இந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றம்

இந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றம்

இந்திய வரலாற்றை ஏன் கற்க வேண்டும்? எதன் அடிப்படையில் கற்க வேண்டும்? அதன் இன்றைய தேவை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதே இந்த புத்தகத்திற்கு ஒரு முன்னுரையை வழங்கும். வரலாற்று வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கும்போது மாவோ: “நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் கடந்தகால வரலாற்றில் இருந்து தொடங்க வேண்டும்” என்று கூறுகிறார். அது மட்டுமல்ல, அவர் மேலும் கூறுகிறார்: “ஒரு நாட்டின் சமூக வரலாற்றை கற்காமல் அந்நாட்டில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியாது” ஆகவே இன்றைக்கு இந்திய சமூகத்தில் நிலவும் சாதி, மத மற்றும் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றால் அதன் தோற்றம், வளர்ச்சி குறித்த வரலாற்று ஆய்வை தொடங்குவது என்பது முன் தேவையாகும்.

வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணி எது எனும்போது எங்கல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார் “பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி - கடைசியாகப் பார்க்கும் பொழுது - உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் புனருற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும். ஆனால் இது இருவகையானத் தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது - அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும் அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் உற்பத்தி செய்வது; மறு பக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது - அதாவது மனித இனத்தைப் பெருக்குவது.”

இவ்வாறு இந்திய வரலாற்றை விஞ்ஞானப் பூர்வமாக அணுகுவது என்பதன் பொருள், இயங்கியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்வது. அத்தகைய ஒரு சமூக ஆய்வு முறைக்கான முறையியலை மார்க்ஸ் தனது “அரசியல் பொருளதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை” எனும் நூலின் முன்னுரையில் இவ்வாறு விளக்குகிறார்: “மனிதர்கள் சமுதாயத்தில் தம் வாழ்வாதாரங்களுக்காக உற்பத்தியில் ஈடுபடும்போது குறிப்பிட்ட இன்றியமையாத உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்; அவை அவர்களின் சொந்த விருப்பத்தில் இருந்து விடுபட்டவையாக உள்ளன. அந்த உற்பத்தி உறவுகள், அவர்களின் பொருளுற்பத்தி சக்திகளின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்துக்கு பொருத்தமாக அமைகின்றன. அந்த உற்பத்தி உறவுகளின் மொத்தமே சமுதாயத்தின் பொருளியல் அமைப்பாக -மெய்யான அடித்தளமாக இருக்கிறது. இதன் மீதே ஒரு சட்ட, அரசியல் மேல்கட்டுமானம் எழுகிறது; அதற்குச் சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்கள் ஒத்துப்போகின்றன. வாழ்வுக்கான பொருள்வகைச் சாதனங்களின் உற்பத்தி முறையானது சமுதாய - அரசியல் - அறிவுத்துறை வாழ்வின் மொத்த நிகழ்முறையையும் கட்டுப்படுத்துகிறது. மனிதர்களின் உணர்வு, அவர்களின் வாழ்வைத் தீர்மானிப்பதில்லை, மாறாக அவர்களின் சமுதாய வாழ்வுதான் அவர்களின் உணர்வைத் தீர்மானிக்கிறது. சமுதாயத்தின் பொருள் உற்பத்திச் சக்திகள் தம் வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் அப்போது நிலவும் உற்பத்தி உறவுகளுடன் - அல்லது அவற்றைச் சட்டப்பூர்வமான வகையில் வெளிப்படுத்துவதென்றால், அதற்கு முன் அவை எந்தச் சூழலுக்குள் இயங்கி வந்திருந்தனவோ அந்தச் சொத்து உறவுகளுடன் - முரண்படுகின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி வடிவங்களாக இருந்ததிலிருந்து இந்த உறவுகள் அவற்றின் தளைகளாக மாறுகின்றன. அப்போதிலிருந்து ஒரு சமுதாயப் புரட்சியின் கட்டம் தொடங்குகிறது. பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்டதுமே மேல்கட்டுமானம் மொத்தமும் ஏறக்குறைய உடனடியாக மாற்றம் பெறுகிறது. இத்தகைய புரட்சிகளைப் பரிசீலிக்கும்போது அறிவியல் ரீதியான துல்லியத்துடன் தீர்மானிக்க முடியக் கூடிய உற்பத்தியின் பொருளியல் நிலைமைகளில் ஏற்படும் பொருளாயதப் புரட்சிக்கும், மனிதர்கள் இந்த மோதலைப் பற்றிய உணர்வுள்ளவர்களாகி அதற்குத் தீர்வு காணும் சட்டவியல், அரசியல், மதவியல், அழகியல் அல்லது மெய்யியல் - ஒரே சொல்லில் சொல்வதானால் கருத்தியல் வடிவங்களுக்கும் இடையில் எப்போதும் பாகுபடுத்தி அறிவது தேவையாகிறது. ஒரு சமுதாய அமைப்பானது அது இடம்கொடுக்கும் உற்பத்திச் சக்திகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும் முன்பாக ஒருபோதும் மடிவதில்லை; அதுபோலவே, பழைய சமுதாயத்தின் கர்ப்பத்துக்குள்ளேயே புதிய - உயர்ந்த உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படையான பொருள்வகை நிலைமைகள் முதிர்ச்சி காணாதவரை அவ்வுறவுகள் ஒருபோதும் தோன்றுவதில்லை. எனவே மனித குலம் எப்போதும் தன்னால் தீர்க்க முடிகிறவிதமான சிக்கல்களை மட்டுமே தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கிறது; ஏனெனில் சிக்கலைத் தீர்ப்பதற்கான பொருள்வகை நிலைமைகள் ஏற்கனவே நிலவுகிற போது மட்டுமே, அல்லது குறைந்தது அவை உருவாகும் நிகழ்முறையில் இருக்கிறபோது மட்டுமே, சிக்கலே தோன்றுகிறது என்பதைச் சற்றுக் கவனமாகப் பார்ப்போமானால் எப்போதும் நாம் கண்டு கொள்வோம். பொதுவாக - சுருக்கமாகச் சொன்னால் ஆசிய, பண்டைய, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளிய உற்பத்தி முறைகள் என்பன சமுதாயத்தின் பொருளியலமைப்பில் அடுத்தடுத்து வந்த கட்டங்களைக் குறித்துக் காட்ட முடியும். எனவே இந்த முதலாளியச் சமூக அமைப்புடன் மனித சமுதாயத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவுக்கு வருகிறது.”

இதன்படி டி.டி.கோசாம்பி வரலாறு குறித்த தனது விளக்கத்தை தருகிறார் “உற்பத்திச் சாதன முறைகளிலும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களைக் கால வரிசைக் கிரமமாக எடுத்துரைப்பதே வரலாறு.” இத்தகைய முறையியலின் அடிப்படையில் தான் விஞ்ஞானப் பூர்வமாக ஒரு சமூகத்தை ஆய்வு செய்யவும், புரிந்துகொள்ளவும், மாற்றியமைக்கவும் முடியும். இந்த முறையியலை அடிப்படையாகக் கொண்டு இந்திய சமூகத்தை எவ்வாறு அணுகுவது என்பதைப் பார்ப்போம்.

காலனிய இந்தியாவிற்கு முந்தைய இந்திய சமூக உற்பத்தி முறையை மார்க்ஸ் “ஆசிய உற்பத்தி முறை” என்று வகைப்பாடு செய்தார். ஆசிய உற்பத்தி முறை என்ற சொல்லாடலை முதல் முதலில் அவர் தனது “அரசியல் பொருளதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை” என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: “விரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம்” என்கிறார். இதனைத் தொடர்ந்து மார்க்ஸ் மூலதனம் புத்தகத்தின் முதல் பாகத்தில் ஆசிய உற்பத்தி முறைக்கான ஒரு சுருக்கமான விளக்கத்தை அளிக்கிறார் “சிறியவையும் மிகமிகத் தொன்மையானவையுமான இந்த இந்திய (கிராம) சமூகங்கள் (அவற்றில் சில இன்றுவரை தொடர்ந்து உள்ளன), நிலத்தில் பொது உடைமை, உழவும் கைத்தொழிலும் ஒன்று கலந்த நிலை, மாற்றமுடியாத வேலைப் பிரிவினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இது, புதிதாக ஒரு சமூகம் தொடங்கும் போதெல்லாம் அதற்கு வழங்க முன்னேற்பாடாக ஆயத்தம் பண்ணிய திட்டமாகவும் ஒழுங்குமுறையாகவும் பயன்படுகிறது. நூறு ஏக்கர் முதல் பல்லாயிரம் ஏக்கர் வரையான பரப்புகளில் விரிந்துள்ள ஒவ்வொரு சமூகமும் தனக்குத் தேவைப்படும் அனைத்தையும் உற்பத்திசெய்யும் ஒரு செறிவான முழுமையாக அமைகிறது. உற்பத்தியில் முதன்மைப் பங்கு சமூகத்தின் சொந்த துய்ப்புக்கென்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அது சரக்கு வடிவம் எடுப்பதில்லை. எனவே இங்கு உற்பத்தியானது, சரக்குகளின் பரிமாற்றம் வாயிலாக ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்திலும் கொண்டுவரப்பட்ட அந்த உழைப்புப் பிரிவினையிலிருந்து விடுபட்டுள்ளது. உற்பத்தியில் மிகையானது (உபரியானது) மட்டுமே சரக்காக ஆகிறது, அதன் ஒரு பகுதியும்கூட அரசின் கைகளில் சென்று சேரும்வரை அப்படி ஆவதில்லை. அரசின் கரங்களில் தொன்றுதொட்டு அந்தப் பண்டங்களின் ஒரு குறிப்பிட்ட அளவு வாடகையாகப் பொருள் வடிவில் போய்ச் சேர்கிறது... எப்போதும் ஒரேவடிவில் தம்மைத்தாமே மறு உற்பத்தி செய்துகொள்கிற - தற்செயலாக அழிபட்டால் அதே இடத்தில் அதே பெயரில் மறுபடியும் உதித்தெழுகிற - இந்தத் தன்னிறைவு கொண்ட சமூகங்களில் நடக்கும் பொருள் உற்பத்தி ஏற்பாட்டின் எளிமை - இந்த எளிமைதான் ஆசிய முறைச் சமுதாயங்களின் மாறாத் தன்மையின் மர்மத்துக்கான திறவுகோலை வழங்குகிறது. ஆசிய அரசுகள் ஓயாமல் கலைந்து திரும்பவும் அமைவதிலிருந்தும் வம்சங்கள் ஓயாமல் மாறுவதில் இருந்தும் முனைப்பாகி மாறுபடும் ஒரு மாறாத்தன்மை இது. சமுதாயத்தின் பொருளியல் கூறுகளின் கட்டுமானமானது அரசியல் வானத்தில் திரளும் புயல் மேகங்களால் தீண்டப்படாமல் தேங்கி இருக்கிறது.” (முதல், மி, 391 மற்றும் தொடரும் பக்கங்கள்).

ஆசிய உற்பத்தி முறைக்கு மார்க்ஸ் கூறும் விளக்கத்தை மேலே பார்த்தோம், அதன் அடிப்படையில் பார்க்கும்போது மார்க்ஸ் ஐந்து அம்சங்களிலிருந்து இந்த முடிவுக்கு வருகிறார்.
1.அடிமைமுறை இல்லை
2.இந்தியாவில் நிலத்தில் தனியுடமை இல்லை
3.விவசாயமும் கைத்தொழிலும் வளர்ச்சியடையாத ஒரு தன்னிறைவடைந்த கிராம சமூக அமைப்பு
4.தேக்க நிலையடைந்த இந்திய சமூகம்
5.பண்டைய இந்திய அரசமைப்பில் கிழக்கத்திய கொடுங்கோன்மை

இந்த ஐந்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஆசியபாணி சமூக அமைப்பு இந்தியாவில் நிலவியதா என்றால், இல்லை என்றுதான் பதில் வருகிறது. இந்திய வரலாற்றை, மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்களான டி.டி.கோசாம்பி, தேவராஜ் சனானா, ஆர்.எஸ்.சர்மா மற்றும் இர்பான் ஹபீப் போன்றவர்கள் ஆசிய உற்பத்தி முறைக்கும் இந்திய சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தங்களுடைய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

மார்க்ஸ் எதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார் என்றால் கிழக்கத்திய கொடுங்கோன்மை என்ற ஹெகலின் கருத்து அவர் மீது செலுத்திய செல்வாக்கு மற்றும் மிகவும் தவறான கருத்துகளின் அடிப்படையில் அமைந்த ஆங்கிலேயே பாராளுமன்ற ஆவணங்கள், பிராங்கோஸ் பெர்னியர் பயணக் குறிப்புகள் மற்றும் முன்னாள் காலனிய அதிகாரிகளின் அறிக்கைகள், ஆகியவையே இந்தியாவை பற்றி மார்க்சுக்கு கிடைக்கப்பெற்ற மிகவும் குறைவான மற்றும் தவறான தகவல்கள் ஆகும். இவைதான் ஆசிய உற்பத்தி முறைக் கருத்தாக்கம் வருவதற்கு காரணமாக அமைந்தது.

இந்தியாவில் ஆசிய சமூக உற்பத்திகான மாறாநிலை சமூக அமைப்பிற்கு அவர் மிக முக்கியமான அம்சமாக கூறுவது யாதெனில் இந்தியாவில் தனியுடமை இல்லை. ஆண்டான் அடிமை முறை இல்லை. இதன் தொடர்ச்சியாக உற்பத்தியில் வளர்ச்சி அற்ற ஒரு தன்னிறைவு சமூக அமைப்பு என்றார் மார்க்ஸ். ஆனால் உண்மையில் இந்திய சமூக அமைப்பில் இதற்கு நேர்மாறாக அடிமைமுறை நிலவியதற்கும், நிலத்தில் தனியுடமை இருந்ததற்குமான பல ஆதாரங்கள் நமக்கு கிடைக்கின்றன. குறிப்பாக அர்த்தசாஸ்திரத்திலும், சமிக்தா, சதபதா பிராமண மற்றும் “ஸ்மிதி” போன்ற பண்டைய நூல்களின் மூலம் தனியுடமைப் பற்றிய பல தரவுகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன.

அசோகர் காலத்தில் கலிங்கப் போரில் சிறைப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் கைதிகள் வேளாண் உற்பத்தியில் அடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று ஆர்.எஸ்.சர்மா கூறுகிறார். மௌரியர் ஆட்சி காலத்தில் சந்திரகுப்த மௌரியர் பண்ணைகளில் கணிசமான எண்ணிக்கையில் அடிமைகளும் வாடகைத் தொழிலாளர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் என்று ஆறு பருவங்களைக் குறிப்பிடும்போது கௌடில்யர் கூறுகிறார்.

பண்டைய இந்தியாவில் வாழ்ந்த இந்தோ ஆரியர்கள் வேளாண் நிலத்தில் தனியுடமை பெற்றிருந்தனர் என்று சமிக்தாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்கள் இருந்தனர் என்று ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் அர்த்தசாஸ்திரத்தில் நிலம் அடகு வைக்கப்பட்டதையும், விலக்கப்பட்டதையும் பற்றிய பல தகவல்கள் தருகின்றன.

கி.மு. 400 முதல் கி.மு.200 வரை மௌரியர் ஆட்சி காலத்தில் பண்ட அடிப்படையில் அமைந்த உற்பத்தியும் அதன் தொடர்ச்சியாக அரேபியர்களுக்கிடையில் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெற்றதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

இந்திய சமுதாயத்தில் கி.பி. 3லிருந்து கி.பி.6ஆம் நூற்றாண்டு வரையில் நிலவுடமை அமைப்பு தோற்றம் பெற்றது. அந்த கட்டத்தில் நடந்த சமூக பொருளியல் மாற்றம் குறித்த ஆய்வின் மூலமே நிலவுடமை அமைப்பின் தோற்றத்தை அறியமுடியும். மௌரியர் ஆட்சியின் வீழ்ச்சியும், குப்த ஆட்சியின் தொடக்கமும்தான் இந்திய வரலாற்றில் நிலவுடமை அமைப்பின் தோற்றமாகும். அது மத்திய கால சமூகமாகவும் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.

மத்திய கால சமூகத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் அரேபியர்களுடன் அமைந்த வர்த்தகத்தின் வீழ்ச்சியும் அதன் காரணமாக நகரங்களின் வீழ்ச்சியும் சமூக அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடியுமே நில உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான பிரதான காரணங்களாகும்.

மையப்படுத்தப்பட்ட ஆட்சியமைப்பு வீழ்ந்த பிறகு நிலங்களில் வேளாண் அமைப்பு முழுவதும் ஒரு தேக்க நிலை அடைந்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் வேளாண் விரிவாக்கத்திற்கும் நிலங்கள் மானியங்களாக பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இதன் விளைவாக நிலத்தை அடிப்படையாகக் கொண்ட நிலவுடமைக் கூட்டம் வளர்ச்சிப் பெற்றது. இந்தியாவில் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் அடிப்படையாக “நிலமானிய முறை” இருந்தது என ஆர்.எஸ்.சர்மா தனது “இந்திய நிலமானிய முறை” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் வடபகுதியில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் நிலத்தில் தனியுடமை இருந்ததற்கும், சோழர் ஆட்சி காலத்தில் பார்ப்பனர்களுக்கும், வேளாளர்களுக்கும் நிலமானியம் வழங்கப்பட்டதை குறிப்பிட்டு இதுவே நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தோற்றம் என நெபுரு கராசிமா தனது கல்வெட்டு ஆய்வுகள் மூலம் கூறுகிறார்.

மார்க்சிய வரலாற்று பொருள்முதல்வாத ஆய்வின் அடிப்படையில் ஆய்வு செய்யும்போது நமக்கு புலப்படுவது யாதெனில் ஐரோப்பிய சமூக அமைப்பை போன்றே இந்திய சமூகத்திலும் அடிமைமுறை, நிலவுடமைமுறை இருந்தன என்பதை பல ஆதாரங்கள் மூலம் வரலாற்று அறிஞர்கள் நிரூபிக்கின்றனர்.

II
மனிதகுலம் இதுவரையில் ஐந்து சமூக வளர்ச்சி கட்டங்களைக் கண்டுள்ளது. அவை” 1. புராதன பொதுவுடமை சமூகம், 2. அடிமைமுறை சமூகம், 3. நிலவுடமை சமூகம், 4. முதலாளித்துவ சமூகம், 5. சோசலிச சமூகம். இத்தகைய சமூக வளர்ச்சி என்பது நேர்க்கோட்டு வகையான இயந்திரகதியானது என்று எதிர்ப்பது தான் மார்க்சிய எதிர்ப்பாளர்களின் கருத்தாகும்.

இது நாள் வரை சமூக வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகத்தான் உள்ளது என்று மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் மார்க்சிய எதிர்ப்பாளர்களான புதிய இடது, பின்நவீனத்துவ மற்றும் புதிய மார்க்சியர்கள் அனைவருக்கும் மார்க்சியத்தில் பிடிக்காத வார்த்தைகள் உண்டு என்றால் அது “வர்க்கம், வர்க்கப் போராட்டம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” போன்றவைகள்தான்.

உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்ட தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் சோஷலிச குடியரசு, உலக ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கான பாதையை வகுத்து தந்தது மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எதிரியின் கோட்டையை தாக்க தயாராகிக்கொண்டிருந்த போது மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் அஞ்சி நடுங்கி சோவியத் ஆட்சியை எதிர்த்து பல அவதூறுகளை தாக்குதல்களை தொடுத்தன. அதன் ஒரு அம்சம்தான் 1920-1930ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கிய பிராங்பர்ட் பள்ளி. அதன் தலையாய நோக்கம் மார்க்சியத்தையும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்த்து கருத்துமுதல்வாதிகளான காண்ட் மற்றும் ஹெகலுக்கு புத்துயிர்ப்பு கொடுப்பதுதான். போல்ஷ்விக்குகளை எதிர்ப்பவர்களுக்கும் மார்க்சியத்தை விமர்சிப்பவர்களுக்கும் பிராங்பர்ட் பள்ளியின் கதவுகள் திறந்துவிடப்பட்டன.

பிராங்பர்ட் பள்ளி வைத்த முதல் விமர்சனமே மார்க்சியத்தின் அடிப்படையான வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை நிராகரித்து கருத்து முதல்வாதத்தை முன்னிறுத்துவதுதான். அதாவது உற்பத்தி சக்தி உற்பத்தி உறவுகள்தான் ஒரு சமூகத்தின் உண்மையான பொருளியல் அடிப்படைகள். அதற்கு ஏற்ப சமூக மேற்கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை மறுத்து, சமூகத்தை அடித்தளம் மேற்கட்டுமானம் என்று பிரிப்பதை எதிர்த்து, சாதி, மத, பாலினம் போன்ற மேற்கட்டுமானங்களே சமூகத்தை தீர்மானிக்கும் சக்திகள் என்றும் இவையே வரலாற்றின் முழுமை என்ற 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மார்க்சிய எதிர்ப்பாளரான கிராம்சியின் கருத்துகளை முன்வைத்தது.

வர்க்கம், வர்க்கப் போராட்டம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிராக 1930ஆம் ஆண்டுகளில் பிராங்பர்ட் பள்ளியின் உதவியுடன் உலகம் முழுவதும் “ஆசிய உற்பத்தி முறை” என்ற கருத்தாக்கம் பரப்பப்பட்டது. அதன் உண்மையான நோக்கம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் காலனிய ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதாகும்.

ஆசிய உற்பத்தி முறை குறித்து 1931ல் லெனின்கிராடில் ஸ்டாலின் தலைமையில் அகிலம் கூட்டப்பட்டது. அதில் இதுவரை வரலாற்றில் வர்க்கப் போராட்டம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை உலகம் முழுவதும் புராதன பொதுவுடமை, அடிமை, நிலவுடமை மற்றும் முதலாளித்துவம் என்ற வகையிலான சமூகங்கள்த்தான் மனிதகுலம் கண்டுள்ள பொது நிகழ்வு. இதில் ஆசிய உற்பத்தி முறைக்கு எந்த இடமும் இல்லை என்று அகிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை உறுதிப் படுத்தும் வகையில் 1938ஆம் ஆண்டு ஸ்டாலின் எழுதிய “இயங்கியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம்” என்ற நூலில் இதுவரை மனித குலம் கண்டுள்ள உற்பத்தி உறவுகளை குறிப்பிடும்போது “ஆசிய உற்பத்தி முறை”யை அவர் நிராகரித்து இருப்பதை நாம் பார்க்க முடியும்.

மாவோ 1939ஆம் ஆண்டு தனது சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் என்ற நூலில் “உலகின் பிற தேசங்கள் பலவற்றைப் போல், அதே வழிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் சீன மக்கள் (இங்கு நாம் முதன்மையாக ஹான் தேசிய இனத்தை குறிப்பிடுகிறோம்), வர்க்கமற்ற தொல்குடி பொதுவுடமைகளில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் ஊடே சென்றனர். இத்தொல்குடி சமூகம் அழிந்து வர்க்க சமூக மாற்றம் பெற்றது முதல் இன்று வரை ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. இச்சீனச் சமூகம் முதலில் அடிமை சமூக வடிவத்தையும் பின்னர் நிலவுடமை சமூக வடிவத்தையும் மேற்கொண்டது” என்று கூறினார்.

இந்திய வரலாற்றில் வர்க்க ஆய்வை மறுத்து சாதி, மத, மொழி, இனம், பழங்குடி, பாலினம் போன்ற அடையாள அரசியலின் வரலாறாக கட்டியமைப்பதற்கு அடித்தளத்தை வழங்குவதுதான் ஆசிய உற்பத்தி முறை என்ற மார்க்சிய எதிர் கருத்து பரப்பப்படுவதன் உண்மையான நோக்கமாகும். அடையாள அரசியலை முன்னெடுத்து, வர்க்க போராட்டத்தை சீர்குலைப்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும்.

இந்தியாவில் விஞ்ஞானப் பூர்வமாக வரலாற்றை ஆய்வு செய்யும்போது ஆசிய உற்பத்தி முறைக்கு இடம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு வர்க்க ஆய்வை முன்வைப்பதற்கும், இந்திய நிலவுடமை பற்றிய புரிதல் முன்நிபந்தனையாகும். அத்தகைய புரிதலுக்கு ஒசாமூ கோண்டோ எழுதிய இச்சிறு வெளியீடு ஒரு தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன். மிகக் கடினமான வாக்கிய அமைப்புகள் கொண்ட இந்த புத்தகத்தை அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் தனக்கே உரித்தான பாணியில் சிறந்தமுறையில் மொழிபெயர்த்த அன்புத் தோழர் ஆதிவராகன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

(நன்றி: புதுமை பதிப்பகம்)

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp