எரியும் பனிக்காடு: தேயிலைத் தோட்டங்களின் கதை

எரியும் பனிக்காடு: தேயிலைத் தோட்டங்களின் கதை

முதல் உலகப் போர் நடைபெற்றது கருப்பன், வள்ளி இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியா பிரிட்டனின் காலனி தேசமாக இருப்பது தெரியாது. இந்திய தேசிய காங்கிரஸ் தெரியாது. வங்கப் பிரிவினை தெரியாது. காந்தி தெரியாது. தென் ஆப்பிரிக்கப் போராட்டம் தெரியாது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், ரவுலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், சைமன் கமிஷன், பகத் சிங், தண்டி யாத்திரை எதுவும் தெரியாது. அவர்கள் வசிக்கும் மயிலோடை கிராமம் தெரியும். மற்றபடி, திருநெல்வேலியைக்கூட முழுவதுமாக அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை.

நாங்கள் ஏழைகள். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். விலங்குகளுக்குச் சமமாகவோ அல்லது விலங்குகளை காட்டிலும் கீழானவர்களாகவோ சமூகத்தால் மதிக்கப்படுகிறோம். எங்களுக்குப் பட்டினி பழக்கமாகிவிட்டது. அவமரியாதை பழக்கமாகிவிட்டது. ஏ நாயே என்று அழைத்தால் உடலை குறுக்கிக்கொண்டு, சொல்லுங்க சாமி என்று ஓடிவர பழகிவிட்டது. தேங்காய் மூடியில் தேநீர் குடிக்கிறோம். வாரம் ஒரு முறையாவது பொங்கிச் சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வோம்.

பஞ்சம் பிழைக்க வழி தெரியாமல் கருப்பன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஓர் அழைப்பு வருகிறது. மலைக்கு வா, அங்குள்ள வெள்ளைக்கார துரைகள் நல்லவர்கள். கைநிறையச் சம்பாதிக்கலாம். இலவச மருத்துவ சேவை கிடைக்கும். தவிரவும், மரியாதையுடன் நடத்துவார்கள். தனியே வருவதா என்று யோசிக்காதே, உன் மனைவியையும் அழைத்துவா. போய் வரும் செலவு என்னுடையது. இந்தா பிடி, இது உன் செலவுக்கு. நீ மட்டுமல்ல, உன் போன்ற பலரும் இந்தக் கிராமத்தில் இருந்து வரவிருக்கிறார்கள். தயங்காதே.

கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு இருவரும் வந்து சேர்கிறார்கள். ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிந்துவிடுகிறது. வேலை ஆரம்பமாகிறது. கருப்பனுக்கு விறகு வெட்டும் பணி. வள்ளி தேயிலை கிள்ளவேண்டும். தீப்பெட்டி அளவே உள்ள தகர வீடு. அதையும்கூட இன்னொரு குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். ஆளுக்கொரு போர்வை. மழையில் நனைந்துவிட்டால், அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாற்று போர்வை கிடைக்காது. பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம்.

சம்பளம் எவ்வளவு சாமி என்று கேட்டால் முகத்தில் குத்து விழும். பிச்சைக்கார நாயே, உனக்கெல்லாம் கணக்கு வழக்கு சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமா? சொன்னாலும் புரியவா போகிறது? அவர்களாகவே ஒரு தொகையை மாதாமாதம் பதிவேட்டில் எழுதிக்கொள்வார்கள். வந்து சேர்ந்த செலவு, முன்பணம், சமையல் சாமான் வாங்க கொடுக்கும் வாராந்திர பணம், கம்பளிக்கான பணம் என்று ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக கழித்துக்கொண்டே வருவார்கள். ஆண்டு இறுதியில் அழைப்பார்கள். உன்னுடைய மொத்த சம்பாத்தியம் எழுபது ரூபாய். கடன் அறுபது ரூபாய் கழிந்து பத்து ரூபாய் மிச்சமிருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு ஊருக்குப் போகமுடியாது. இன்னொரு வருஷம் வேலை செய். போ.

பெண்கள் தேயிலைக் கொழுந்துகளைக் கிள்ளிக்கொண்டிருக்கும்போது, வெள்ளைக்கார துரைமார்கள் பெண்களின் கன்னத்தைப் பிடித்து கிள்ளுவார்கள். சரி போகட்டும் என்று பொறுத்துக்கொண்டால், கணக்கில் வரவு கூடும். இலை கிள்ளவேண்டாம். வள்ளியைப் போல் அழுதுபுரண்டு, அலறினால், கூடைக்கூடையாக இலைகள் கிள்ளினாலும் வரவு இருக்காது. அவமானமும் அடிகளும் கிடைக்கும்.

ஓடிப்போகலாம் என்று உள்மனம் படபடக்கும். சாத்தியமில்லை. எஸ்டேட் அதிகாரிகளிடம் இருந்து ஒரு வேளை தப்பினாலும் விலங்குகளிடம் இருந்து தப்பமுடியாது. அப்படியே தப்பினாலும் மலை நெடுக அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அரண்களில் ஏதாவது ஒன்றில் தடுத்துப் பிடித்துவிடுவார்கள். அனைத்தையும் கடந்து நடந்தும் ஓடியும் ஊருக்குப் போய்விட்டாலும், அங்குள்ள காவலர்கள் வீட்டுக்கே வந்து கைது செய்வார்கள். அது ஒரு மாயப்பின்னல்.

கழிப்பறை கிடையாது. மருத்துவ வசதிகள் கிடையாது. பணிபுரிபவர்கள் இறந்துபோனால், தூக்கிக்கடாசிவிட்டு ஊரிலிருந்து மேலும் சிலரை ஆசைக்காட்டி அழைத்துவருவார்கள். மனைவி இறந்தால், கணவன் ஒரு நாள் துக்கத்தில் இருக்கலாம். மறுநாள் எட்டி உதைத்து எழுப்பிவிடுவார்கள். பிரசவத்துக்குச் சில தினங்கள் மட்டுமே விடுமுறை அனுமதி. வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய்.

’நம்மைப் பொறுத்தவரை மலேரியா ஒழிப்புக்கும், மருத்துவத்துக்கும் ஏராளமான தொகையைச் செலவழிப்பதைவிட இந்த நாத்தம் பிடித்த பிச்சைக்காரப் பயல்கள் செத்துத் தொலைந்து போவதே நல்லது. கொஞ்சம் ஆட்கள் குறைந்து போவது இந்த நாட்டுக்கு மிகவும் நல்லது. பொருளாதார அடிப்படையில்.’ இப்படித்தான் நினைத்தார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள்.

பிரிட்டனுக்கு இந்தியா ஒரு காலனி நாடு. எதற்காக ஒரு நாடு காலனியாதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறது? அங்குள்ள வளங்களை உறிஞ்சுக்கொள்வதற்காக. அங்குள்ள மக்களைப் பயன்படுத்திக்கொள்வதற்காக. கைநிறைய லாபம் ஈட்டுவதற்காக. ’மனிதாபினத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு லாபமீட்டித் தருவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம். அதுவும் கொழுத்த லாபம். அதற்கான விலையை இந்த நாடு கொடுக்கிறதா அல்லது வேறு யாராவது கொடுக்கிறார்களா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நமக்கு லாபம் வேண்டும். அதை ஈட்டியே ஆகவேண்டும்.’

1900 முதல் 1930 வரை வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேட்டறிந்து அழுத்தமான ஒரு நாவலாக உருமாற்றியிருக்கிறார் பி.எச். டானியல். ஆங்கிலத்தில் Red Tea. தமிழில் எரியும் பனிக்காடாக வெளிவந்துள்ளது. விடியல் பதிப்பம். மொழிபெயர்த்திருப்பவர், இரா. முருகவேள். மலையருவி போல் சரளமாகப் பாய்ந்து செல்லும் நடை. இப்படியும் மொழிபெயர்க்கமுடியுமா? (முருகவேள் அருமையாக மொழிபெயர்த்த மற்றுமோர் புத்தகத்தைத் தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்).

தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்த தமிழர்களின் கதை இன்னமும் சொல்லப்படவில்லை என்று ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். எத்தனை ஆயிரம் பேர் இங்கிருந்து அங்கே சென்றிருப்பார்கள்? இடையில் எத்தனை பேர் விலங்குகளிடம் சிக்கி இறந்துபோயிருப்பார்கள்? தேயிலைத் தோட்டங்களில் அவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் என்னென்ன? அங்குள்ள தோட்டக் கல்லரைகளில் எத்தனை தமிழர்களின் சடலங்கள் புதைந்துபோயுள்ளன?

தேயிலை, காபி தோட்டங்களில் மட்டுமே நிலவிவரும் கொடுமை அல்ல இது. இந்தியா முழுவதும் அடிமைமுறை இந்த நிமிடம் வரை பரவிகிடக்கிறது. கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும். அன்று ஐம்பதுக்கும் நூறுக்கும் விலைபோனவர்கள் இன்று ஒரு சில ஆயிரத்துக்கு தங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. வெள்ளைக்கார துரைகளுக்குப் பதிலாக உள்ளூர் செல்வந்தர்கள். செங்கல் சூளைகளில் இருந்தும், திருப்பூர் சாயப்பட்டறைகளில் இருந்தும் மீட்கப்படும் கொத்தடிமைகள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மீட்கப்படாமல் பல கருப்பன்களும் வள்ளிகளும் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காலனியாதிக்கத்தின் நிஜ முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது எரியும் பனிக்காடு. கண்களில் நீர் சேராமல் இப்புத்தகத்தைப் படித்து முடிப்பது சிரமமானது.

(நன்றி: மருதன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp