தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன் சிறுகதைத் தொகுப்பு

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன் சிறுகதைத் தொகுப்பு

Share on

தமிழில் சிறுகதைகளின் பயணம் நீண்டநெடிய ஓன்று. காலத்துகேற்ப அது தன் பரப்பிலும் வடிவத்திலும் பல மாற்றங்களை உள்வாங்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பக்கங்கள் பல தாண்டி, சிறு சிறுகதைகள் (சி.சி கதைகள்), உடனடிக் கதைகள், நான்கு வரி, நான்கு செகண்ட் என கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் எழுத்துலகில் சிறுகதை பல வடிவங்களை கடந்து வந்துள்ளது.

அந்தக் கோணத்தில் ஓரு எழுத்தாளரின் ஏறக்குறைய நாற்பது வருடத்திற்கு முந்தைய சிறுகதைகளை அதன் வடிவம் மாறாமல் அப்படியே மறுபதிப்பாக வெளியிட்டால் என்ன ? அதற்கான விடைதான் சமீபத்தில் வெளியான நாஞ்சில் நாடனின் தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் சிறுகதைத் தொகுப்பு. இது நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.

நாற்பது வருடங்கள் என்பது ஓரு தலைமுறையைத் தாண்டிய நீண்டதொரு இடைவெளி. அந்த வகையில் தமிழில் இந்த நிகழ்வை கண்டிப்பாக ஓர் அற்புதம் எனலாம். இன்றைய இலக்கியச் சூழலில் இது ஓரு ஆரோக்கியமான தொடக்கம்.

“33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் சிறுகதை தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது” என நாஞ்சில் நாடன் தனது முன்னுரையில் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் பாலா எழுதி ‘இவன்தான் பாலா’ என்று ஆனந்த விகடன் வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான ‘இடலாக்குடி ராசா’ வைக் குறிப்பிட்டு அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்ற வகையிலும் இந்தத் தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தத் தொகுப்பில் ஆசிரியர் 1975ல் எழுதிய முதல் சிறுகதையில் தொடங்கி 1979 வரை எழுதிய 11 கதைகள் மொத்தமாக இடம்பெற்றுள்ளன. நாஞ்சில் நாடனின் படைப்புகளுக்கு அறிமுக வாசகன் என்ற அளவில் இந்தத் தொகுதியை எந்தவிதமான எதிர்பார்ப்பின்றி அதே சமயத்தில் ஓருவித ஆர்வத்துடன் அணுகினேன்.

ஊர்த்திருவிழாவில் அம்மன் வாகனத்தை வைத்து அரசியல் பண்ணும் ஓரு கூட்டம். தன் பெயர் தெரியாத வைத்தியனை எப்படியும் ஊராட்சி தேர்தலில் ஓட்டுபோட வைத்துவிடத் துடிக்கும் இரண்டு கோஷ்டிகள். வீரிய முருங்கை நடும் நிகழ்ச்சியை அம்மன் கோயில் மைதானத்தில் நடத்தும் ஊர்மக்கள்.

அது போல, கட்சி மாநாட்டுக்குச் சென்று திரும்பும் பரமசிவம் பிள்ளை. தனது இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்து நிற்கும் சுந்தரம். விரதச் சாப்பாட்டுக்காக மகள்கள் வீட்டுக்குச் சென்று சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு சாப்பிடாமலேயே திரும்பிவந்து பழைய சோற்றை சாப்பிட உட்காரும் சின்னத்தம்பியா பிள்ளை. கல்யாண வீட்டில் கடைசிப் பந்தியை எதிர்பார்த்துக் கிடக்கும் பண்டாரம் என ஓவ்வொரு கதையும் ஓவ்வோரு தளத்தில் இயங்குகிறது. ஓரு கதையைப் போல இன்னோன்று அதன் சாயலின்றி இருப்பது இந்தத் தொகுதியின் சிறப்பு.

கதைகள் திருகலான மொழியில்லாமல் எளிமையாக வாழ்வின் அனுபவத்தைப் பேசுவதாக உள்ளது. தொகுப்பில் எந்தவோரு கதையும் சோடை போகவில்லை.

ஓவ்வோரு கதையிலும் வேவ்வேறு நாஞ்சில் நாட்டு மனிதர்களையும் அவர்களின் எளிய வாழ்க்கையையும் சித்திரமாய் வரைந்திருக்கிறார்.

வெளிப் பார்வைக்கு அந்தச் சித்திரங்கள் ஓன்றுக்கொன்று தொடர்பற்றவை போலத் தோன்றினாலும் வாசிப்பின் முடிவில், அவை ஓன்றுடன் ஓன்று சேர்ந்து அழகானதோரு சித்திரக்கதை போல நாஞ்சில் நாட்டு எளிய மனிதர்களின் வாழ்க்கையை மனத்தில் வரைந்து செல்கிறது.

நாஞ்சில் நாடனின் மொழியில் சொல்வதேன்றால் மாடுகளின் மணிச் சத்தத்தில் மயங்கி நிற்பதைப் போன்றதோரு அனுபவம் வாசனுக்கு. இந்த நாற்பது வருடத்திற்கு முந்திய கதைகளை அதே மொழியில், அதே சொல்லாடல்களில் படிப்பது மாறுபட்ட வாசிப்பனுபவமாக இருக்கிறது. அப்படி யதார்த்த நடையில் இருப்பதால் இந்தக் கதைகளை எளிதாக நம் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கின்ற வகையில் இருக்கிறது.

மனித வாழ்க்கையையும் அதனுள் மறைந்திருக்கும் ஆசை, அன்பு, அறம், முரண்கள், அவலங்கள் என சகலமானவற்றையும் சொல்லும் பிரதிநிதிகளாக எளிய நாஞ்சில்நாட்டு மனிதர்களைப் படைத்து தன் கதைகளில் உலாவவிட்டிருக்கிறார். அவர் எழுத்தில் அந்த நாஞ்சில் நாட்டு மனிதர்களின் வாழ்க்கை நம் கண்முன் அழகாய் விரிகின்றது.

“எச்சம்” என்ற கதையில் பலநாட்கள் நோய்வாய்பட்ட பலவேசம் பிள்ளை செத்துப்போகிறார். அதற்கு முன் அந்தக் குடும்பத்தின் மனநிலையை இப்படி விவரிக்கிறார்:

“..மகன்களோ, இது சீக்கிரம் தொலைந்தால் தேவலையே என்ற நிலைக்கு வந்துவிட்டனர். என்றாலும் மருந்தும் மத்திரையும் நின்று போகவில்லை.

( பலவேசம் பிள்ளையின்) ஜாதகங்கள் ஓன்றுக்கு மூன்று முறை சோதிக்கப் பட்டன. கிரகங்கள் எதுவும் சரியான நிலையில் இல்லை. “பாடு படுத்திவிட்டுத்தான் போவார்” என்றுதான் சோதிடர்கள் மதிப்பிட்டனர். அவர்களுடைய மதிப்பும் தான் பொய்யாகிவிடவில்லையே! இந்த ஐந்து மாதங்களாகச் சின்னபாடாப்படுத்திவிட்டார் ? எப்படியோ இன்று காலை எட்டு மணிக்கு பலவேசம் பிள்ளை செத்துதான் போனார்…”

இப்படி வாசகனை அந்த சாவை தாண்டி மேலே கதைக்குள் செல்ல மனதளவில் தயார்படுத்திவிடுகிறார். பாசாங்கற்ற தன் எழுத்தால் செத்த வீட்டையும் அதை ஓட்டிய சம்பவங்களையும் கண்முன்னே கொண்டுவருகிறார். அவர் கதையில் சொல்லும் நோயாளியின் முடை வாடையும் அதைத் தொடர்ந்த பெண்களின் ஓப்பாரியும் கதையை வாசித்து முடித்த சில நாட்களுக்குப் பிறகும் நம் மனத்தைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது.

இவர் கதைகளில் இடம்பெறும் சில விவரணைகள் கூட ஆச்சர்யமூட்டுகின்றன. உதாரணமாக “இட்லிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் ‘கொர்’ என்ற சீரான இரைச்சல் “. தன்னைச் சுற்றிய மனிதர்களையும், நிகழ்வுகளையும் ஆசிரியர் எந்த அளவு வாசித்திருக்கிறார் என ஆச்சர்யப்பட வைக்கிறார்.

“காளைகளின் கழுத்துமணி ஓசை நின்றுவிட்டபடியால், தாலாட்டு நின்றதும் விழிக்கும் குழந்தைபோல், உறக்கம் கலைந்து விழித்தார்”. இப்படிப் போகிற போக்கில் கவித்துவத்துடனும் கதைச் சொல்லிச் செல்கிறார்.

உயிரோட்டமான இந்தக் கதைகளில் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கலந்தே இருக்கின்றது.

காக்கன் குளத்தில் நடைபெறும் முருங்கை மரம் நடும் நிகழ்ச்சிக்கு தயாராகும் அம்மன் கோயில் மைதானத்தில் (பக்கம் 90) :

“...ஊரிலிருந்த பெண்டு பிள்ளைகளிடமும் வருகின்ற போகின்ற ஆண்களிடமும் அந்த ஓலிப்பெருக்கிப் பெண் மச்சானைப் பார்த்தீங்களா ? என்று பலமுறை கேட்டுவிட்டாள். மணி- மாலை ஆறரை நெருங்கிவிட்டது. ‘மச்சானை’ப் பற்றி யாரும் கவலைப்படாமல்.. ”

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னோரு விஷயம் உணவு. ஏதோ ஒரு விதத்தில் உணவு பற்றிய குறிப்பு பெரும்பாலான கதைகளோடு இழைந்தாடுகிறது. தேர்தலின் போது தொண்டர்களுக்குத் தயாராகும் சுக்குக்காப்பி , தேர்தல் சின்னமான பூசணிக்காயில் தயாராகும் சாம்பார். கல்யாணப் பந்தியில் பறிமாரப்படும் எரிசேரி, அவியல் என வரிசையாக நாஞ்சில் நாட்டு உணவு வழக்கத்தை நமக்கு நாவில் எச்சில் ஊறும் வகையில் தன் எழுத்தில் சுவையோடு சமைத்திருக்கிறார்.

மொந்தன் காயில் செய்யப்படும் வாழைக்காய் புட்டு பற்றி அவருடைய குறிப்பு (பக்கம் 100) :

“.. (மொந்தன் காய்) இரண்டாகக் குறுக்கு வாட்டில் நறுக்கி, அவித்து, தோலை நீக்கிப் புட்டரிப்பார் சீவி, தேங்காய் துருவிப் போட்டு, பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, உப்பு, உளுத்தம்பருப்பு,கடுகு எல்லாம் போட்டு எண்ணைய் உற்றித் தாளித்து..”

இப்படி ஓரு தேர்ந்த சமையல் கலைஞனின் குறிப்பு போல ரசனையுடன் சொல்கிறார்.

அதே சமயத்தில் அந்தகால அரசியல் சூழ்நிலை, தாழ்த்தபட்ட மக்களின் சமூக நிலைமை போன்ற விசயங்களும் கதையோடு ஓட்டி வருகிறது.

உதாரணமாக. “இந்தியச் செல்வம் எழுபத்தைந்து பேருக்கு அடிமைப்பட்டிருப்பதைப் போன்று ஊரில் நிலபுலன்கள் ஏழேட்டுப் பேரிடமே இருந்தன”. இது கதை எழுதிய காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையை வாசகனுக்குச் சுட்டுகிறது.

“..சேரியையும் வெள்ளாளங்குடியையும், இணைக்கும் கப்பிரோடு அந்த மூலையில் சந்திக்கிறது. எனவே கொடை பார்க்க வந்திருந்த பெண்களும், ஆடவர்களும் அங்கு ஓரமாக ஓதுங்கி நின்றனர். மற்ற நாட்களில் வேளாளர்கள் வீட்டு அடுக்களை வரை புழங்கும் அவர்கள், இன்று தனிப்பட்டு நின்றனர்.” எனும் போது பொதுவெளியில் வேளாள சமூகத்தின் முரண்பாட்டைத் தோலுரிக்கிறார் (பக்கம் 23).

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தனது எழுத்துகளில் ஆங்கிலச் சொல்லாடல்களை (பேச்சு வழக்கல்ல) பிரயோகித்திருக்கிறார் என்பதை மட்டும் கொஞ்சம் மாற்றுக் கருத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது.

‘இடலாக்குடி ராசா’ கதையில் அவனுடைய கண்களை இப்படிச் சொல்கிறார் (பக்கம் 81).

“ஆனால் கண்கள் ? வெண்டிலெஷனுக்குப் போடும் நிறமில்லாத ஓளி ஊடுருவாத கண்ணாடிபோல் ஓரு மங்கல்.”

அதை ஆசிரியரின் பாணியாகப் பார்க்க பழகிக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

ஓரு வாசகனாக நல்ல நாவலின் முடிவில் நாம் ஓரு சில கதாபாத்திரங்களின் வழி அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து திரும்புவோம். அதில் வாசகர்களாகிய நமக்கு கிடைக்கும் உணர்வு உன்னதமானது. இந்த சிறுகதைத் தொகுப்பு அதுபோன்றதோரு வாசிப்பனுபவத்தை தரவல்லது. நாஞ்சில் நாடனை அறியாதவர்கள் கூட இந்தத் தொகுப்பிலிருந்து தொடங்கலாம். அருமையாதொரு அறிமுகமாயிருக்கும்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பு எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஓன்று.

(நன்றி: சொல்வனம்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp