அகமறியும் ஒளி

அகமறியும் ஒளி

பார்வை என்பது என்ன? ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான். அது இல்லையேல் ஒலி. அது இல்லையேல் தொடுகை. மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை. அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின் கூர்மையையும், நிதானத்தையும் நம்பியே உள்ளது. பார்வையிழந்த ஒருவருடைய உலகம் நுண்ணிய தகவல்களால் மட்டுமே நாமறிவதில் இருந்து வேறுபட்டது.

பிறவியிலேயே பார்வையிழந்த ஒருவர் ஒருபோதும் இந்த வேறுபாட்டை அறிய முடியாது. ஆனால் பார்வை இருந்து பின் அதை இழந்து பலவருடங்கள் வாழ்ந்து மீண்டும் பார்வையை அடைந்த ஒருவர் ஒளியில்லா உலகையும், ஒளியுலகையும் ஒருங்கே அறிந்தவர். இங்கிருந்து அங்கே சென்றால் அவருக்கு என்ன ஆகிறது? கொஞ்ச நாளுக்கு மட்டும் ஓர் எளிய தடுமாற்றம், அவ்வளவுதான். உள்ளே இருப்பவர் ஒலியை நோக்கி திரும்பிக் கொள்கிறார். அவர் மீண்டும் ஒளிக்கு வரும்போது? அதே போன்ற ஒரு திசை திருப்பம். அத்துடன் சரி.

அந்த அனுபவத்தின் நுட்பங்களுக்குள் செல்லும் நூல் தேனி சீருடையான் எழுதிய ‘நிறங்களின் உலகம்’. இது ஒரு சுய சரிதை நாவல். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களில் ஒருவரான தேனி சீருடையான் ’கடை’ என்ற நாவல் மூலம் கவனிக்கப் பட்டவர். உழைப்பாளராக வாழ்ந்து எழுதுபவர் தேனி சீருடையான். தேனி பேருந்து நிலையம் முன்பு தள்ளுவண்டியில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார். இப்போது கடை வைத்திருக்கிறார்.

தேனியில் ஒரு சிறு வணிக குடும்பத்தில் பிறந்தவர் பாண்டி. அப்பா ஒரு வறுகடலை விற்பனை நிலயத்தில் வேலை பார்க்கிறார். ஐம்பதுகளில் தமிழகம் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. நடுத்தரக் குடும்பங்களே உணவுக்கும், உடைக்கும் அல்லாடிய காலகட்டத்தில் பொரிகடலை வறுத்து கூலியாக கொஞ்சம் சில்லறை மட்டுமே ஈட்டும் குடும்பத்தின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாவலின் ஆரம்ப கட்ட அத்தியாயங்களில் வரும் உக்கிரமான வறுமைச் சித்தரிப்பு சமீபத்தில் எந்தத் தமிழ் நாவலிலும் வந்ததில்லை.

பெரும்பாலான நாட்களில் கம்பு கேழ்வரகு கூழ்தான். என்றோ ஒருநாள் அரிசிச் சமையல். அன்றைக்கு எங்களுக்கு இரண்டு கொண்டாட்டம் என்கிறான் பாண்டி. அரிசி கொதித்ததும் மணக்க மணக்க கஞ்சித் தண்ணி உப்பு போட்டு குடிப்பது. அதன்பின் சோற்றில் புளிக் கரைசல் விட்டு சாப்பிடுவது. அரிசிச் சோற்றுக்கு எந்த தொடு கறியும் தேவையில்லை. சும்மாவே சாப்பிட்டு விடலாம். அரிசி கொதிக்கும் மணம் எழும்போது தெருவே பொறாமையாக பார்ப்பதுபோல பெருமிதமாக இருக்கும் என்கிறான்.

சாப்பாடு மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. வயிறு நிறைய எதையாவது உண்பது மட்டுமே பெரும் கனவு. இந்நூலின் வறுமைச் சித்திரங்களில் உள்ள இன்னொரு குறிப்பிடத் தக்க பிரச்சினை இடம் தொடர்பானது. புனைகதையில் எப்போதும் வந்திராத இச்சிக்கல் உண்மையான வாழ்வனுபவம் மூலம் மட்டுமே பதிவாவது. எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் பாலுறவைப் பற்றி தெரிந்திருக்கிறது. மிகச்சிறிய ஓரறை வீடுகளில் சேர்ந்து தூங்கும்போது அவர்கள் அனைவருமே அப்பாவும், அம்மாவும் உடலுறவு கொள்வதைப் பார்த்திருக்கிறார்கள். நாளெல்லாம் இல்லாமையின் எரிச்சலில் மோதிக் கொண்டே இருக்கும் பாண்டியின் அப்பாவும், அம்மாவும் இரவில் உறவு கொள்வது அவனுக்கு பிடித்திருக்கிறது.

இலவசக் கல்வி இருப்பதனால் ஆரம்பப் பள்ளிக்குச் செல்கிறான் பாண்டி. ஆனால் திடீரென்று கொஞ்சம், கொஞ்சமாக கண் தெரியாமலாகிறது. ஆரம்பத்தில் எவருக்குமே அது புரியவில்லை. பள்ளியில் தான் எழுதுவதை தப்பாக கிறுக்கி வைத்ததற்காக ஆசிரியர் அடிக்கிறார். சாலையில் எங்கே சென்றாலும் பல இடங்களில் முட்டிக் கொண்டே இருக்கிறான்.

எண்ணை வாங்கி விட்டு திரும்பும்போது இட்லி விற்கும் பக்கத்து வீட்டுக்காரி பொன்னம்மக்கா மீது மோதி இட்டிலி மாவு சிந்தி விடுகிறது. அவள் மூர்க்கமாக அடிக்கிறாள். அந்த அடியை வாங்கிக் கொண்டு கீழே சிதறிய எண்ணைப் புட்டியை பொறுக்குவதிலேயே குறியாக இருக்கிறான் அவன். கதறியபடி வீடு திரும்புகிறான். பக்கத்து வீட்டுக்காரி வந்து நஷ்ட ஈடுக்காக சத்தம் போடும் போது அம்மாவும் அடிக்கிறாள். அப்போதுதான் தனக்கு சுத்தமாகக் கண்ணே தெரியவில்லை என்பதை பாண்டி சொல்கிறான்.

அம்மா அதிர்ச்சி அடைந்து போகிறாள். பொன்னம்மக்கா கூட கழிவிரக்கத்துடன் ஐயோ என் புள்ளைய அடிச்சிட்டேனே என்று கட்டிக் கொள்கிறாள். மகனை மார்போடணைத்து அம்மா அழுகிறாள். உள்ளூர் வைத்தியரிடம் காட்டி சில மருந்துகள் விட்டுப் பார்க்கிறார்கள். அதற்குமேல் சிகிழ்ச்சை செய்ய வசதியுமில்லை, நேரமும் இல்லை. பூசாரியிடம் கொண்டு சென்று காட்டி குறி கேட்கிறார்கள். நாலு வார விரதம் சொல்கிறார். நாலு வாரமாகியும் கண் திறக்கவில்லை. உன் பக்கத்து வீட்டுக்காரி சுத்தமில்லாம குறுக்கே வந்து சாமியை தடுத்துட்டா என்கிறார் பூசாரி.
பாண்டியின் படிப்பு நிற்கிறது. வீட்டிலேயே கிடைப்பதைத் தின்று விட்டு உட்கார்ந்திருக்கிறான். உடன் படித்த மாணவர்களைச் சந்திக்கும்போது என்ன சொல்லித் தந்தார்கள் என்று ஏக்கத்துடன் கேட்டுக் கொள்கிறான். அம்மா, அப்பாவிடம் காசு வாங்கி வருவதற்கு அனுப்புகிறாள். திரும்பும் வழியில் கால்தடுக்கி சில்லறைகள் சிதறி விழுகின்றன. தரையெல்லாம் துழாவி சில்லறைகளைப் பொறுக்குகிறான். ஒரு காசு தவறி விடுகிறது. ‘அந்த மனுஷன் தீயில வெந்து சம்பாரிச்சா நீ தொலைச்சுட்டா வாரே’ என்று அடி விழுகிறது. கண் தெரியாமைக்காக ஒரு சிறு சலுகையைக் கூடக் கொடுக்க முடியாத வறுமை.

வறுமையின் சித்திரங்கள் இந்த நூலின் பக்கங்களை அதிரச் செய்கின்றன. வறுமை தாங்க முடியாமல் மனிதர்கள் மூர்க்கம் கொண்டு கூண்டில் அடைபட்ட பசித்த மிருகங்கள் போல ஒருவரை ஒருவர் கடித்துக் கிழித்துக் கொள்கிறார்கள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தீராத சண்டை. வெறிகொண்ட அப்பா நல்லுசெட்டி விறகு கம்பால் அம்மாவை கொலை வெறியுடன் அடித்து போடுகிறார். வறுமை தாளாமல் அம்மா தன் அண்ணாவிடம் உதவி கேட்க அவரது ஊருக்குச் செல்கிறாள். எதிரே கிழிசலாடையுடன் வரும் அண்ணி அவள் ஏன் வந்தாள் என்பதை ஊகித்துக் கொண்டு துடைப்பத்தால் அடித்து துரத்துகிறாள்.

அப்பாவின் தங்கையின் வீட்டு விசேஷத்துக்கு எதுவுமே கொடுப்பதற்கில்லாமல் வீட்டில் கழனித் தண்ணி வைத்திருக்கும் பழைய பாத்திரத்தை நன்றாக துலக்கி மாமன் சீராக கொண்டு சென்று கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். அவள் இவர்கள் வீட்டு விசேஷத்துக்கு மொய் எழுதியவள். பழைய பாத்திரத்தை கண்டு வெறி கொண்ட அத்தை அதைக் கொண்டு வந்து இவர்கள் வீட்டு முன்னால் சாணியைக் கரைத்து வைத்து வசை பாடி விட்டுச் செல்கிறாள்.

சுமை நிறைந்த வாழ்க்கையின் ஒருகட்டத்தில் நல்லுசெட்டி காணாமல் போகிறார். அவருக்கு அது ஓர் இளைப்பாறல். ஆனால் கண் தெரியாத குழந்தைகளுடன் அம்மா நடுத்தெருவில் நிற்கிறாள். பசியுடன் போராடும்போது பக்க்கத்து வீட்டு வள்ளியக்கா வந்து இருட்டோடு இருட்டாக ஏதோ ரகசியம் பேசுகிறாள் ”அய்யய்யோ எனக்கு வேணாந்தாயீ..அடுத்தவனுக்கு முந்தாணி விரிச்சு வகுறு வளக்குறத விட பட்டினி கெடந்து செத்துப் போறது மேலு” என்கிறாள் அம்மா.

அந்த நிலையில்தான் தூரத்து உறவான சுப்பு மாமா வருகிறார். அரசாங்கத்தில் கண் தெரியாத குழந்தைகளை எடுத்து படிக்க வைக்க ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது என்று சொல்கிறார். அம்மா தொலைதூரமான திருச்சி வரை குழந்தையை தனியே அனுப்ப சம்மதிக்கவில்லை. சுப்பு மாமா பேசிப்பேசி சம்மதிக்கவைக்கிறார்.பாண்டியின் வாழ்க்கையில் ஓரு புதிய ஏடு புரள்கிறது.

விழியிழந்தவர்களுக்கான அந்த விடுதியில் மெல்ல, மெல்ல சூழலுடன் பாண்டி இணைகிறான். அங்கே சுவையில்லாத உணவுதான் என்றாலும் வயிறு நிறைய சோறு கொடுக்கிறார்கள். ஊரில் அம்மாவும், தங்கையும் பட்டினி கிடப்பார்கள் என்பதுதான் பாண்டியை உள்ள்ளூரக் கண்ணீர் விட வைக்கிறது. கல்வி அறிமுகமாகிறது. பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்கிறான். இலக்கியங்களில் அறிமுகம் ஏற்படுகிறது.

பள்ளி இறுதிவரை விழியிழந்தவனாக பிரெய்லி முறைப்படி கற்று தேர்ச்சி அடைகிறான் பாண்டி. ஐநூறுக்கு நாநூற்று இருபத்தொரு மதிப்பெண். அக்காலத்தில் அது ஒரு சாதனை. மாநிலத்திலேயே பார்வையற்றவர்களில் அவன்தான் முதலிடம். பள்ளி முதல்வர் அவனை கல்லூரியில் சேர்க்க ஆசைப் படுகிறார். ஆனால் பணமில்லை. ஆசிரியர் பயிற்சிக்குச் சேர அன்று சட்ட அனுமதி இல்லை.

மனம் உடைந்த பாண்டி தற்கொலை செய்து கொண்டால் என்ன என்ற எண்ணத்தை அடைகிறான். ஆனால் மறுகணமே ஏன் சாகவேண்டும் என்ற வீராப்பு எழுகிறது. சாவதில் அர்த்தமே இல்லை, வாழ்க்கை கண் முன்னால் நிற்கிறது. நான் ஏன் சாகணும் என்ற கேள்வி நீலநிற சுவாலையாய் பிரக்ஞையில் எரிகிறது. ஒன்றுக்கும் முடியாவிட்டால் அப்பா வறுக்கும் கடலையைத் தெருவில் கூவி விற்பது என்று முடிவெடுத்து தன்னம்பிக்கையுடன் எழும் பாண்டியில் நாவல் முழுமை கொள்கிறது.

***

பாண்டியின் கதை ச.தமிழ்ச்செல்வன் தேனி சீருடையானை எடுத்த பேட்டி-உரையாடல் வழியாக மேலும் விரிகிறது. 1970 ஊர்திரும்பி தேனியில் இருக்கிறான் கருப்பையா. இலக்கிய ஆர்வமும் தமிழார்வமும் உருவாகி விட்டிருக்கின்றன. அப்போது நாடார் பள்ளியில் இலவச கண்சிகிழ்ச்சை முகாம் நடக்கிறது என்று அறிவிப்பு சொல்லி ஒரு வண்டி செல்கிறது. அங்கே செல்கிறான். மிக எளிமையான ஓர் அறுவை சிகிழ்ச்சை மூலம் பார்வை திரும்பக் கிடைக்கிறது.

கருப்பையாவின் வாழ்க்கையின் உச்ச கட்ட அபத்தம் அங்கே நிகழ்கிறது அவன் விழி தெரியாதவனாக இருந்திருந்தால் அவனுக்கு ஊனமுற்றோர் தகுதியில் அரசு வேலையோ, உதவியோ கிடைத்திருக்கும். ஆனால் அவன் பார்வையுள்ளவன். பார்வையற்றோர் பள்ளி அளித்த பள்ளிச் சான்றிதழை சாதாரண வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாது என்று மறுத்து சென்னை பார்வையற்றோர் வேலை வாய்ப்பகத்துக்குப் போ என்கிறார்கள். அங்கே போனால் உனக்குத்தான் பார்வை இருக்கிறதே இங்கே பதிவு செய்ய மாட்டோம் என்கிறார்கள். அவனுடைய பதினொரு வருடக் கல்வி, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எல்லாமே அரசு விதிகளின்படி பயனற்று போகின்றன.

சான்றிதழ்களை தூக்கி வீசி விட்டு கருப்பையா தேனி பேருந்து நிலையத்தில் கடலை விற்கச் சென்றான். பேருந்து நிலயம் முன்னால் ஒரு குடையை குச்சியில் கட்டி வைத்து நட்டு அமர்ந்துகொண்டு பழங்கள் விற்கிறான். அந்தச் சூழலையும் தன்னுடைய நம்பிக்கை ஒன்றினாலேயே எதிர் கொள்கிறான் கருப்பையா. மெல்ல, மெல்ல குடும்பத்தில் பட்டினி மறைந்தது. சிறுவணிகனாக ஆரம்பித்து எழுத்தாளனாக எழுகிறான்.

கருப்பையாயின் வாழ்க்கையின் கடைசி அபத்தம் அவரது அம்மாவின் மரணம். அவரது அப்பாவுக்கு 1986ல் தாடையில் புற்றுநோய் கண்டது. மதுரை ஆஸ்பத்திரியில் அவரைச் சோதித்து விட்டு ஆறுமாதமே தாங்குவார் என்று சொல்லி விட்டார்கள். அதைக்கேட்டு மனமுடைந்த அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். ஆனால் அப்பாவுக்கு அறுவை சிகிழ்ச்சை மூலம் தாடையையே எடுத்துவிட்டு அவர் 16 வருடம் நலமாக வாழ்ந்தார். வாழ்நாளெல்லாம் பசியால் பரிதவித்த அம்மா மகன் மூன்று வேளை சோறு போடும் நிலைக்கு வருவதைப் பார்க்காமல் இறந்தார்.

**

பாண்டியின் கண்ணில்லா உலகின் நுண்ணிய சித்திரங்களே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகின்றன. அவன் கால்கள் தரையை வருடிக் கொண்டே இருக்கின்றன. செல்லுமிடம் முழுக்கக் கால்களால் தொட்டறியப் படுகிறது. கால்களின் தொடுகை நுட்பமாக ஒவ்வொரு இடத்தையும் அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது. செவிகளால் அவன் உலகை கவனித்துக் கொண்டே இருக்கிறான்.

ஆர்வமூட்டும் இன்னொரு விஷயம் நிறங்களை பாண்டி உணரும் விதம். பாண்டியின் பார்வை நரம்புகளும் விழித் திரையும் நன்றாகவே இருக்கின்றன. விழி ஆடியில்தான் சிறிய சிக்கல். ஆகவே அவனால் வெளியே உள்ள ஒளியசைவுகளை உணர முடியும். அத்துடன் அவன் நினைவில் நிறங்கள் இருக்கின்றன. அவன் அகப்புலன் அறியும் அதிர்வுகளை அவன் நிறங்களாக உணர்கிறான். குரல்கள் மஞ்சளாகவும், பச்சையாகவும் ஒலிக்கின்றன. சிலநினைவுகள் சிவப்பாக இருக்கின்றன. பேருந்துகள் நீலமாக ஒலி விட்டுச் செல்கின்றன. ஏன் வாசனைக்குக் கூட சிலசமயம் நிறமிருக்கிறது.

விழியிழந்தோர் பள்ளியில் ஒருவரை ஒருவர் தொட்டும் வருடியும் குழந்தைகள் அறிகின்றன. பார்வையுள்ளவர்களின் உலகில் உடற்தீண்டல் விலக்கப் பட்டிருப்பதனால் இருக்கும் தடைகள் இங்கே இல்லை. மிக எளிதாக குழந்தைகள் காமம் நோக்கிச் செல்கின்றன. ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் மாறி மாறி பாலுறுப்புகளை வருடி மகிழ்கின்றன. அதனூடாக ஆழமான உடல் தொடர்பை அடைகின்றன. இன்னும் நுட்பமான ஒரு இடம் அக்குழந்தைகளுக்குச் சிரங்கு வருவது. அந்த நோயை அது வருடவும் சொறியவும் வாய்ப்பளிக்கிறது என்பதனாலேயே அவை ஆனந்தமாக அனுபவிக்கின்றனவா என்ற எண்ணம் ஏற்படுகிறது.

தேனி சீருடையானின் இந்நாவலை ஒரு கலைப்படைப்பு என்று சொல்லிவிட முடியாது.சீரான நுட்பமான தகவல்களை அளிப்பதில் ஆசிரியரின் நடை வெற்றிபெறவில்லை. உணர்ச்சி மீதூறும்போது செயற்கையான மேடைப்பேச்சு நடை வந்துவிடுகிறது. இந்நூலை இன்னமும் கச்சிதமாக சுருக்கியிருக்கலாம். குணச்சித்திரங்களை இன்னமும் தெளிவாக்கியிருக்கலாம். ஆனாலும் உண்மையின் உதிரவாசனையால் முக்கியமான ஒரு தமிழ்நூலாக உள்ளது இது.

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp