பாபர் மசூதியில் ராமன் குதித்த திருட்டு வரலாறு !

பாபர் மசூதியில் ராமன் குதித்த திருட்டு வரலாறு !

வரலாற்றில் பல்வேறு சமூக காரணங்களால் தோற்றுவிக்கப்படும் பாரதூரமான முரண்பாடுகளை, குறிப்பிட்ட சமூகம் தீர்க்காத வரையில் அது ஆறாத வடுவாக மட்டுமல்ல உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆழமான புண்ணாகவும் அழுகிக் கொண்டிருக்கும்.

சுவாரஸ்யத்தை படைப்பதான முகாந்திரத்தில், திட்டமிட்டே அரசியல்  நீக்கம் பெற்ற அல்லது மக்களுக்கு எதிரான அரசியலின் எழுத்துக்களால் மக்களை பாதிக்கும் சமூக பிரச்சினைகளை ஒருக்காலும் உள்ளன்போடு தொட முடிந்ததில்லை. மார்க்சிய/ சமூகவியல் ஆய்வு நூல்களே அந்த பணியை நிறைவு செய்து வருகின்றன.

கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா ஆகிய இரு பத்திரிக்கையாளர்களின் பெருமுயற்சியில் வெளிவந்துள்ள 'அயோத்தி:இருண்ட இரவு' என்ற நூல் இந்த உண்மையை உணர்த்தும் உரைகல் எனலாம். பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறை சரியாகச் சொன்னால் சதியை, ஒரு புனைவுக்குரிய நீரோட்டத்துடன் நமக்கு உரைக்கும் அதே நேரத்தில் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், மனிதர்களையும் அரசியல் துணிவோடு அடையாளம் காட்டுகிறது.

1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கலவர விதை அதற்கும் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டது. 1949-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவில் திருட்டுத்தனமாக பாபர் மசூதியின் சுற்று சுவரை எறிக் குதித்து, அதன் வாயில் கதவை உடைத்து குழந்தை ராமன் சிலை நிறுவப்பட்டது. ராமன் சிலையை மசூதிக்குள் கொண்டு ஓடியவர் ஒரு சாது. வைணவ அகோரியான அவரது பெயர் அபிராம் தாஸ்.

'அயோத்தி: இருண்ட இரவு' நூல் அபிராம் தாஸின் இறப்பிலிருந்து நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது. உணவுக்கே சிரமப்பட்ட தனது யதார்த்த நிலையிலிருந்து தப்பித்து, துறவு நிலை தரும் சில சௌகரியங்களுக்காக துறவியானவர் அபிராம் தாஸ். மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவிய அபிராம் தாஸுக்கு சில தனிப்பட்ட கணக்குகள் இருந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமன் கோயிலாக மாறினால் கிடைக்கும் காணிக்கையும், வருமானமும் பற்றியே அவரது சிந்தை சுழன்றது. இது அவரை மேலும் மேலும் இந்து மகா சபையின் திட்டத்துக்குள் உந்தித் தள்ளியது.

அபிராம் தாஸுடன் பாபர் மசூதிக்குள் நுழைய இருந்தவன் ராமச்சந்திர பரமஹன்ஸ் என்ற அயோத்தி நகர இந்து மகா சபை தலைவன். இறுதி நேரத்தில் அபிராம் தாஸை தனித்து விட்டு விட்டு அதே காலத்தில் கொல்கத்தாவில் நடந்த இந்து மகா சபை மாநாட்டிற்கு சென்று விட்டான். பரமஹன்ஸின் முடிவு அதிர்ச்சி அளித்தாலும், தனது ஒன்று விட்ட சகோதரரின் துணையுடன் இந்த சதிகார பணியை செய்து முடித்தார், அபிராம் தாஸ்.

பாபர் மசூதி இடிப்பை போன்றே மசூதிக்குள் சிலையை நிறுவியதும் விரிந்த அரசியல் சதித் திட்டத்தின் பகுதியே. அதனை அபிராம் தாஸின் தனிப்பட்ட ஆதாய நோக்கத்தில் விளைந்தது என்று மட்டும் சொல்ல முடியாது. காந்தி கொலையால் முடங்கியிருந்த இந்து மகா சபை - ஆர்.எஸ்.எஸ் தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை; இல்லையேல் தனிமைப்பட நேரும் என்ற ஆபத்தை உணர்ந்திருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்-க்கு சொல்லிக்கொள்ளுமளவு பெரிய செல்வாக்கு கிடையாது.

என்ன செய்தாவது இந்துக்களை திரட்ட வேண்டிய பதட்டத்தில் இருந்தார்கள். தனது சதி நோக்கத்தை மக்களிடம் மறைக்கின்ற அதே நேரத்தில், அந்த சதியையே மாபெரும் பொற்கால மீட்பு நடவடிக்கையாக பேசுவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இது காந்தி கொலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்கிறார்கள் நூலாசிரியர்கள். காந்தி கொலை பகலில் செய்யப்பட்டது என்றால் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவும் குற்றச் செயல் இரவிலே நிகழ்த்தப்பட்டது.

பாபர் மசூதிக்குள் ராமன் சிலை நிறுவப்படுவதற்கு முன் உள்ள சூழல் பற்றிய நூலின் பதிவு முக்கியமானது. அது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியின் பிரச்சார உத்தியை பல வகைகளில் நினைவுபடுத்தும் ஒன்று. பா.ஜ.க என்றொரு அரசியல் கட்சி அப்போது இல்லாத நிலையில் அந்த வெற்றிடத்தை காங்கிரசே பூர்த்தி செய்தது.

அயோத்திக்கு ஒரு இடைத்தேர்தல் வருகிறது. காங்கிரஸில் ஐக்கியமாகியிருந்த சோசலிஸ்ட்கள் தனி அணியாக செயல்பட முடியாது என்ற நிலைமை உருவானது. இதை பயன்படுத்திக் கொண்டு காங்கிரசின் வலதுசாரிப் பிரிவு, கட்சியில் புதிய விதிகளை ஏற்படுத்தி சோசலிஸ்ட்டுகளை வெளியேற்றினார்கள். இந்த சோசலிஸ்ட்டுகள் தன்மையில் இப்போதிருக்கும் சமூக நீதிக் கட்சிகளை ஒத்தவர்கள். அகையால் இவர்களது பெயரில் சோசலிசம் இருப்பதை வைத்து மட்டும் முடிவு செய்ய கூடாது. அதே நேரம் இந்த பெயரவளவு சோசலிசத்தை கூட இந்துமதவெறியர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. சியாமா பிரசாத் முகர்ஜி (பின்னாளில் பா.ஜ.கவின் தாய் கட்சியான ஜன சங்கத்தை தோற்றுவித்தவர்), பட்டேல் ஆகியோரின் வெளிப்படையான ஆதரவோடும் நேருவின் மவுன ஒப்புதலோடும் காங்கிரசிலிருந்து சோசலிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

அபிராம் தாசு திருட்டு ராமர் சிலை வழக்கில் முதல் குற்றவாளி !

அப்படி வெளியேறியவர்கள் காங்கிரஸ் கட்சி மூலம் பெற்ற சட்டமன்ற/அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பதவிகளை உதறினார்கள். அப்படி ஒரு சோசலிஸ்டின் முடிவால் அயோத்தி நகரம் அமைந்திருக்கும் பைசலாபாத்தில் தேர்தல் வந்தது. மீண்டும் போட்டியிட்ட அவர் பெயர் ஆச்சார்ய நரேந்திர தேவ்.  அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டவர் பாபா ராகவ தாஸ். இவர் உ.பியின் முதல்வராக இருந்த கோவிந்த வல்லப் பந்த்தின் ஆசி பெற்றவர். வல்லப பந்த் மோடியின் ஆதர்சமான வல்லபாய் படேலின் தீவிர ஆதரவாளர்.

இந்தியாவிலே நடந்த மதவெறி ஊட்டப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களில் இதுவும் முன்னோடியானது என்று சொல்லலாம். இந்து உணர்வை ஊட்டி தேர்தலில் அறுவடையை செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஆர்.எஸ்.எஸுக்கு தேர்தல் முடிவு அளித்தது. நரேந்திர தேவ் ஒரு நாத்திகர்; பாபா ராகவா தாஸ் இந்துக்களுக்கு ஆதரவானவர் என்று மக்களிடம் அன்றைய உ.பி காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பாபா ராகவ தாஸை வெளிப்படையாக ஆதரித்து இந்து மகா சபையும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. தேர்தலில் தேவ் வீழ்த்தப்பட்டார்.

வெற்றி பெற்ற பாபா ராகவதாஸ் தலைமையில் அந்த வருட அனுமன் ஜென்ம உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அங்கு ஒரு விசித்திரமான முடிவை அறிவித்தார் ராகவதாஸ். அது இந்து மகா சபை தயாரித்த அறிக்கை. 'அனுமன் ஜென்ம உற்சவத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன் அந்த வருட ராமன்-சீதை கல்யாண உற்சவத்தை கொண்டாடப் போகிறோம்' என்றார். இந்த அறிவிப்பின் முதல் பகுதியை விட அதன் அடுத்த பகுதி இந்து மகா சபையின் நோக்கத்தை அறியத் தருகிறது. 'ராமன்-சீதை கல்யாண உற்சவத்தை ஒன்பது நாட்கள் நடத்துவது என்றும், ஒன்பதாம் நாள் குழந்தை ராமனை அவன் 'பிறப்பிடத்துக்கு' செல்ல பக்தர்கள் அனைவரும் கேட்டுக் கொள்வது' என்றும் அறிவித்தார், ராகவ தாஸ். அதாவது ஒன்பதாம் நாள்  இவர்கள் கேட்டுக் கொள்வதை அடுத்து ராமன் எழுந்து இவர்கள் கண்ணெதிரே தனது பிறந்த இடமான பாபர் மசூதிக்குள் சென்று அமர்வாராம். மக்கள் இப்படி வித்தியாசமான 'அற்புத நிகழ்வுக்காக' ஏங்க வைக்கப்பட்டார்கள். இந்த அற்புதத்தின் மறைவிலேயோ வெறி கொண்ட ஓநாய்கள் காத்துக் கொண்டிருந்தன.

ஒன்பது நாள் திருவிழாவின் இறுதியில் அவர்கள் 'எதிர்பார்த்தது' போல எதுவும் நடக்கவில்லை. குழந்தை ராமன் தானாக மசூதிக்குள் சென்று அமர்ந்து விடுவான் என்பதை மக்கள் ஏமாந்தது போல தாமும் ஏமாற, ஆர்.எஸ்.எஸ் என்ன அசடுகளின் கூடாரமா? எனில், ஆர்.எஸ்.எஸின் ஏமாற்றம் தான் என்ன? தமது வெறியூட்டும் நடவடிக்கைகளுக்கு பலியாகி கூட்டத்திலிருந்து யாராவது ஒருவர் ராமன் சிலையை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் ஓடுவார் என்ற ஆர்.எஸ்.எஸின் எதிர்பார்ப்பு தான் உண்மையில் பொய்த்து போனது. நாடகத்தின் உச்சம் தானாக அரங்கேற மறுப்பதால் திருவிழாவை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்தார்கள். ஏமாந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கி ஆற்றுபடுத்தினர். பதின்மூன்றாம் நாளும் இந்து மகா சபை 'எதிர்பார்த்தது' நடக்காமல் போகவே தமது திட்டத்தை வேறுவிதமாக நிறைவேற்ற துடித்தனர்.

இதற்காக ஒரு கூட்டத்தை ஜாம்பவன் கோட்டையில் கூட்டினர். கே.கே.நாயர், இந்து மகா சபை தலைவர்கள் கோபால் சிங் விஷாரத், ராமச்சந்திர பரமஹன்ஸ், அபிராம் தாஸ் மற்றும் சில சாதுக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திலே தான் திருட்டுத்தனமாக மசூதிக்குள் சிலையை நிறுவும் திட்டத்தை தீட்டினர். பகலில் சிலையை வைத்தால் அரசு நிர்வாகத்துடன் தேவையற்ற மோதல் ஏற்படும் என்று கே.கே நாயர் எச்சரித்தார். எனவே திருட்டுத்தனமாக சிலையை இரவில் நிறுவினால் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை அளிப்பதாக கே.கே. நாயர் உறுதி அளித்தார். கே.கே.நாயரின் இந்த ஆலோசனையை கூட்டம் ஆமோதித்தது.

இவையெல்லாம் நூலாசிரியர்களின் வளமான கற்பனைகள் அல்ல. பல்வேறு ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் அபிராம் தாஸின் சீடர் சத்தியேந்திர தாஸ் முதற்கொண்டு இதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களே பின்னாளில் அளித்த வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டவை. மசூதிக்குள் சிலையை நிறுவும் பொறுப்பு அபிராம் தாஸிடமும், ராமச்சந்திர பரமஹன்சிடமும் (மசூதிக்குள் சிலை நிறுவப்பட இருந்த கடைசி மணித்துளியில் அபிராம் தாஸை தனியே தவிக்க விட்டுவிட்டு ஓடியவர்) ஒப்படைக்கப்பட்டது.

இங்கு முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. முதலில் ஒன்பது நாட்கள் என்று தீர்மானிக்கப்பட்டு பிறகு அற்புதம் நிகழ தவறியதால் பதின்மூன்று நாட்கள் வரை நீட்டிக்கப்பட்ட ராமன்-சீதை கல்யாணம் நடைபெற்ற ராம சபுத்ரா (மேடை) எனப்படுகின்ற கூரை வேயப்படாத மாடத்தின் பின்னணி குறித்த தகவல்களை நாம் பார்க்க வேண்டும்.

இது பாபர் மசூதி வளாகத்துக்குள்ளே அமைந்திருக்கிறது. 1857-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்களின் கலகத்தை நாமறிவோம். ஆங்கிலேய அரசை உ.பியின் மகந்துகள் (தலைமைப் பொறுப்பு வகிக்கும்  அகோரிகள்) ஆதரித்து நின்றனர். அதற்கு கைம்மாறாக ஏராளமான நிலங்களை மகந்துகளுக்கு அளித்தனர், ஆங்கிலேயர்கள். ஒரு அகோரி, பாபர் மசூதியின் அருகாமையில் சிறிது நிலத்தை வரப்பிட்டு மேடை அமைத்தார். அந்த இடத்தை அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவருக்கு வழங்கியது ஆங்கிலேய அரசு. இப்படிப்பட்ட துரோகிகளாக இருக்கும் அகோரிகள்தான் இந்துமதவெறியர்களின் ஆன்மீக அடியாட்படையாக இன்றும் இருக்கிறார்கள்.

பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

ஆங்கிலேயன் வழங்கிய இடத்தை வைத்து அங்கு தான் முதலில் ராமன் பிறந்தார் என கதை கட்டி கோயில் எழுப்ப முயன்றனர். அதற்கு பைசாபாத் மாவட்ட அதிகாரி கே.கே நாயர் அனுமதி அளித்தார். கே.கே. நாயரின் உதவியாளர் குருத்தாட் சிங் இந்துக்களும், முஸ்லிம்களும் அருகருகே வழிபாடு செய்து கொள்ளட்டும் என்று அறிவித்தார். எனினும் பைசாபாத் துணை நிலை நீதிபதி இதற்கு அனுமதிக்கவில்லை. இந்த முதல் முயற்சியே விரிந்து பிறகு பாபர் மசூதியை கபளீகரம் செய்வது என்ற நிலைக்கு இந்துத்துவ சக்திகளின் கைகளுக்கு சென்றது.

பாபர் மசூதியை இரவில் காவல் காத்து வந்த போலீஸுக்கு கையூட்டு அளிக்கப்பட்டது. பிறகு சுவரில் தொத்தி ஏறிக் குதித்து அபிராம் தாஸ் மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரர் (இந்து மகா சபையின் உள்ளூர் தலைவன் ராமச்சந்திர பரமஹன்ஸ் கடைசி நிமிடத்தில் பின் வாங்கியதால் அந்த இடத்தை நிரப்பியவர்) ஆகியோர் மசூதியின் பூட்டை உடைத்தனர். அங்கு அவர்களை எதிர்கொண்ட மெளல்வி இஸ்மாயிலை அடித்து துவைத்து துரத்தினர். பிறகு விடியும் வரை காத்திருந்தனர். விடியற்காலையில் ராமன் சிலைக்கு முன்னால் தீபத்தை ஏற்றினர். அயோத்தி காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ' காலையில் மசூதிகுள்ளே ஒளி தெரிந்தது; அது பொன்னிறமாக இருந்தது' என்று காலையில் மசூதியின் பாதுகாப்பை ஏற்றிருந்த போலிஸ்காரர் விவரித்திருந்தார். அயோத்தியில் ராமன் 'தோன்றியதற்கு' இதனையே ஆதாரமாகக் காண்பிக்கத் தொடங்கினர், இந்துத்துவவாதிகள்.

ராமன் தோன்றிய அற்புதத்தை காண அயோத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பார்க்க விரிவான ஏற்பாடுகளை இந்து மகா சபை செய்தது. மிகவும் தாமதமாக 23-ந் தேதி 10.30 மணிக்கு கே.கே நாயர் உ.பி அரசுக்கு அயோத்தி நிலைமை பற்றி அறிக்கை அளித்தார். அதில் 'சில இந்துக்கள் மசூதிக்குள் சிலையை நிறுவி விட்டார்கள். பூசைகள் செய்து சிலையை அகற்ற எந்த பூசாரியும் முன்வரவில்லை. எனவே சிலையை அகற்ற முடியாது' என்று அறிக்கையில் தெரிவித்தார், நாயர். இதனை சான்றாதாரங்களுடன் நூலில் தந்துள்ளனர் நூலாசிரியர்கள்.

பிள்ளையார் பால் குடித்தார், மேரியம்மா அழுதார், சாயிபாபா காலெண்டரிலிருந்து விபூதி கொட்டுகிறது என்றெல்லாம் இன்றைக்கும் இத்தகையத அற்புதங்கள் ஆங்காங்கே கடைவிரிக்கப்படுகின்றன. உள்ளூர் அளவில் வசூல் செய்ய பயன்பட்ட இந்த மோடிமஸ்தான் வேலையைத்தான் இந்துமதவெறியர்கள் நாடெங்கும் செய்வதற்கு அயோத்தியில் செய்தனர்.

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுக்கும் கருணாநிதி, ஜெயயலலிதாவை போல இந்தியப் பிரதமர் நேரு, உ.பியின் பிரதமர் ( இது பகடி அல்ல; அன்று மாகாணங்களின் தலைவர்கள் பிரதமர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர் - இந்த குறிப்பும் நூலில் உள்ளது) கோவிந்த் வல்லப் பந்திற்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸின் சூழ்ச்சிக்கு பலியாகி பாபர் மசூதி முன்பு குவிந்திருந்த மக்களை படையை அனுப்பி வெளியேற்றி விட்டு சிலையை அகற்றுவதை எதிர்த்தார், மத்தியில் உள்துறை பொறுப்பை வகித்த வல்லபாய் பட்டேல். இதை பகிரங்கமாக கண்டிக்கவோ இல்லை நடவடிக்கை எடுக்க முடியாத நேருவோ ' உ.பி காங்கிரசுக்குள் மதவாதம் புகுந்து விட்டது' என்று வருணித்தார். தன்  கோபத்தை உ.பியின் பிரதமர் கோவிந்த் வல்லப் பந்திற்கு உணர்த்த அவரை சந்திக்க பின்னாட்களில் மறுத்தார நேரு.  இதைத் தாண்டி இவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இவரைத்தான் மதச்சார்பின்மையின் சிற்பி என்கிறார்கள்.

மதவெறி பிடித்தாட்டிய உ.பி. காங்கிரசில் அன்று எழுந்த நிதானக் குரல் அக்ஷய் பிரம்மச்சாரியினுடையது. பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த ராம சபூத்ராவில் கோயில் கட்ட இந்து மதவெறியர்கள் முயன்ற போது அவர்களுக்கு எதிராக பைசாபாத் மாவட்ட அதிகாரியான கே.கே. நாயரிடம் புகார் மனு அளித்தார். அடுத்த நாள் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்த வாசகங்களை சொல்லி சொல்லி அக்ஷய் பிரம்மச்சாரியை  உதைத்துள்ளனர், இந்து மகா சபையினர். பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த கல்லறை தோட்டத்தை இந்து மத வெறியர்கள் சிதைத்த போதும் உடனடியாக அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு போனார், அக்ஷய் பிரம்மச்சாரி. அதன் பிறகே மசூதியை காவல் காக்க அரசு இரு காவலர்களை அனுப்பியது.

மசூதிக்குள் சிலையை வைத்த பிறகு கே.கே.நாயர் அதற்கு உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தி உ.பியின் உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு விடாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அயோத்தியில் இருந்தே துரத்தப்பட்டார் பிரம்மச்சாரி. என்றாலும் இந்து மகா சபையின் பல்வேறு நடவடிக்கைகளை தன்னந்தனியாக எதிர்த்தார். இறுதியில், மசூதியை கோயிலாக மாற்றும் முயற்சிக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் நூலை பற்றிய ஒரு பறவை பார்வை மட்டுமே.

தமது அளப்பரிய தகவல்களால் குறிப்பிட்ட அந்த வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு அனுபவத்தை நூலசிரியர்கள் தருகிறார்கள் என்றால் அது மிகையில்லை. சாவர்க்கர், டி.ஜி. தேஷ் பாண்டே, மகந்த் திக் விஜய் நாத் உட்பட இந்து மகாசபை தலைவர்களின் எண்ண ஓட்டத்தையும், நடவடிக்கைகளையும் பல்வேறு ஆவணங்கள், ஆதாரச் சான்றுகள் மூலம் இந்தியாவின் இளைய தலைமுறை மதச்சார்பின்மையின்  முக்கியத்துவத்தை எதிர்மறையில் புரிந்து கொள்ள தந்து உதவியிருக்கிறார்கள், நூலாசிரியர்கள்.

பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை வைக்க தனது வலைபின்னலில் இருந்த கீழ்நிலை ஊழியர்களை கொண்டு தேர்ந்த திட்டமிடலுடன் செய்து முடித்த இந்து மகா சபை, அதே ஆண்டின் ராம நவமியை சிறப்பாக கொண்டாடியது. உ.பியின் மொரதாபாத்தில் பேசிய இந்து மகா சபையின் தலைவர்  என்.பி காரே இவ்வாறு குறிப்பிட்டார். ”காந்தி ஜெயந்திக்கு கூடியவர்கள் வெறும் இருநூறு பேர். ஆனால், இந்து மகா சபையின் கூட்டத்துக்கு இங்கு திரண்டிருப்போர் இருபதாயிரம் பேர்” (பக்க எண்: 159) என்றார்.

அக்ஷய் பிரம்மச்சாரி தனித்து போராடியதற்கும், இந்து மகா சபை தலைவரின் இந்த கூற்றுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய பிணைப்பில் காலம் உருண்டோடியது. இந்து மதவெறியை மாய்க்கும் போராட்டத்தை வலுவிழக்க அன்று காங்கிரஸ் நேரடியாக ஒத்துழைத்தது; இன்று தனது பொருளாதார கொள்கைகளால் மறைமுக உதவியை செய்திருக்கிறது. காங்கிரஸ் வேறு பா.ஜ.க வேறல்ல என்ற உண்மையை மக்கள் உணரும் போது மட்டுமே இந்தியாவில் இந்துமதவெறி முற்றிலும் ஒழிக்கப்படும். அது வரை பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு கருத்தளவில் இந்நூல் உதவி செய்யும்.

புதிய கலாச்சாரம் இதழிலில் இதன் ஆங்கில நூல் அறிமுகக் கட்டுரையை பார்த்து விட்டு (இதை முன்னுரையில் புதிய ஜனநாயகம் இதழ் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.) “விடியல் பதிப்பகம்” இதனை உரிய அனுமதியுடன் தமிழாக்கி தந்திருக்கிறது. அதற்காக விடியலுக்கு நன்றி. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல் இது.

(நன்றி: வினவு)

Buy the Book

அயோத்தி: இருண்ட இரவு

₹142 ₹150 (5% off)
Out of Stock
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp