ஃபாதர் XDS அவர்களின் நூலுக்கு எழுதிய தொகுப்புரை - அ.மார்க்ஸ்

ஃபாதர் XDS அவர்களின் நூலுக்கு எழுதிய தொகுப்புரை - அ.மார்க்ஸ்

(ஃபாதர் XDS அவர்களை எண்பது தொண்ணூறுகளின் சிறு பத்திரிகை வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ‘விடுதலை இறையியல்’ எனும் கருத்தாக்கம் உலகை ஈர்த்திருந்த காலம் அது. அடித்தளமக்களின் போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட ஆர்ச் பிஷப் ஆஸ்கார் ரொமெரோ போன்ற பாதிரிமார்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காலம் அது. அந்தப் பின்னணியில் கோவை ஞானி அவர்களின் ‘நிகழ்’ இதழில் XDS எழுதிய ‘விடுதலை இறையியல்’ எனும் கட்டுரை அன்று பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று. பின் அது நிகழ் வெளியீடாகவும் வெளி வந்தது.அவர் சார்ந்திருந்த சபையின் நிர்வாகத்தில் இருந்த ஒரு தொழிற் பயிற்சிப் பள்ளியில் 32 தொழிலாளிகள் பணி நீக்கம் செய்யப்பட்டபோது நண்பர்கள் நடத்திய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். உடனடியாக திருச்சபை அவரை அவர் அப்போதிருந்ட திருச்சி தூய பவுல் இரையியல் கல்லூரியின் ‘டீன்’ பதவியிலிருந்து நீக்கியது. திருச்சபையின் மிக உயர்ந்த பதைகளுக்கெல்லாம் உயர்த்தப்பக் கூடிய எல்லாத் தகுதிகளையும் பெற்ற அவர் அதைத் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டார். நேற்று (ஏப் 14 ) திருச்சியில் அவரது மாணவர்கள் அவருக்கு ஒரு பார்ராடு விழா நடத்தினர். திருச்சபையின் பெருந்தலைகள் யாரும் கலந்து கொள்ளாத அந்த நிகழ்வில் 20 க்கும் மேற்பட்ட அவரது மாணவர்களும் அவரை அறிந்தவர்களும் கூடியிருதோம். அங்கு அவர் குறித்து இரு நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று நான் தொகுத்தது. அதற்கு நான் எழுதிய தொகுப்புரை இது. ஃபாதர் XDS அவர்களின் முழுப்பெயர் எக்ஸ்.டி. செல்வராஜ். தமிழ்ப் பற்றின் காரணமாக அவர் இன்று ச.தே.செல்வராசு அடிகளார் என அழைக்கப்படுகிறார். இடிந்தகரை அவரது சொந்த ஊர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும் அவர் பங்கு முக்கியமானது.)

தொகுப்புரை

ஒன்று

நான் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவனாயினும் கத்தோலிக்க சமூகத்தில் வளர்ந்தவன் இல்லை. என் தந்தை ஒரு நாடுகடத்தப்பட்ட கம்யூனிஸ்ட். இறுதிவரை இறை நம்பிக்கையின்றி வாழ்ந்தவர். ஆயினும் என் தாயின் நம்பிக்கைகளில் அவர் தலையிட்டதில்லை. 1949ல் மான்னார்குடி தேவாலயத்தில் எனக்கு மார்க்ஸ் எனும் பெயரை வைக்க அப்போதிருந்த பங்கு குரு மறுத்துப் பின் ஏதோ சமரசங்களுக்குப் பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதே போல 1964-65 ல் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பி.யூ.சி வகுப்பில் சேர எனக்கு இடம் கிடைத்தும் இந்தப் பெயரைக் காரணம் காட்டி எனக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது.

இப்படியான ஒரு சூழலில் வளர்ந்தவன் நான். இன்று வரை நான் ஒரு practising christian இல்லை. கிறிஸ்துமஸ், ஈஸ்டர் முதலான நாட்களில் நாங்கள் அப்போது வசித்த பாப்பாநாடு எனும் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஒரத்தநாடு மோட்சராகினி மாதா கோவிலுக்கு அம்மாவுடனும் தம்பி தங்கைகளுடனும் சென்று வருவது, புது நன்மை பெறுவதற்காக சின்ன குறிப்பிடம் மனனம் செய்தது என்பவை தவிர வேறு எந்த வகையிலும் நான் கிறிஸ்தவ இறையியலை அறிந்தவனில்லை. உலகின் மிக முக்கியமான வரலாற்றுப் பெட்டகங்களில் ஒன்றான திருவிவிலியத்தையும் நான் முறையாகப் படித்ததில்லை என்பதைச் சற்றே குற்ற உணர்வுடன் ஒத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. என்னுடைய அரசியலும் வாழ்வும் தொடர்ந்து கிறிஸ்தவ சமூகச் சூழலிலிருந்து என்னை அன்னியப் படுத்தியே வைத்தது. என் மகள்கள் இருவரும் என் சாதி,மதம் இரண்டிலும் திருமணம் செய்து கொள்ளவும் இல்லை.

1980 களில் நான் சற்றுத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் திருச்சபையிலும் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. இந்த நூலில் உள்ள 'இந்தியத் திருச்சபையின் சமூகப் போதனை' எனும் கட்டுரையில் செல்வராசு அடிகளார் குறிப்பிடுவது போல முதற் கட்ட மார்க்சீய எதிர்ப்பு, அரசாதரவு என்கிற நிலையை இரண்டாம் வத்திகான் சங்கத்திற்குப் பின் (1962) திருச்சபை மாற்றிக் கொண்டது. அநீதிகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராகப் போராடும் மக்களுடன் நிற்பது என்கிற விடுதலை இறையியல் கோட்பாடுகள் உலக அளவில் மேலுக்கு வந்தன. இந்தியாவிலும் அதன் தாக்கங்கள் மெலிதாகவேனும் வெளிப்பட்டன. மூன்றாவது கட்டத்தில் அதுவும் கலகத்தா ஆயர் பேரவைக்குப் பின் (1982) 'சமூக நீதி' எனும் கருத்தாக்கம் திருச்சபையில் மேலுக்கு வரத் தொடங்கியது. வறுமை, தீண்டாமை, சாதி ஒழிப்பு முதலியன பேசு பொருட்களாயின. ஒரு பக்கத்தில் திருச்சபைக்குள்ளேயே சாதி வேறுபாடுகள் கோலோச்சியபோதும் இன்னொரு பக்கத்தில் சாதி ஒழிப்பு, தலித் இயக்க ஆதரவு முதலானவற்றிற்கும் திருசபைக்குள் ஒரு இயங்கு வெளி (space) கிடைத்தது. அப்போது இத்தகைய விடுதலை இறையியல் சார்ந்த சிந்தனையால் ஈர்க்கப்பட்ட குருமார்களும் எங்களைப் போன்ற சமூகச் செயல்பாட்டாளர்களும் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாயின. அப்படித்தான் எனக்கு கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சூழல் சற்று நெருக்கமாகியது.

இந்தக் காலகட்டங்களில் ஒரு இளம் குருவாக வெளிப்போந்தவர்தான் (1971) செல்வராசு அடிகளார். திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் அவர் ஒரு பேராசிரியராகவும் பின் தலைவராகவும் பணியாற்றிய அந்த நீண்ட காலகட்டத்தில் (1977-95) என்னைப்போன்ற சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை அழைத்து குருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்குகளில் பேச வாய்ப்பளிப்பார். அவருடைய ஆசிரியத்துவத்தில் வெளிவந்த 'அன்னம்' சிற்றேட்டில் (1987-2002) எங்களின் எழுத்துக்களுக்கும் இடமளித்தார். அப்படி உருவானதுதான் எனக்கு அடிகளாரின் பழக்கம்.

அது இன்றுவரை தொடர்கிறது. மேன்மை மிகு மனிதர்களின் அருகாமை வாழ்வில் கிடைக்கும் பெரும்பேறுகளில் ஒன்று. அந்தவகையில் நான் பேறு பெற்றேன் எனச் சொல்வது மிகையன்று.

ஒரு நான்கு தருணங்களை நான் இங்கே குறிப்பிடல் தகும். 1. திண்டிவனம் ஜோசப் தொழிற்பட்டறையில் 32 தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் (1992-95) பேரா.கல்யாணி, சகோதரி லூசினா ஆகியோருடன் தான் பணிபுரிந்த சபை நிர்வாகத்திற்கு எதிராகவே செல்வராசு அடிகளார் நின்றதும் அதன் விளைவாக அவர் தூய பவுல் கல்லூரித் தலைமைப் பதவியை இழந்ததும் (1995); அந்த நடவடிக்கைக்கு எதிராக திருச்சியில் நடக்க இருந்த ஒரு கண்டன ஊர்வலத்தில் நான் என் தோழர்களுடன் சென்று கலந்து கொண்டது. 2. அதற்குப் பின் கீழ்முடிமன் எனும் பங்கு ஆலயத்தில் அவர் குருவாக அமர்த்தப்பட்டார். 2001 நவம்பரில் ஒரு சாதி மோதலை ஒட்டி, விளாத்திகுளம் அருகில் உள்ள சங்கரலிங்கபுரம், சல்லிச்செட்டிப்பட்டி எனும் இரு தலித் கிறிஸ்தவ கிராமங்கள், காவல்துறையால் சூறையாடப்பட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் வீடு திரும்ப இயலாத நிலை. அப்போது செல்வராசு அடிகளார், பணி.மாற்கு ஸ்டீபன், பணி. சுந்தரி மைந்தன் ஆகியோர் முயற்சியில் அந்த நிலையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதில் பங்கு பெற்றது. 3. ஆண்டு நினைவில்லை. 2006 ஆக இருக்கலாம். கரையோர ஒழுங்கமைப்புச் சட்டம் முதலானவற்றின் ஊடாக மீனவ மக்களின் அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது மீனவ மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க ஒரு கூட்டம் ஒன்றை தூத்துக்குடி மறைமாவட்ட அலுவலகத்தில் அடிகளார் கூட்டியபோது அதில் கலந்துகொண்டது. 4. அடிகளாரின் சொந்த ஊரான இடிந்தகரையை மையமாகக் கொண்டு அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது அடிகளாருடன் இரு முறை அங்கு சென்று வந்தது. 5. அடைக்கலாபுரம் அற நிலைய இயக்குனராக அவர் பணியாற்றிய காலத்தில் (2007-12) ஒருமுறை அங்கு சென்று ஒரு நாள் அடிகளாருடன் தங்கி அவரின் சேவையையும் அந்தச் சூழலையும் கண்டு மனம் நெகிழ்ந்தது.

வேறு பலமுறை அடிகளாரைச் சந்தித்திருந்த போதிலும் இந்தக் கணங்கள் மறக்க இயலாதவை.

இரண்டு

இப்படியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை உருவாக்கும் நோக்குடன் நான் செல்வராசு அடிகளாரின் படைப்புலகத்திற்குள் நுழையவில்லை. அடிகளாருக்கு அவரது மாணவர்கள் எடுக்கும் பாராட்டு விழாவில் வெளியிட உள்ள மலருக்கு ஒரு கட்டுரை வேண்டும் என பணி.குழந்தைசாமி அடிகளார் என்னைக் கேட்டுக் கொண்டபோது என்னிடமிருந்த செல்வராஜ் அடிகளாரின் ஒரு சில நூல்களைப் படித்தேன். பிறகு சென்னை 'அருட்கடலில்' உள்ள நூலகத்திற்குச் சென்று அருட்பணி. அலங்காரம் அடிகளாரின் உதவியோடு செல்வராஜ் அடிகளாரின் எழுத்துக்களை வாசித்துக் குறிப்பெடுக்கத் தொடங்கியபோதுதான் அவரது எழுத்துலகு எத்தனை விசாலமானது என்பது புரிந்தது. விவிலியத்தை வாசித்திராத, கிறி்ஸ்த ஆன்மீகத்தில் பரிச்சயம் இல்லாத எனக்கு அவற்றை இப்படியும் வாசிக்க இயலுமகென்பது வியப்பை அளித்தது.
1987 தொடங்கி 2013 வரை ஆங்கிலத்திலும் தமிழிலும் அவரே எழுதிய நூல்களாகவும், அவர் தொகுத்தவையாகவும், பிற தொகுப்புகளில் எழுதியவையாகவும், அவரது ஆசிரியத்துவத்தில் வந்த இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளாகவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் செல்வராசு அடிகளார் ஏராளமாக எழுதியுள்ளார். அவரது படைப்புலகிற்கு்ள் நான் நுழைந்தபோது அவற்றில் சில முக்கியமான கட்டுரைகளையேனும் தொகுத்து வெளியிட்டால் ஆன்மீக நாட்டமுடையவர்களுக்கு மட்டுமின்றி, சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள மற்றவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் எனத் தோன்றியது. செல்வராஜ் அடிகளார் குறித்து அறிந்திருந்த மனுஷ்யபுத்திரன் அதை 'உயிர்மை' வெளியீடாகக் கொண்டு வர உடன் இசைந்தார். அப்படி உருவானதுதான் இந்நூல்.

அடிகளார் 'அன்னம்', 'மறையருவி', 'Prophetic Voic'e (published by CPCI, Bangalore) ஆகிய மூன்று இதழ்களில் ஆசிரியராக இருந்துள்ளார். இதில் 'அன்னம்' 1987 தொடங்கி 15 ஆண்டுகள் மாத இதழாக வெளிவந்தது. ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சினை பற்றிய பலரது கட்டுரைகளின் தொகுப்பாகப் பல சிறப்பிதழ்கள் வெளி வந்தன. சில இதழ்கள் முழுமையும் செல்வராஜ் அடிகளாராலேயே எழுதப்பட்டுள்ளது.

நூலாக வந்த அவரது படைப்புகளில் 'ஆன்ம வாழ்வு :சில தேடல்கள் தெளிவுகள்'' (வைகறை பதிப்பகம், திண்டுக்கல், 2004), 'இவரல்லவா இறைவன்" (ஆனந்தா பதிப்பகம், ஓரியூர், 2012) ஆகியன முழுமையாக அவர் எழுதியவை.
செல்வராசு அடிகளார் தொகுப்பாசிரியராக வெளிவந்துள்ள நூல்கள்:

1. 'புத்துலகம் படைக்கவே', பவுல் இறையியல் மன்றம், திருச்சி, 1991; விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு, வைகறைப் பதிப்பகம், 2006
2. 'தலித் மக்கள் இயக்கமும் தமிழகத் திருச்சபையும்', சமூக இறையியல் சிந்தனையாளர் குழு, மதுரை, 1991 (இணை ஆசிரியர், பணி. மார்க் ஸ்டீபன்)
3. 'பாறையைப் பிளக்கும் வேர்கள் -:அருள் வாழ்வு இன்று அன்று', பவுல் இறையியல் மன்றம் பவழ விழா வெளியீடு, திருச்சி, 1996
4. 'இறையியல் இறைவாக்கினர்', வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 1999
5. 'உயிரளிக்கும் உடனிருப்பு', வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 2005
6. 'இறையாட்சிக்காக இறைசாட்சியாக', வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 2005
7. 'மனிதரில் புனிதரைக் கண்டேன்', குருக்கள் ஆண்டு வெளியீடு, தூத்துக்குடி, 2008
8. 'எழுச்சி பெறும் மக்கள் சக்தி', தேடல் வெளியீடு, திருச்சி, 2013
9. 'தமிழ்த் தொண்டும் இறைப்பணியும் நம் இரு கண்கள்', தூத்துக்குடி மறைமாவட்ட வெளியீடு, தூத்துக்குடி, 2013

இவற்றில் எழுதப்பட்டுள்ள தொகுப்புரைகள் தவிர பல கட்டுரைகள் பிற தொகுப்புகளிலும் இதழ்களிலும் வெளி வந்துள்ளன. எடுத்துக்காட்டாக 1992 ல் வெளிவந்த அன்னம் சிற்றேட்டில் (ஏடு 5, சிற்றேடு 1,2) வெளி வந்துள்ள 'சமூகப் பகுப்பாய்வு' எனும் கட்டுரை ஒரு முழு நூலாக அமைந்துள்ளது.

இவை தவிர ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளவை:

“The Role of Priests in Today’s India: A Biblico- Theological Reflection”, (New Delhi: Catholic Priests’ Conference of India Publication, 1987).
“Social Perspective of sin in the Bible” Social sin in the Indian context, (New Delhi: Moral Theologians’ Publications, 1988)
“Social Conflict and Spirituality” Jeevadhara, (January, 1993), 16-26
“Social awakening of the Indian Church”, Caste Culture in Indian Church, (New Delhi: Indian Social Institute, 1993), 53-73
“The Prophetic Role of the Secular Priests in India Today”, Vaiharai, vol., I, (March-June, 2004), 91-103
“Priestly Formation Today”, Asian Journal for Priests and Religious, (July, 2006), 15-21
“Changing Trends in Morality”, (Bangalore: Salesian Publication, 2006).
“Social Dimension in Seminary Formation”, Vaiharai, vol.12, (January-June, 2007), 45-56
“Laity Training Manual a Tentative Draft”, Conference of Catholic Bishops of India (CCBI) (ed), (Bangalore: Victor Graphic Designs, 2007).
“Priest as a Prophets in India”, (Bangalore: Catholic Priest Conference of India, 2007).
“Laity – Church’s Teachings - Especially Pope John Paul II”, Divine shepherd voice, vol.6, no., 1, (January –March, 2008), 27-34
“Spirituality of the laity”, Laity in the Church, ed., A.Pushparajan &X.D.Selva, (Bangalore: Indian’ Theological Association Publication, 2010), 168-191.
“Laity in the Church – Identity and Mission in India”, (Bangalore: Indian Theological Association, 2010).
“Social Commitment of the Church and the Role of the laity as Perceived in Vatican II- over view of decision and Reality in 50 years”, New Delhi: CCI Publication, 2012
“Contextual and Prophetic ‘Leader ship –a Catholic Perspective”, Jeevadhara, vol. XlIV, (2014), 33-41
“Social Justice Today” New horizons in Christian Ethics –Reflections from India, (Bangalore: ATC Publication, 2014), 515-528
“The Faith-Struggle of Dalit Christians in the Church in India”, Dalit Christian March towards Equality and Justice, a Sociological engagement, (New Delhi: CBCI Centre, 2015), 22-32
“Gender Justice in the Church and Society”, Biblical Perspectives, (Bangalore: Dharmaram, 2016).
“Christian social Commitment”, (unpublished article),

இவை அனைத்தையும் முழுமையாகப் படித்து அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவை என இத்தொகுப்பு குறித்து நான் உரிமை கோர விரும்பவில்லை. ஆங்கிலக் கட்டுரைகள் இத் தொகுப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. கிறிஸ்தவ ஆன்மீகம் முன்வைக்கும் கடவுள் என்பவர் . அநீதியான சமூக அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பவர் மட்டுமல்ல அவர்களோடு போராட்டக் களத்தில் பங்குபெறுபவரும் கூட என்பதுதான் செல்வராசு அடிகளார் தன் எழுத்துக்களின் ஊடாகச் சொல்லும் சேதி. அந்த நோக்கிலேயே பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையையும், வேற்றுமையையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். கிறிஸ்தவ ஆன்மீகம் என்பது அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இறையியலாக மட்டுமே உள்ளது என்பதையே அவரது எழுத்துக்கள் வலியுறுத்தி நிற்கின்றன. அந்த நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

மூன்று

கிறிஸ்தவ ஆன்மீகத்தின் அடிப்படை அன்புதான் என்பதிலிருந்து தொடங்குகிறார் செல்வராசு அடிகளார். அன்பின் இலக்கணம் என்ன? பிறரை ஏற்றுக் கொள்வது. ஏற்றுக் கொள்வது என்றால் நிபந்தனைகளுடன் கூடிய ஏற்பு அல்ல. மாறாக நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக் கொள்வது. ஒருவேளை நாம் எப்படி இருக்கிறோமோ அதை நாமே கூட ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாக இருக்கலாம். ஆனால் கடவுள் அப்படி அல்ல. அவர் உன்னை நீ இருப்பதுபோலவே ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்.

அதற்கு உன்னிடம் அவர் எதிர்பார்க்கும் கைமாறு என்ன? பதிலுக்கு நீ அவரை அன்பு செய்ய வேண்டும் என்பது பழைய ஏற்பாடு சொல்லும் பதில். ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசு இதோடு கூடுதலாகச் சொன்னது, "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர். அதுவே நீ அளிக்கும் அனைத்துப் பலிகளிலும் மேன்மையானது". இவ்வாறு "கடவுளை அன்பு செய்" எனும் பழைய ஏற்பாட்டுக் கருத்தாக்கத்தை "மனிதரை அன்பு செய்" என்பதாக மாற்றி அமைத்தார் இயேசு என்கிறார் அடிகளார். "கடவுளை மற மனிதனை நினை" எனத் தந்தை பெரியார் சொன்னதோடும், "ஆலயத்தில் உறையும் ஆண்டவருக்குச் செய்வதைகாட்டிலும் நடமாடும் கோவிலான மனிதர்க்குச் செய்" என்கிற திருமூலரின் வாசகத்தோடும் விவிலியம் முன்வைக்கும் இந்த அடிப்படைக் கருத்தைப் பொருத்திக் காட்டுவார் அடிகளார்.

சரி, மனிதரை அன்பு செய்தல் என்பதன் பொருள் என்ன? யாருக்கு அன்பு செய்ய வேண்டும்? எப்படி அன்பு செய்ய வேண்டும்?. தனது மக்கள் பணியைத் தொடங்குமுன் இயேசு வெளியிட்ட பணிப் பிரகடனம் இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது (லூக். 4:16-21). ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை ஆகியன இந்தப் பிரகடனத்தில் முதன்மை பெறுகின்றன. சுருங்கச் சொன்னால் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்பதுதான் நாம் சக மனிதரை அன்பு செய்தலின் இலக்கணம் என்கிறார் அடிகளார்.

இந்த அம்சத்தில் கடவுள் மானுடர்க்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்கிறார். பழைய ஏற்பாட்டின் யாவே கடவுளும் சரி, புதிய ஏற்பாட்டில் இறைமகனாகப் பிறந்து மக்களோடு வாழ்ந்து மறைந்த இயேசுவும் சரி அநீதி இழைக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் விடுதலையும் அளிப்பவர்கள் மட்டுமல்ல நீதிக்கும் விடுதலைக்குமான அம்மக்களின் போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் இருந்தனர் என்கிறார் செல்வராசு அடிகளார். ஆம், கடவுள் என்பவர் அநீதியான சமூக அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பவர் மட்டுமல்ல அவர்களோடு போராட்டக் களத்தில் இருப்பவரும் கூட. இது பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமை.

“எகிப்தியரின் சிறையிலிருந்து உம்மை விடுதலை செய்ய வந்தோம்.. ஓங்கிய கையாலும் பெரும் தண்டனைகளினாலும் உம்மை மீட்போம்“ என யாவே கடவுள் அந்த அடிமைப்பட்ட மக்களிடம் பேசுவதைச் சுட்டிக்காட்டும் அடிகளார், 'ஆக ஆண்டவர் என்றால் ‘சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்பவர்; அடிமைத்தனத்திலிருந்து மீட்பவர் என்பது மட்டுமல்ல. ஓங்கிய கையால் இதை நிறைவேற்றித் தருபவர்’ என்கிற வரையறையையும் அளிக்கிறார், “எல்லோரையும் படைத்தவர் என்பதால் யாவே எல்லோருக்கும் கடவுள்தான். இருந்தாலும் அவர் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களைத் தம் சொந்த மக்களாகப் பார்க்கிறார்.’’ உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் பக்கமாகவே நின்று ஒடுக்குபவர்களை எதிர்த்துப் போராடுபவர்தான் கடவுள். யாவே கடவுள் மட்டுமின்றி இறைமகன் இயேசுவும் அப்படித்தான் ஒடுக்கப்பட்ட மக்களோடு சமபந்தி உண்டார். செல்வந்தர்களைப் பார்த்து. "ஐயோ உமக்குக் கேடு"{ எனச் சபித்தார்.

இது பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒன்றுபடும் புள்ளி . இந்த ஒப்பீடுகளின் ஊடாக கடவுளிடம் அன்பு செய்வதைக் காட்டிலும் சக மனிதரிடம் அன்பு செய்தலை உயர்த்திப் பிடிக்கும் வகையில் பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் புதிய ஏற்பாடு ஒரு படி உயர்ந்து நிற்பதையும் செல்வராசு அடிகளார் துல்லியப்படுத்துவது குறிப்பிடத் தக்கது.

செல்வராசு அடிகளார் ஒரு இளம் பாதிரியாராக உருப்பெற்றிருந்த காலத்தில் கத்தோலிக்கச் சமய உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஒரு கருத்தாக்கம் 'விடுதலை இறையியல்'. அடிகளாரின் இதுகாறும் பேசப்பட்ட கருத்துக்கள் பலவும் இதன் தாக்கத்தில் உருவானவைதான்..
1990 அக்டோபரில் கோவை ஞாநி அவர்களின் ‘நிகழ்' இதழில் இந்தத் தலைப்பில் இடம்பெற்ற அடிகளாரின் கட்டுரை விடுதலை இறையியல் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகமாக அமைந்தது. பின்னர் இக்கட்டுரை 1999 செப்டம்பரில் 'நிகழ்' வெளியீடாகவும் வந்தது. விடுதலை இறையியல் எனும் கருத்தாக்கத்தின் மீதான ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியிருந்த காலத்தில் ‘விடுதலை இறையியல் கல்லறையிலா?’ எனும் அடிகளாரின் இன்னொரு கட்டுரை (மறையருவி, ஏப்-ஜூன் 2007) வெளிவந்தது. சமய உலகில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்திய "விடுதலை இறையியல்" எனும் இக்கருத்தாக்கம் குறித்துத் தமிழில் வெளிவந்த முக்கியமான கட்டுரைகள் என இவற்றைச் சொல்லலாம். இவை இரண்டும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன.

இந்தக் கட்டுரைகளில் யாவே கடவுளும் சரி, இறைமகன் இயேசுவும் சரி இஸ்ராயேல் அல்லது பாலஸ்தீனாவில் வாழ்ந்த அநீதியான ஆளுகைகளால் “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கேட்டு" அவர்களை எல்லா அடிமைத்தனங்களில் இருந்தும் விடுவித்த நிகழ்வுதான் “விவிலியத்தின் மிக அடிப்படையான நிகழ்வு” என்று கூறும் அடிகளார், இதன் தொடர்ச்சியாக “இன்று நாம் வாழும் பொருளாதார சமூக அரசியல், பண்பாட்டுச் சூழல் வழியாகக் கடவுள் மானிடரை முழுமையான விடுதலை வாழ்விற்கு அழைக்கிறார்” என்கிறார், “விவிலியத்தின் ஒளியில் ஆழமாகச் சிந்தித்து, மீண்டும் சமுதாய மாற்றத்திற்காக வேரோட்டமாக அர்ப்பணிப்பதற்கான கருத்துக் கோவையே விடுதலை இறையியல்” என வரையறுகிறார்.

ஆக இறையியல் என்பது தூலமான காலச்சூழல்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளைத் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கும் ஒரு செயல்பாடல்ல. மாறாக அது தொடர்ந்து இயக்கத்தில் இருப்பது. சமகால அறிவுத்தோற்றவியல், மானுடவியல், வரலாறு ஆகியவற்றின் கூர்த்த பார்வைகளை உள்ளடக்கிக் கணந்தோறும் வளர்ந்தும் மாறிக்கொண்டும் இருப்பதுதான் இறையியல். குறிப்பான வரலாற்றுச் சூழலுக்கான இறையியல் உண்மைகளை குறிப்பான வரலாற்று நிகழ்வுகளிலும் மக்கள் போராட்டங்களிலும் நேரடியாகப் பங்கு பெறுவதின் ஊடாகவே கண்டறிய முடியும். இத்தகைய “நடைமுறையை”க் குறிக்க குஸ்தவோ குடியர்ஸ் practise எனும் வழமையான ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் praxis எனும் மார்க்சீயக் கருத்தாக்கத்தைப் பயன்படுத்துவார்.

“இதுகாறும் தத்துவவாதிகளின் பணி உலகை விளக்குவதாக இருந்தது. இனி அது உலகை மாற்றுவதாக இருக்கும்” எனும் கார்ல் மார்க்சின் புகழ்பெற்ற கருத்தாக்கத்தையும் விடுதலை இறையியல் ஏற்றுக் கொண்டது. “இவ்வுலகக் கடமையைப் புறக்கணிப்பவன் தனது அயலானுக்கு ஆற்றவேண்டிய கடமையை மட்டுமல்ல இறைவனுக்கு ஆற்றவேண்டிய கடமையையும் புறக்கணித்தவன் ஆகிறான்” எனும் இரண்டாம் வாத்திகன் பொதுச் சங்கக் கூற்றை அடிகளார் மேற்கோள் காட்டுகிறார். இத்தகைய செயல்பாட்டிற்குச் சமகாலச் சமூகப் பகுப்பாய்வு தேவையாகிறது. அத்தகைய பகுப்பாய்விற்கான கருவியாக மார்க்சீயமே இருக்கமுடியும் என்பதையும் விடுதலை இறையியல் ஏற்றுக் கொண்டது.

விடுதலை இறையியல் கோட்பாட்டிற்கு திருச்சபைக்குள்ளும் வெளியிலும் எதிர்ப்புகள் எழாமல் இல்லை. “விடுதலை இறையியல் என்பதன் மூலம் இறையியலின் அருள் வெளிப்பாட்டுத் தன்மை குறைக்கப்படுகிறது. இறையியல் (theology) வெறும் கருத்தியலாக (ideology) மாற்றப்படுகிறது” என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன.. கடவுளையும் மதத்தையும் மறுக்கும் மார்க்சீயத்திற்கு அதீத முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இறையியல் களங்கப்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.. ஜோசஃப் மிராண்டா Marx and the Bible (1971) எனும் பெயரிலும், மிகுயெஸ் போனினோ Christians and Marxists: The Mutual Challenge to Revolution (1976) எனும் தலைப்பிலும் எழுதிய நூல்கள் இதற்குச் சான்றாக முன் வைக்கப்பட்டன.

விவிலிய இறையியலின் மிக அடிப்படையான கருத்தாக்கங்கள் இப்படி மார்க்சீயக் கலப்பினால் களங்கப்படுத்தப்படுகின்றன என்றனர்.. எடுத்துக்காட்டாக விவிலியம் முன்வைக்கும் மிக அடிப்படையான கருத்தாக்கத்தில் ஒன்று “பாவம்”. மனிதன் இறைவனுக்கு எதிராகச் செய்யும் ஒரு கலகமாக விவிலியம் பாவச் செயலை முன்வைக்கிறது. ஆனால் விடுதலை இறையியலோ “பாவம்” என்பதை சமூக அநீதியாகவும், மனிதர்கள் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ளாமையின் விளைபொருளாகவும் மட்டுமே காண்கிறது என்றெல்லாம் விடுதலை இறையியலின் மீது தாக்குதல்கள் எழுந்தன. இதன் விளைவாக திருச்சபைக்குள் இருந்து செயல்பட்டோர் மிக்க கவனமுடன் விடுதலை இறையியல் குறித்துப் பேச வேண்டிய நிலை உருவாயிற்று. விடுதலை இறையியலில் மார்க்சீயத்தின் பங்களிப்பைக் குறைத்துப் பேச வேண்டிய நிலைக்கு விடுதலை இறையியலை முன்வைத்தவர்கள் தள்ளப்பட்டனர். மார்க்சீய ஒளியில் இறையியல் செயல்பாடுகளைப் பார்ப்பது என்பதை மறுத்து விவிலிய ஒளியில் சிந்தித்தல் என்கிற கருத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இது செல்வராஜ் அடிகளாரின் எழுத்துக்களிலும் வெளிப்படுவதைக் காணலாம். 1990 ல் நிகழ் இதழில் எழுதிய கட்டுரையில் விடுதலை இறையியலுக்கும் மார்க்சீயத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை விரிவாகப் பட்டியலிட்டு, “இயேசுவின் விடுதலை நற்செய்தியும் கார்ல் மார்க்சின் தத்துவச் சித்தாந்தமும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு சந்தித்ததின், ஆழமாகச் சிந்தித்ததின் வெளிப்பாடே விடுதலை இறையியல்” என அழுத்தமாகச் சொல்லும் அடிகளார் பின்னாளில் (2007) எழுதிய “விடுதலை இறையியல் கல்லறையிலா?” எனும் கட்டுரையில் விடுதலை இறையியலின் அடித்தளம் மார்க்சீயமல்ல என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார். “விடுதலை இறையியலின் அடிப்படையோ, இதயத் துடிப்போ மார்க்சீயம் அன்று. மாறாக விவிலியத்தின் மையப் புள்ளியான ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் புதிய இறையியலாக்கம்" என்கிறார் (பக்.57). விடுதலை இறையியலுக்கு அடிப்படையாக உள்ள சமூகப் பகுப்பாய்வு என்பதைச் செய்வதற்கான கருவியாக மட்டுமே மார்க்சீயத்தை அதுவும் விமர்சனத்தோடு கையாள வேண்டும் என்கிற நிலைக்கு வருகிறார்.

இரண்டு கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மார்க்சீயத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்பதும் அடிகளார் இப்படித் தன் கருத்தை மாற்றிக் கொள்ளக் காரணமாக இருந்துள்ளது எனலாம். விடுதலை இறையியல் மீதான ஈர்ப்பும் அழுத்தமும் கத்தோலிக்க சமயத்திற்குள் குறைய நேர்ந்த நிலையில் மார்க்சீயத்தைச் சார்ந்து நின்றதே இதற்குக் காரணம் என்கிற கருத்து மேலெழுந்தது. இதை மறுக்கும் நோக்கிலும் அவர் இப்படிப் பேச நேரிட்டது.

அதே போல விடுதலை இறையியல் என்பது லத்தீன் அமெரிக்கப் பின்புலத்தில் உருவான ஒரு கருத்தாக்கம் என்பதையும் அடிகளார் மறுக்கிறார். இந்திய மற்றும் தமிழ்ச்சூழலுக்கும் இது உரியது என்பதற்கு அழுத்தம் அளிக்க அவர் இதைச் சொல்ல வேண்டியதாகிறது. மற்றபடி விடுதலை இறையியலை ஒற்றைத் தன்மையாய்ப் பார்க்காமல் அதைப் பன்மைப் பண்புடையதாகப் பார்க்க வேண்டும்; சமூக அநீதிகள் என்பன பலதரப்பட்டவை. ஆணாதிக்கம், இன, மொழி ஆதிக்கங்கள், காலனிய ஆதிக்கம், சாதி ஆதிக்கம் என ஆதிக்கங்கள் பலவகைப்படும். அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறு விடுதலை இறையியலும் தொழிலாளிகளுக்கானதாகவும், பெண்ணியம் சார்ந்ததாகவும், இந்தியச் சூழலில் தலித்திய விடுதலையாகவும் அது வெளிப்படும் என்பவற்றிற்கும் அடிகளார் அழுத்தம் அளிக்கிறார். விடுதலை இறையியலின் அடிப்படையாக மார்க்சீயம் இல்லாது போனாலும் மார்க்சீயச் சமூகப் பகுப்பாய்வு அதற்குத் தேவைப் படுகிறது என்கிற வகையில் இதியச் சமூகம் குறித்த ஒரு பகுப்பாய்வையும் அவர் செய்துள்ளார் (அன்னம், ஏடு 5, 1992, இக்கட்டுரை இத்தொகுப்பில் சேர்க்கப்பவில்லை).

இத்தொகுப்பில் உள்ள 'இந்தியத் திருச்சபையின் சமூகப் போதனை' எனும் கட்டுரை முக்கியமான ஒன்று. நான் பிறந்த போது மார்க்ஸ் எனும் பெயரைச் சூட்ட பங்கு குரு மறுத்த கதையைச் சொன்னேன். இன்று அருள் தந்தை செல்வராஜ் அடிகளாரின் எழுத்துக்களைத் தொகுத்துக் கத்தோலிக்கக் குருக்கள் நடத்தும் விழா ஒன்றில் வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்படுகிறது என்பது திருச்சபையின் அணுகல்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதனை மிக விரிவாகவும் நேர்த்தியாகவும் அடிகளார் விளக்குகிறார்.

திருச்சபையின் சமூகப் போதனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்க திருச்சபையின் வரலாற்றை மூன்று காலகட்டங்களக அவர்காலப் பாகுபாடு செய்கிறார். அவை:

1.இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை துவக்கம் முதல் இரண்டாம் வத்திகான் சங்கம் வரை (1944 – 1962),
2.இரண்டாம் வத்திகான் சங்கம் முதல் கல்கத்தா கூட்டம் வரை (1962 – 1974),
3.கல்கத்தா கூட்டம் முதலரந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலம்வரை (1974 - 1991).

1944 -62 காலகட்டத்தைப் பொருத்தமட்டில் காலனி ஆட்சியின் கடைசிக்காலம் தொடங்கி சுதந்திரம் அடைந்த முதல் சில ஆண்டுகள் இவை. ஆங்கில ஆட்சியில் தங்களைச் சற்றே பாதுகாப்பாக உணர்திருந்த திருச்சபையினர் காலனி ஆட்சியை எதிர்த்து இங்கு நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் எதிலும் பங்கெடுத்ததே இல்லை. சுதந்திர இந்தியாவில் புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் கட்சிக்குள் நேரு, ஆசாத் போன்ற ஒரு சில நடுநிலையாளர்கள் தவிர பெரிய அளவில் மதவாத சக்திகள் அதிகம் இருந்தனர். இந்நிலையில் திருச்சபையினர் தம் எதிர்காலம் பாதுகாப்பற்றதாகவும் தெளிவற்றதாகவும் உணர்ந்தனர் என்கிறார் அடிகளார். எனவே இக்காலகட்டத்தில் சமூகப் பணிகளிலும் தேசிய உருவாக்கத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு புதிய சூழலில் ஐக்கியமாதல் என்பதைத் தன் சமூக அரசியல் அணுகல்முறையாகத் திருச்சபை முன்வைத்தது.

எப்படிக் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திருச்சபை விலகி நின்றதோ அதே போல இப்போது மேலுக்கு வந்திருந்த ஜமீன்தாரி ஒழிப்பு, நிலச் சீர்திருத்தம் முதலான கோரிக்கைகளிலிருந்தும் வினோபாபாவே போன்றோரின் பூதான இயக்கம் போன்றவற்றிலிருந்தும் அது விலகி இருந்ததை அடிகளார் சுட்டிக்காட்டுகிறார். கம்யூனிஸ்டுகளைத் தம் முதல் பகையாக முன்வைத்த ஆயர் பேரவை அவர்களை “பசுத்தோல் போர்த்திய புலிகள்” என வரையறுத்தது. சீனப் புரட்சி, இந்திய ரசிய நட்புறவு, கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது ஆகியவற்றால் அதிர்ச்சி அடைந்த திருச்சபை சமூகப் பணிகள் மூலமாக மக்களோடு ஐக்கியமாதல் என்பதை முன்வைத்தது. சமூகப் போராட்டங்களை மேற்கொள்ளும் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் மக்களுடன் நெருக்கமாக ஆவதற்கு இது ஒன்றே வழி என்கிற நிலைபாட்டை எடுத்தது. நிலச்சீர்திருத்தம் போன்ற சமூக மாற்றங்களுக்கும் இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் எதிராகவே சமூகப் பணி அமைய வேண்டும் என்பதை ஆயர் பேரவை முன்வைத்தது என்பதை அடிகளார் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் இரண்டாம் கட்டத்தில் இந்தியத் திருச்சபை இதற்கு நேர் எதிர்மாறான ஒரு நிலை எடுக்க நேரிட்டது. இரண்டாம் வாதிகன் சங்க முடிவுகள் இதற்குப் பின்புலமாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் செல்வராசு அடிகளார். கம்யூனிஸ்டுகளை எதிரிகளாகக் கருதியது முந்திய காலகட்டம் என்றால் இக்காலகட்டத்தில் (1962 – 74) மாஓயிஸ்டுகள், நக்சல்பாரிகள் உள்ளிட்ட மார்க்சீயவாதிகள் மட்டுமின்றி மாற்றுக் கருத்துடையவர்கள், மாற்று மதத்தவர் எல்லோருடனும் இணைந்து பணியாற்றுவது என்கிற நிலை எடுக்கப்பட்டது. இது தவிர விடுதலைக் கல்வி முதலான மாற்றுச் சிந்தனைகளையும் அது வரவேற்றது. துரித நிவாரணப் பணிகளின் மூலம் ஏழை மக்களுக்குச் சேவை செய்ய ‘காரித்தாஸ்’ எனும் நிதி உதவி அமைப்பையும் ஏற்படுத்தியது. இத்தகைய வரவேற்கத்தக்க மாற்றங்கள் அனைத்திற்கும் இரண்டாம் வாத்திகன் சங்க முடிவுகளே அடிப்படையாக இருந்தன.

மூன்றாம் கட்டத்தை (1974 – 1991) நற்செய்திக்கும் மக்கள் மேம்பாட்டிற்கும் உள்ள பிரிக்க இயலாத தொடர்பை வலியுறுத்திய கல்கத்தா ஆயர் பேரவை முடிவுகள் வெளிவந்த ஆண்டுடன் தொடங்குகிறார் அடிகளார். எனினும் இக்கால கட்டத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக் கொடுமைகளை எதிர்க்காததோடு, நலிவடைந்த மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுபவராக இந்திரா காந்தியைத் திருச்சபை புகழவும் நேர்ந்ததை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார். நெருக்கடி நிலை அநீதிகளின்போது அமைதி காத்த திருச்சபையை நோக்கி “கல்கத்தா மாநாட்டில் ‘நீதியின்பால் நிலைத்திருக்க’ அழைப்பு விடுத்தது என்னாயிற்று?” என்கிற கேள்வியையும் எழுப்புகிறார். கருத்தடைக்கு எதிராகத் தன் கண்டனங்களை வலியுறுத்தத் தயங்காத திருச்சபை நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற கட்டாயக் கருத்தடை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றின்போது மௌனம் சாதித்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் 1982 ல் திருச்சியிலும் 1984 ல் நாகபுரியிலும் கூடிய கூட்டங்களில் சாதி ஆதிக்கங்களைக் கண்டித்தும் சமூக நீதியை வலியுறுத்தியும் அறிக்கைகள் முன்வைக்கப்பன. எனினும் மொத்தத்தில் இது “இந்தியத் திருச்சபையின் சமுதாயப் போதனை சரிவு கண்ட காலகட்டம்” என முடிக்கிறார் .

திருச்சபையின் சாபக்கேடாக சாதியப் பார்வை அமைந்த வரலாற்றையும் ஒரு காலத்தில் (1613) பிராமணர்களே குரு ஆகலாம் என்கிற வழக்கமெல்லாம் கத்தோலிக்கத்தில் இருந்ததையும், டி நொபிலியின் காலத்தில் இயேசு சபைக் குருக்கள் ‘பிராமண சன்னியாசிகள்’ எனவும் ‘பண்டார சாமிகள்’ எனவும் பிரிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டும் செல்வராஜ் அடிகளார் 1969 ல்தான் அகில இந்தியக் கருத்தரங்கம் ஒன்றில் இந்தியத் திருச்சபைக்குள் ஊடுருவி உள்ள சாதிப் பிரச்சினை விவாதத்திற்குள்ளானது என்கிறார். சாதிக்கெதிரான போராட்டம் திருச்சபைக்குள் நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்துவதும், திருமுழுக்கு, திருமணம் இறந்தோரைப் புதைப்பது ஆகியவற்றில் சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவதும் அப்போதுதான் முதன் முதலில் வெளிப்படையாகக் கண்டிக்கப்பட்டன. 1984 நாகபுரிப் பேரவை, 1988 கோட்டயம் பேரவை ஆகியவற்றிலும் திருச்சபைக்குள் ஊடுருவி உள்ள சாதி மற்றும் தீண்டாமைப் போக்குகள் கண்டிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் அடிகளார், நற்செய்தியின் ஒளியில் இத்தகைய அநீதிகளைக் கண்டிப்பதிலும் களைவதிலும் திருச்சபை தயக்கமும் தாமதமும் காட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். எனினும் பின்னாளில் திருச்சபை தன் பாதையைத் திருத்திக் கொண்டதோடு தலித் விடுதலை மற்றும் மேம்பாடு குறித்துப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதை விரிவாக விளக்குகிறார், திருச்சபஈகு வெளியே மட்டுமல்ல திருச்சபைக்கு உள்ளேயும் நிலவும் தீண்டாமையை ஒழிப்பது குறித்து திருச்சபை பேச நேர்ந்த சூழலையும் வரலாற்றையும் விளக்குகிறார்.

இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 'வன்முறை ஒரு மீள்பார்வை' எனும் கட்டுரையில் வன்முறையாளர்களுக்கு எதிராக நீதியான கோபத்தை வலியுறுத்தும் விவிலியம் அத்தகைய கோபத்தை வெளிப்படுத்துவதில் வன்முறையின் பங்கை எவ்வாறு அணுகுகிறது என்பதை விளக்க முயல்கிறார்.

"ஆக, இயேசுவில் இரு அணுகுமுறைகளும் செயல்படுகின்றன.ஒரு பக்கம் கனிவும் மனத்தாழ்ச்சியும் (மத் 11:29) மன்னிப்பும் (மத் 6:14-15, மாற் 11:25), மறுபக்கம் இறைவாக்கினருக்குரிய கண்டிப்பும் நீதியான கோபமும் (மத் 23:13-26; யோவா 2:13-22; 8:11) வெளிப்படுத்துகின்றன. எத்தகைய அணுகல்முறையை எந்த நேரத்தில் உபயோகிப்பதென்பது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடைய எதார்த்த சூழல் ஆய்வையும், அச்சூழலில் செயலூக்கத்திற்காக ஆவியார் தரும் உந்துதலையும் பொறுத்து அமையும்"

எனக் கூறும் அடிகளார் முத்தாய்ப்பாகவும் முடிவாகவும் எதையும் சொல்லாமல் நம் சிந்தனைக்கு எனச் சில கேள்விகளை முன்வைத்து முடித்துக் கொள்கிறார். திருகுர்ஆனையும் திருவிவிலியத்தையும் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் விவிலியம் அப்படி ஒன்றும் வன்முறைக்கு இடமளிக்காத புனித நூல் எனச் சொல்லிவிட முடியாது எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத் தொகுப்பில் உள்ள இறுதி மூன்று கட்டுரைகள் கிறிஸ்தவ ஆன்மீகத்தை அதன் சரியான பொருளில் நடைமுறைப்படுத்திய அதிரியன் கௌசானல் அடிகளார், அநீதிக்கெதிரான போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த ஆர்ச்பிஷப் ஆஸ்கார் ரொமெரொ, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்ட தனிநாயகம் அடிகளார் ஆகியோர் குறித்த அறிமுகங்களாக அமைகின்றன. தனிநாயகம் அடிகளரைப் பொருத்த மட்டில் உலகத் த்மிழர்களை ஒன்றிணைப்பது என்பது தவிர ஈழ மக்களின் போராட்டத்திலும் அவரது பங்களிப்புகள் இருந்துள்ளன. எனினும் தமிழின் பெருமையை உலகெங்கிலும் எடுத்துச் சென்ற அவரது பணியே இக்கட்டுரையில் கவனப் படுத்தப்படுகிறது.

செல்வராசு அடிகளாரின் இதர பல எழுத்துக்களும் முக்கியமானவை. வாய்ப்பிருந்தால் இரண்டாவது தொகுப்பொன்றையும் இதன் தொடர்ச்சியாகக் கொண்டு வரலாம். அவரது ஆங்கிலக் கட்டுரைகளையும் கூடத் தனியாகத் தொகுக்கலாம். மொழி பெயர்த்தும் வெளியிடலாம்.
இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டது ஒரு இனிய அனுபவம். இறையியலில் நாட்டமுடையவர்களுக்கு மட்டுமல்ல, சமூகப் போராட்டங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், இந்தியக் கிறிஸ்தவம் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கும் இத் தொகுப்பு பெரிதும் பயன்படும் என நம்புகிறேன். இந்தியச் சமூகத்தின் சாபக் கேடான சாதி, தீண்டாமை ஆகியவை இங்கு கிறிஸ்தவத்தையும் விட்டு வைக்கவில்லை என்றபோதிலும் எளிய மக்களின் சமூக மேலாக்கத்தில் கிறிஸ்தவம் இங்கு பெரும்பங்கு ஆற்றியிருப்பதை யாரும் மறுத்துவிட இயலாது. குறிப்பாகத் தமிழகத்தில் தலித் இயக்கங்கள் எழுச்சி பெற்றதில் கத்தோலிக்க மற்றும் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் பங்கை நாம் நேரில் கண்டவர்கள்.

இந்தத் தொகுப்பு உருவாவதற்குக் காரணமாக இருந்த அருட்பணியாளர்கள் குழந்தைசாமி அடிகளார், சந்தியா சகேசு அடிகளார் தங்களின் நூலகத்தை விரிவாகப் பயன்படுத்த அனுமதித்த 'அருட் கடல்' அலங்காரம் அடிகளார்மிந்த நூலைத் தொகுக்க என்னை அனுமதித்ததோடு மட்டுமின்றி நான் தொந்தரவு செய்த போதெல்லாம் சலித்துக் கொள்ளாமல் அன்புடன் விளக்கங்கள் அளித்த செல்வராசு அடிகளார், எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய தொகுப்பு பற்றிக் கூறியவுடன் ஆர்வமுடன் வெளியிட முன்வந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன், அச்சாக்கத்தில் துணை புரிந்த இளம் தோழர் பழனி சஹான் எல்லோருக்கும் என் நன்றிகள்.

அ.மார்க்ஸ், சென்னை, ஏப்ரல் 09, 2016

உள்ளடக்கம்

1. கடவுளின் ஏற்பா கடவுளுக்கு அன்பா
2. கடவுள் சில பார்வைகள்
3. விடுதலைக்கு முன் நிபந்தனை
4. விடுதலை இறையியல்
5. விடுதலை இறையியல் கல்லறையிலா?
6. வன்முறை ஒரு மீள்பார்வை
7. இந்தியத் திருச்சபையின் சமூகப் போதனை
8. கௌசானல்- நீதி வேட்கைப் போராளி
9. ஆஸ்கர் ரொமெரொ - அர்த்தமுள்ள அருள் வாழ்வு
10. தனிநாயகம் அடிகளார்

சமர்ப்பணம்

தமிழகத்தில் தலித் அரசியல் மற்றும் தலித் இலக்கியம், கருத்தியல் ஆகியவற்றின் உருவாக்கத்தில் விடுதலை இறையியலால் ஈர்க்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் பலருக்கு முகிய பங்குண்டு. அருட்தந்தை ச.தே.செல்வராசு அடிகளாரின் இத்தொகுப்பு அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp