இருமுனை: விமர்சனம்

இருமுனை: விமர்சனம்

இயல்பாகவே தூயனுடைய ஒவ்வொரு சிறுகதையும் இரண்டு கதைகளாக விரிவாக்கப்படும் சாத்தியம் கொண்டவை. ஒன்று கதை சொல்லியின் தனிப்பட்ட வாழ்கை, மற்றது நிகழ் சம்பவங்களின் தொகுதி. அல்லது கதை நிகழ்வதற்கான ஆதார உந்துதல் எங்கிருக்கிறது என்ற கேள்வி வரும்போது, அதுவே தனியொரு கதையாக வளருவதற்கான காரணங்களை கொண்டிருக்கிறது. அடர்த்தியாக, நுண்தகவல் கொண்டு கதையை சொல்லிச் செல்வதால் அவருடைய கதைகளின் பலம் அதுவாகவே இருக்கிறது. மொழிக் கூர்மையும், சிறுகதை வடிவம் கைவந்தவருமான ஒருவரின் படைப்புகளை வாசிக்கிறோம் என்று புரிந்துகொள்ள சிரமமாக இருக்காது.

"அன்றைக்கு இரவு தன் நினைவுகளை குவித்து அந்நிழலுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனின் இயக்கமில்லாமலே அது சுவரில் பரிபூரணமாக நகர்வதை கண்டான். திடுக்கிட்டு எழுந்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நிழல் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவை மாற்றத்தொடங்கியது. முறுக்கேறியிருந்த அதன் ஆணுடல் மெலிந்து நீண்டு குலைந்தது. தலை மயிர் வரிந்து காற்றில் அலைந்தன. நிழலின் மார்பு கொஞ்சம் கொஞ்சமாக உப்பி புடைத்து காம்பினை நீட்டி, அழகிய முலைகளாக எழுந்து அண்ணாந்தன. ஆண் நிழல் முழுவதுமாக கரிய யட்சிபோல தோன்றிற்று."

இருமுனை ஏழு சிறுகதைகளும், ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு. தொகுப்பின் பெயரில் அமைந்ததும், முகப்பு ஓவியம் துல்லியமாக வெளிக்காட்டுவதாக அமைந்ததுமான சிறுகதை தூயனின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று. வெளியில் இருந்து எந்த துணையும் இல்லாமலே, தன்னளவில் முழுமையான வாசிப்பை அதிபுனைவான இருமுனை சிறுகதை சாத்தியப்படுத்துகிறது. அந்த சிறுகதையின் பின்னிருக்கிற உழைப்பும், அதனால் உருவாக்கப்படும் நம்பகத்தன்மையும் குறிப்பிடத்தக்கவை. கலை சார்ந்த, ஓவியம் சார்ந்த வர்ணனைகள் முழுமையாக்கும் கதையான அதில், நோய்க்கூறுகளை கையாண்டிருக்கிற விதம் முக்கியமாகவும் கதையை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் அணுகாமல் இருப்பதாகவும் இருக்கிறது.

"அறைக்குள் நுழைந்ததும் அவன் எண்ணத்தை அவள் அறிந்துவிட்டிருந்தாள். அவன் கையிலிருந்தவற்றை பிடுங்கி ‘இது எதுக்கு?’ என்றாள். தனக்கு இச்சுவர் சித்திரங்களே போதுமென்றும் தன் மீது வண்ணத்தை குழைக்க வேண்டாமென கத்தினாள். அவளைத் தடுக்காமல் அவன் கட்டிலில் அமர்ந்தவாறு அந்தரங்கமாக பார்த்துச் சிரித்தான். அவள் பேசுவது விரல்கள் படாத கித்தாரில் என்றாவதொருநாள் தொடும் போது எழும் முனகலைப் போலிருந்தது.

விலாவிலிருந்து அல்குல் வரை வெண்ணிற இறகைத் தீட்டும் போதுதான் அவள் முகம் கன்றிப் போயிருந்ததை கவனித்தான். இவன் பார்வையை புரிந்து கொண்டவளாக ‘நீயும் எல்லா ஆண்களை போல என்னை இறகு முளைத்த தேவதையாக மாற்ற விரும்புகிறாயா?’ என்று கேட்டாள். அவன் தீட்டுவதை நிறுத்தினான். அவள் இறகை பிய்த்து எறிந்துவிட்டு உடலில் ஏறிய வண்ணத்தை பாம்பு சட்டை போல உரித்தெடுத்தாள்."

உடல் உருகிப்போகும்படி உழைக்க நேர்கிறவர்களில் ஒருவனோடான நட்பையும், அவனுக்கும் தனக்குமான பிணைப்பை கதைசொல்லி ஏனென்று உணரும் புள்ளியை நோக்கி செல்வதும் – இன்னொருவன் சிறுகதையின் மையம். தொடக்கத்தில் காணாமல் போவது தொடர்பான கருத்துக்களும், அதைப்போன்ற மேலும் சில உரையாடல் பகுதிகளும் கதையில் ஈடுபாட்டை குறைக்கிறது. அவை கதாபாத்திரத்தின் இயல்பை மீறுவதாக சந்தேகத்தை தருகிறது. அமிர்தி ராஷனின் குடும்பத்தை, ஊரை மற்றும் அங்கே பணியிடத்தில் அவன் சந்தித்த பிரச்சனைகளை சொல்லும்போது கதை தன்னுடைய முக்கியமான கட்டத்தில் நகர்கிறது. ஆனால் அதே காணமல் போவது என்கிற பேச்சு, விளையாட்டாக கதையின் முடிவு சமயத்தில் வரும்போது இயல்பாக இருக்கிறது.

இன்னொருவன் சிறுகதையின் ஒரு கட்டத்தில் கதைசொல்லி அமிர்த்தி ராஷனை அழைத்துச் செல்லும் தன்னுடைய ஊரைப்போன்ற சாயலில் இருப்பது மஞ்சல் நிற மீன் கதையில் வரும் ஊர். இரண்டு கதைகளும் முற்றிலும் வேறானவை என்றாலும் அந்த ஊர் கற்பனையில் வளர்ந்து விரிந்ததாக ஒரு எண்ணத்தை உண்டாக்குகிறது. அதே போல, தூயனின் துல்லியமான கதை சொல்லும் முறைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. பெரும்பாலும் கதை ஒரு அரசுப் பள்ளிக்குள்ளாக காட்சிப்படுத்தி சொல்லப்பட்டாலும், அந்த கதையில் வரும் சிறுவனை அவன் வீட்டில் வைத்து காட்சிப்படுத்திக் காட்டுகிற பகுதி முக்கியமானது. மேலும் நல்ல வேளையாக, தலைப்பு கருத வைக்கும்படி கதை ஏதும் தத்துவ விளக்கமாக இல்லை.

"ஜன்னல் கதவினை திறந்ததும் வெளிக்காட்சி அவளை அத்திசைக்கு மீட்டியது. இருளில் மரங்களுக்கப்பால் மின்மினிகள் மொய்ப்பதுபோல விளக்கொளிகள் கோவில் மைதானம் முழுதும் நிறைந்திருந்தன. பாட்டு சப்தம் ஓய்ந்து கனத்த மெளனம் வியாபித்திருந்தது. ஒருகணம் அவ்வெண்ணம் அவளுள் எழுந்தது. கருவறைக்குள் அம்மன் அலங்காரங்களுடன் தனிமையில் அமர்ந்திருக்கிறாள். நித்தியத் தனிமை. மனம் அத்தனிமைக்கு ஏங்கியது. பின்பு அவ்வெண்ணத்தைத் தவிர்க்க பார்வையை, கிணற்றடியை நோக்கிக் குவித்தாள். கண்ணாடி பதித்தது போல வெளிச்சம் மின்னின. மேலே அண்ணாந்தாள். உடையாத முழுநிலவு தென்னைக்கப்பால் சீமைப் பசுவின் பால்போல கெட்டி வெண்மையில் தெரிந்தது. நில வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென நீண்டிருந்த தென்னை பாளைக் குறுத்தின் கூம்பைக் கண்டதும் நெஞ்சு படபடத்தது. அது, அவளை எட்டிப்பார்ப்பது போலிருந்தது. கையை சேலைக்குள் கொண்டு சென்று மேல்வயின்றின் மீது வைத்துக் கொண்டாள்."

இப்போது தமிழ்ச் சிறுகதைகளில் மீண்டும் மீண்டும் சில விஷயங்களின் அடிப்படையில் அமைந்த கதைகளை வாசிக்க நேர்கிறது.அவை ஒரு பால் உறவு, உருவாக்கப்பட்டு தொடர்ந்து விவரிக்கப்படும் பாத்திரங்கள் கொண்ட (முக்கியமாக திருநங்கைகள்) பாலுறவுக்கான களம், மற்றும் ஏனோ பன்றிகளை, அதை வளர்ப்போரை மையப்படுத்திய கதைகள் (இந்த வகையிலேயே எனக்கு சமீபத்தில் தொகுப்புகளில் வாசித்த மூன்று கதைகள் நினைவுக்கு வருகிறது). எதிர்பாராத விதமாக தூயன் தன் மூன்று கதைகளிலாக இம்மூன்றையும் எழுதியிருக்கிறார்.

முகம் என்கிற சிறுகதை, மூர்க்கமான மனிதர்களைக் கொண்டு நகர்வது. பன்றி வளர்ப்போரும் அவர்களைச் சுற்றி இருக்கிற மனிதர்களும், அவர்களுக்குள்ளான உறவுகளையும் மையப்படுத்தி எடுத்துக் கொண்ட களம். தலைப்பிரட்டைகள் என்கிற கதை தன்னுடைய சாதி அடையாளத்தால் அவமானங்ளுக்கு உள்ளாகும் ஒருவனின் கதை. அதுவே கதையின் மையமாகவும் தேவையான அளவு பேசப்பட்டும் இருக்க, அவன் அன்றைக்கு அதை எதிர்கொள்கிற விதம் இன்னொரு கதையாகவே தோன்றுகிறது. இன்னொருவன் கதையில் ஏற்கெனவே ஒருபால் உறவு இருக்கிறது.

இவற்றை படைப்பாக்கச் சவாலாக எடுத்து, இதுவரை சொல்லாத முறையில் சொல்லியிருக்கிறாரா என்று ஆர்வமாக இருந்தது. ஏனெனில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட பாத்திரங்களும், இடங்களுமே மீண்டும் மீண்டும் வர்ணிக்கப்படுவதாக தோன்றுவதை ஒரு வாசகனாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஒரு அந்நியமான வாசிப்பு உணர்வு உருவாகிவிடுகிறது. இது கதைக்களம் இல்லாமல் போவதாலா என்ன?

பேராழத்தில் என்கிற கதை ஒரு சிற்ப மண்டபத்தை நிர்மாணித்த சிற்பியின் அலைவுறுதல். சிறிய, நேர்கோட்டிலான கதை. இந்தக் கதையும், பெரும்பகுதி தற்காலத்தின் கதையாகவே இருக்கும் குறுநாவலிலும் சீராகச் செல்லும் கதையிலிருந்து நம்மை பிரிப்பது ஊர்ப்பெயர்களும் சில நேரத்தில் ஆட்பெயர்களும். அவை ஏனோ இயல்பாகவே இருக்கக்கூடிய வேளையிலும், செயற்கையாகத் தெரிகின்றன. அதன் அந்நியமான ஒலிப்புதான் முதன்மை காரணமாக இருக்கிறது. பெரும்பாலும் அவை பயன்படுத்தப்படவில்லை என்பதால் பெரிய குறையாக இருக்கவில்லை.

இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள குறுநாவல் நீளமானது. தொடக்கத்தில் சொன்ன தூயனின் கதை சொல்லும் முறையை இதைக்கொண்டு புரிந்துகொள்ள முடியும். இரண்டு வெவ்வேறு சிறுகதைகளை இணைத்ததை போல் தோன்றுவதற்கான காரணம், அவை தன்னளவிலேயே முழுமையானவை என்பதாலும் ஒரு பகுதியின் இருப்பு மற்றொரு பகுதிக்கு அவசியமற்றதாக இருப்பதாலும். குறிச்சொல்லும் பெண்ணின் பாடல் மூலமாக கதையின் ஆதாரமான பிரச்சனையை முதல் பாதிக்குள்ளேயே அவர் விளக்கிவிடுகிறார். அதற்கு பிறகு புனைந்திருக்கிற தொன்மக்கதையின் பாத்திரங்களோடு, மையப்பாத்திரங்களை எந்த விதத்திலும் இணைக்கவில்லை அல்லது சம்பவங்களை தொடர்புறுத்தும் சாத்தியங்களை கொடுக்காது விட்டுவிட்டார். தொடக்கத்திலேயே வரும் குறிப்பாடலுக்கு மீண்டும் வராமல் கதை முடிவதில்லை. ஏனெனில் கதைக்கு உதவவேண்டி உருவாக்கிய தொன்மக் கதையை விரிவாகச் சொல்லுவதன் மூலமும், அதன் பிறகு கோயில் காட்சிகளை அதனோடு இணைத்து முடிப்பதையும் வைத்து வாசகன் வேறெதையோ தேடவேண்டி இருக்கிறது. ஆனால், இருவேற கதையாக வாசிக்கிற முயற்சியில் வேறொன்று கிடைக்கிறது. எனினும், தொடக்கத்தில் இருந்தே நுட்பமாக எல்லாவற்றையும் உணர்த்துவதால் வாசிப்பில் சலிப்பு உண்டாவதில்லை.

இருமுனை தொகுப்புக்கு பின்னர் தூயன் தன் படைப்பாக்கத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். என் தலைமுறையின் முக்கிய எழுத்தாளராகும் அத்தனை சாத்தியங்களும் கொண்டிருக்கும் தூயன், இதற்குமேல் தனக்கான கதைக்களங்கள் எவை என்பதை அடையாளம் கண்டாக வேண்டும். அப்படியான அடையாளம் காணுதல் மூலம் மேலும் செறிவான, நெருக்கமாக உணரச்செய்யும் முக்கியத்துவம் மிகுந்த படைப்புகளை அவர் எழுத முடியும். எனக்கு மூத்தவரான அவரை பேராவலுடன் கவனிக்கிறேன்.

(நன்றி: நாகபிரகாஷ்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp