இருண்மையின் வசீகரம்

இருண்மையின் வசீகரம்

('லங்கூர்' சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை)

முன்னுரைக்கு தலைப்பு வைக்க சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. முன்னுரை என்று சொன்னாலே போதும். ஆனால் ஏனோ எனக்கு இந்த இருண்மை என்ற சொல் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

Lakshmi Sivakumar Langoor 450நேரடியான கதைகள். பெரும்பாலும் நேர்கோட்டுக் கதை சொல்லல். ஆனால் கதை மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும் வலிகளையும் எந்த தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாக பதிவு செய்கின்றன. அதே போல சற்றும் எதிர்பாராத வித்தியாசமான தளங்களில் இயங்கும் கதைகள். உலுக்கிப் போட வைக்கின்றன. திடுக்கிட வைக்கின்றன. மனதைப் பிசைகின்றன. இன்னும் என்னவெல்லாமோ செய்கின்றது இந்த எழுத்து.

தன்னிலையில் சொல்லப்படும் உளவியல் பூர்வமான கதைகள் தமிழுக்குப் புதியவை அல்ல. லஷ்மி சிவக்குமாரின் கதைகளில் உளவியல் பார்வை இருந்தாலும் அவற்றை இந்த வரிசையில் அடக்கிவிட முடியாது. இதில் வேறொன்று இருக்கிறது. வேறுவிதமாக இருக்கிறது. இக்கதைகள் first person singular என்று சொல்லப்படும் தன்னிலை அதாவது நான் என்ற பாணியில் சொல்லப்படுவதும் இல்லை.

முதல் கதையை எடுத்துக் கொள்ளலாம். ஒரு இளைஞன் பஸ் கண்டக்டர். பஸ்ஸை டிப்போவுக்குக் கொண்டு வருகிறான். கையெழுத்துப் போட வேண்டிய இடங்களில் கையெழுத்துப் போடுகிறான். செய்ய வேண்டிய கடமையை எல்லாம் மிக இயல்பாகச் செய்து முடிக்கிறான். பின்பு ஓய்வு அறைக்குச் சென்று படுக்கப் போகிறான். வழியெல்லாம் அந்நியமான சற்று விரோதம் மிகுந்த பார்வைகளை எதிர் கொள்கிறான். அவனது படுக்கையில் இன்னொரு இளைஞன் படுத்திருக்கிறான்... அவன் செல்லும் வழியெல்லாம் என்னவோ நம்மை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆனால் கதை நேர் கோட்டில் சென்று கொண்டே இருக்கிறது. பிசிறு இல்லை. தடுமாற்றம் இல்லை. கதை அந்த இளைஞனை விட்டு விலகுவதுமில்லை. முடிவு மின்னலைப் போல நம்மைத் தாக்குகிறது. கதையின் முடிவு என்ன என்று சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அந்த முடிவைப் படிக்க நேரும் மிக நுட்பமான தருணத்தை உங்களிடமிருந்து களவாட விரும்பவில்லை. ஆனால் கதையின் முடிவைப் படித்ததும்தான் அலட்சியமாகக் கடந்து போன முதல்வரி நினைவுக்கு வருகிறது. “ஒருநாள் அவன் கடந்த கால இரவுக்குள் சென்று விட்டான்...

“அவன் என்றிருப்பது நான்தான்” அடுத்த கதை. எனக்கு இரண்டு எழுத்தாளர்களைப் பிடிக்கவே பிடிக்காது. ஒருவர் ‘ஆர்தர் கோய்ஸ்ட்லர்’ இன்னொருவர் ‘ஜார் ஆர்வல்’ ஆனால் இவர்களது கதை சொல்லும் திறமை எப்போதுமே பிரமிக்க வைக்கும். ஜார்ஜ் ஆர்வெலின் ஒரு கதை the hanging. அந்தமானில் அவர் ஜெயில் அதிகாரியாக இருந்த போது ஒருவனைத் தூக்கிலிடுகிறார்கள். அவன் ராம் ராம் என்று வாய் ஓயாமல் ஜெபித்துக் கொண்டே இருக்கிறான். அந்த ஒரே மாதிரியான ஒலி அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதிகாலையின் அமைதியில் அரை இருளில் அந்த ராம் ராம் ராம் என்ற அனத்தல் ஒவ்வொரு செங்கல்லிலும் எதிரொலிக்கிறது. இதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள். அமைதியாக ஒவ்வொரு சடங்காக செய்து முடிக்கப்பட்டு அவன் கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்டு லிவர் இழுக்கப்படுகிறது. அவன் கீழே குழியில் மறைகிறான். அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

‘அவன் என்றிருப்பது நான் தான்’ கதையை எந்த ஒரு சிறுகதையுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால் இந்தக் கதையுடன் ஒப்பிடலாம். போலி மோதல் கொலைகளைச் செய்து பழகிய ஒரு அதிகாரி. இறுகிப் போனவர். தெருவில் ஒரு பெண்ணை தொல்லை செய்யும் ஆட்களை மிரட்டுகிறார். மனைவி மக்களிடம் அவர் பாணியில் அன்பாக இருக்கிறார். ஆனால் ஒரு கடமையாகக் கைதிகளைச் சித்திரவதை செய்கிறார். வதைக்கப்படும் ஒரு கைதி மீது அனுதாபம் கொள்கிறார். இறுதியில் அவனைக் கொலையும் செய்கிறார். அட்டகாசமான கதை இது. கொலை செய்ய நேரிடும் ஒரு ரவுடிக்கும் அல்லது சாதாரண மனிதனுக்கும், அதைக் கடமையாகச் செய்யும் அதிகாரிக்கும் இடையே உள்ள வேற்றுமையை அட்டகாசமாகச் சொல்லும் கதை. ஒரு ஆர்ப்பாட்டம் இல்லை. பந்தா இல்லை. கொலையை ரசிக்கும் மனநிலை இல்லை. அது ஒரு வேலை. வருத்தமோ வேறு உணர்வுகளோ இருக்கலாம். ஆனால் கடமையைச் செய்யாமல் இருக்க முடியாது. உத்தரவுக்குக் கீழ் படியாமல் இருக்க முடியாது. தப்பிக்க வேறு வழியே இல்லாத பாவப்பட்ட ஆத்மாக்களுக்காக ஒரு கணம் சற்று தயங்கலாம் அவ்வளவுதான்.

வழக்கமாக மன உணர்வுகளைப் பேசும் கதைகள் தொழில்நுட்ப விவரங்களில் கோட்டை விடும். அல்லது அவற்றை அலட்சியப்படுத்தி விட்டுச் செல்லும். ஆனால் மிக மிக நுணுக்கமான விவரங்களைக்கூட சரியாக சிவக்குமார் எழுதியிருப்பது ஆச்சரியமூட்டுகிறது. மிகச் சரியான கதைக்கு அவசியமான விஷயங்களைக் கொடுக்க ஆசிரியர் எடுத்துக் கொண்டிருக்கும் சிரமம் மிகவும் பாராட்டத்தக்கது. உதாரணமாக 9 எம்.எம் பிஸ்டல்... பொதுவாக விவரங்கள் கலைத்தன்மையின்பாற்பட்டவை அல்ல என்ற கருத்து தமிழ் இலக்கியச் சூழலில் நிலவுகிறது. எழுத்து என்பது ஒரு கலை. கலைக்கு உணர்வுகள், அழகியல் உறவுச்சிக்கல்கள் ஆகியவைதான் முக்கியமே தவிர தொழில்நுட்ப விவரங்கள் அவ்வளவு அவசியமில்லை என்ற கருத்தால் இலக்கியத்துக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது என்பது எனது கருத்து.

உதாரணத்துக்கு ஒரு துப்பாக்கியை ஏந்தியிருப்பவருக்கு என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பது முக்கியமானதுதான். ஆனால் துப்பாக்கி எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, என்ன வகையான உலோகங்களால் ஆனது என்பது போன்ற விவரங்கள் கதைக்கு மேலும் சுவையூட்டும். வாசகரின் முன் இவற்றைப் பரப்பி வைப்பது, கதை தொடர்பான அனைத்து விவரங்களையும் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, உணர்வுகளாக இருந்தாலும் சரி எழுத்தாளனின் கடமை. இது விசித்திரமானதாகத் தோன்றுவதாலும் எழுத்தாளனின் மேலதிக உழைப்பைக் கோருவதாலும் பின்பற்றப்படுவதில்லை.

டான் பிரவுன் ஒரு தொல்பொருள் ஆய்வாளர் அளவுக்கு உழைத்தே டாவின்சி கோட் எழுதினார். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு படித்தவர்கள் அவர் எந்த அளவுக்கு சட்டத்தையும், மெடிக்கல் ஜூரிஸ்புரோடென்ஸ் எனப்படும் சட்டவியல் மருத்துவத்தையும், வழக்கு நடத்தப்படும் விதத்தையும் அறிந்து எழுதியிருக்கிறார் என்பதை உணர முடியும்.

‘அவன் என்றிருப்பது நான்தான்’ ‘வித்தைக்காரியின் சாகச மரணம்’ ‘நோமோ’ போன்ற கதைகள். இவற்றை எழுத லஷ்மி சிவக்குமார் மேற்கொண்டுள்ள கடும் உழைப்பைக் காட்டுகின்றன. தோன்றுவதை அழகுபடச் சொல்வது மட்டுமே எழுத்து அல்ல. தான் எழுத விரும்பும் தளத்தை முழுமையாக அறிந்து கொண்டு அதை கதையோடு வாசகர் முன்வைப்பது பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது. இந்தப் பாணி எழுத்து இன்று தமிழுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித்தனியாகச் சொல்லிக் கொண்டே போக முடியும். ஆனால் அது முன்னுரை என்பதை விட முன்கதைச் சுருக்கமாகி விடும் வாய்ப்புள்ளது என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.

தொகுப்பில் உள்ள கதைகள் பலதரப்பட்டவை. குரங்கின் மீது அன்புகொள்ளும் சிறுமி, குடியால் விளையும் அனைத்து அவமானங்களையும் சேதங்களையும் பார்த்துக் கொண்டே மென்மேலும் அதனுள் விரும்பியே மூழ்கும் இளைஞன்... செல்லுக்கு அடிமையாகும் இளைஞன்... இது மிகச் சிறப்பான கதை. செல்லைக் குடைந்து குடைந்து பேசுவதையே மறந்து விடுகிறான் அவன். இதை சிவக்குமார் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தும் அழகு இருக்கிறதே அது அற்புதம்.

இது ஒரு தனிச்சிறப்பான கதை. சாளரத்துக்கு வெளியே தெரியும் உலகம். தினமும் பார்க்கும் மனிதர்கள். எதிர்கொள்ளும் நெருக்கடிகள். அந்த கணத்தில் இலக்கியமாக மாறுவது வரவேற்கத் தக்கது.

லஷ்மி சிவக்குமாரின் “இப்படிக்குக் கண்ணம்மா” நாவலை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். அது ஒருவிதத்தில் இனிமையான மகிழ்வூட்டக்கூடிய நாவல். ஒரு இனம் புரியாத சோகத்தையும் அதே நேரம் மூடி வைக்கும் போது மெல்லிய முறுவலையும் வரவழைக்கக் கூடிய நாவல். விபத்தால் முடங்கிப் போன இளைஞன் எதிர் கொள்ளும் விரக்தி, வெறுமை, பின்பு தனக்கே உரிய வழியில் அதைக் கடந்து வரும் மன உறுதி. ஒரு மிக அழகான காதல் என்று ஃபீல் குட் நாவல். ஒரு விதத்தில் ‘சாவுக்கே சவால்’ உண்மை மனிதனின் கதை போன்ற சோவியத் நாவல்களுக்கு இணையாகச் சொல்லலாம்.

தைரியமாகச் சொல்லலாம். இந்த ஆசிரியரும் அதே நெருக்கடியை ஒருவிதத்தில், அதைவிடக் கடினமான சூழலில் மன உறுதியுடன் கடந்தவர். அதை அந்த நாவலில் காணமுடியும்.

இந்தக் கதைகள் அடுத்த தளத்துக்குச் செல்கின்றன. தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.

எப்படி புயலின் மூர்க்கத்திலும், சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பிலும் ஒரு வசீகரம் இருக்கிறதோ அதே வசீகரம் இந்தக் கதைகளிலும் இருக்கிறது.

(நன்றி: கீற்று)

Buy the Book

லங்கூர்

₹142 ₹150 (5% off)
Out of Stock
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp