் என்பதெல்லாம் சாமானிய விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால், இது போன்ற உணர்வு சார்ந்த குறியீடுகள் கேள்விகளுக்கே இடமில்லாமல் நம் மனதை ஆக்கிரமித்து செயல் வடிவம் பெறக் கூடியவை. குங்கும வண்ணத்தில் ஒளிரும் பாம்பும் விஷ நீலமாக மட்டும் இருக்கும் பாம்பும் வெவ்வேறு காலங்களைச் சேர்ந்தவை. அவை பாம்புகள் எப்படிப்பட்டவை என்பதை மட்டும் சொல்வதில்லை, அவற்றை அவ்வாறு உருவகிக்கும் மனிதன் எப்படிப்பட்டவன் என்பதையும் சொல்கின்றன.

புற்று என்ற சிறுகதையில் இருள் வியாபித்த மனிதனுக்கும் நிறைவு கிடைக்கிறது- இருள் இருளில் தஞ்சம் புகுகிறது, கலக்கிறது, இருள் இருளாகவே தொடர்கிறது. இங்கு நியாய அநியாயங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் மட்டுமே இயங்குகின்றன. அற விழுமியங்கள் மனிதனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதில்லை, ஒரு சபிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்தவனின் இருப்பு சபிக்கப்பட்ட ஒன்றாக இருப்பதில்லை. அவனுக்கும், அவனுக்குரிய இருளில் மீட்சி கிடைக்கிறது : அது ஒளியாக மாற வேண்டிய அவசியமில்லை என்பது உணர்த்தப்படுகிறது.

நவீனத்துவத்தின் தொடர் தாக்குதலில் நாம் இழப்பது நம் நம்பிக்கைகளை மட்டுமல்ல – நம்பிக்கைகளை மட்டுமே இழக்கிறோம் என்றால் போனால் போகிறது என்று விட்டு விடலாம். ஆனால், இருளையும் ஒளியையும், நன்மையையும் தீமையையும் அதனதன் இடத்தில் அங்கீகரித்து, அவற்றுக்கும் மீட்சியும் நிறைவும் அளிக்கும் ஒரு நீண்ட மரபையும் அதன் உணர்த்தலான முரண்களைக் கொண்டாடும் ஒருமை கொண்ட மனப்பாங்கையும் இழக்கிறோம். முரண்களை அவற்றின் இயல்புக்காக அங்கீகரிக்கும் ஒரு முதிர்ந்த பண்பாட்டு வெளியின் ஒழுங்கை நாம் எப்படி நம் காலத்தின் தேவைகள் மற்றும் உணர்த்துதல்களின் பின்னணியில் திரும்பப் பெற்று புத்துயிர்ப்பும் நிறைவின் சாத்தியங்களும் கொண்ட ஒன்றாக அதை அறியப் போகிறோம் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

(நன்றி: சொல்வனம்)

Buy the Book

ஜனனி

₹152 ₹160 (5% off)
Add to cart
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp